“சுதந்திரம் என்பது, அடிமைத்தளையைத் தகர்ப்பத மட்டுமல்ல. செல்வத்தை சமச்சீராகப் பகிர்வதும், சாதி, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, மத சகிப்புத் தன்மையை ஏற்படுத்துவதமாகும்” என்று முழங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்!

                நேதாஜி வங்கத்தில் 1897-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 23-ஆம் தேதி ஜானகிநாத் போஸ் - பிரபாபதி தம்பதிகளுக்கு ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்தார்.

                gandhi and nethajiபதினாறு வயதான மாணவர் சுபாஷ் சந்திரபோஸ் 1913-ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். மாணவ பருவத்திலேயே நேதாஜி, “என்னைப்பற்றி அந்த வயதிலேயே நான் ஒரு தீர்மானம் செய்து கொண்டேன். எல்லோரும் போகிற பாதையில் நான் நடக்க மாட்டேன். அதைவிட்டுத் தொலைதூரம் விலகி, மனித சமுதாயத்தின் நிலையை உயர்த்தும் பணியில் என்னை நான் அர்ப்பணித்துக் கொள்வேன்” என்று உறுதியேற்றார்.

                கல்கத்தா நகரில் உள்ள மாநிலக் கல்லூரியில் 1913-ஆம் ஆண்டு நேதாஜி தனது படிப்பைத் தொடர்ந்தார். அந்த கல்லூரியில் செயல்பட்டுவந்த சுவாமி விவேகானந்தர் குழுவில் நேதாஜி சேர்ந்தார். அந்தக் குழு ஆன்மீகத்திற்கும், அரசியலுக்கும் தொடர்பு உண்டாக்கும் குழுவாக செயல்பட்டது. கல்லூரி விடுதியில் மாணவர்களைக் கூட்டிப் பேசுவது, விவாதிப்பது, நூல்களைப் படிப்பது, அரசியல் தலைவர்களை அழைத்து வந்து பேச வைப்பது, கையெழுத்துப் பிரதிகள் வெளியிடுவது ஆகியப் பணிகளில் நேதாஜி தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

                மாணவப் பருவத்திலேயே சமூக நலப் பணிகளிலும், ஏழை எளிய மக்களுக்கு உதவுவதிலும் தீவரமாகச் செயல்பட்டார்.

                நேதாஜி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது 1914-ஆம் நாள்; உலகப் போர் தொடங்கியது. “ராணுவ பலம் இல்லாத எந்த நாடும், தனது சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது” என்று சிந்தித்தார்.

                நேதாஜி 1919 மார்ச் மாதம் பி.ஏ. தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்பு லண்டன் சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ஜசிஎஸ் படித்தார். நேதாஜி அறிவாற்றல் மிக்கவராகவும், சுறுசுறுப்புடையவராகவும், கடின உழைப்புக் கொண்டவராகவும் விளங்கியதுடன் வீரம், நேர்மை, துணிவு, தியாக மனப்பான்மை, தன்னம்பிக்கை நிறைந்தவராகவும் திகழ்ந்தார்.

                சுவாமி விவேகானந்தரின் “நம் தாய்க்குச் சமமானது தாய்நாடு. இந்த நாட்டு மக்கள் அனைவரும் நமது சகோதர சகோதரிகள் இவர்களுக்காக உழைப்பது தான் வாழ்க்கையின் லட்சியம்” என்ற அரிய கருத்து இளைஞர் சுபாஷின் உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்டது.

                மாணவர் போஸ் கல்வியில் முழு கவனம் செலுத்திய போதிலும், அரசியலிலும் ஆர்வம் மிக்கவராக விளங்கினார். ஜசிஎஸ் பட்டம் பெற்ற பிறகு இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரியாகப் பணியாற்றாமல் தேச விடுதலைக்குப் போராட வேண்டுமென தீர்மானித்தார்.

                1920-ஆம் ஆண்டு ஜீலை மாதம் கல்கத்தாவிலிருந்து தனது இரண்டாவது அண்ணன் சரத் சந்திரபோசுக்கு நேதாஜி ஒரு கடிதம் எழுதினார். அதில் “நான் ஜசிஎஸ் பட்டம் பெற்ற பிறகு இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்க கலெக்டராகப் பணியாற்றலாம். அதன் மூலம் வசதியான வாழ்க்கை நடத்தலாம் என நினைப்பது, என் ஆன்மாவை பலிகொடுப்பதற்குச் சமம். பிரிட்டிஷ் நிர்வாக எந்திரத்தில் நானும் ஒர் உறுப்பாக மாறி, சிவப்பு நாடா கொள்கைக்குத்துணை நின்று, இதயமில்லாமல் சுய நல வாழ்வு நடத்துவதை, அறவே வெறுக்கிறேன்” என்றார். “இந்தியத் திருநாட்டில் நம் வீட்டைப்போல் கோடிக்கணக்கான வீடுகள் உண்டு. நான் என் சொந்த வீட்டிற்கு உழைப்பதைவிடத் தாய் நாட்டிற்கு, என்னைத் தியாகம் செய்து கொள்ளத் தீர்மானித்து விட்டேன்” என்றும் அறிவித்தார்.

                ‘தேச பந்துவை’ தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்ட நேதாஜி 1921ஆம் ஆண்டு டிசம்பரில், வேல்ஸ் இளவரசன் இந்தியாவிற்கு வருகை தருவதை கண்டித்து முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் முடிவு செய்து அறிவித்தனர். நேதாஜி கல்கத்தா நகரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.  

அதையொட்டி கைது செய்யப்பட்டு சித்தரஞ்சன் தாஸ், தேசபந்து ஆகியோருடன் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டு எட்டு மாத தண்டனை அனுபவித்தார். சிறையிலிருந்து வெளியே வந்த நேதாஜி வங்காள மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளராக தேர்நத்தெடுக்கப்பட்டார்.

‘ஃபார்வர்ட்’-(முன்னேற்றம்)- என்ற தினசரி பத்திரிக்கையின் ஆசிரியராக நேதாஜி செயல்பட்டார். அவர் சுதந்திர தாகத்தை ஏற்படுத்துவதைக் கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் அரசு வன்முறையைத் தூண்டுகிறார் என்று கூறி 1924 ஆம் ஆண்டு அக்டோபரில் கைது செய்து சிறையில் அடைத்தது.

                நேதாஜி கல்காத்தா சிறையிலிருந்து பெர்காம்பூர் சிறைக்கு மாற்றப்பட்டார். பிறகு அங்கிருந்து பர்மாவின் வட பகுதியில் உள்ள மண்டலே நகருக்கு கொண்டு போய் சிறையில் அடைத்தார்கள். 925 நாட்கள் சிறையில் கழித்தார். சிறைக்கு கொடுமையால் எலும்புருக்கி எனும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டார்.

                சிறையிலிருந்து விடுதலை அடைந்தவுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகத் தோந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டையும், பேரணியையும் 1928 கல்காத்தாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வகையில் நடத்திக் காட்டினார்.

                கல்கத்தா நகரில் 1928 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில் “இன்னும் ஒரு ஆண்டு அவகாசத்திற்குள், இந்த நாட்டிற்குப் பூரண சுதந்திரம் வழங்க வேண்டும் தவறினால் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை இயக்கத்தை முழு அளவில் நடத்துவோம்!” என்று முழங்கினார்.

                நேதாஜி 1935-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டுக்குச் சென்றார். அங்கு இருந்து தாய் நாட்டிற்கு கப்பலில் வந்து கொண்டிருக்கும் போது, “நேதாஜி இந்தியாவிற்குள் நுழையக் கூடாது” என்று ஆங்கில அரசு அறிவித்தது. அதைக் கண்டு தேசத் தலைவர்கள் கோபம் கொண்டார்கள். பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர்.

                வங்காள பத்திரிக்கையில் நேதாஜி தொடர்ந்து கட்டுரைகள் எழதினர். அவற்றில் “இளைஞர்களே நம் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்ய மன் வாருங்கள்!” என்று அழைப்பு விடுத்தார். ஆத்திரமடைந்த ஆங்கில அரசு 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி கைது செய்து நேதாஜியை சிறையிலடைத்தது.

நேதாஜிக்கும், காந்திஜிக்கும் அரிபுரா மாநாட்டில் கருத்து வேறுபாடு தோன்றியது.

                “நமது வலிமை அனைத்தையும் பயன்படுத்தி விடுதலைக்குப் போராடுவோம்” என்று முழங்கினார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக நேதாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். நேதாஜியின் வெற்றி காந்திஜிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. பின்பு கருத்து வேறுபாட்டின் காரணமாக காங்கிரசிலிருந்து வெளியேறினார். தமது தலைவர் பதவிவை 1939ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி தூக்கியெறிந்தார்.

                அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார் அதன் தலைவரும் ஆனார்.

               nethaji ஜப்பானுக்கு தப்பி சென்று நேதாஜி, “இன்பங்கள் அனைத்தையும் துறப்போம், துயரங்களை எதிர்கொள்வோம். நம்மை அடக்கி துன்புறுத்தும் ஆங்கிலப் பேரரசை அடித்து விரட்டுவோம்” என்று முழங்கினார்.

                “அடிமைத் தன்மை, கொடிய வறுமை, தன்னையே அவமதிக்கும் தாழ்வு மனப்பான்மை, பண்பாட்டுச் சீரழிவு ஆகியவற்றைத் தான் இந்திய மக்களுக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வழங்கி இருக்கிறது. எனவே, பிரிட்டனின் அடிமை விலங்கைத் தகர்த்து எறிய நாங்கள் முயற்சிப்பதில் வியப்பேதும் இல்லை”-என்றார். நேதாஜி சிங்கப்பூரில் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். இந்தியர்களை இராணுவத்தளபதிகளாகவும், வீரர்களாகவும் திரட்டினார். போர்ப் பயிற்சியும், ஆயுதப் பயிற்சியும் அளித்தார். பெண்கள் இராணுவப் பிரிவை ஏற்படுத்தி, ஜான்சிராணி பெயரில் படை அமைத்து பெண்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்தினார்.

                சிங்கப்பூர் நகரிலிருந்து 1943 ஆம் ஆண்டு ஜீலை 5-ஆம் தேதி இந்திய தேசிய இராணுவ அணி வகுப்பை பார்வையிட்டு, இந்தியாவின் விடுதலை இராணுவம் இதோ இங்கே உருவாகிவிட்டது என்று அறிவித்தார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நிரந்தரமானது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் ஒரு போதும் அஸ்தமிப்பதில்லை என்ற எண்ணத்தை தகர்த்தார். டெல்லிக்கு செல்வோம் என்று புறப்பட்ட இந்திய தேசிய இராணுவம் “தாயக விடுதலைக்கு தியாகம் செய்வோம்” என்ற சூளுரையுடன் 1944 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் நுழைந்தது. பிரிட்டிஷ் படையுடன் போரிட்டது. போதிய ஆயுதங்கள் இல்லாமலும், மருத்துவ வசதியில்லாமலும் பலத்த சேதமுற்றது. புல நூற்றுக்கணக்கான இந்திய தேசிய இராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.

                சுதந்திர இந்திய தற்காலிக அரசாங்கத்தை 1944-ஆம் ஆண்டு; நேதாஜி அறிவித்தார். 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி மஞ்சூரியாவிற்கு விமானத்தில் புறப்பட்டார். நேதாஜி விபத்தில் இறந்துவிட்டார். தனது மரணத்தின் இறுதியில் நேதாஜி “என் வாழ்நாள் முழுவதும் இந்திய விடுதலைக்குப் போராடினேன். இப்போது என் முடிவு நெருங்கி விட்டது. இந்திய விடுதலைக்காகவே என் உயிரைத் துறக்கிறேன். விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திச் செல்லுங்கள்” என்றார்.

                நேதாஜி போன்ற தியாகமிக்கத் தலைவர் போராடிப் பெற்ற இந்திய நாட்டின் சுதந்திரம், இன்று லஞ்சத்தின் வேட்டைக்காடாகவும், ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும் விளங்குகிறது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்குப் பதிலாக பல வெளிநாட்டினரின் ஆதிக்கத்திற்கும், அரசியல்வாதிகளின் சுரண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. மக்கள் வாழ்க்கையும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. மதவெறியர்களும், சாதி வெறியர்களும் மக்களைப் பிளவு படுத்தி கொலைவெறித் தாண்டவமாடுகின்றனர். புதவி வேட்டைக்காக மக்களை பலியாக்குகின்றனர். நேதாஜிக்கு நாம் செலுத்தும் புகழ் அஞ்சலி, “இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு தயாராவோம்!”- என்பதே!

- பி.தயாளன்

Pin It