இதயமற்ற ஒருவனின் வாழ்வில் இதயத்தோடு ஒரு ஜீவன் வந்தால்.... அது உலகிலுள்ள அத்தனை அன்பையும் அவன் மீது வைத்தால்.... பின் மெல்ல மெல்ல அவனை அதே அன்பால் பலி வாங்கினால்.... அவனை காலம் முழுக்க அவன் செய்த பாவத்துக்கு மனம் புழுங்கி சாகும் தண்டனையைக் கொடுக்க தன் உயிரையும் கொடுத்தால்......

pietaஇப்படி சாதாரணமான இந்தக் கதையை கடந்து விட முடியாது.... காட்சிகளின் வனப்புகளில்.. வனாந்திரத் தனிமையை காணும் விழிகளில்.. தைத்து கொண்டே போவதில்...."கிம் கி டுக்" மீண்டும் மீண்டும் திகில் திறக்கிறார். கொடுமையின் குரூரத்தை முகத்திலும் அகத்திலும் சுமந்து திரியும் கதை நாயகனின்.. கண் மையிட்ட விழிகளில் எப்போதும் வழிந்து கொண்டே இருக்கும் மிருகத்தனமான பசியில்.....அவனால் அடிபடும்.... உடைபடும்... சாகும்... மனிதர்களோடு நாமும்.. நிலை குலைந்து போவதில்... அது அப்படித்தான் தீர்மனிக்கப் பட்டிருக்கிறது.

படம் ஆரம்பிக்கும் முதல் காட்சியிலேயே அவனின் தீரா தனிமையின் வலி... கண்கள் மூடிக் கொண்டு உலகைத் தேடும் இரவுப் பூனையின் நிமித்தமென கீச்சிடுகிறது. அது போதும் போதுமென இருட்டின் பக்கங்களை வேகமாகவும்... வேதனையாகவும்.... திறக்கிறது. ஒரு பக்கம் வசனம் பேசிக் கூடிய காட்சியை ஒரே சாட்டில்... காட்டி விடுவதில்... கொஞ்சம் பிரமித்து... சிமிட்ட முடியும் கண்கள் பாக்கிய மீன்கள்.... அது நீந்தும்... சொற்பத்தின்... மூடுதல்களிலும்... முந்தின கட்சி ஓடுவதில்.. உயர்ந்து நிற்பது கிம் கி டுக்கின் இயக்கம்.

இந்த மானுடத்தின் சாபமும்.. வரமும்.. அன்பு மட்டுமே. அது இருக்கும் ஆயுதத்துக்கெல்லாம் உயர்ந்த ஆயுதம். அதைக் கொண்டு... எதிராளியின் மனதுக்குள் கூர் கத்தி ஒன்றை செய்து உள் நோக்கி மரணத்தை திருப்பி விட்டு விட முடியும்.  அடித்துக் கொண்டேயிருப்பது வன்முறை என்றால்.. அடி வாங்கிக் கொண்டே மீண்டும் மீண்டும் அடி என்று கூறுவது வன்முறையின் உச்சம். உச்சத்தின் முனையில் நின்று  அம்மா கதாபாத்திரம் தாய்மையின் மார்பு திறந்து.. விஷம் சொட்டுகிறது.  சாத்தானின் முருங்கை மரம் மெல்ல உடைபடும் நேரத்தில் வேதாளம் இடம் மாறுகிறது.

எதிர் வினையில் நின்ற வினைக்குள் எட்டிப் பார்க்கும் பொருளுக்கு பொருளற்று சேர்ந்து கொள்ளும்.... பொருள் ஒன்றில்...சொல்லப் படும் நிர்பந்தங்களைத்தான் இந்த மனித மனம் விரும்புகிறது. அந்த மனம் முழுக்க... அவனின் துயரத்தின் சுவடுகள்... மீள் பயத்தின் மிச்சமென...அவனால் விரும்பப் படுவது தனிமையின் இருள் சேர்ந்த சில கோழிகளின் சாபங்களையும். வினோதம் மூச்சடைத்து சாவும்... மணித்துளிகளை அவன் மீன் தொட்டியில்.. ரசித்துக் கொண்டிருக்கும் உக்கிர தூதுவன் ஆகிறான்.... 

வட்டிக்கு காசு கொடுத்து திரும்ப தர முடியாதாவர்களுக்கு அவன் செய்யும் கொடுமை.. காட்சிகளின் வலிமை. வழிந்து ஓடும்.. இயலாமையின் சூழலுக்குள் இந்த வாழ்க்கை இறக்கை உடைத்துக் கொண்டே போவதில் வறுமையின் நிறம் வானம் என்றே நம்ப வைக்கப் படுக்கிறது. இரண்டு கையும் இழந்தால்.... கிடைக்கும் காப்பீட்டு தொகையில்...தன் குழந்தைக்கு தேவையானதை வாங்க வேண்டும் என்று கூறும் ஒரு கடன்காரன்....கடைசியாக தனக்கு மிகவும் பிடித்த கிட்டாரை ஒரு முறை வாசித்துக் கொள்கையில்... அதிரும் நரம்புகளின் பிதற்றலில்...... பணத்தின் முற்பக்கத்தை தூவி கொக்கரிக்கிறது....பசித்தவனின்... பாழும் குருதியின் எச்சில் துளிகள்.

"கிம் கி டுக்"-கின் படங்களில் எப்போதும் இருக்கும் நீங்கள் திறக்க தயங்கும் கதவுகள் வெகு சாதாரணமாக திறந்து கொள்ளுதல் இம்முறையும் இனிதே நடக்கிறது. திறக்க திறக்க நம் மனது மூடிக் கொண்டு உள்ளே அடம் பிடித்து அழும் நிஜத்தின் சூத்து கவ்வலை நிஜமாகவே கசக்கி... பிழிந்து ஒன்றுமில்லாமல் செய்யும்... சுயத்தின் பிறழ்வுகளை நம்மால் கடக்காமல் இருக்க முடியாது... முடியாதுகளில்.... முடிந்து நிற்கிறது... முடிந்து போன்றவைகளும்... முடிய போன்றவைகளும். செத்து போன தாயாக வந்தவளுடனும்.. அவளின் செத்துப் போன மகனுடனும்...இதயமற்றவன்  செத்தவன் போல படுத்துக்க கிடக்கும் ஒரு காட்சி போதும்.... மொத்த படத்தின் முன் பின் அசைவுகளை அசைவற்று...  அசை போடும்... அசல் சினிமா.

"இன்னும் கொஞ்சம் அடி..ஆனால் காசு மட்டும் தா..."என்று கூறும் கை போனவனின் கண்களில்.. இயலாமையின் ஆறு தேங்கி மூச்சடைத்து மீண்டும் மீண்டும்.. சுழன்று கொண்டே இருப்பதை காணும் நொடிகளில்... பரிதவிப்பும் கோபமும் போரிட்டு இணைகிறது. உன்னை என் வண்டியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும் என்று வெஞ்சினத்தோடு அழுது கொண்டே எதிர்க்குரலை பதிவு செய்யும் அந்தத் கை போனனின் மனைவிக்கு கடைசியில் அவன் அப்படியே சாவது கூட தெரியாது....தெரியாத எல்லாத்துக்கும் இது ஒரு சான்று.

தன்னை தாய் என்று நம்ப வைக்க அந்த அம்மா எது வரை துணிவாள் என்பதை போகிற போக்கில் ஜன்னல் திறந்து கூறும் திரைக்கு கதையில்.. அவளின் முகனின் மரணம்.. தீரா கோபத்தை அவளுள் சுழற்றிக் கொண்டே இருக்கிறது. மெல்ல மெல்ல அவனை ஆக்கிரமிக்கும் இடத்தில்... அத்துவானாகக் காடு சுருங்கி சுருங்கி... ஒற்றை மரமாய் ஆகி அதை அவள் சொல்லி அவன் நட்டு வளர்க்கும் மிருதுவுக்குள் புலி ஒன்று மானாகி தப்பிக்கும் கதையாகிறது. முயல் ஒன்று தப்பித்து விதியாகும் வெளியாகிறது.

தான் ஆடும் நாடகத்தில் தானே இயக்குனர் என்பதால் அந்த அம்மா கதாபாத்திரம்... உயர்த்த கட்டிடத்தில் நின்று கொண்டு.. யாரோ தள்ளி விடுவது போல விழ முற்படுகையில்...பின்னால் தள்ளி விட ஒரு பாழும் கிழவி முயன்று கொண்டிருப்பது வஞ்சத்தின் நியாயம். அது திருப்தியின் திரும்புதலை எங்கோ ஒளித்துக் கொண்டு எங்கோ தேடுகிறது. பிரியமானவர்களின் மரணத்தில் மீந்து விடுகின்றது இப்படியாகப்பட்ட மானுடத்தின் மிச்சம்.

வலிமைக்கு வலிமை எளியவையும் ஆகும். அது மிகச் சாதாரணமாக கதவைத் தட்டி விட்டு போய் விடும். திறக்கையில் அன்போடு சிறகு முளைத்த தேவதை ஒருத்தி எந்த வயதிலும் நிற்கலாம்....ஒரு கூடை அன்பை சுமந்தோ...அல்லது ஒரே ஒரு காரணம் சுமந்தோ.
அன்பை விட கொடிய ஆயுதம் ஒன்று உண்டோ....!

- கவிஜி

Pin It