மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகன் பிரணவ் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் இது. குழந்தை நட்சத்திரமாக 2002 லேயே அறிமுகமாகி விட்டாலும் கமலஹாசனின் பாபநாசம் மற்றும் திலீபின் லைஃப் ஆஃப் ஜோசுட்டி திரைப்படங்களில் உதவி இயக்குனராக ஜீத்து ஜோசப்பிடம் பணிபுரிந்திருக்கிறார். இப்பொழுது முழுநேரக் கதாநாயகனாகி விட்டார். வாரிசு நடிகராக இருந்தாலும் இவருக்கென்று பல தனித்திறமைகளைக் கொண்டிருக்கிறார். அதைப் படம் பார்ப்பவர்கள் உணர முடியும்.

aadhi malayalam movie

ஒரு பொய்யான கொலைக்குற்றச்சாட்டில் சிக்கிக் கொண்ட இளைஞன் அதிலிருந்து மீண்டு வந்தானா என்பதே கதை. ரொம்ப சிம்பிளான ஒரு கதையை பவர்ஃபுல்லான திரைக்கதையாக்கி விறுவிறுப்பாக அளித்திருக்கிறார் ஜீத்து ஜோசப். திரிஷ்யத்திற்கு பிறகு அவருடைய படங்கள் பெரிதாக வெற்றிபெறவில்லை. இவருடைய கடந்த படமான 'ஊழம்' திரைப்படத்திற்கான இன்டர்வியூவில் கூட "திரிஷ்யத்தை நினைத்து வராதீர்கள்" என்றார். திரிஷ்யம் ஒரு மாஸ்டர்பீஸ். இப்பொழுது அவர் கொஞ்சம் மசாலாப் பாதையில் பயணிப்பதாகவே தெரிகிறது. ஆனால் அதிலும் முடிந்தவரை பல டெக்னிக்கலான விஷயங்களை சேர்த்து இன்டலிஜென்டாகத் திரைக்கதை அமைக்கிறார்.

இந்த ஆதியை மற்ற மசாலாப் படங்களிலிருந்து வித்தியாசமாகக் காட்டும் முக்கிய அம்சம் சண்டைக்காட்சிகள். மோகன்லால் தன்னுடைய மகனுக்கு எந்தவிதமானப் பயிற்சிகளையெல்லாம் சிறுவயதிலிருந்து அளித்தாரோ அவை அனைத்தையும் இதில் செயல் படுத்தியிருக்கிறார்கள். அதிலும் "Parkour" எனப்படும் ஒரு வகை தடைகளைத் தாண்டி குதித்து ஓடும் ஓட்டத்தைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டிருக்கும் மூன்று சண்டைக்காட்சிகள்தான் படத்தின் முதுகெலும்பு. அவற்றை கதாநாயகனே ரியலாகவும் செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகளுக்கு இந்த வருடம் தேசிய விருது வாங்க நிறைய வாய்ப்புள்ளது. (கடந்த வருடம் புலிமுருகன் வாங்கியது).

மலையாளத்தில் ஆக்சன் ஹுரோக்களே இல்லை. அதனால்தான் தமிழ் தெலுங்கு ஹீரோக்கள் அங்கு கொடிகட்டிப் பறக்கின்றனர். எவ்வளவோ நல்ல மலையாளப் படங்களை அவர்கள் எடுத்தாலும் மசாலா ஆக்சன் படமான புலிமுருகனில்தான் வணிகரீதியாக நூறு கோடியைத் தொட்டார்கள். ப்ரணவ் மோகன்லாலுக்கு மலையாளத்திலிருந்து மிகப்பெரிய ஆக்சன் ஹுரோவாக ஆவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது.

ஆக்சன் த்ரில்லர் விரும்பிகளுக்கான விருந்து "ஆதி". வெல்கம் ப்ரணவ்!

- சாண்டில்யன் ராஜூ

Pin It