மிஷ்கின் திரைக்கதை, வசனம் எழுதி அவரின் சகோதரர் ஆதித்யா இயக்கியிருக்கும் படம் "சவரக்கத்தி". பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை ஆனால் படம் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தது. அதேபோல் நன்றாகவே இருந்தது.
ஒரு சவரத்தொழிலாளி தன் வாயால் ஒரு ரவுடியின் கோபத்துக்கு ஆளாகிறான். அதன்பின் அந்த ரவுடி அவனைக் கொல்லத் துரத்துகிறான். இறுதியில் என்ன ஆனது என்பதுதான் கதை.
தமிழ் சினிமா ரசிகர்களை ஓரளவு நல்ல சினிமாக்கள் பார்க்க வைக்க ஆசைப்படும் இயக்குனர்களில் முக்கியமானவர் மிஷ்கின். அதையே இந்த முறையும் முயன்றிருக்கிறார். அது நகைச்சுவையுடன் பல இடங்களில் நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. செயற்கைத் தன்மை இருந்தது, படத்தை ரசிக்க வைப்பதும் அந்த செயற்கைத்தன்மைதான். பல இடங்களில் கதாபாத்திரங்கள் கத்திக்கொண்டே இருந்தது குறையாகவேத் தெரிந்தது. சில இடங்களில் படம் கொஞ்சம் இழுவை போல தோன்றியது. மற்ற மிஷ்கின் படங்களின் சாயல் கொஞ்சம் இதில் குறைவுதான்.
மிஷ்கினுடைய "ஒன் மேன்ஷோ" என்றே படத்தை சொல்லிவிடலாம். ரவுடி 'மங்கா' காபிஷாப்பில் ஒரு பெண்ணை முறைத்துப் பார்ப்பதிலிருந்து அட்டகாசம் ஆரம்பிக்கிறது. இரண்டாம் பாதியில் கோபம் மெல்ல குறைந்து, கொல்ல வந்தவனின் மனைவியை மருத்துவமனையில் சேர்க்கும்போது இரக்கமுள்ளவனாகவே அவன் தெரிகிறான். பின்னர் நடக்கும் செயல்களால் கோபத்தின் உச்சிக்கே செல்லும் அவன் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு மனம் இரங்குகிறான். மிஷ்கினுக்காகவே படத்தின் மற்ற குறைகள் பெரிதாகத் தெரியவில்லை. மறுபுறம் ராமும் விட்டுக்கொடுக்காமல் அடிவாங்குகிறார். அழுது புலம்பும் இடங்களில் நமக்கும் அழுகையை ஏற்படுத்தி விடுகிறார்.
சவரக்கத்தி ஒரு நல்ல முயற்சி!
- சாண்டில்யன் ராஜூ