பத்து வயது சிறுவனாக இருந்தபோது, சிறிய துப்பாக்கியால் தன் தோட்டத்தின் மரங்களிலிருந்த குருவியின் கூட்டத்தை நோக்கி சுட்டான். ஒரே ஒரு குருவி மட்டும் கீழே விழுந்தது. அதை உற்று நோக்கினான். அந்தக் குருவியின் தொண்டையில் மஞ்சள் நிறத் திட்டு இருந்தது. அது அச்சிறுவனது சிந்தனையைத் தூண்டியது. அவன், பறவைகளைப் பற்றிய ஓரளவு அறிவு பெற்ற தனது மாமாவிடம் விளக்கம் கேட்டான். அவர், “மும்பை இயற்கை வரலாற்றுக் கழக”த்திற்கு சென்று விபரம் அறிந்து கொள்ளும்படி கூறினார். அங்கு சென்று அக்கழகத்தின் செயலாளர் மில்லர்ட் என்பவரைச் சந்தித்தான். அவரிடம் தான் துப்பாக்கியால் சுட்ட குருவி பற்றிய விபரம் தெரிவித்தான். அச்சிறுவன் தான், பிற்காலத்தில் பறவையியல் அறிவியலாளராகப் புகழ் பெற்ற சலீம் அலி.

மில்லர்ட் சேகரித்து வைத்திருந்த பறவைகளின் ஆல்பத்தைப் பார்த்தான். பறவைகளை எப்படி பதப்படுத்தி பாதுகாப்பது என்பதைக் கற்றுக்கொண்டான். பறவையின் பெயர், அவை வாழும் இடம் ஆகிய விபரங்களை குறித்துக் கொண்டான்.

Salim aliபறவைகளிடம் சலீம் அலி மிகுந்த நேயம் கொண்டு, அன்பும், பாசமும் காட்டினான். அதனால், “பறவைகளின் பாதுகாவலன்” என்று பிறரால் பாராட்டப்பட்டான்.

சலீம் அலி நவம்பர் 12, 1896 ஆம் ஆண்டு மும்பை நகரில் பிறந்தார். மிகச் சிறிய வயதிலேயே தனது தாய், தந்தையரை இழந்தார். தன் மாமாவின் ஆதரவில் வளர்ந்தார்.

பள்ளி மாணவனாக இருந்த போதே, பறவைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டு விளங்கினார் சலீம் அலி. கல்லூரியில் அல்ஜிப்ரா கணக்கு பாடத்தில் சேர்ந்தார். ஆனால், அந்தப் படிப்பின் மீது கவனம் செல்லவில்லை. சலீம் அலி, பறவைகள் எங்கெங்குச் செல்கின்றன? எவ்வாறு இரை தேடுகின்றன? எப்படி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கின்றன? – போன்ற தகவல்களை அறிந்து கொள்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.

தனது இருபதாவது வயதில் பிழைப்புக்காக பர்மா நாட்டுக்குச் சென்றார். மர வியாபாரத்தில் உதவியாளராகச் சேர்ந்தார். அந்த வாய்ப்பையும், தனது பறவைகள் குறித்த ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டார். பர்மாவில் உள்ள டாவாய் என்ற ஆறு பாய்ந்து செல்லும் வழிகளில் உள்ள காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த பறவைகளைப் பற்றி ஆராய்ந்தார்.

தெஹ்மினா பேகம் என்பவரை 1917 ஆம் ஆண்டு, சலீம் அலி தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். அவர் தனது கணவரின் பறவைகள் குறித்த ஆராய்ச்சிக்கு உறுதுணையாக விளங்கினார்.

மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் சேர்ந்து விலங்கியல் பட்டப் படிப்பை முடித்தார். மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார்.

பறவைகள் வாழ்கின்ற இயற்கைச் சூழலுக்கே சென்று, அவற்றின் இயல்புகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து பல உண்மைகளை அறிந்தார் சலீம் அலி.

ஜெர்மன் நாட்டின் தலைநகரம் பெர்லினுக்குச் சென்று பறவைகளின் பாதுகாப்பு குறித்து படித்தும், பயிற்சியும் பெற்றுத் தாயகம் திரும்பினார்.

பறவைகளால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதையும் கண்டறிந்தார். உழவியல், தோட்டக்கலையியல், வனயியல் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பறவைகள் பயன்படும் உண்மைகளைக் கண்டறிந்து உலக்குத் தெரிவித்தார். தான் கண்டறிந்தவைகளைப் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.

சலீம் அலி தயாரித்த, “இந்தியப் பறவைகள்” – என்ற நூலில் பறவைகள் இயற்கையான, அழகான வண்ணங்களில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. அந்நூலில் பறவைகளின் வகைகள், வாழ்க்கை முறைகள் ஆகியவைகள் குறித்து சாதாரண மனிதனும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகவும், சுவையாகவும் பல செய்திகளை எழுதியுள்ளார் என்பது சிறப்பானதாகும்.

மும்பை நகரில் துறைமுகம் அருகில் தோட்டத்துடன் கூடிய வீட்டில் சலீம் அலி வாழ்ந்தார். அவர் வீட்டிலிருந்த மரங்களில் ஏராளமான தையற்காரப் பறவைகள் கூடுகட்டி வாழ்ந்தன. தையற்காரப் பறவைகள் குறித்து 1930 ஆம் ஆண்டு நூல் எழுதி வெளியிட்டார். அந்நூல் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

மகாராஷ்டிரா கட்சிப் பகுதிக்குச் சென்று பிளமிங்கோ பறவைகள் பற்றி ஆராய்ந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் டில்லான் ரிப்ளேவுடன் இணைந்து சலீம் அலி, “இந்தியா மற்றும் பாகிஸ்தான் பறவைகள்” என்ற அரிய நூலை எழுதினார்.

சில பறவைகள் பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரம், கண்டம் விட்டு கண்டம், நாடுவிட்டு நாடு சென்று பல மாதங்கள் தங்கி வாழ்ந்துவிட்டு திரும்பி தங்களது இடத்திற்கே வருவது குறித்து ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்.

மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் காப்பாளராக 1950 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.

சுவிடன் நாட்டில், 1950 ஆம் நடைபெற்ற, 10 வது உலக பறவையியல் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.

சலீம் அலியின் தீவிர முயற்சியால், மும்பை பல்கலைக் கழத்தில், பறவையியல் பற்றிய இளங்கலை, முதுகலை, முனைவர் (ஆராய்ச்சியாளர்) ஆகிய படிப்புகள் தோற்றுவிக்கப்பட்டது.

சலீம் அலி, “ஆசியாவின் பறவையியல் மனிதர்” எனப் போற்றப்பட்டார்.

நெதர்லாந்து நாட்டு அரசின் பொற்படகு விருது சலீம் அலிக்கு 1973 ஆம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பறவைகள் பாதுகாப்புக்காகப் பாடுபட்ட சலீம் அலிக்கு, உலக வன வாழ்வு அமைப்பினர் பரிசளித்துப் பாராட்டினர்.

சலீம் அலி பறவைகளின் வரலாற்றை 1930 ஆம் ஆண்டு முதல் 1941 ஆம் ஆண்டுவரை தொகுத்து, “தி புக் ஆப் இண்டியன் பேர்ட்ஸ்” (The Book of Indian Birds) என்ற சிறந்த நூலாக எழுதி வெளியிட்டார்.

தமிழ் நாட்டில் உள்ள மலைகளின் அரசியாகப் போற்றப்படும் நீலகிரி மலைக்காடுகளுக்கு 1932 ஆம் ஆண்டு வருகை தந்து, பறவைகள் பற்றிய ஆராய்ச்சியில் சலீம் அலி ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க, காஷ்மீரில் வாழும் பறவைகள் பற்றி ஆராய்ந்து பல அறிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். கேரளக் காடுகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு, கேரளப் பறவைகள் பற்றியும் ஆய்வு நூல் எழுதியுள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்கள் குறித்து, சலீம் அலி அன்றே சுட்டிக்காட்டியதுடன், சுற்றுச் சூழலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

அவர் கூறியது போல், நமது நாட்டில் உள்ள அனைத்து பறவைகள் சரணாலயங்களையும் நன்கு பராமரித்து, பாதுகாத்திட வேண்டும். வேட்டையாடுபவர்கள், சமூக விரோதிகள் ஆகியோரிடமிருந்து பறவை இனங்களை பாதுகாத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது மிக அவசியம்.

இந்திய அரசு சலீம் அலிக்கு “பத்ம பூஷன்” விருது அளித்து சிறப்பித்தது.

பறவையியலுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சலீம் அலி மும்பையில் ஜூன் 20, 1987-ல் இயற்கை எய்தினார்.

Pin It