நாட்டுப்புறக் கலைகளின் நலிந்த வாழ்வைப் பின்புலமாகக் கொண்டு ஒரு காதல் கதையை, இயல்பு மாறாமல், அழகியலாய்ப் பதிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மீரா கதிரவன்.

பத்துநாள் கூத்தைப் பாதியில் நிறுத்தினால் மழை பெய்யாது என்று தன் குடும்பத்தின் பட்டினியைப் பொருட்படுத்தாமல் தோல்பாவைக் கூத்தை நடத்தி, அதைத் தன் உயிரைவிட மேலாய் நேசிக்கும் கதாபாத்திரமாகவே  வாழ்ந்திருக்கிறார் ஓவியர் வீரசந்தானம்.

கூத்தை நேசிக்கும் ஜோதியின் பால்ய கால சிநேகம், வளர்பருவத்தில் காதலாகிறது.  ஆண், பெண் உறவு குறித்த முரண்களும் இயல்பு மாறாமல் சொல்லப்பட்டிருக்கிறது. வயதின் தடுமாற்றம் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது.

பள்ளி இறுதித் தேர்வில் மாவட்ட முதன்மை பெறுகிறாள் தமிழரசி. படிப்பில் கவனம் சிதறித் தோல்வியடைகிறான் ஜோதி. தமிழரசி தன்னை மதிக்கவே இல்லை என்கிற தாழ்வு மனப்பான்மையில் மன உளைச்சலடைகிறான் . தவறான நண்பர்களின் ஆலோசனையினால் தமிழரசியைப் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்துகிறான்.

இதன் எதிர் விளைவாகத் தமிழரசியின் படிப்பு, எதிர்காலம், கனவு என எல்லாம் தொலைந்து போகிறது.கர்ப்பமாகிறாள். தன் கர்ப்பத்திற்குக் காரணமானவனைக் காட்டிக் கொடுக்க மறுக்கிறாள்.

தன் தவறுக்கு வருந்தி தற்கொலைக்கு முயல்கிறான் ஜோதி. அப்போது கதவு தட்டப்படுகிறது. அவசர அவசரமாகக் கயிற்றையும், கருக்கருவாளையும் மறைத்து வைக்கிறான். அதைத் தமிழரசியின் தாய் பார்த்துவிடுகிறாள். நம்பிக்கைத் துரோகம் நுட்பமான அதிர்வாக மனதைத் தாக்குகிறது. இதன் எதிர்வினையாகத் தற்கொலை செய்துகொள்கிறாள் தமிழரசியின் அம்மா.

தன் தாயின் தற்கொலை குறித்தும், நிகழ்ந்த துரோகம் குறித்தும் குமுறி எழுகிறான் தம்பியாய் வரும் ஊனமுற்ற இளைஞன். ஜோதியை அடித்துத் துவம்சம் செய்யும் ஊனமுற்றவனின் வீரம், தமிழ்த்திரையுலகம் காணாத ஆவேசத்தின் அற்புதம்.

கண்காணாத தூரத்துக்குச் சென்றுவிட்ட தமிழரசியைத் தேடி அலைந்து கண்டுபிடிக்கிறான் ஜோதி. கர்ப்பம் கலைத்து, உறவுகள் தொலைத்து, கலைகளின் பெயரால் பாலியல் தொழிலாளியாகி நிற்கிறாள் தமிழரசி.

காதல் அற்றுப் போன என் வாழ்வை உன்னால் மீட்க முடியாது. திரும்பிப் போய்விடு என மறுக்கிறாள். எந்தத் தவறினால் வாழ்க்கை திசை மாறியதோ அந்த ஆசையை நிறைவேற்றிக்கொண்டு போய்விடு என்கிறாள். தன்னைத் தந்து, அவனைத் திருப்பி அனுப்புகிறாள். ஆனாலும் அவன் பிரிவை அவளால் தாங்க இயலவில்லை. கதறி அழுகிறாள். அவளின் அழுகுரல் ஜோதியைத் திரும்பச் செய்கிறது. “என்ன இருந்தாலும் நீ என்னோட தமிழ்தானே? ”   என உருகுகிறான்.

உளவியல் சார்ந்த இந்த உன்னதக் காட்சி நம்மை நெகிழச் செய்கிறது. மனசாட்சியை உலுக்கி விடுகிறது.

எதார்த்த திரைக்கலையின் மீது, புது ரத்தம் பாய்ச்சி இருக்கிறார் மீரா கதிரவன். தன் படைப்பின் கம்பீரத்தின் வழியாக, முதல் படமா என வியக்க வைத்திருக்கிறார்.

தோல் பாவைக் கூத்துக் கலைஞர்களின் சோகத்தை, பதிவு செய்கிற நீட்சியைக் குறைத்து இருக்கலாம். பின்னிசை படத்திற்கு ஈடுகொடுக்கத் தவறியிருக்கிறது. உன்னதமான காதலை உணர்வுப் பூர்வமாக ஒரு பெண்ணின் மனநிலையில் இருந்து கதை சொன்னதற்காக இயக்குனரின் துணிச்சலைப் பாராட்டலாம். 

பார்த்துப் பரவசம் கொள்ள, திரையுலகம் கொண்டாட எப்போதோ மலரும் குறிஞ்சிப் பூவைப் போலப் பூத்திருக்கிறது - அவள் பெயர் தமிழரசி. நெல்லைத் தமிழன் ஒருவன் தமிழ்த் திரையுலகைத்  தலைநிமிரச் செய்துள்ளான். அவருக்கு நம் வாழ்த்துகள்.

- அமீர் அப்பாஸ்

Pin It