தங்களுக்குள் அடித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த சுமேரிய நகரங்களை முதன் முதலில் பெரும் சாம்ராஜ்யம் என்கிற வகைக்குள் கொண்டு வந்தவன் சாரகோன். அவன் பெயருக்கான அர்த்தம் பெரும் அரசன் (கோன்) என்பது. அரசர்களை கோன் என்று அடையாளப்படுத்தும் தமிழ் வார்த்தை இவனுடையப் பெயரில் தெரிவது போல உங்களுக்குப் பட்டால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. சுமேரிய மொழியின் பல வார்த்தைகள் தமிழுடன் ஒத்துப்போவது ஆச்சரியப்பட வேண்டிய விசயம் அல்ல, நாம் அறிந்து கொள்ளாத விசயம் மாத்திரமே. நம் ஆராய்ச்சி உலகம் கண்டு கொள்ளாத ஓர் அம்சம் அவ்வளவே. ஊர், ஈழம், மாரி என்று பல முக்கியமான சுமேரிய நகரங்களின் பெயர்களிலும் நம் தமிழ் வாடை அடித்தபடிதான் இருக்கிறது. சரி விசயத்திற்கு வருவோம், சாரகோன் அக்கேட் என்கிற புதிய நகரத்தை உருவாக்கியதால் அவன் உருவாக்கிய சாம்ராஜியத்திற்கு அக்கேடிய சாம்ராஜ்யம் என்று பெயர் சூட்டிவிட்டது ஆராய்ச்சி உலகம்.

emprire of sargon

கிஷ் நகரின் அரசனான ஊர்-சபாபா என்பவனின் பணியாளாக இருந்தவன் சாரகோன். இவன் எப்படி அரசனாக மாறினான் என்பதைக் குறித்த வரலாற்றுத் தகவல்கள் எதுவும் இல்லை. அவன் வெளியிட்ட கல்வெட்டுகளிலும் கூட அது குறித்த தகவல் ஏதும் இல்லை. ஒரு பேரரசனாக அவனுடைய வெற்றிகளைப் பற்றி மட்டுமே அவனுடைய கல்வெட்டுகள் பேசுகின்றனவே தவிர, பணியாளாக இருந்த அவன் எப்படி அரசனாக ஆனான் என்பதைக் குறித்து ஏதும் பேசுவதில்லை. இவன் பெருமை பேசும் சுயவரலாற்றுக் கல்வெட்டும் கூட இவன் அரசனான சங்கதி குறித்து வாய் திறப்பதில்லை. இந்த சுய வரலாற்று கல்வெட்டு அக்கேடிய இலக்கியப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இவன் பேரரசனாக இருந்த ஆண்டுகள் கி.மு. 2334 – 2279. இவனைத் தொடர்ந்து வந்த நான்கு அரசர்களின் காலகட்டம் வரையே அக்கேடியப் பேரரசு நிலைத்திருந்தது. சாரகோனைத் தொடர்ந்து அவனுடைய மகன்கள் ரிமுசும் மானிஷ்டுசுவும் அக்கேடிய பேரரசர்களானார்கள். இவர்களைத் தொடர்ந்து சாரகோனின் பேயரன் நரம்-சின். இவனுக்கு அடுத்து (கடைசி அக்கேடிய பேரரசன்) ஷர்-காலி-ஷாரி. சாரகோனுக்கு என்ஹிடுவானா என்று ஒரு மகளும் உண்டு. அவள் ஆட்சி அதிகாரம் செலுத்தியதாக வரலாற்றுப் பதிவுகள் இல்லை. ஆனால் மதம் சார்ந்த விசயங்களில் ஆளுமை மிக்க சக்தியாக அவள் செயல்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சுமேரிய கடவுளர்களே அக்கேடியர்களின் கடவுளர்களாகவும் இருந்தார்கள். சில சுமேரியக் கடவுளர்களின் பெயர்களை மட்டும் அக்கேடியர்கள் மாற்றிக் கொண்டார்கள். அன் கடவுள் அனுவாக பெயர் மாற்றம் பெற்றார். ஊட்டு ஷாமசாகவும், இனானா இஸ்தாராகவும், ஈன்லில் ஈலிலாகவும் பெயர் மாற்றம் கண்டார்கள்.

அக்கேடிய நாகரீக கலை

மெசபட்டோமியப் பகுதியில் (டைகிரிஸ் – யூப்பிரடிஸ் நதிகள் பாயும் பகுதிகள்) அக்கேடிய நாகரீகத்தை உருவாக்கியவர்கள் செம்மிட்டிக் இனக் குழு மக்கள். இவர்கள் மெசபட்டோமியாவின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளுக்குள் இருந்து சுமேரிய நாகரீகம் உருவாக்கிய நகரங்களுக்குள் ஊடுருவியவர்கள். அகேட்டியர்கள் இராணுவமயமாக்கப்பட்ட ஒரு இனக் குழுவாக இருந்தவர்கள். இதன் காரணமாக அவர்களுடைய கலைகளில் எதிரொளித்தவைகள் எல்லாம் மேலாண்மையையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்தும் பிரம்மாண்டங்களே. அரசனானவன் கடவுளர்களின் சேவகன் என்கிற நிலையிலிருந்து அவன் ஒரு போர் வீரன் என்கிற சிந்தனை மாற்றத்திற்கு உள்ளானது அக்கேடிய கலைகளின் தனிச் சிறப்பு. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இவர்களுடைய அரண்மனை கட்டிடக் கலை. இவைகள் இன்றைக்கு முழு உருவில் கிடைக்கவில்லை என்றாலும் தரைமட்டமாகிவிட்ட அடித்தளங்களே இவைகளின் பிரம்மாண்டத்தை எடுத்துக்காட்ட போதுமானவைகளாக இருக்கின்றன. பேரரசு ஒன்றைக் கட்டமைப்பதே அக்கேடியர்களின் பிரதான அரசியல் சமூக சிந்தனை மற்றும் செயல்பாடாக இருந்திருக்கிறது. அவைகள் அவர்களின் கலைகளிலும் பிரதிபலித்தது. சுமேரிய கலைகளைப் போல அல்லாமல், அக்கேடிய கலைஞர்கள் தங்களின் படைப்புகளில் உணர்ச்சிகளை பிரதிபலித்திருக்கிறார்கள் (எக்ஸ்பிரஷனிசம்).

அக்கேடிய கலை காலகட்டங்கள்

கலை வரலாற்றின் அடிப்படையில் அக்கேடிய கலையை மூன்று காலகட்டங்களாகப் பிரித்திருக்கிறார்கள். சாரகோன் காலகட்டம், என்ஹிடுவானா-மனிஸ்டுசு காலகட்டம் மற்றும் நரம்சின்-ஷர்காலிஷாரி காலகட்டம்.

கட்டிடக் கலை

கடவுளர்களின் கோயில்களை விட அரசர்களின் அரண்மனைகள் ஆரவாரத்துடன் கட்டப்பட்டது அக்கேடிய பேரரசு காலம் முழுவதிலும். ஆனால் நம்முடைய துர்அதிர்ஷடம் இன்று அக்கேடிய அரண்மனைகள் முழுவதுமாக கிடைக்கப் பெறவில்லை. இடிந்த அடித்தளங்களைக் கொண்டு அவைகள் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்கிற அனுமானமே செய்ய முடிகிறது.

sargon palace

(சாரகோன் பேரரசனின் அரண்மனை - உத்தேச ஓவியம்)

சிற்பக் கலை

அக்கேடிய சிற்பக் கலையின் சிறப்பம்சங்கள் உணர்ச்சி வெளிப்பாட்டு தன்மையும்(expression) இயங்கியலும் (movement).

அக்கேடிய சிற்பங்களின் பேசுபொருள் பெரும்பாலும் அரசர்களின் போர்களக் காட்சிகளே. புடைப்பு சிற்பங்கள் அக்கேடிய காலகட்டத்தில் மெசபட்டோமியா அதுவரை கண்டிராத ஒரு புதிய உச்சத்தை அடைந்தது. சிற்ப மனிதர்கள் முதல் முறையாக தங்களின் மன உணர்வுகளை அவர்களின் முகங்களிலும், உடல் அசைவுகளிலும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் ஒரே இடத்தில் தேமே என்று நின்று கொண்டிராமல் அவர்களின் செய்கை ஒன்றின் மத்தியில் உறைந்தது போலக் காட்சியளிக்கிறார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் நரம்-சின் பேரரசனின் வெற்றி கற்பலகை. இதில் நரம்-சின் அவனுடைய பகைவர்களை வெற்றி கொள்வது சித்தரிக்கப்பட்டிருக்கிறது (லூலுபி என்கிற மலைவாழ் மக்களை வெற்றி கொண்ட காட்சி).

naram sin sculpture

(நரம்-சின் பகைவர்களை வெற்றி கொள்ளும் கற்பலகை புடைப்பு சிற்பம்)

இந்த சிற்பக் காட்சியின் குவிமையம் முழுவதும் நரம்-சின் உருவத்தின் மீதே இருக்கும்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவனைத் தவிர அவனுடைய போர்வீரர்களும் எதிரிகளும் உருவத்தில் சிறிதாக காட்டப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக உருவத்தில் பெரிதாக இருக்கும் நரம்-சின் மீது நம்முடைய பார்வை நம்மையும் மீறி இழுக்கப்படுகிறது. இதைத்தான் இந்த சிற்பத்தை செதுக்கிய கலைஞனும் விரும்பியிருக்க வேண்டும். நரம்-சின் உடல் வெளிப்படுத்தும் உடற் கூற்றியலும் கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சம். அக்கேடிய கலைஞர்கள் மனித உடல் கூற்றியலை உள்வாங்கி அதை கலைத்தன்மையுடன் வெளிப்படுத்தியிருப்பதற்கு இது சிறந்த உதாரணம்.

சிற்பக் கலைஞர்கள் இரண்டு வகையான கட்டமைப்புகளை தங்களின் முத்திரை சிற்பங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒன்று தொடர்பற்றது, மற்றொன்று தொடர்புடையது. இபின் ஷாரும் முத்திரை தொடர்புடைய கட்டமைப்பிற்கு எடுத்துக்காட்டு.

ibin sarum

(இபின் ஷாரும் முத்திரை)

இந்த முத்திரையில் ஆர்னா வகை எருமைகள் (இந்த எருமை இனம் நம் நாட்டைச் சேர்ந்தவை என்பது இங்கே குறிப்பிட வேண்டிய சங்கதி. நம்மூர் எருமைகளுக்கு மெசபட்டோமியாவில் அதிலும் நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு என்ன வேலை என்பதையெல்லாம் நம்முடைய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்தான் ஆராய்ந்து சொல்ல வேண்டும். சொல்லிட்டாலும்!) இரு வீரர்களின் கைகளில் இருக்கும் குடுவைகளிலிருந்து பொங்கிப் பெருகும் நீரை தலையை உயர்த்தி அருந்துவதைப் போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சிமெட்டிரிக் பேலன்சில் இருக்கும் இந்த புடைப்பு சிற்பத்தில் வீரர்கள் மற்றும் எருமைகளின் உடல் கூறு அற்புதமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முந்தைய சுமேரிய சிற்பங்கள் வெளிப்படுத்தாத சிறப்பு அம்சம் இது.

- நவீனா அலெக்சாண்டர்

Pin It