கிட்ட தட்ட இரண்டு ஆண்டுகளாக தேடி தேடி கிடைக்காத சந்தியாராகம் முக நூல் வழியாக, ஜெயகாந்தன் என்ற நண்பரின் மூலம் கிடைத்தது இங்கு நான் பதிவிட போவது விமர்சனங்கள் அல்ல. ஒரு ரசிகனின் பதிவு. எனக்கு தெரிந்த, என் கண்ணுக்கு புலப்பட்ட அழகியல்களின் பதிவு. படத்தை பார்த்தவர்கள் இந்த பதிவை படிக்கலாம். பார்க்காதவர்கள், தயவு செய்து படத்தை தேடி, பார்த்துவிட்டு படிக்கவும்..

Black and Whiteல்தான் கிடைத்தது, ப்ரிண்ட். சிறு வயதில் பொதிகையில் கலரில் பார்த்த ஞாபகம்.. ஆரம்ப காட்சிகளில் வரும் விவரணை, மிகவும் கவித்துவமாக துவங்குகிறது.. லாங்க் ஷாட்டில் பெண்கள் குடத்தை எடுத்து கொண்டு போவது, மாடுகள் குளிப்பது,..... என அழகாக ஒரு கிராமத்தின் சூழ்நிலையை விவரிக்கிறது. எனக்கு சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலியை பார்த்துக் கொண்டிருக்கிறோமா? என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. அந்த சீக்வென்சில் வரும் ஆரம்ப ஷாட்களில் அடுத்து, மத்திய வயது பெண்கள் தம் பிள்ளைகளுக்கு முடி வாரி கொண்டிருக்கின்றனர். கோழியைச் சுற்றி அதன் குஞ்சுகள் அலைகின்றன. படத்தின் ஆதாரத்தை இந்த இரண்டு ஷாட்களிலுமே சொல்லி விட்டதாக எனக்குப் பட்டது. குறியீடுகள் என்பது இப்படியல்லவா இருக்க வேண்டும், வசந்த பாலன் மற்றும் பாலாஜி சக்திவேலின் படங்களில் எல்லாம் அப்பட்டமாக நான் குறியீடுகள் வைத்திருக்கிறேன் பார்த்துக் கொள் என்று இருக்கும்.. எதார்த்தமாக அமையும் குறியீடுகள் தான் முழுமையாக ஒரு பார்வையாளனை உள் வாங்கும்..

அடுத்தது தத்தாவின் அறிமுகம், ஆராம்ப காட்சியிலிருந்தே தன்னுடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டார்.. மூட்டை அமுக்கும் போது உள்ள முக சுளிவு, வாய் கொப்பளிக்கும், மூக்கை உரிஞ்சுவது என முதல் காட்சியிலேயே மிகவும் நெருக்கப்பட்டு போகிறார்.. அடுத்த ஷாட்டில் வரும் பாட்டி, அவரைப் பார்த்து தத்தா "ஏண்டி ஜுரமும் அதுவுமா ஏண்டி குளத்துல குளிச்சிட்டு வர? வென்னீர் போட்டிருக்கலாம்ல?" என்று கேட்கிறார் தத்தா. பின் நடக்கப் போகும் ஒரு துயரத்திற்கு இது ஒரு மேற்கோள் என்று கூறலாம். இது போன்ற எதார்த்தமான communication மற்ற எந்த இயக்குனரிடமும் பார்க்க இயலாது. பின்னே இன்னொரு இடத்திலும் இது கையாளப்பட்டிருக்கும். பார்க்கலாம். அடுத்தது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எது உதவுகிறது என்று சொல்லும் வகையில் ஒரு பெண் வீட்டின் முன்பு வந்து அப்பள‌ம் கேட்பதும், கடைக்காரன் அப்பள‌ம் கேட்பதுமாக அமைந்தது.

தாத்தா குளிக்க போகும் போது செய்யும் சேட்டை அழகு:) எனது கீழ் வீட்டில் வசிக்கும் என் தாத்தாவிடமும் இதை கண்டிருக்கிறேன். நான் எப்போதாவது மறைந்திருந்து அவர் செய்யும் குறும்புகளை பார்க்கையில், குழந்தைத்தனமாக ஏதோ செய்து கொண்டிருப்பார். என்னைப் பார்த்தவுடன் ஒரு திடீர் பரபரப்பு வந்து விடும் அவருக்கு.. வீட்டில் அப்பள‌ம் கேட்டு விட்டுப் போன பெண் சிறுநீர் கழிக்கும் சிறுவனைத் தள்ளி விடுவது, தாத்தா விளையாடுவதை ஒருவர் பார்க்கும் போது அவர் அதிர்ச்சியாவது என உதடுகளை விரிக்கச் செய்யும் காட்சிகள் அற்புதம்.. வயதானால் நாள், கிழமை மறந்துபோதல், தனக்கு சொந்தம் என்று தம்பி மகன் ஒருவன் தான் இருக்கிறான் என்பது போன்ற விஷயங்களை போகிற போக்கில் சொல்லிப் போகிறார் பாலு.. அடுத்து பாட்டி, கோழியைப் பார்த்து சொல்லும் காட்சியை வேறு மாதிரியாக எடுத்திருக்கலாம் என்று படுகிறது.. பாட்டி தனித் தனியாக தாய் தனி, சேய் தனி என்று பார்த்திருந்தால் மட்டும் போதும், இன்னும் கொஞ்சம் கவித்துவம் தூக்கியிருக்கும்.. வீட்டுக்கு வருகிறார் தாத்தா, பாட்டி இறக்கிறார். நெருப்பு, ரையில் பயணம், டைட்டில் கார்ட்........

சென்னை, மன்னிக்கவும் மெட்ராஸ்... லாங்க் ஷாட்டில் அட்ரெஸ் கேட்கும் காட்சியை உண்மையிலேயே அவரை அலைய விட்டு எடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.. அர்ச்சனாவின் வீட்டு சூழ் நிலை, மெட்ராசின் கொடூர‌ம்(பட்டப்பகலில் சிறுவர்கள் இருவர் சிகரெட் பிடிப்பது), அங்குள்ள ட்ராஃபிக்கை கடக்க சிரமப்படுவது என ஒவ்வொரு ஷாட்டிலும் ஏதோ ஒன்றை சொல்லி விடுகிறார் பாலு.. அதிலும் உண்மையிலேயே அந்த ஆட்டோ, தாத்தாவை இடித்துவிடும் போலிருந்தது.. எதார்த்தமான பதிவு.. அடுத்து வரும் காட்சியில் பத்திரிக்கையில் காதல் பற்றி வாசிக்கும் வள்ளியை மிரட்டி பத்திரிக்கையைப் பிடுங்குகிறாள் அர்ச்சனா.. அந்த கால கட்டத்தில் எல்லோரது அம்மாவும் இது போல தான் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.. எங்க அம்மாவுக்கு சின்ன வயதில் பாட்டியிடம் இது போன்ற திட்டுகள் அதிகம், வாசிப்பு என்னும் பழக்கத்தினால்.. அடுத்த காட்சியில் அர்ச்சனாவின் கஷ்டங்களை சொல்லும் தொனியில் ஓட்ட ஸ்டவ் சம்பாஷணைகள் நடை பெறுகின்றன..

தாத்தா உள்ளே வந்து, மௌனமான நேரங்களை தாண்டி, வள்ளியை தாத்தா முத்தமிட்ட போது, தாடி குத்துவதை வள்ளியின் மூலம் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார். நான் என்னையே அறியாமல் கை தட்டினேன். என் உதடுகளின் ஓரங்கள் விரிந்திருந்தது.. அதே போல் நீண்ட பயணத்திற்குப் பின் வரும் இயற்கை உபாதைகள்.. தாத்தா "வாசு இந்த கக்கூசு எங்கப்பா இருக்கு?" என்று கேட்கும் இடம் அருமை.. பாலுவின் எல்லா படங்களிலுமே கணவன், மனைவி சித்தரிப்பு ஒரு தனி ரகம்.. இருவருமே கொஞ்சி கொஞ்சி தான் பேசிக் கொள்வார்கள்.. அவருடைய "வீடு" படத்தில் பானுசந்தர் அர்ச்சனாவை "....யா" என்ற சொல்லை தான் பிரயோகிப்பார்.. எனக்கு அந்த சொல்லாடல் மிகவும் பிடிக்கும்.. முக்கால்வாசி பெரியவர்கள் எழுந்திருக்கும் போதும் சரி, உட்காரும் போதும் சரி, ஏதோ ஓர் கடவுளின் பெயரை சொல்லி விட்டு தான் உட்காருவார்கள். இங்கு தாத்தா கக்கூசில் உட்காரும் போது முருகா என்று சொல்லி உட்காருவார்.. சின்ன விஷயம் தான் ஆனால் அவசியம் சேர்க்கப்பட வேண்டிய ஒன்று..

அடுத்து சமூக பிரச்சனையை சொல்லும் காட்சி.. எந்த ஒரு கலையும் அதன் சமூகப் பார்வையோடு ஒன்றியிருக்க வேண்டும் என்பது என் கருத்து.. இந்த படத்தில் மெட்ராசில் அப்போதிருந்த தண்ணீர் பிரச்சனையை விவரித்திருப்பார்.. சோப்பு கொண்டு வரும் வள்ளி தாத்தா குளிப்பதை ரசித்து பார்த்து கொண்டிருக்கிறாள்.. எவ்வளவு அழகான முகம் அந்த குழந்தைக்கு.. என் தாத்தாவை பார்ப்பது போன்று இருந்தது சொக்கலிங்கம் பாகவதர் குளிக்கும் போது.. உலகில் உள்ள அனைத்து தாத்தாக்களும் பேத்திகளும் அழகு தான்.. அவர்களிடம் ஒருவரிடத்தில் ஒருவருக்கு, அழகான அன்பு இருந்து கொண்டே இருக்கிறது.. என் தாத்தாவும், என் தங்கையும் அது போன்று தான்.. ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்தால் என்ன பேசிக் கொள்வார்கள் என்று தெரியாது, ஆனால் இதெல்லாம் என் தங்கை சின்ன வயதில் இருக்கும் போது தான்.. இப்போது அவளே தாத்தா ஏன் இப்படி மொக்க போடுறாரு என்று சொல்கிறாள்.. வயது வளர வளர நமக்குள் இருக்கும் அக அழகு வடிந்து கொண்டே இருக்கும் போல..

அடுத்தது இரவில் ஏற்படும் சண்டை.. காலையில் வாய்க்கு ருசியாக எத்தனிக்கும் அர்ச்சனாவுக்கு தாத்தா மீது பயம் உண்டாகிறது.. சந்தானம் போடும் சத்தம் தாத்தாவின் காதுகளில் விழுகிறது.. நான், அடுத்த நாள் காலையிலேயே கிளம்பி விடுவார் என்று நினைத்தேன்(மற்ற தமிழ் படங்களாக இருந்தால் இப்படி தான் இருந்திருக்கும்).. ஆனால் யாருமில்லாத நிலையில் வந்த தாத்தாவுக்கு, அங்கிருந்து போகும் மனம் சட்டென்று எப்படி வரும்? அடுத்த நாளிலிருந்து அர்ச்சனாவுக்கு உதவி செய்யும் முனைப்பு வருகிறது.. ஒரு விதமான guilty feeling என சொல்லலாம்.. கிணற்றிலிருந்து, தண்ணீர் இறைக்கும் காட்சியில் இரண்டு விஷயங்களை விஷுவலாக காண்பிக்கிறார். மூச்சு வாங்கும் தாத்தா சிரமப்பட்டு தண்ணீர் இறக்குகிறார்.. அர்ச்சனா, தாத்தா செய்யும் உதவியில் முதலில் பூரிப்படைந்து பின்பு "இந்த கிழம் இன்னும் எவ்வளவு நாள் தங்குமோ?" என்ற பாவனையில் முதலில் சிரிப்பு, மெல்ல குறைந்து சோகத்தில் முடிகிறது அர்ச்சனாவின் முகம்..

அடுத்த நாளில் வீட்டுக் கார பெண்மனி பணம் கேட்பதும், அதை தாத்தா கொடுப்பதும் கொஞ்சம் எதார்த்தத்தை மீறிய ஒரு விஷயமாக இருந்தாலும், தாத்தா அர்ச்சனாவிடம், தான் பணம் தந்ததை சொல்லி இருந்தால் அந்த சினெமேடிக் காட்சி சமன் செய்ய பட்டிருக்கும்.. ஆனால் இந்த முடிச்சை பின்னால் உபயோகித்துக் கொள்கிறார் பாலு.. சாப்பாடு சாப்பிடும் நேரத்தில் அர்ச்சனாவுக்கும் தாத்தாவுக்கும் நடக்கும் சம்பாஷனைகள் வெகு இயல்பு.. என் அம்மாவிடம் விருந்தினர் யாராவது சாப்பாடு சூப்பர் என்று சொல்லி விட்டால் போதும், தனக்கு சாதம் இருக்கா என்று பார்க்காமல் அத்தனையும் அந்த பாராட்டியவருக்கே வைத்து விடுவார்.. நம் வீட்டுப் பெண்களுக்கு கிடைக்கும் ஒரே அங்கீகாரம் இந்த சாப்பாடு விஷயத்தில் தான்.. அடுத்தது தாத்தா கீரையை மறுக்கும் நிகழ்வு வீட்டில் உள்ள எல்லா வயதானவர்களும் செய்ய கூடியதே.. என் பாட்டி எவ்வளவு தான் பசி எடுத்தாலும் மிகவும் குறைந்த அளவிலேயே தான் சாப்பிடுவார்.. வீட்டில் சும்மா இருக்குற நமக்கு எதுக்கு அதிகம் ஆகாரம் என்பது போன்ற ஒரு நினைப்பு அவர்களினுள்ளே எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் போல..

இந்த இடத்தில் ஒரு முக்கியமான அழகியலை சொல்ல மறந்து விட்டேன்.. பாலுவின் கேமரா தந்திரங்கள்.. நடுத் தெருவில் மரங்களின் ஊடே விழும் ஒளியை அவரைப் போல அழகாக வேறு யாரால் காட்ட முடியும்? வள்ளி உடம்பு முடியாமல் வீட்டுக்கு வந்ததும் அர்ச்சனா எரிந்து விழும் காட்சிகள் நான் என் வீட்டில் என் அப்பாவிடம் என் அம்மா(தாத்தாவை பற்றி) கத்துவதை ஞாபகப்படுத்தியது.. மருத்துவமனை வாசலில் அர்ச்சனா கூப்பிட்டதும் சின்ன குழந்தை போல் ஓடி வருவது ஆகட்டும், ரிக்ஷாவில் வள்ளியின் கால்களை தன் மடியில் போட்டு கொள்வதாகட்டும், சொக்கலிங்க பாகவதர், மனதை கரைத்து விடுகிறார்.. யோசித்துப் பாருங்கள் சிவாஜி போன்ற நடிகர் இந்த வேடத்தில் நடித்திருந்தால், ஒரு எழவும் நமக்குத் தோன்றியிருக்காது.. ஆனால் பாலு முதலில் அவரைத் தான் நடிக்க வைப்பதாக இருந்தது போல..

அன்றிரவில் நடக்கும் வாக்குவாதங்கள் எல்லோர் வீட்டிலும் நடந்து கொண்டிருப்பதே.. தாத்தா தன் கௌரவத்தை விட்டு கொடுக்க மாட்டார்.. மறு நாள் காலை, ஒரு அற்புதமான ஷாட்டை வைத்திருப்பார் பாலு.. சந்தானம் எழுந்தவுடன் குழந்தையின் கழுத்தை தொட்டுப் பார்ப்பார். என் அப்பா நான் முதல் நாள் இரவில் சற்று லேசாக இருமினாலும், மாத்திரை கொடுத்து, அடுத்த நாள் காலை எழுந்தவுடன் என் கழுத்தை வந்து தொட்டு பார்த்துவிட்டு தான் பல் தேய்க்கவே போவார்.. இதில் இன்னொரு அழகான விஷயம் குழந்தை வள்ளி உண்மையிலேயே தூங்கி கொண்டிருக்கும் போது தான் அந்த ஷாட் எடுக்கப் பட்டிருக்க வேண்டும்.. அது தூக்கக் கலக்கத்தில் மூக்கை நோண்டி, உதடுகளை சிறு அசை போடும் அந்த அற்புதமான சிணுங்கல்கள், மிக இயற்கையாக அமைந்துள்ளது..

அடுத்து வீட்டை விட்டு வெளியே வந்தாகி விட்டது.. எந்த வித லாஜிகல் தவறுகளும் இருக்கக் கூடாதென்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார், பாலு.. அர்ச்சனா, தாத்தா தனது பையை எப்படி எடுத்து போயிருப்பார் என்று கேட்கும் போது, சந்தானம், ராத்திரியே எடுத்து வைத்திருப்பார் என்று சொல்லி எவனும் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு, பிழைகள் மிகவும் குறைந்த ஆக்கமாக கொடுத்திருக்கிறார்.. தாத்தா முதியோர் இல்லத்தில் சேரும் போது அவரைப் பற்றிய விவரங்கள் எடுக்கும் பெண் அவருக்கு இடது பக்கம் அமர்ந்திருப்பார். ஆனால் தத்தாவோ வலது புறத்திலிருந்து பதில் சொல்லித் திரும்புவார்.. இது சாதாரணமாக கண்டு கொள்ளப்பட வேண்டிய, கதையின் போக்கை தடை செய்யும் தவறு அல்ல என்றாலும், பாலு இந்த இடத்தில் கொஞ்சம் சொதப்பிவிட்டார்.. நான் தான் தப்பாக புரிந்து கொண்டேனோ என்று திரும்ப திரும்ப பார்க்கையில், பாலுவின் தவறு தான் என்று விளங்கியது..

அடுத்து வரும் தாத்தாவின் நாடக நடிப்பு காட்சி அற்புதம்.. பின்னி எடுத்திருக்கிறார் மனுஷன்.. நடிப்பு முடிந்தவுடன், ஒரு 'கெத்'தோடு நின்று கொண்டிருப்பார் தாத்தா.. நான் சொன்ன இரண்டாவது சிறந்த communication தாத்தா சொந்த ஊரிலும் இல்லை என்று தெரிய வரும் செய்தி. அங்கேயும் இல்லையா என்று தொடர்ந்து பீடிகை போட்டு, நொண்டி தாத்தாவிடம் சொல்வதாக முடியும். அர்ச்சனா தாத்தாவை வந்து பார்க்கும் காட்சிகள், தாத்தா அர்ச்சனாவை, மற்ற முதியோர்களுக்கு அறிமுகப்படுத்தும் காட்சி எதார்த்தத்தின் உச்சம்.. கடைசியில் குழந்தையின் பிறப்புறுப்பை பார்ப்பது, குழந்தையின் கை விரல்களைப் பிடிப்பது என கவிதையாக, மன நிறைவாக முடிகிறது படம்..

படம் பார்த்து முடித்த உடன் ஓர் அழகான உணர்வு என்னுள் இறங்கியது.. இவ்வளவு அருமையான படம் ஏன் பெரிதளவில் கொண்டாடப்படவில்லை?.. என்ன ரசனை நம் மக்களுக்கு? என்பது போன்ற நியாயமான கேள்விகள் என்னுள் எழுந்தது.. படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.. அவ்வளவு தான்.. அதைத் தவிர வேறு எந்த அங்கீகாரமும் ஏன் கிடைக்கவில்லை?.. இப்படத்தை பார்த்து பிடித்தவர்களுக்கு நான் கூறிக் கொள்வது ஒன்று தான். பாலுவின் கதை நேரம் டெலி ஃபிலிம்களையும் பாருங்கள்.. அந்த ஆக்கங்களிலும் இந்தப் படத்தில் இருந்த தரம் இருக்கும்.

Pin It