தமிழ்ச் சமூகத்தின், குறிப்பாக சமூக நேசிப்பாளர்களின் மிகப் பெரிய குறை, கெட்டவர்களை வெகு வேகமாக திட்டுவார்கள். வெகு நேரம் திட்டுவார்கள். ஆனால், நல்லவர்களை மெதுவாகவும் குறைவாகவும் பாராட்டுவார்கள்.

சமீபத்தில் ஒரு நல்ல விஷயத்துக்காக ஒரு நல்லவரைப் பாராட்டத் தோன்றியது சாட்டை படம் பார்த்து முடித்து வெளியே வரும்போதுதான்.

saattai_640

இன்றைய வகுப்பறை நாளைய சமுதாயம் என்றால் இன்றைய சமுதாயம் நேற்றைய வகுப்பறையாகத்தான் இருக்க முடியும். நாளைய சமுதாயம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமானால் இன்றைய வகுப்பறை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இன்றைய ஆரோக்கியமற்ற சமுதாயத்துக்கு நேற்றைய ஆரோக்கியமற்ற வகுப்பறைகள்தான் காரணம்.

தும்பை விட்டு வாலைப்பிடிக்கிற கதையாக வகுப்பறைகள் பற்றிக் கவலைப்படுவதை விட்டுவிட்டு இன்றைய சமூக அமைப்பு மோசமாகிப் போனதைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
எந்த மாணவனும் கெட்டுப்போக வேண்டுமென்று முடிவெடுத்து நடப்பதில்லை. சுற்றுச்சூழல் தான் கெட்டுப்போகிற ஆயிரம் விஷயங்களை வைத்திருக்கின்றன. மோரைத்தான் கூவிக்கூவி விற்க வேண்டும். கள்ளைத் தேடிப் போய்க் குடிப்பார்கள். ஆனால் மோரின் அருமையையும் கள்ளின் கெடுதலையும் அனுபவம் பெற்ற மூத்தோர்தான் உணர்த்த வேண்டும்.

மூத்தோர் என்ற வகையில் பெற்றோரும் ஆசிரியரும் தான் பெரும்பொறுப்பு ஏற்க வேண்டும். பெற்றோர் கூட குறைவான நேரம் தான் குழந்தைகளுடன் செலவிடுகின்றனர், ஆசிரியர்கள்தான் அதிக நேரம் செலவிடுகின்றனர். அதுபோக, இன்றைய கல்வி முறையில், சட்டக்கல்லூரி வழக்கறிஞர்களை உருவாக்குகிறது; பொறியியல் கல்லூரி பொறியாளர்களை உருவாக்குகிறது; மருத்துவக்கல்லூரி மருத்துவர்களை உருவாக்குகிறது. ஆனால் எந்தக் கல்லூரியும் மனிதர்களை உருவாக்குவதில்லை.

ஒருவேளை இந்தக் கல்வி முறையில் மனிதர்களை உருவாக்க முடியும் என்றால் அது மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும்தான் முடியும். அப்படியான மேல்நிலைப்பள்ளிகளில் ஒரு ஆசிரியர் எப்படி இருக்கக் கூடாது, எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு கவிநயத்துடன் சொல்லி இருக்கிற திரைப்படம்தான் ”சாட்டை”. சேகுவேராக்கள் பொலிவியாக் காடுகளில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு பள்ளி ஆசிரியராகவும் சேகுவேராக்கள் இருக்க முடியும் என்பதை அழகுறச் சொல்லி இருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி பாராட்ட ஆரம்பித்தால் ஒவ்வொரு காட்சியாக பாராட்டிக் கொண்டே போகலாம். முத்தாய்ப்பாகச் சொல்ல வேண்டுமானால், திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டு பள்ளியை வலம் வர வைக்கப்படுகிற ஒரு மாணவன் தன் கையில் கிடைக்கிற இனிப்பை பகிர்ந்து கொடுக்கிற தருணத்திலேயே மாணவன் செய்யும் தவறுகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதைச் சொல்லி கொடுத்து விடுகிறார்கள்.

ஏதோ ஒரு மாணவன் ஏதோ ஒரு தவறு செய்ததற்காக சாதிப்புத்தி என்று கூப்பாடு போடுகிற பொழுது, சாதிக்கும் புத்திக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று எழுப்பப்படுகிற கேள்வி மெத்தப் படித்த மேதாவிகளுக்கும் சேர்த்தேயான சாட்டையடி.

மாணவர்களின் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு அதிலிருந்து மீட்டெடுத்து, பிறகு அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து, படிப்பிலும் கெட்டிக்காரத்தனத்தை நிரூபிக்க வைக்கும் ஆசிரியர் நமக்குப் பள்ளியில் கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட வைக்கிறார்.

saattai_500

தனக்கு குழந்தை பிறக்கும் நேரத்தை மனைவி ஆசையாகச் சொல்லும் நேரத்தில் கூட ஒரு மாணவியின் இடைநிற்றலை தடுக்கப் போராடிக் கொண்டிருக்கும் சமூக நேசிப்பு போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.

பள்ளி மாணவர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் மட்டும் சாட்டை பாடம் சொல்லிக் கொடுக்கவில்லை. எல்லா தரப்பினருக்கும் சேர்த்தே பாடம் சொல்லிக் கொடுக்கிறது. கோவமாக, கெட்ட வார்த்தைகளை, ஆவேசமாக வீசுவது, வீசுவோருக்குத்தான் அவமானம் என்பது எல்லா வயதினருக்குமான பாடம்.

எவ்வளவோ போராடுகிறோம்; மக்கள் திருந்துகிற பாடில்லை என்று வருந்துகிற தலைவர்களுக்கும் ஒரு பாடம் இருக்கிறது. எப்படி எல்லோரையும் மாற்றினீர்கள் என்கிற கேள்விக்கு, "நான் யாரையும் மாற்றவில்லை அவர்கள் அளவுக்கு இறங்கி அவர்களின் பிரச்னையைத் தெரிந்து கொண்டேன். அதிலிருந்து அவர்கள் வெளிவர உதவினேன்" என்கிற பதில், போராடுகிற தலைவர்களுக்கான பாடம்.

பள்ளிக்கூடச் சொத்துக்களை சொந்த நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துவது, தனியார் பள்ளிகளின் குறுக்கு வழி வெற்றிகள் என நடப்புச் சமுதாயத்தை தோலுரித்துக் காட்டி இருக்கிறார்கள்.

ஆக, ஆரோக்கியமானதொரு அடுத்த தலைமுறையை உருவாக்க சமூக நேசிப்பாளர்களாகிய நாம் உள்ளிட்ட அனைவர் மீதான சாட்டையடியே என்றாலும், அது அடுத்த தலைமுறை நலனுக்காக என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

- நீலவேந்தன், ஆதித்தமிழர் பேரவை

Pin It