பாலு மகேந்திராவின் சினிமா "அழியாத கோலங்கள்". அவருக்கு சமர்ப்பணம் செய்யும் பொருட்டு அதே பெயரில் கிட்டத்தட்ட அவரின் சினிமா மொழியிலேயே உருவாக்கப் பட்டிருக்கிறது "அழியாத கோலங்கள் -2"
இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால்... அந்த உச்சம் அடைந்திருக்கும். உச்சத்தில் என்ன இருக்கிறது. உச்சம் நோக்கிய வழியில் தானே எல்லாம் இருக்கிறது.... என்பதாக இப்படம் சொல்லும் செய்தி... மிக மிக மெல்லிய கோடுகளால் கிறுக்கப்பட்ட சிலந்தி வலை.
சாகித்ய அகடமி விருது வாங்கிய கையோடு பிரபல எழுத்தாளர் கௌரிசங்கர் 24 வருடங்களுக்கு பின் மோகனா வீட்டுக்கு வருகிறார். அவர் வருவது குறித்து அலைபேசியில் ஏற்கனவே அவரிடமிருந்து வந்து விட்ட செய்தி மூலமாக தெரிந்து கொண்ட மோகனாவும் காத்திருக்கிறார். அவருக்காக காத்திருக்கும் அந்த நேர சுமையை கண்களில் உருட்டிக் கொண்டே அந்த தனித்த பிளாட்டில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கும் மோகனா...அர்ச்சனா என்ற மிகச் சிறந்த நடிகையாக இக்காட்சியிலேயே வெளி வர ஆரம்பித்து விடுகிறார். பாலுவின் மாணவி என்ற பெருமிதமும் நம்பிக்கையும் இந்த சினிமாவை நம்முள் கொண்டாட செய்கிறது. கண்கள் பேசிக் கொண்டே இருக்க.. அதில் வழியில் கண்ணீர் நம்மை உரிந்து கொண்டே இருக்கிறது.
கௌரிசங்கருக்கு பிடித்த மீன் பரிமாறுகிறார் மோகனா. அவர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் நடப்பதை ஜன்னல் வழியாக பார்ப்பது போலத்தான் நாம் பார்க்கிறோம். அப்படி ஒரு திரைமொழி தான் படம் நெடுகிலும். இந்த வாழ்வின் இடைவெளி எங்கு விழுந்ததோ அங்கிருந்து தான் அவர்களின் பேச்சு தொடர்கிறது. நான்கு கண்களில் ஒற்றை காட்சியென அவர்களின் காதல். பிள்ளையின் பிஞ்சு கால்களில் உதைபடும் காலத்தை போல தவித்த பொருளோடு காதலைக் கொண்டலைகிறது.
"ஏன் இத்தன வருஷம் என்ன பார்க்க தோணல..." என்று கேள்வியே பதிலாகவும் மாறுவதை ஆதலால் காதலால் உணர முடியும். அன்பின் சுவடுகள் ஆசை ஆசையாய் காலத்தில் தன்னை பதிந்து கொண்டிருப்பதை ஒரு பிரிவுதான் சாத்தியப்படுத்துகிறது. அவர்கள் இருவரும்... புன்னகையில் அழுகிறார்கள். சிரித்துக் கொண்டே சிரிப்பின் வழியே கட்டிக் கொள்ளும் லாவகத்தை அவர்களின் காதல் அவர்களுக்கு வழங்கி இருக்கிறது.
"நீங்க தான் என்னை விட்டு இருந்தீங்க. நான் உங்களோடு தான் இருந்தேன்" என்று 24 வருட தவிப்போடு கண்கள் மிரள.....கௌரிசங்கரின் புத்தகங்கள் இருக்கும் அலமாரியைக் காட்டும் மோகனா மீது நமக்கும் காதல் வருகிறது. மோகனா என்ற பெயரே மிக சிறந்த கவிதையைக் கொண்டிருக்கிறது. "உனக்குள்ள எப்பவுமே ஒரு தேவதை இருக்கறா மோகனா" என்று கௌரிசங்கர் சொல்கையில்.... மோகனா முகத்தில் ஒரு கணம் வந்து போகும் தேவதையை நாமும் காண்கிறோம்.
இருவரும் பேசிக் கொள்ளும் அன்னியோன்யம்.... மிக மிக கருணை வாய்ந்தது. காதலின் மறுபக்கம் புரிந்தவர்களுக்குத்தான் இது வாய்க்கும். காதல் கருணைகளால் ஆனது. கழிவிரக்கத்தால் அல்ல. எதிரெதிரே அமர்ந்து சக.... சம.....தன்மையில்.... கண்கள் நோக்கி கடந்த காலம் பகிர்ந்து கொள்ள முடிந்ததை காதலன்றி ஒருபோதும் கடந்து விட முடியாது.
அவ்விரவில் ஒரு கட்டத்தில் கௌரிசங்கர் நெஞ்சைப் பற்றிக் கொண்டே அப்படியே சரிந்து இறந்து விடுகிறார்.
என்ன செய்வது என்று தெரியாத தவிப்பின் உள்ளடக்கத்தில் மோகனா ஸ்தம்பித்து நிற்கிறார். அவரால் அவர் மீது கொண்ட காதலை சாகடிக்க முடியவில்லை. அதுவும் அந்த துரித நேரத்துக்குள் அந்தக்காதலைக் கொன்று விடுதல் சாத்தியமே இல்லை. அன்பிற்கினிய தோழன்.. காதலனாய் மாறிய சிறு காலகட்டத்துக்கு பின் நீண்ட பெரும்பூத இடைவெளி. அதன் பிறகு ஓர் இரவு. அவ்விரவிலும் பாதியிலேயே காதலோடு இறந்தவரின் கைகளைப் பற்றிக் கொண்டு எப்படி என்ன சொல்லி அழுவது. மோகனா உடைந்து போகும் தருணம் அது.
ஒரு மோசமான விடியல் அன்று கதவைத் தட்டுகிறது.
காவல் துறை தன் கடமையை செய்கிறது. அதுவும்..போலீசாக நாசர் என்ட்ரி.... அதகளம்.
மெல்லிய குரலில்.... காமத்தை கக்கும் விஷத்தை நாசரின் கண்கள்.. கொண்டிருப்பதெல்லாம்.. ஆஸம் காட்சிகள். சிறு சிறு கண்ணசைவில் மோகனாவை சரி கட்ட செய்யும் பிரயத்தனங்கள்.... வயது ஆன பின்னும் காதலை சுமந்து கொண்டிருக்கும் உடலில்.. காமம் பூத்து தான் இருக்கும் போன்ற மோகனாவின் உடல் தளதளப்பு ........மருண்ட கண்களின் பரிதவிப்பு...அதைக் கண்டு பெருமூச்சு விடும் நாசர்... ஒரு வீட்டுக்குள் ஒரு பிணத்தை வைத்துக் கொண்டு நின்றும் அமர்ந்தும் ஓடியும்.. உருண்டும் கிடக்கும்... உள்ளத்தை நடுக்கத்தோடுதான் உணர வேண்டி இருந்தது.
சொந்த மகள் உள்பட... எல்லாரும் கேட்கும் கேள்வி.. "அவருக்கும் உனக்கும் கள்ளத்தொடர்பா... ???"
காதலா என்று கூட கேட்கலாம். அப்படி ஒரு சாய்ஸ் இருக்கும் போது யோனிக்கும் ஆண்குறிக்கும் இடையே மாட்டிக் கொண்ட இந்த உலகம்.. கேட்கும் முதல் கேள்வியே கள்ளக்காதலா....? அடிக்கடி அவர் இங்க வருவாரா....?
"பிரபல எழுத்தாளர் கள்ளக்காதலி வீட்டில் மரணம்..." செய்தி.
"பழைய காதலர்கள்;... ஓர் இரவு முழுக்க பேசிக்கொண்டேவா இருப்பார்கள்.....!" என்று போலீஸ்காரர் நாசர் கேட்கையில்.... ஒவ்வொரு இரவும் பேசிக் கொண்டே இருக்க செய்யும்...... அற்புதம் காதலில் இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது.
எல்லாருக்கும் பதில்...." அவர் பால்ய சிநேகிதன்... அவ்ளோ தான்... இதான் முதல் முறை இங்க வர்றார்...." தொண்டை வரை வந்த சொற்களை தொண்டைக்குள்ளேயே அழுத்தி அதன் பிறகு வார்த்தைகளை வெளிவிடும் அர்ச்சனாவின் மொழி நடை ஆகச் சிறந்த நடிப்பு என்றால் தகும்.
விஷயம் தெரிந்து படபடப்போடு கௌரிசங்கரின் மனைவி சீதா வருகிறார். சீதாவாக ரேவதி.
இந்த பக்கம் ரேவதி. அந்த பக்கம் அர்ச்சனா.. இடையே கேமரா தடுமாறும். இவ்வாழ்வின் புதிர் அவிழ.
மாற்றி மாற்றி அசுரத்தனமாக நடித்து அழும் போது இருவருமே லெஜெண்ட் என்பதை கிடைத்த இடைவெளியில் எல்லாம் நிரூபிக்கிறார்கள். நாம் கலங்கிய கண்களோடு தான் காண முடிகிறது. இரண்டும் கதை கொண்ட பாத்திரங்கள்.
"உங்க கணவரை நான் கொல்லல..."என்று சொல்லும் கண்களில் தாரை தாராயாக கண்ணீர் வடிக்கும் மோகனாவை தன் கணவரின் காதல் கருணனையோடு அணுகும் சீதா அன்பின் மொத்தம்.
மோகனாவை உற்றுப் பார்க்கிறார் சீதா.
"என்ன அப்டி பாக்கறீங்க...!" என்று மோகனா கேட்கிறார். ஆழ்ந்த அமைதியில் இருந்து வெளி வரும் குரலில்.... ஆச்சரியமும்.... அவசியமும்... கலந்திருக்கிறது.
மெல்ல சிரித்துக் கொண்டே அழுகையின் ஆட்கொண்டலில்.....சீதா கேட்கிறார்.,
" இல்ல.. அவர் கதையில் வர்ற எல்லா கதாநாயகியோட சாயலும் உங்ககிட்ட இருக்கு....நீங்க தான் அந்த 'ஜீவநதி' கதையில வர்ற யமுனாவா...அவளும் உங்கள மாதிரி தான்... அழகான (வார்த்தை தவம் மாதிரி) கண்கள்...(இந்த இடைவெளியில்.... மோகனா கண்கள் நிரம்ப சீதாவை பார்க்கும் ஒரு இன்செர்ட் ஷாட். இந்தக் கண்களில்....விழுவதற்கு தவம் செய்யும் கண்ணீர்.)
"தன்னோட காதலனை பிரிஞ்சு அவனோட நினைவிலேயே வாழ்ந்துட்டு இருப்பா( நினைவில் காதலுள்ள பெண் சாவதேயில்லை....) "இல்ல 'இதயத்தில் நீ' கதைல வர்ற அந்த இங்கிலிஷ் ப்ரோபஸர் கமலியா....? ஒரு முறை தான் பூக்கும் ஆனந்தி...! அவளா நீங்க...?" கேள்வி கேட்டு முடித்ததும்... பின்னணியில் மனம் அறுக்கும் இசை ஒன்று சுழல...முகமே சோகத்தின் வட்டமென அசையும் மோகனாவின் கண்கள் நிறைந்து..... 'இருக்கலாம்.... இருக்கலாம்... இருக்கலாம்...' என்று வேறு வேறு மாடுலேஷனில் சொல்லி காதலின் காலங்களை சுமந்து பார்க்கையில்.... தொண்டை அடைக்கும் சுகம் காதலுக்குண்டென புரியும்.
நேற்று தன் கணவர் வந்து வாசம் கொண்ட அந்த அறையை.... அவர் இருந்ததற்கான வாசத்தை உள் வாங்கிக் கொண்ட சீதா "இப்போ எனக்கு புரிஞ்சு போச்சு. அவர் ஏன் இங்க வந்தார்ன்னு......" என்று சொல்லி விட்டு கண்கள் கலங்க..... இல்லாத வெற்றிடங்களில் எல்லாம் கணவனைத் தேடுகையில் சில உச்சங்கள் தன்னை அப்படியே நிறுத்திக் கொள்ளும். நிறுத்திக் கொண்ட இடம் அன்பின் உச்சம்.
"அதனாலதான் அவர் இங்க வந்து உயிர விட்டிருக்கார்......" என்று அர்ச்சனாவிடம் கை கூப்பும் போது...."ஐயோவென " இருந்தது.
அவர் வாங்கிய சாகித்ய அகடமி விருதை மோகனாவிடமே கொடுத்து விடும்... சீதா.... கௌரிசங்கரின் அடுத்த புத்தகம் மோகனாவுக்கு சமர்ப்பணம் என்று தெரிந்து கொள்கையில்... மோகனா மீது கொண்ட கௌரிசங்கரின் காதலை மனதார வாழ்த்துகிறார்.
"என்கிட்ட அவர் உங்கள பத்தி ஒரு தடவை கூட சொல்லல... சொல்லி இருக்கலாம்....!" என்று சீதா சொல்ல.. "சொன்னா நீங்க மனசு கஷ்டப்படுவீங்கன்னு தான் சொல்லாம விட்ருப்பார்" என்று மோகனா சொல்ல... அவர்கள் மூவரின் அன்பு காதலின் சாட்சியாய் அவ்வீட்டில் சுழல்வதை நாம் உணர்கிறோம்.
இப்படி ஒரு சீதாவுக்கு.. அப்படி ஒரு கௌரிசங்கர் இருந்தால்..... இப்படி ஒரு மோகனா அவருக்காக பிரிந்து இருக்கலாம். இப்படி ஒரு மோகனாவுக்கு அப்படி ஒரு கௌரிசங்கர் இருந்தால்.... இப்படி ஒரு சீதா விட்டுக் கொடுக்கலாம். இப்படி ஒரு சீதாவுக்கும் அப்படி ஒரு மோகனாவுக்கும் இப்படி ஒரு கௌரிசங்கர் இருந்தால் தான் அது காதலாக இருக்கும். தாரளமாக இருக்கலாம். காதல்... மிக மிக நுட்பமானது. நிபுணத்துவம் மெல்லிய கோடுகளால் தன்னை அழித்துக் கொண்டே இருக்கும். எப்போதாவது இப்படி முக்கோணத்தில் தன்னை தானே மாட்டிக் கொள்ளும். கடைசி முடிச்சை அவிழ்க்கத் தெரியாமல்... உள்ளேயே மலங்க மலங்க விழிப்பது தான் காதல். அது தான் நிகழ்கிறது.
கௌரிஷங்கராக பிரகாஷ்ராஜ்.... இனி நடிப்பதற்கு ஒன்றுமில்லை..... என்பது போன்ற ஆஜானுபாகுவான மென்மைத்தனத்தில் மனுஷன் அசரடித்திருக்கிறார். இறந்த பிறகும் நடித்துக் கொண்டிருக்கும் உடல் மொழியை பிரகாஷ் ராஜ் கொண்டிருப்பது.... கலையின் தவம்.
இறுதிக் காட்சியில்... மொட்டைமாடியில்.. மழையினூடாக.. உச்சத்தாயில் அழமுடியாத கதாபாத்திரத் தன்மையின் வடிவத்துக்கு இணங்க... தொண்டைக்குள்ளயே அழும் மோகனாவுக்கு அந்த அழுகை விடுதலையைத் தருகிறது. கிட்டத்தட்ட 24 மணி நேரங்களாக உள்ளே புதைந்து கொண்டு புழுங்கிக் கொண்டிருந்த மோகனா வாய் விட்டு அழுகிறார். அந்த அழுகை அத்தனை நேரம் நாமும் அடக்கி வைத்த அழுகை தான். விடை தேடும் போது பல சமயங்களில் அழுகை தேவைப்படுகிறது. மோகனா அழுது கொண்டே இருக்கிறார்.
காதலின் பெரும்பகுதி அழுகைகளால் ஆனது. அது தான் அதன் அற்புதமும் கூட. மோகனா இன்னமும் அழுது கொண்டே இருக்கிறார். அழட்டும் விடுங்கள்....
- கவிஜி
படம் : அழியாத கோலங்கள் 2
மொழி : தமிழ்
வருடம் : 2019
இயக்குனர் : M.R.பாரதி