குற்றம் சுமத்தப்பட்ட நபர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டால், அவரது முந்தைய நடவடிக்கையைப் பரிசீலனை செய்து. குற்றவியல் நீதித்துறை நடுவர் தண்டனை விதிப்பார். தண்டனைத் தீர்ப்புக்குள்ளான நபர் அவரது தண்டனையை எதிர்த்து, மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்து கொள்ள விரும்பினால், தண்டனையளித்த நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டும்.

  • தண்டனையானது 3 ஆண்டு காலத்திற்கு மிகாத சிறைவாசம் எனும்போது (அல்லது)
  • அந்த நபர் தண்டனைத் தீர்ப்புக்குள்ளான குற்றம், பிணையில் விடுவிக்கக் கூடிய ஒன்றாகவும் அவர் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டும் இருக்கும் போது.
  • தண்டனைக் குற்றவாளி மேல்முறையீடு செய்து, மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் ஆணையைப் பெறுவதற்கு ஆகும் கால அளவுக்கு அந்த பிணை விடுப்பு இருக்கும்.
  • தனது தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து ஒருவர் மேல் முறையீடு செய்து கொண்டால், மேல் முறையீட்டு நீதிமன்றமானது, தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, பிணையில் அல்லது சொந்தப் பிணை முறியில் அவரை விடுவிக்கலாம்.

எதிர்பார்ப்பு பிணையில் விடுவிப்பு:

பிணையில் விட முடியாத குற்றத்திற்காகத் தான் கைது செய்யப்படக் கூடும் என்று ஒருவர் நம்புவதற்குக் காரணம் இருந்தால் அவ்வாறு கைது செய்யப்பட நேர்ந்தால் பிணையில் தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஆணையிடுமாறு மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்திற்கு மனு செய்யலாம். அத்தகைய நபர், பிடிப்பாணை இல்லாமல் காவல் துறை அதிகாரியால் கைது செய்யப்பட்டால். அவர் பிணையளிக்கத் தயாராக இருந்தால், அவரைப் பிணையில் விடுவித்தாக வேண்டும். குற்றவியல் நீதித்துறை நடுவரால் குற்றவாளிக்கு எதிராக பிடிப்பாணை வழங்கப்பட்டால் அது உயர்நீதிமன்றம் அல்லது மாவட்ட அமர்வு நீதிமன்றம் கூறியுள்ள நெறிமுறைகளுக்கேற்ப பிணையில் விடுவிக்கக்கூடிய பிடிப்பாணையாக இருக்க வேண்டும். ஒருவர் எதிராளிகளால் பொய்யான வழக்கில் சிக்கவைக்கப்படும்போது பிணையில் விடுவிக்கப்படுவதற்கு மனு செய்து கொள்வதற்கு முன்பு சிறையில் சில நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு அவமானத்திற்குள்ளாவதிலிருந்து மீட்பதே இந்தப் பிரிவின் நோக்கம்.

பிணையில் விடுவிப்பது குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்துக்களும் யோசனைகளும்:

  • நமது நாட்டில் தற்போது நிலவுகிற பிணையில் விடுவிக்கும் முறையானது, அடக்கி ஒடுக்குவதாகவும். ஏழைகளுக்கு எதிராக வேறுபாடு காட்டுவதாகவும் உள்ளது. எனவே, ஏழைகள் தங்களது வறுமை காரணமாக பிணையளிக்க இயலாமல் போய்விடுகிறது. பிணையளிப்பதில், ஏழை, பணக்காரர் என்ற வேறுபட்ட தகுதி நிலையைக் கவனத்தில் கொள்ளாமல் இரு தரப்பினரையும் சமமாகப் பாவிப்பது ஏழை பணக்காரர் இடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி விடுகிறது.
  • பிணையில் விடுவிக்கும் முறையானது முழுமையாகச் சீர்திருத்தப்பட வேண்டும். இதன்மூலம், நீதியின் நலன்களுக்கு இடையூறு செய்யாமல், பணக்காரர்களைப் போலவே ஏழைகளும் நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக, எளிதாக விடுவிக்கப்படுமாறு செய்ய வேண்டும்.
  • பிணையாளிகள் இருந்தால் மட்டுமே விடுவிக்க வேண்டும் என்ற காலங்கடந்த செயல்முறையை நீதிமன்றமும் காவல் துறையினரும் கைவிட்டாக வேண்டும். குற்றவாளிக்கு சமூகத்தில் தொடர்பும், ஆஜராகாமல் போய்விடக்கூடிய அபாயம் இல்லாத நிலையும் உள்ளபோது, நிதிப்பொறுப்பு ஏதுமின்றி சொந்தப் பிணையில் (மீறினால் தண்டனைக்குள்ளாகும் நிபந்தனையுடன்) அவரை விடுவிக்கலாம்.
  • குற்றவாளியைச் சொந்தப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் நிர்ணயிக்கும் தொகையானது குற்றச்சாட்டின் அடிப்படையில் மட்டும் இருக்கக் கூடாது. குற்றவாளியின் நிதிவசதியைப் பொறுத்தும் தலைமறைவாகிவிடக் கூடிய சாத்தியக் கூற்றை வைத்தும் நிர்ணயிக்க வேண்டும்.
  • சொந்தப் பிணையில் குற்றவாளியை விடுக்கும்போது நீதிமன்றம் அல்லது காவல் முறையானது அவரது சொந்தப் பிணையை ஏற்றுக் கொள்வதாக அவரது நிதி வசதியைக் கேட்டு நிர்ப்பந்தம் செய்யக் கூடாது.
Pin It