lunch boxஅவள் விதவிதமாக சமைக்கிறாள்.

அவள் கைகளின் வழியே காதலும் அன்பும்... சப்பாத்தியாகவும்...பாகற்காய் பஜ்ஜியாகவும்...கொத்தவரங்காய் பொரியலாகவும்... கொழுக்கட்டை பாண்டமாகவும்... எண்ணையில் பொரித்து எடுக்கும் அன்பின் மொறுமொறுப்புகள்.. பார்க்கவே அத்தனை பரவசம். அன்புக்கு ஏங்கும் நேர்த்தியோடு அவள் சமையலறையை கையாளும் முறை பசித்த பொழுதுகளின் அற்புத நொடிகளால் ஆனவை. அடுக்கடுக்காய் டிபன் பாக்சில் வைத்து அடுக்கி....அவள் கொடுத்து விடும் மதிய உணவு... "டப்பாவாலா"க்கள் மூலமாக மும்பை பெருநகரில் பயணிக்கையில் படம் ஆரம்பிக்கிறது.

மும்பையில் டப்பா வாலாக்கள் பிரபலம். சுட சுட வீட்டு சாப்பாட்டை மனைவியிடம் வாங்கிக் கொண்டு கணவன்மார்கள் அலுவலகத்தில் கொண்டு சேர்க்கும் மிக நுட்பமான வேளையை டப்பா வாலாக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். கணிசமாக லட்சங்களில் புரளும் வருவாயை இத்தொழில் ஈட்டிக் கொடுக்கிறது என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

டப்பா வாலாக்கள் மூலமாக கதை நாயகி தன் கணவனுக்கு அனுப்பிய லன்ச் பாக்ஸ் முகவரி மாறி நம்ம ஹீரோ இர்பான்க்கு போய் விடுகிறது. முதலில் வழக்கமாக வரும், தான் கணக்கு வைத்திருக்கும் மெஸ்சில் இருந்து தான் வந்திருக்கிறது என்று நினைத்து...... அப்போதும் ஒரு வித சந்தேகத்தோடு......நம்ம மெஸ்ஸில் இருந்து இப்படி ஒரு சாப்பாடா என்பது போன்ற பாவனையில்...... ஆனாலும்.. மனம் நிறைய உண்டு விட்டு.. மாலையில் மெஸ்சில்....."இன்று சாப்பாடு அபாரம்" என்று புகழ்ந்து செல்கிறார்.

"பாவுபாஜி எப்படி அபாரம்....!!!" என்று அவர்களுக்குள்ளாகவே சமிக்கையில் சந்தேக பார்வை பார்த்துக் கொள்ளும் மெஸ் வாலாக்கள் நம்மை சிரிப்பூட்டுகிறார்கள்.

"இன்னைக்கு சாப்பாடு எப்படி இருந்தது......?"என்று வழக்கம் போல மனைவி கேட்க.....தனக்கு வராத சாப்பாட்டை சாப்பிட்டதாகவும் அற்புதமாக இருந்ததாகவும் கணவன் சொல்லி விட்டு, அடுத்த வந்த அலைபேசியில் ரகசியம் பேசத் துவங்குகையில் அவர்களின் உறவு நமக்கு புரிந்து விடுகிறது. காய்ந்து கொண்டிருக்கும் துணிகளை காய்ந்து விட்டதா என்று பார்க்கும் சாக்கில் ஒட்டுக் கேட்கும் அவளின் துயரம் மிகுந்த கண்களை அத்தனை கிட்டத்தில் காண இயலவில்லை. மனதளவில் கை விட்டு போன கணவனை மீண்டும் இழுத்துப் பிடிக்க முகம் காட்டாத மேல் வீ ட்டு ஆன்ட்டியின் குரல் வழியே நாம் கண்டடையும்.. மன நுட்பம், சமையல் என்று அறிகிறோம்.

"ஹாஹ்ன்...ஆன்ட்டி...." என்று ஒவ்வொரு முறையும் கரகரத்த குரலில் அவள் அழைக்கையில் நமக்கும் அந்த ஆன்ட்டியை காண வேண்டும் போல இருக்கிறது. அவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணைகள் கை தேர்ந்த நிபுணத்துவம் பெற்ற குடும்பம் நடத்தும் குறிப்புகள்.

ஒரு கட்டத்தில் தான் அனுப்பும் லன்ச் பாக்ஸ் வேறு யாருக்கோ போய் விடுவதை உணரும் அவள்.. அடுத்த நாள் காரத்தை தூக்கலாக போட்டு விட்டு ஒரு கடிதமும் வைத்து விடுகிறாள். சாப்பாடு மாறியதை குறித்தும்.... குற்ற உணர்வே இல்லாமல் அதை உண்டு விட்டது குறித்தும் கடிதத்தில் செய்தி இருக்கிறது. படித்துக் கொண்டே சிறு புன்னகையில் சாப்பிடும் இர்பான், காரம் தாங்க முடியாமல் சாப்பாட்டை அப்படியே வைத்து விட்டு ரோட்டோர கடைகளில் வாழைப்பழம் உண்டு பசியை தணிக்கிறார். தனித்திருப்பவனின் உடல்மொழியில் இர்பான் இம்சிக்கிறார். தனித்த பொழுதுகளின் தீவிரம் அவர் பார்வையில் நரை கூடி ததும்புவதை தனியனாக காணுகையில் தவிக்கத்தான் செய்யும்.

மும்பையில் மதிய உணவுக்கு நிறைய பேர் வாழைப்பழங்களை மட்டுமே சாப்பிடுகிறார்கள். நானும் இன்று அதைத் தான் சாப்பிட்டேன். என் மனைவியின் நினைவு பீறிட்டது. என் மனைவியும் நன்றாக சமைப்பாள். அவள் இறந்த பிறகு இப்போது தான் உங்கள் சமையலில் தான் அந்த அற்புதம் நிகழ்வதைக் கண்டேன் என்று புகழ்ந்து எழுதி இருக்கும் கடிதத்தை கண்களில் மௌனம் பொங்க... இதழ்களில் இனம் புரியாத இடைவெளிகளில் அவள் படிக்கிறாள்.

அடுத்த நாள் கணவனுக்கு செய்வதை போலவே வித விதமான ஐட்டங்களை செய்து வழக்கம் போல அனுப்பி வைக்கிறாள். 12.30க்கே அலுவலக இருக்கையிலே அமர்ந்தே ஆர்வம் தாங்காமல் லன்ச் பாக்ஸை திறந்து வாசம் பிடிக்கிறார் இர்பான். வாசங்களால் இருவருக்குள்ளும் வளரும் அன்பை இருவரும் மிக நுண்ணிய தூரங்களில் உணர்கிறார்கள். நாமும் கூட ஆர்வமாகிறோம். இடையே இர்பானின் உதவியாளராக வரும் நவாஸுதீன் கதாபாத்திரம் மிக மிக வெளிப்படையான வாழ்வின் நீள அகலத்தை தனக்கு தெரிந்த தோராயத்தில் பார்க்கும் அற்புதமான பாத்திர படைப்பு.

வேகமாய் லன்ச் டேபிளில் வந்து அமர்ந்து, தான் கொண்டு வந்திருக்கும் கவரில் இருந்து இரண்டு வாழைப்பழங்களை......இரண்டு ஆப்பிள்களை எடுத்து மேசை மீது வைத்து விட்டு....."ம்ம்ம்.... சாப்பிடலாம் சார்..." என்று இர்பானின் உணவுகளையே பார்க்கும் நவாஸுதீன், தனித்திருப்பவனின் மதியத்தை வயிறு சுருங்க காட்சி படுத்துகிறார். தனித்திருப்பவனின் பசி எந்த வயதிலும் எட்டா கனியாகவே இருப்பதை நாம் உணர முடிகிறது. கையேந்தி பவன்களிலும் ரோட்டோர கடைகளிலும் டை கட்டி டேக் மாட்டிக் கொண்டிருக்கும் எத்தனை மனிதர்களைக் காண முடிகிறது. எல்லாமே வாழ்வின் தீரா பக்கங்களின் நிமித்தம் தன்னையும் டேக் பண்ணிக் கொண்ட எதன் பொருட்டோ உறவுகளை பிரிந்த.........உறவுகளற்ற........ தனியன்களாகவே இருக்கிறார்கள்.

lunch box 2"சாப்டு" என்று தன் முன்னால் விரவி இருக்கும் பாத்திரங்களிடையே இர்பான் சொல்கையில் நொடி கூட தாமதியாமல் "ஆஹ்.. சாப்பிடலாமே" என்று வேகமாய் வேகமாய் பாக்ஸ் மூடியை எடுத்து சப்பாத்தியையும் மற்ற உணவுகளையும் போட்டு வெகு இயல்பாக... வேகமாக சாப்பிடும் நவாஸுதீன் பசித்த வாழ்வின் பெரும்பகுதிகளை கண்முன்னே காட்டி விடுகிறார்.

ஒவ்வொரு நாளும் இரவு தன் வீட்டில் இரவு உணவுக்கு பின் (மெஸ்சில் வாங்கி கொண்டு வந்த வறண்ட சப்பாத்தியும் பாலிதீன் கவரில் தேங்கி இருக்கும் குருமாவும்) பால்கனியில் நின்று சிகரெட் குடிக்கும் இர்பானின் தனிமை......பழுப்பு நிற கண்களால் ஆனது. சமீபத்திய மதிய லன்ச் பாக்ஸ்-ன் வழியே வந்தவளின் மீது இனம் புரியாத அன்பும் பரிதவிப்பும் அவருள் தொடர் பசியை விதைத்துக் கொண்டிருக்கிறது.

நேரில் சந்திக்க நாள் குறிக்கப்படுகிறது.

கணவனால் புறக்கணிப்பட்ட அவளுக்கும் கடிதங்களின் மூலமாக அன்றாட வாழ்வின் யதார்த்தங்களை பகிர்ந்து கொள்ளும் இர்பான் மீது இனம் புரிந்த அன்பு வெளிப்படுகிறது. பாவனைகளற்ற முகத்தினூடாக அவள் உள்வாங்கும் இருப்பை நாம் என்னவென்று புரிந்து கொள்வது. அதுதான் அந்த பாத்திரத்தின் நுட்பமான வடிவமைப்பு. எதிர் வீட்டில்..... பக்கத்துக்கு வீட்டில்... நம் தோழிகளில் ஒருத்தி.. ஏன் நம் வீட்டில் கூட அப்படி ஒருத்தி இருப்பாள். அவர்கள் காலத்துக்கும் கணவனுக்கு பிடிக்குமே என்று விதவிதமாய் சமைத்துக் கொண்டும் கணவனின் சட்டையை வாசம் பிடித்துக் கொண்டுமே நாட்களைக் நகர்த்தி விடுகிறார்கள். அவர்களுக்கு காதலை வெளிப்படுத்த வேறு வழி தெரிவதில்லை. சில கணவன்களுக்கு அது காலம் முழுக்க புரிவதில்லை. புரிந்தாலும் ஆப்சனுக்கான சாக்காய் அதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்தக் கதை நாயகியின் கணவனும் அப்படித்தான்.

ஒரு கட்டத்தில் அவள் இர்பானைத் தேடி அவர் அலுவலகத்துக்கே சென்று விடுகிறாள்.

முன்பொரு முறை அவளை வர சொல்லி விட்டு அவளை ஒளிந்து நின்று பார்க்கும் 50 வயதுக்கு மேல் இருக்கும் இர்பான் தாழ்வு மனப்பான்மையால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அவளை சந்திக்காமலே இருந்து விடுவார். மௌனத்தில் அதிரும் இடைவெளிகளை சத்தமிடாமல் காண்போம் நாம்.

அதன் தொடர்ச்சியாக ஒருநாள் அவரைத் தேடி வரும் அவள் உடல்மொழியில், ஆகாயம் தேடும் ஒற்றை பறவையின் தாங்கொணா வலியை உணர முடியும். அதற்கு பாவனைகள் தேவை இல்லை என்று முனங்குகிறோம்.

இர்பான் அவளை தவிர்க்கும் பொருட்டு அவளை விட்டு நாசிக் சென்று விடுவது தெரிகையில்.... அவளிடம் ஒரு கேள்வியும் இல்லை. பதிலற்றவளாய் கடந்து விடுகிறாள். இறுகிய முகத்தில்.... ஏமாற்ற வடிவம் முகமூடியற்று இருக்கிறது.

ஆனால் அவளை பிரிய முடியாத இர்பான் மீண்டும் பழைய இடத்துக்கே வருகிறார். ஆனால் லஞ்ச் பாக்ஸ் வருவதில்லை.

டப்பா வாலாக்களிடம் விசாரித்து கொண்டும்.... அவர்கள் போகும் ரயில் பயணத்தில்.......கூட அமர்ந்து கொண்டும்.... அவர் கண்கள் டப்பா வாலாக்களின் வழியே அவளைத் தேடிக்கொண்டே இருக்கிறது. அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ளாத தருணத்தில், அவர்கள் இனி சந்தித்துக் கொள்ளவே கூடாது என்பதில் தான் "லன்ச் பாக்ஸ்" கதையின் ஆன்மா இருப்பதாக நம்புகிறேன்.

பசித்த ஒரு நாளின் மதியத்தை இன்னும் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறது......இந்த லன்ச் பாக்ஸ்.

FILM : LUNCH BOX
LANGUAGE : HINDI
YEAR : 2013
DIRECTION : Ritesh Batra

- கவிஜி