செழிப்பான கங்கை ஆற்றுளுப் பள்ளத்தாக்கில் வீற்றிருக்கும் ஜாக்யநகரை முதலில் பார்க்கும் போது எண்ணற்ற வங்க கிராமங்களைப் போலவே இருக்கிறது. சற்று நெருங்கிப் போகும் போது வேறுபாட்டை உணரலாம். அந்த கிராமத்தின் சிறப்பு என்னவென்றால், கோடை காலத்தில் அங்கு தங்கும் சிறப்பு விருந்தினர்கள்தான்.

அவர்களைப் பார்க்கும் முன்பே, அவர்களின் குரலை கேட்க முடியும். தொடர்ந்து ஒலித்த வண்ணம் இருந்த நாரைகளின் குரல்களால் காற்று அதிர்ந்து கொண்டிருந்தது. பசிய வயல்களின் ஊடே ஜாக்யநகரை சென்றடையும் பாதையை நெருங்கநெருங்க பறவைகளின் குரல்கள் உரத்து ஒலிக்கத் தொடங்கும். ‘பழுத்த பழம்’ என்று சொல்லத்தக்க உரமேறிய புளிய மரங்களில் பெரும்பூக்கள் மலர்ந்ததைப் போன்று வீற்றிருக்கின்றன நத்தைகுத்தி நாரைகள். மரங்களுக்கு கிரீடம் சூட்டியதைப் போல சில நாரைகள் காய்ந்த கள்ளிகளால் கூடுகளை அமைத்துள்ளன.

அந்த கிராமத்தில் உள்ள மூன்று குளங்களுக்கு அருகேயுள்ள மரங்கள் அனைத்திலும் நந்தைகுத்தி நாரைக் கூட்டங்கள் வசிக்கின்றன. ஜாக்யநகரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 3000. அதைப்போல மூன்று மடங்கு பறவைகள் வசிக்கின்றன. 8000 நாரைகள் வருவதாக கிராமத்தினர் கணக்கிட்டுள்ளனர்.

வளர்ந்த நாரைகள் அருகிலுள்ள சதுப்புநிலங்கள், குளங்களில் இரை தேடுகின்றன. பெரும் நத்தைகள், நண்டுகள், தவளைகள், பூச்சிகள் அவற்றின் உணவு. மனித நடமாட்டத்துக்கு நாரைகள் பயப்படுவதில்லை, அவற்றின் கூடுகளுக்கு அருகே நெருங்கிச் சென்றாலும் கூட, இந்த கிராமத்தி; வசிப்பதை அவை மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றன. இந்த கிராமத்துக்கு வரும் பறவைகள், பாரம்பரியமாக மனித வேட்டையாடிகளின் தொலிலையைச் சந்திக்கவில்லை. இயற்கையை கவனமாகப் பாதுகாப்பது எனும் நமது பாரம்பரிய பழக்கத்தை ஜாக்யநகர் தீவிரமாக பின்பற்றுகிறது.

காட்டுயிர்களான புள்ளிமான்களும், வெளிமான்களும் இந்திய கிராமங்களில் பயமின்றித் திரிவதை 18, 19ம் நூற்றாண்டுகளில் பார்த்து ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் வியந்து போயுள்ளனர். கடந்த நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டன் பறவையியலாளர் டி.சி. ஜெர்டான், வங்கத்தின் பல்வேறு கிராமங்களில் நாரைகள், கொக்குகள், சின்ன கொக்குக் கூட்டங்கள் வசித்ததாக குறிப்பிட்டுள்ளார். வேளாண்மை விரிவாக்கம், சதுப்புநிலங்கள் வறண்டுபோகும் நிகழ்வு வங்கம் முழுவதும் பரவினாலும் கூட, நீர்ப்பறவைகளின் கடைசி இயற்கை வீடாக ஜாக்யநகர் உள்ளது. இந்த ஊரில் இந்துகள், முஸ்லிம்கள், சந்தால் மற்றும் பவோரி பழங்குடிகள் இணக்கமாகவும், பறவைகளின் மீது அக்கறையுடனும் வாழ்கின்றனர்.

“இஸ்லாம்பூர், கேடியா, உஷோ ஆகிய கிராமங்களுக்கும் பறவைகள் செல்கின்றன” என்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த நசிருதின் அகமது. கூடுகளில் இருந்து தவறி விழும் பறவைகளை குழந்தைகள் பத்திரமாகப் பாதுகாக்கின்றனர். குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ பறவைகளை காயப்படுத்தினாலோ, கொன்றாலோ அவர்களது பெற்றோர் ஊர் நிர்வவாகத்ததுக்கு ரூ. 50 அபராதம் செலுத்த வேண்டும்.

“இந்த கிராம மக்களுக்கு பறவைகள் மீது பாசம் அதிகம். இந்தப் பறவைகள் இம்மக்களுக்கு சில தொந்தரவுகளை தருகின்றன என்று சொல்லலாம். தொடர்ந்து ஒலிக்கும் குரல்கள், அவற்றின் எச்சத்தால் எழும் மணம் போன்றவை இருந்தாலும், வேட்டையாடிகளிடம் இருந்து இம்மக்கள் பறவைகளை பாதுகாக்கிறார்கள். இரவில்கூட யாரும் இந்தப் பறவைகளை நெருங்க முடியாது. சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் விவசாயிகள் சிலர் நாரைகளைக் கொன்றதை அடுத்து, அவர்களுக்கு எதிராக கிராமத்தினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

அவர்களுக்குக் கிடைக்கும் ஒரே நன்மை. Guano  எனும் பறவை எச்சம். அதுவும் இரண்டு மாட்டு வண்டி அளவுதான் வரும்.

வேறு பெரிய நன்மை இல்லை என்றாலும், ஒவ்வொரு விவசாயியும் இந்த பறவைகளை வரவேற்கிறார். பறவைகள் வராவிட்டால் தன் வயல் செழிப்பாக இருக்காது என்று நம்புகிறார்கள். இதனால் பறவைகள் பாதுகாப்பாக இருக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்” என்கிறார் உள்ளூர் பள்ளித் தலைமையாசிரியர் அப்துல் ஹலிம்.

எங்களது வாழ்க்கையும், வேளாண் சுழற்சியும் பறவைகள் வரும் பருவ காலத்தைப் பொருத்தே தீர்மானிக்கப்படுகிறது. அவை எங்கள் வாழ்வின் பிரிக்க முடியாத பாகமாகிவிட்டன. பருவகாலத்துக்கு முன் அசார் மாதத்தில் வரும் அவை, அக்டோபர், நவம்பரில் ஒரிசா, (தமிழகம் உள்ளிட்ட) தென்னிந்திய கடற்கரைப் பகுதிகளுக்கு சென்றுவிடுகின்றன.

19ம் நூற்றாண்டில் ஹலிமின் தாத்தாவுக்கு தாத்தா, மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் (கலெக்டர்) இக்கிராம எல்லைக்குள் பறவைகளை கொல்பவர்களை தடுப்பதற்கான உரிமையைப் பெற்றிருந்தார். மீறிச் செயல்படுபவர்களுக்கு அப்போதைய மதிப்பில் ரூ. 5 அபராதம். ஜாக்யநகரை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த ஊரில் அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கம், நீண்ட காலத்தில் பறவைகளுக்கு தொந்தரவாக மாறலாம்.

சில விவசாயிகள் பறவைகள் வசிக்கும் மரத்தை வெட்டுகின்றனர், சிலர் பறவைகள் தங்கும் மரங்களின் அடியில்நெல் காணப் போடுகின்றனர், தூற்றுகின்றனர். இதனால் இரண்டு கிராமங்கள் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. ஜாக்யநகருக்கு வெளியே உள்ள சதுப்புநிலங்கள், குளங்களில் இரைதேடும் பறவைகளை பகுதி மக்கள் அடிக்கடி பிடிக்கவும் கொல்லவும் ஆரம்பித்துவிட்டனர்.

தொந்தரவுகள் அதிகரித்து வரும்போதும் நத்தைகுத்தி நாரைகளின் எண்ணிக்கை இந்த கிராமத்தில் குறையவில்லை. பருவமழை வரத் தொடங்கும்போது, அவை வந்துவிடுகின்றன. ஒவ்வொரு முறையும் முந்தைய ஆண்டில் இருந்த உற்சாகம் குன்றாமல் கிராமத்தினர் வரவேற்கின்றனர். பழைய நண்பர்களை பார்த்த மகிழ்ச்சியோடு கொண்டாட்ட உணர்வைப் பெறுகின்றனர்.

(In Danger, Paola Manfredi, Ranthambore Foundation என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரையின் தமிழாக்கம்).

நன்றி: அறிவியல் வெளியீடு, சென்னை - 86

Pin It