குழந்தைகள் இலக்கியம்போலவே குழந்தைகள் சினிமா அல்லது குழந்தைகளைப்பற்றிய சினிமா என்பதும் தமிழில் அரிதாகவே படைக்கப் படுகின்றன. ஆகவே சமீபத்தில் குழந்தைகளை மையமாகக் கொண்டு அடுத்தடுத்து இரண்டு படங்கள் வந்துள்ளது உற்சாகமளிக்கிறது. காதலில் சொதப்புவது எப்படி? என்று ‘கொள்கை விளக்க’ப் படங்கள் வந்து கொண்டி ருக்கும் சூழலில் குழந்தைகளைப் பற்றி அக்கறையோடு எடுக்கப்பட்ட படங் கள் வருவது நம்பிக்கை அளிக்கிறது.

dhoni_370பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் டூயட் மூவீஸ் தயாரிப்பாக வந்துள்ள தோனி- நாட் அவுட் என்கிற படம் தமிழில் மிக அரிதாக நடக்கும் முயற்சி யாகும். கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொள்ளும் பையன் படிப்பில் தோற்கிறான். நீ படித்தே ஆகணும் எம்பிஏ பட்டதாரி ஆகணும் என்கிற தன் கனவை அக்குழந்தையின் மீது வலுக்கட்டாய மாகத் திணிக்கும் சராசரி நடுத்தர வர்க்கத் தகப்பனாக பிரகாஷ்ராஜ் வாழ்ந்திருக்கிறார். நடிப் பிலும் இப்படத்தின் இயக்கத்திலும் அவர் முத்திரை பதித்துள்ளார். அவருடைய வன்முறையால் மகன் காயம்பட்டு கோமா நிலைக்குச் செல்ல மனம் திருந்திய தகப்பனாக பிரகாஷ்ராஜ் யதார்த்த நிலைக்கு வந்து கல்வி முறைக்கு எதிரான போராட்டத்தைத் தன்னந்தனியாகத் துவக்குகிறார்-மகனுக்கான சிகிச்சையைத் தொடர்ந்து கொண்டே. கிளைக்கதையாக மகளின் மீது அன்பு காட்டும் பக்கத்து வீட்டு ஒரு மாதிரியான பெண்ணின் கதை. அவளை ஆரம்பத்தில் புறக்கணித்தாலும் பின்னர் புரிந்துகொள்ளும் பிரகாஷ்ராஜ் என படம் செல்கிறது.

ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை - அதற்கு அடுத்த நாள் தாம்பரத்தில் தேர்வு பயத்தால் தற் கொலை செய்து கொண்ட மாணவன் லோகேஷ் - என்கிற அதிர்ச்சியூட்டும் நம் சமூக வாழ்க்கைப் பின்னணியில் இந்தப் படம் எழுப்பும் கேள்விகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

வணிகரீதியான படங்களின் எந்தக் கசடும் இல்லாமல் எடுத்துக்கொண்ட உள்ளடக்கத்திற்கு உண்மையாக நின்று அழுத்தமான கேள்விகளை  நம் கல்வி முறையின் மீதும், இன்னும் கூடுதலாக நம் பெற்றோர் மனநிலையின் மீதும் இப்படம் வைக்கிறது. மராட்டியப் படமான ஷிக்னாச்சிய ஆய்ச்சா கோவின் ரீமேக் என்றாலும் தமிழ்த் தன்மை யோடு தயாரிக்கப்பட்டதற்காக பிரகாஷ்ராஜையும் இப்படத்தில் உழைத்த கலைஞர்களையும் பாராட்ட வேண்டும்.

வகுப்பு ஆசிரியர்களைப் பெஞ்சு மீது ஏறி நிற்கச் சொல்லுவதும் டிவி லைவ் ஷோவில் நான் என் மகனை அடிக்கவில்லை எல்லோரும் சேர்ந்து அடிக்க வச்சுட்டாங்க என்று கதறும் இடத்திலும் ராதிகா ஆப்டேயைப் புறக்கணிப்பதும் பின் ஏற்பது மான இடங்களிலும் என பிரகாஷ்ராஜ் படத்துக்கு உயிரூட்டியிருக்கிறார். .கிரிக்கெட் கோச்சாக வரும் நாசர், ஆசிரியராக வரும் முரளிஷர்மா, ராதிகா ஆப்டே எல்லோருமே தம் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக சிறுவன் ஆகாஷ் பூரியும் மகளாக வரும் ஸ்ரீதேஜா வும்தான் படத்தின் மைய அச்சாக நம் மனங்களைக் கொள்ளை கொள்ளுகிறார்கள்.

இடைவேளைக்குப் பிறகு கலாபூர்வம் குறைந்து பிரச்சார நெடி தூக்கலாக வசனங்களாகப் படம் செல்வது ஒரு குறைதான் என்றாலும் இன்று தமிழ்ச் சமூகம் விவாதிக்க வேண்டிய ஒரு ஆழமான அவசியமான சேதியைச் சொல்ல முயன்றுள்ள இப்படத்தின் மீது அத்தகைய விமர்சனத்தைக் கூர்மையாக வைக்க மனம் வரவில்லை. இளைய ராஜாவின் இசையில் பாடல்கள் பெரிய வெற்றி பெறவில்லை.

தொடர்ந்து மொழி, அபியும் நானும், பயணம், தோனி என ஒரு செய்தியோடு படங்கள் தர நினைக்கும் டூயட் மூவீஸ் நிறுவனம் பாராட்டுக் குரியது.

மெரினா

மெரினா படம் பசங்க புரடக்ஷன்ஸ் பாண்டி ராஜின் இயக்கத்தில் வந்துள்ளது. பசங்க வெற்றிப் படத்துக்குப் பின் வம்சத்தில் தோற்று மெரினாவில் மீண்டும் எழுந்து நிற்கிறார் பாண்டிராஜ். ஆசியா வின் மிகப்பெரிய கடற்கரையான மெரினா பீச்சில் சுண்டல், தண்ணி பாக்கட், கடற்சங்கு விற்கும் பையன்களையும் அப்பாவின் பாட்டுக்கு டான்ஸ் ஆடிப் பிச்சை எடுக்கும் சிறுமியையும் மையமாக வைத்து ஒரு படம் எடுக்க நினைத்ததே எந்தத் தயக்கமுமின்றி மனம் திறந்து பாராட்டத்தக்க ஒன்று. கதைத் தேர்விலேயே படைப்பாளியின் சார்புநிலை தெரிந்து விடுமல்லவா?

படம் ஒரு நிமிடம்கூட சலிப்பூட்டிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் எடுத்து இயக்கி இருக் கிறார் பாண்டிராஜ். அதற்காக அச்சிறுவர்களின் வாழ்க்கையைக்கூட ரசிகர்கள் மனதில் ஆழ்ந்த வருத்தம் உண்டாக்கும்படி எடுத்துவிடக்கூடாது என்று நினைத்து விட்டார். அதுதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

இத்தனை அனாதைச் சிறுவர்களின் வாழ்க்கை கடல் மணலைப்போல வெயிலில் கிடக்கும் வெக்கை நம் மனதில் உறைக்கவில்லை.

marina_370_copyஆனால் ஆக்காட்டி ஆறுமுகத்தின் பாடலுக்கு ஆடும் அச்சிறுமியின் நடன அசைவுகளும் அற்புத மான முகபாவமும் நம் மனதை உலுக்குகின்றன என்பதையும் சொல்லியாக வேண்டும். பையன் களின் விளையாட்டுக்கள் எல்லாம் ஒரு சீரியஸ் படம் என்கிற தோற்றம் பெற்றுவிடாமல் சிதைக் கின்றன. பிச்சையெடுக்கும் பெரியவர் சுந்தர்ராஜன் கதை மனதைத் தொடும் விதமாகச் சொல்லப் பட்டிருக்கிறது. அவரும் போஸ்ட்மேனாக வரும் ஜித்தன் மோகனும் பாத்திரமறிந்து பிச்சை போட்டி ருக்கிறார்கள்.

பீச் காதலர்களாக வரும் சிவகார்த்திகேயனும் ஓவியாவும் படத்துக்குக் கலகலப்பூட்டுகிறார்கள். கலகலப்பு ஊட்டுவதற்காகவே அவர்கள் படைக்கப் பட்டிருக்கிறார்கள். அதில் காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை. சும்மா கலாய்ப்பதற் காகவே ஒரு காதல் பீஸ். அதிலும் இன்றைய நகரத்து இளம் பெண்கள் பற்றி இவ்வளவு கேவலமாகச் சொல்லியிருக்க வேண்டியதில்லை. எல்லோருமே தின்னிப் பண்டாரங்களாகவும் ஆண்களை ஏமாறுபவர்களாகவும் வருகிறார்கள். பெண்களில் மனம் கவர பசங்க செய்யும் பைக் சாகசங்கள் நகைப்பூட்டுகின்றன.

சரி. ரொம்பச் சிரிப்புக் காட்டிட்டோம் என்று கடைசியில் ஜெயப்பிரகாஷைக் கொண்டு வந்து படிப்பின் அவசியம் பற்றி லெக்சர் அடிக்க வைத்து விட்டார். அதிலும் நீங்க அனாதைகள் இல்லை. உங்களுக்கு அரசாங்கம் இருக்கு என்று சொல்லும் போது மற்ற ஜோக்குகளுக்குச் சிரிக்காதவர்கள்கூட சிரித்து விடுகிறோம். மாற்றுத் திறனாளிகள் ஆனாலும் மனப் பிறழ்வுக்கு ஆளானவர்கள் ஆனா லும் கண் பார்வை இழந்த மக்களானாலும் போராடாமல் அரசுகள் எதையும் செய்ததில்லை என்கிற யதார்த்த வரலாறு இடிக்கிறது.

என்றாலும் குத்துப்பாட்டுகளும் குத்துச் சண்டை களும் என்று தாதாக்களைக் காட்டி  பொன்னை விரும்பும் தமிழ்ச் சினிமா உலகத்தில் அன்பை விதைக்கவும் குழந்தைகளுக்குக் கல்வி அவசியம் என்பதைச் சொல்வதற்காகவுமே ஒரு படம் எடுத்த துணிச்சலுக்காக இப்படத்தைப் பாராட்டலாம்.

குறைகள் இருந்தாலும் இவ்விரு படங்களுமே தமிழ்ச் சமூகத்தால் வரவேற்கப்படவேண்டிய படங்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

(செம்மலர் மார்ச் 2012 இதழில் வெளியானது)

Pin It