தமிழீழ அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு புதிய ஆற்றலாக முகிழ்ந்துள்ளது. முள்ளிவாய்க்காலோடு அனைத்தும் முடிந்து விட்டதாகக் கனவுக் களிப்பில் திளைத்தச் சிங்களப் பேரினவாதத்தின் தலையில் அது இடியாக இறங்கி உள்ளது. தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மற்றுமொரு புதிய பாதை திறந்துள்ளது. இது உலக அரசியலிலும் இதுவரை காணாத ஒரு புதிய முன்முயற்சியாகும்.

நா.க.த.அ. என்பது அரசியலில் ஆட்சி அதிகாரத்தில் புதிய வடிவம் என்பதால் அஃது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தோற்றத்தைத் தந்துள்ளது. எதிரிகளும், இரண்டகர்களும் திகைத்துப் போயுள்ளனர் என்பதில் வியப்பில்லை. ஆனால் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் பலரும் குழப்பம் அடைந்துள்ளனர் என்பது வருத்தத்திற்குரிய உண்மை. குறிப்பாகத் தமிழ்நாட்டில் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் பலரின் நிலை இதுவே. இதற்கான காரணம் நா.க.த.அ. பற்றிய புரிதல் குறைபாடே.

'நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம்' பற்றிய அறிக்கை நம் அய்யங்கள் அனைத்தையும் களைந்து தெளிவுபடுத்துகின்றது. நாடு கடந்த அரசாங்கத்திற்கும், (Transnational Government) புகலிட அரசாங்கத்திற்கும் (Government in Exile) இடையே உள்ள வேறுபாட்டை அது விளக்குகிறது. புகலிட அரசாங்கம் என்பது ஏற்கெனவே தனது சொந்த நாட்டில் மக்களின் ஏற்புடன் இயங்கி வந்த அரசாங்கம் ஆகும். பின்னர் அங்கு உருவான அக புறக் காரணிகளால் தொடர்ந்து இயங்க முடியாமல் அங்கிருந்து வெளியேறுகிறது. நட்பு நாடொன்றில் புகலிடம் கிடைக்கப் பெற்று அங்குத் தன் அரசுக் கட்டமைப்பைப் புத்தமைத்துக் கொள்கிறது. அந்நாட்டின் எல்லைக்குள்ளேயே தங்கியிருந்து அதன் ஆதரவுடனும், ஏற்புடனும் (அங்கீகாரத் துடனும்) தன் சொந்த நாட்டிற்கான அரசாட்சியை அங்கிருந்தபடியே தொடர்கிறது. இதுவே புகலிட அரசாங்கத்திற்கான இலக்கணமாகும்.

 புகலிட அரசாங்கத்திற்கு எடுத்துக்காட்டாக இரண்டாம் உலகப் போரின் போது சார்லசு டீ கோல் (Charles de Gaulle) தலைமையில் இலண்டனிலிருந்து இயங்கிய பிரெஞ்சு அரசை நா.க.த.அ. அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இரண்டாம் உலகப் போரில் பிரான்சு கிட்லரிடம் வீழ்ந்தபோது அங்கிருந்து வெளியேறி பிரிட்டனில் தங்கி பிரான்சு விடுதலைப் படையைக் கட்டி நாசிகளுக்கு எதிராக வீரஞ் செறிந்த போரை நடத்தியவர் சார்லசு டீ கோல். நாசிகளுக்கு எதிராக ஒன்று திரண்டு போரிடும்படி பி.பி.சி. வானொலிமூலம் பிரான்சு மக்களுக்கு அவர் விடுத்த அறைகூவல் (1940, சூன் 18) உலகப் புகழ் பெற்றது.

இரண்டாம் உலகப் போரின் போது கிட்லரிடம் வீழ்ச்சியடைந்த பெல்ஜியம், செக்கஸ்லோவேகியா, கிரீஸ், நார்வே, போலந்து, யுகோஸ்லோவியா போன்ற மேலும் பல நாடுகளின் அரசுகள் பிரிட்டனிலிருந்து கொண்டு புகலிட அரசுகளாக இயங்கின.

இன்னொரு வகை புகலிட அரசாங்கங்களும் உள. அவை தேசிய விடுதலை இயக்கங்களால் அமைக்கப் பெற்றவை ஆகும். 1988 இல் பாலசுத்தீன விடுதலை அமைப்பால் (PLO) அல்சியர்சில் (Algiers) அமைக்கப்பட்ட அரசு இதற்கான சரியான எடுத்துக்காட்டாகும். வங்கதேச விடுதலைப் போரின் பொழுது சேக் முஜிபூர் இரகுமான் தலைமையிலான தற்காலிக வங்காள மக்கள் குடியரசு (Provision Government of the People's Republic of Bangladesh) கல்கத்தாவில் அமைந்திருந்தது. இது முஜிப் நகர் அரசு (Mujib nagar Govt) எனவும் அழைக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து இயங்கும் புனிதம் தங்கிய தலாய்லாமாவின் மய்ய திபெத்திய நிர்வாகமும் (Central Tibetan Administration of His Holiness) புகலிட அரசாங்கமே. பர்மாவின் இராணுவச் சர்வாதிகாரத்திற்கு எதிரான பர்மா ஒன்றியத் தேசியக் கூட்டரசாங்கம் (National Coalition Government of the Union of Barma) ஒன்று அமெரிக்காவிலிருந்து இயங்கி வருகிறது.

 புகலிட அரசாங்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது நாடு கடந்த அரசாங்கம். இது சொந்த நாட்டிலிருந்து இயங்க முடியாமல் வெளியேறிய அரசாங்கம் அன்று. தாய்நாட்டில் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் தேசிய விடுதலை இயக்கத்தால் அமைக்கப்பட்ட அரசாங்கமும் அன்று. அவ்விடுதலை இயக்கத்தின் தொடர்ச்சியும் அன்று. மாறாக பேரினவாதக் கொடுமையால் சொந்த நாட்டிலிருந்து வெளியேறிய 'புலம் பெயர் மக்களின்' புத்தாக்கக் கட்டமைப்பு இது. முன்னரே சுட்டியது போல் முன் - காட்டு இல்லாதது.

நாடு கடந்த அரசாங்கத்திற்கும் புகலிட அரசாங்கத்திற்கும் இடையேயான இன்னொரு முதன்மை வேறுபாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாடு கடந்த அரசாங்கத்திற்குப் ‘புகலிடம்’ (அடைக்கலம்) தரக்கூடிய நட்பு நாடு எதுவும் வேண்டியதில்லை. எந்தவொரு நாட்டின் ஏற்பும் தேவை இல்லை. அதன் இயக்கத்திற்கு முன்னிசைவும் வேண்டியதில்லை. அந்தந்த நாடுகளின் சனநாயக வெளியைப் பயன்படுத்தி அவற்றின் சட்டங்களுக்கு முரணின்றி அது பயணிக்கும்.

புலம் பெயர்ந்த பல்வேறு தேசிய இனமக்கள் தங்கள் நாட்டு விடுதலைக்காகப் போராடுகிறார்கள்; பல்வகையில் பங்களிப்பும் செய்கிறார்கள். அயர்லாந்து, யூத மக்களின் பங்களிப்பு இவ்வகையில் மிகவும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறே ஈழத் தமிழ் மக்களின் பங்களிப்பும் அளப்பிடற்கரியது. இத்தாலி, கெயிட்டி, குரோசியா, எரித்திரியா, எல்சல்வடோர் போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்த மக்களின் பங்களிப்பைக் குறிப்பிடும் நா.க.த.அ. அறிக்கை 21ஆம் நூற்றாண்டு அரசியலை “நாடு கடந்த அரசியல்” எனக் கணிக்கிறது. மரபார்ந்த நாடு தேசியம் போன்ற எல்லைகளைக் கடந்து வாழும் அவர்களின் தேசியத்தை அறிக்கை “நாடு கடந்த தேசியம்” என அழைக்கிறது. புலம்பெயர் ஈழத் தமிழர்களின் தேசியம் “நாடு கடந்த தமிழீழத் தேசியம்” ஆகும். நாடு கடந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான அரசியல் அடித்தளத்தை நாடு கடந்த தேசியம் அமைத்துத் தருகிறது.

ஆனால் உலகில் நாடு கடந்த தேசிய இனங்கள் எதுவும் அரசாங்கத்தை அமைக்காத நிலையில், நாடு கடந்த தமிழீழத் தேசிய இனமே முதன்முதலாக தன் அரசாங்கத்தை அமைத்துள்ளது. தமிழீழத்தில் நிலவும் குறிப்பான அரசியல் சூழலே நா.க.த.அ.,வைப் பிறப்பித்துள்ளது. நாடு கடந்த பிற தேசிய இன மக்களுக்குத் தங்கள் நாட்டில் அரசியலைத் தொடர அரசியல் வெளி உள்ளது. நாடு கடந்த தமிழீழ மக்களுக்கு இன்று அவ்வெளி முற்றும் மறுக்கப்பட்டுள்ளது. இன்றைய ஈழ நிலையை அறிக்கை இவ்வாறு எடுத்து இயம்புகிறது:

“விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவப் பலமும் அதன் வழிவந்த நடைமுறை அரசும் தமிழர்கள் தன்னாட்சி உரிமையினை நோக்கிய அரசியல் விடுப்புகளை இலகுவாக வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளியை வகுத்துக் கொடுத்தன. இன்று அத்தகைய அரசியல் வெளி எதுவும் இல்லை. இந்நிலையில் இலங்கைத் தீவுக்கு வெளியேயிருந்துதான் தாயகத்தில் தமிழரது அரசியல் மற்றும் வாழ்வுரிமைகளை நிலைநிறுத்துவதற்கான அர்த்தமுள்ள அரசியல் முன்னெடுப்பு எதனையும் தொடர முடியும்.”

 நாடு கடந்த அரசாங்கத்தின் தேவையை அறிக்கை இவ்வாறு எடுத்துரைக்கிறது:

“இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளினையும், இறைமையையும், தன்னாட்சியையும் வெளிப்படுத்த உரிய அரசியல் வெளி காணப்படாமையினாலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றின் தேவை எழுகின்றது…”

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசமைப்பு முகப்புரை......... “இலங்கைத் தீவிற்குள் தமிழ் மக்களின் அரசியல் நாட்டங்களைச் சுதந்திரமாகத் தெளிந்துரைக்க அரசியல் வெளி இல்லாமற்” போனதால், “சிறீலங்காவிற்கு வெளியே இந்த அரசியல் வெளியைத் தோற்றுவிக்க புலம் பெயர் சமூகத்துக்குள்ள வரலாற்றுக் கடமையை” அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்துகிறது. ஆக, பிற தேசிய இனங்களுக்கு இல்லாத இந்த “வரலாற்றுக் கடமைதான்” முதன் முதலாகப் புலம்பெயர் தமிழீழ மக்களிடையே நாடு கடந்த அரசாங்கம் தோன்றக் காரணமாய் உள்ளது.

கொள்கை, குறிக்கோள்களில் நா.க.த.அ. தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியாகவும் கட்டமைப்பில் புலிகளிடமிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் அமைந்துள்ளது. “சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை” அமைப்பதையே நா.க.த.அ. அறிக்கை தன் வழிகாட்டுக் கோட்பாடாக அறிவித்துள்ளது. அதன் அரசமைப்பும் அதனை உறுதிப்படுத்துகிறது. புலிகளின் கொள்கைத் தொடர்ச்சியாகவே இஃது அமைந்துள்ளதால் எந்த அய்யுறவும் எழத் தேவையில்லை........ ஆனால்..... செயல்தளத்திலும், செயல்படும் முறையிலும் அது புலிகளிடமிருந்து வேறுபடுகிறது.

விடுதலைப் புலிகள் தாயகத்தில் பேரினவாத அரசையும் இனவெறி ஊட்டப் பெற்ற அதன் படையையும் எதிர்த்துப் போரிட்ட படை அமைப்பு. எல்லா அரசியல் அறவழிகளும் அடைபட்ட நிலையில் அங்குத் தோன்றிய மறவழியே விடுதலைப் புலிகள் அமைப்பு. அது முதலும் முடிவுமாக ஒரு படை (இராணுவம்) அமைப்பே. அது பின்னர் தன் நோக்கங்களை வென்றடைய அரசியல் அமைப்புகளைத் தோற்றுவித்தது. பொதுவாக அரசியல் அமைப்புகளே தங்கள் குறிக்கோள்களைச் சென்றடையப் படைகளை அமைக்கும். உருசியா, சீனா, வியட்நாம், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளின் விடுதலை வரலாறுகள் அப்படித்தான் சொல்கின்றன. ஆனால் ஈழத்தில் வரலாறு நேர் எதிராக, படை முன்னரும் அரசியல் அமைப்புப் பின்னரும் அமைந்ததற்கு அதன் அரசியல் சூழலே காரணம். சிங்களப் பேரினவாதமே விடுதலைப் புலிகளைத் தோற்றுவித்தது.

நாடு கடந்த அரசாங்கமோ விடுதலைப் புலிகள் புலத்திலே தோற்று விட புறத்திலே தோன்றிய கட்டமைப்பு. படை அமைப்பு தோற்ற நிலையில் பிறந்த சனநாயக அரசியல் அமைப்பு. அதுவும் தாயகத்தில் அல்லாமல் புலம்பெயர் நாடுகளில் அதனதன் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப வளைந்தும் நெளிந்தும் செயற்பட வேண்டிய அமைப்பு. அதன் இருப்பும் செயல்பாடுகளும் அந்நாடுகளின் சனநாயக வெளியிலேயே தங்கியுள்ளது. எனவே....... நா.க.த.அ, இன் சொல்லாடல்கள் விடுதலைப் புலிகளின் சொல்லாடல்கள்.... போல் அமைந்திருக்காது..... அவ்வாறே விடுதலைப் புலிகள் ஈட்டிய வெற்றிகளைப் போலவோ, அவை ஏற்படுத்திய தாக்கத்தையும் எழுச்சிகளையும் போலவோ நா.க.த.அ.வால் உடனடியாக ஏற்படுத்த இயலாது. விடுதலைப் புலிகளை மனதில் இருத்திக் கொண்டே நா.க.த.அ.வைப் பார்க்கக் கூடாது. பார்த்தால் விளங்காது.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து ஏற்பட்ட நெருக்கடியில் போர்க் கருவிகளைக் கையளிப்பது குறித்து, சுதுமலைத் திடலில் ஈழ மக்களிடையே உரையாற்றும் பொழுது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டது இங்கே நினைவு கொள்ளத்தக்கது. போராட்ட வழிமுறைகள் மாறலாம். தமிழீழத் தனியரசு என்ற அரசியல் இலக்கு என்றும் மாறாதது என்பது அவ்வுரையின் சாரம். இந்திய - இலங்கை ஓப்பந்தக் கால நெருக்கடிகளைக் காட்டிலும் இன்றைய நெருக்கடி மிக மிகப் பாரியது. அன்று நெருக்கடிகளை எதிர்கொள்ள அமைப்பு இருந்தது. இன்றோ அமைப்பு முற்றிலும் சிதைந்து போய்க் கிடக்கிறது. தாயகத்தில் இயங்கும் இடைவெளி முழுமையும் இல்லாமற் போய்விட்டது. இச்சூழலில் இருந்து கொண்டுதான் நா.க.த.அ அரசாங்கத்தை நோக்க வேண்டும்; அதன் குறை நிறைகளைத் திறனாய்வு செய்ய வேண்டும்.

தமிழீழத் தனியரசை வென்றெடுக்க வேண்டிய மாபெருங் கடமையை வரலாறு இன்று புலம்பெயர் தமிழர்களின் தோள்களில் சுமத்தியுள்ளது. 2008ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையிலே தமிழீழத் தேசியத் தலைவர் இதனை மிகச் சரியாக முன்னுணர்ந்து குறிப்பிடுகிறார். தமிழர்கள் தமது இறைமையை நிலை நிறுத்தும் போராட்டத்தினை முன்னெடுக்கும் பணியில் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினரும் குறிப்பாக, இரண்டாம் தலைமுறையினரும் பெரும் பங்கு வகிக்க வேண்டும் என அவர் அறைகூவல் விடுக்கிறார். தமிழீழத் தேசியத் தலைவரின் அறைகூவல் பெற்றுள்ள செயல் வடிவமே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கக் கருத்தியல் பிறப்பில் இன்று சிங்கள அரசோடு இணங்கிப் போயிருக்கும் செல்வராச பத்மநாபனுக்குத் (கே.பி) தொடர்பிருந்தது என்பதை மட்டும் வைத்துக் கொண்டு அதன் மீது அவதூறு சேற்றை அள்ளி வீசக் கூடாது. இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற இந்தியப் பேராயக் கட்சி ஏ.ஓ. கியூம், டபுள்யூ. வெட்டர்பர்ன் போன்ற வெள்ளையர்களால்தாம் தொடங்கப் பெற்றது. வெள்ளையரால் தோற்றவிக்கப்பட்டது என்பதனாலேயே அதனை மக்கள் புறக்கணித்து விடவில்லை. காந்தியின் தலைமையில் அது முற்றிலும் பண்பு மாற்றம் பெற்று வெள்ளையருக்கு எதிராய் இந்தியத் துணைக் கண்ட மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது. நாடு கடந்த அரசாங்கத்தையும் அதன் செயல்பாடுகளின் ஊடாகத்தான் கணிக்க வேண்டும்.

எதிரிகளும் வியக்கும் வண்ணம் உலகமெங்கும் பரந்துள்ள புலம்பெயர் தமிழர்களிடையே முறையான சனநாயக வழி தேர்தல் நடைபெற்றது. நாடு கடந்த அரசாங்கத்திற்கான பாராளுமன்றம் அமைக்கப்பட்டது. பாராளுமன்றம் கூடி முறையாகத் தலைமை அமைச்சரைத் தேர்ந்தெடுத்தது. அமைச்சரவையும் அமைக்கப்பட்டாயிற்று. அரசமைப்பு வரையப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடையே விவாதத்திற்குள்ளாக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு வருகிறது. வலிமை மிக்க எதிரிகளின் சூழ்ச்சிகளையும் நெருக்குதல்களையும் முறியடித்து, இரண்டகர்களின் உள்ளறுப்புகளையும் தோற்கடித்து நாடு கடந்த அரசாங்கம் இன்று வீறுநடை போடுகிறது. மூன்றாண்டுக்கு ஒருமுறை தேர்தல் என்பதும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தவறிழைப்பின் திரும்ப அழைத்துக் கொள்ள வழிவகை கண்டிருப்பதும் நா.க.த.அ. வின் கூடுதல் சனநாயக நெறிகளாக உள்ளன. (நாடு கடந்த அரசாங்கத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள விரும்புவோர் தமிழ்நெட் (tamilnet.com) இணையதளத்தில் அதன் யாப்பினை (அரசமைப்பை)ப் பெற்றுக் கொள்ளலாம். அதன் அறிக்கைகள் govttamileelam.org தளத்தில் கிடைக்கின்றன.)

ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் எதிரி அதன் ஒற்றுமையின்மைதான் என்றார் ஓர் அரசியல் அறிஞர். தமிழ் மக்களைப் பொருத்தவரை அதுதான் உண்மையாக உள்ளது. அதுவும் குறிப்பாக முள்ளிவாய்க்காலுக்குப் பின் ஒருவருக்கொருவர் அவநம்பிக்கை கொள்வது மிகுந்து வருகிறது. எதிரிகளும் இச்சூழலை நன்கு பயன்படுத்தித் தமிழர்கள் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதில் குறியாய்ச் செயல்படுகின்றனர். அவர்களுக்குத் துணைபோகும் இரண்டகர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. தமிழீழ மக்களும், தமிழக மக்களும் கூடுதல் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டிய நேரமிது. எதனையும் எடுத்தேன் கவிழ்த்தேன் எனத் தான்தோன்றித் தனமாய்க் குற்றத்திறனாய்வு செய்யாமல் செயல்பாட்டின் அடிப்படையில் தீர்மானித்து முன்செல்வோம்:

காரிருள் சூழ்ந்த நிலையில் இருள் விலக்கும் ஒளி விளக்காய்த் தெரிகிறது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம். விடுதலைப் பயிர் பட்டுவிடுமோ என்று அஞ்சித் துடித்த நிலையில் அது உயிர்த் துளியாய் வந்துள்ளது. மூச்சற்றுப் போனவர்களை உயிர்வளியால் உயிர்ப்பித்துள்ளது.

நம்பிக்கை இழந்து போன நிலையில் நம்பிக்கையாய் வந்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை நம்புவோம். விடுதலைப் போர் முன்னோக்கியே செல்லும். விடுதலைத் தாகத்தை விடுதலை மட்டுமே தணிக்கும். புலிகளின் தாகம், தமிழீழத் தமிழரின் தாகம் தமிழீழம்! தமிழீழம் அமைந்த பின்னர் அத்தாகம் தணியும்.

Pin It