மெகஸ்தனீஸ். பேரைக் கேட்ட உடனே 'இது எங்கேயோ கேள்விப் பட்ட ஒரு பெயர் போல இருக்கின்றதே' என்ற எண்ணம் நம்மில் பலருக்கு வரத் தான் செய்யும். காரணம் நாம் பள்ளியில் பயின்ற நமது வரலாற்றுப் புத்தகங்களில் இவரை நாம் கடந்து தான் வந்து இருப்போம். சரி அப்பொழுது கண்ட இம்மனிதரை நாம் இப்பொழுது மீண்டும் காண வேண்டியத் தேவை என்ன....? காண்போம்.

வரலாற்றின் பக்கங்கள் என்றுமே மர்மமான ஒன்றாகத் தான் இருந்து இருக்கின்றன. காரணம் இன்று இருப்பது போன்று அன்று வரலாற்றினை சேகரித்து வைக்க விடயங்கள் பல இருக்க வில்லை. மேலும் அவ்வாறு சேகரித்து வைத்த விடயங்களும் பல போர்களாலும் இயற்கையாலும் காலம் தோறும் அழிக்கப்பட்டே வந்து இருக்கின்றன. இந்நிலையில் மிஞ்சி இருக்கும் நூல்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள் போன்றியவற்றினை வைத்தே நம்முடைய இன்றைய வரலாறு கணிக்கப்பட்டு இருக்கின்றது. இவ்வாறு கணிக்கப்பட்டு இருக்கும் வரலாற்றில் மிக முக்கிய பங்கினை ஆற்றியோர் பயணிகளும் வணிகர்களும் தான்.

இவர்கள் தான் தாங்கள் செல்லும் ஒவ்வொரு ஊரினைப் பற்றியும் அதன் சிறப்புகள் வளங்கள் அரசுகள் போன்றவற்றினைப் பற்றியும் குறிப்புகளை எடுத்துக் கொண்டு பல நாகரீகங்களுக்கு இடையில் ஒரு இன்றி அமையாத இணைப்பாக விளங்கினர். அவர்களின் குறிப்புகளைக் கொண்டே ஒவ்வொரு நாகரீகமும் மற்ற நாகரீகங்களுடன் தொடர்பினை பலப்படுத்திக் கொண்டன. வணிகர்களும் பயணிகளுமே நாகரீகங்களுக்கு மத்தியில் தொடர்புக் கருவியாக அன்று செயலாற்றி வந்தனர். இன்றைய வரலாற்றில் பல விடயங்கள் இவர்களின் குறிப்புகள் மூலமாகவே நமக்கு கிடைக்கப்பட்டவை.

நிற்க. இப்பொழுது நாம் காணப் போகும் பயணியும் அப்பேர்ப்பட்ட பயணி தான். பெயர் மெகஸ்தனீஸ். ஊர் கிரேக்கம். வந்த ஊர் - இந்தியா. காலம் - கி.மு நான்காம் நூற்றாண்டு (இல்லை இது கி.பி நான்காம் நூற்றாண்டு என்றும் கூறுவோர் இருக்கின்றனர்). சந்தித்த அரசன் - சந்திரகுப்த மௌரியன் - மௌரியப் பேரரசு (இல்லை இது சந்திரகுப்தன் - குப்தப் பேரரசு என்றும் கூறுவோரும் உளர்)கிரேக்க சிற்றரசன் செலேயுகிசின் சார்பாகவே இவர் இந்தியா வருகின்றார். சுற்றுப் பயணமும் செய்கின்றார். இவர் எத்தனை காலம் இங்கே தங்கி இருந்தார் என்று உறுதிப்பட தெரியவில்லை. ஆனால் இவர் பல முறை இந்தியா வந்ததாகவும் பாடலிபுத்திரம் (அன்றைய மௌரியப் பேரரசின் தலைநகரம்) மற்றும் மதுரை மாநகருக்கும் வந்ததாக இவரின் நூல்கள் கூறுகின்றன. அவ்வாறு அவர் தங்கி இருந்த பொழுது அவர் இந்தியாவினைப் பற்றியும் அதன் அன்றைய அரசியல் நிலைப் பற்றியும் எழுதிய குறிப்புகளை எல்லாம் தொகுத்து 'இந்திக்கா' என்னும் நூலினையும் தொகுக்கின்றார். அவர் காலத்தில் இருந்த இந்தியாவினைப் பற்றி அறிந்துக் கொள்ள அந்நூல் இன்றும் ஆய்வாளர்களுக்கும் சரி வரலாற்றில் ஆர்வம் மிக்கவர்களுக்கும் சரி ஒரு சிறந்தக் கருவியாகவே திகழ்கின்றது.

அந்நூலினை முழுக்கவே ஆராய்ந்து மொழிபெயர்த்து பதிவிட வேண்டும் என்ற ஆவல் இருப்பினும், தற்பொழுது இந்த பின்வரும் பகுதியினை மட்டும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கலாம் மற்றதை பின்னர் கண்டு கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கியதாலேயே இந்தப் பதிவு.

அவர் காலத்தில் மக்களின் மத்தியில் இருந்த பிரிவுகளை அவர் விவரித்ததின் மொழிபெயர்ப்பே பின் வரும் பதிவு.

௧) மொத்த இந்திய சனத்தொகையும் ஏழு சாதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. அவற்றுள் முதன்மையான இடத்தினில் இருப்பது தத்துவஞானிகளின் குழு. இவர்கள் எண்ணிகையில் மற்ற பிரிவினரைக் காட்டிலும் சிறியராக இருப்பினும் அவர்களின் மதிப்பு மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்து இருக்கின்றது. அனைத்து பொது கடமைகளிலும் இருந்தும் விடுவிக்கப்பட்டு இருக்கும் இவர்கள் யாருக்கும் அடிமைகளும் அல்லர் யாருக்கும் முதலாளிகளும் அல்லர். இருந்தும் இவர்கள் சில தனி நபர்களால் இறந்தவர்களுக்கு உரிய கடன்களை செய்யவும், ஒருவரது வாழ்நாளில் செய்யவேண்டிய தானங்களை செய்யவும் பயன்படுத்தப்படுகின்றார்கள். ஏனெனில் இந்த தத்துவஞானிகள் இறைவனுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களாக நம்பப்படுகின்றார்கள். மேலும் இவர்கள் ஹதேஸ் (கிரேக்க மரணக் கடவுள்) உடன் தொடர்புடைய விடயங்களைப் பற்றி அதிகம் பேச முடிபவர்களாகவும் அறியப்படுகின்றனர். அவர்கள் அவ்வாறு செய்யும் கடனுக்கு பதிலாக பரிசுகளையோ சலுகைகளையோ பெற்றுக் கொள்கின்றனர். மேலும் இந்திய மக்களுக்கு இவர்கள் வேறு பெரும் பேற்றினையும் அளிக்கின்றனர், வருடத்தின் தொடக்கத்தில் இவர்கள் குழு கூடும் பொழுது மக்களுக்கு அவ்வருடம் வரக்கூடிய வானிலை, வறட்சி, நோய், காற்றின் திசை போன்றியவற்றோடு இன்ன பிற விடயங்களையும் கூறுகின்றனர். அதற்கேற்றார்ப் போல் மக்களும் அரசனும் தகுந்த நடவடிக்கை எடுத்து எது வருமோ அதை எதிர் கொள்ள ஆயுத்தமாகிக் கொள்கின்றனர். அவர்களின் கூற்றால் பின்னால் வரப் போகும் ஆபத்தை உணராது இவர்கள் தயார் நிலையில் இல்லாது இருக்கும் நிலையே இல்லாது இருக்கின்றது. அப்படி பிற்காலத்தில் வரப் போகும் விடயத்தை தப்பாக கணித்துக் கூறிய ஒருவருக்கு விமர்சனத்தை தவிர வேறு தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. அவர் தன் வாழ்வில் பின்னர் எப்பொழுதும் மௌனத்தையே கடைப்பிடிக்க வேண்டும் என்பது சட்டமாக உள்ளது. ஒரு வேளை அவரின் கணிப்பு சரியானதான ஒன்றாக இருப்பின் அவருக்கு வரி விலக்கு முற்றிலுமாக அளிக்கப்படுகின்றது.

௨) இரண்டாவது சாதி விவசாயிகளால் அமைக்கப்பட்டு இருக்கின்றது. மற்ற பிரிவினரை விட இவர்களே எண்ணிக்கையில் அதிகமாக காணப்படுகின்றனர். மற்ற பொது கடமைகளிலும் இருந்தும் போர் செய்வதில் இருந்தும் விடுவிக்கப்பட்டு இருக்கும் இவர்கள் தங்கள் காலத்தில் பெரும் பகுதியை நிலத்தினை உழுதே செலவிடுகின்றனர். மேலும் ஒரு விவசாயி அவனது நிலத்தில் உழுதுக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு எதிரி கூட அவனைத் தாக்க மாட்டான், காரணம் இவர்கள் பொது நலனுக்காக பாடுபடுபவர்களாக அறியப்படுகின்றனர். ஆகையால் எதிரிகள் கூட இவர்களுக்கு தீங்கு விளைவிப்பது இல்லை. மாறாக அனைத்து வித இன்னல்களிலும் இருந்தும் இவர்கள் பாதுகாக்கப் படுகின்றனர். இதன் மூலமாக, நிலமும் அழிக்கப்படாது பெரும் விளைச்சலைத் தந்து, அனைத்து மக்களும் அவர்கள் தேவைகள் அனைத்தும் பெறப் பெற்று வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ வழி செய்கின்றது. விவசாயிகளும் கிராமப்புறங்களிலேயே தங்களது மனைவி மக்களுடன் வாழத் தான் நினைக்கின்றனர். நகரத்துக்கு செல்ல அவர்கள் விரும்புவது இல்லை. அதை தவிர்க்கவும் பார்க்கின்றனர். அவர்கள் தங்களது நிலத்துக்கு நில வரியினை அரசனுக்கு கட்டுகின்றனர். காரணம் இங்கே அனைத்து நிலங்களும் அரசுடமை, தனி உடைமை என்று எங்கும் இல்லை. தனி நபர் சொந்தமாக நிலம் வைத்து இருப்பதற்கு உரிமை இல்லை. நில வரி போக அரசாங்க கருவூலத்திற்கு அவர்கள் மண்ணில் இருந்து விளைந்த விளைச்சலில் நான்கில் ஒரு பங்கு செலுத்தி விடுகின்றனர்.இந்தியாவின் ஏழு சாதிகள் பற்றி

௩) மூன்றாவது சாதி ஆடு மேய்ப்பவர்களாலும் மாடு மேய்ப்பவர்களாலும், பொதுவாக நகரத்திலும் சரி கிராமத்திலும் சரி தங்காது குடில் இட்டு தாங்கும் மேய்ப்பவர்களாலும் அமைக்கப்பட்டு இருக்கின்றது. வேட்டையாடுவதன் மூலமும் பொறி வைத்து மிருகங்களைப் பிடிப்பதன் மூலமும் அவர்கள் தீய மிருகங்களிடம் இருந்தும் பறவைகளிடம் இருந்தும் நாட்டினைக் காக்கின்றனர். இப்பணிகளில் தங்களை முழுவீச்சில் இவர்கள் இவர்களையே ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் விவசாயிகளின் தானியங்களுக்கும் சரி மக்களுக்கும் சரி தொல்லைத் தரும் வன வினங்குகளில் இருந்து இவர்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர். இதற்கு பலனாக அரசனிடம் இருந்து இவர்கள் உணவுப் பொருட்களும் வாங்கிக்கொள்கின்றனர்.

௪) நான்காவது சாதி ஆசாரியார்களாலும் வணிகர்களாலும் உருவாக்கப்பட்டு உள்ளது. இவர்களுள் சிலர் ஆயுதம் செய்பவர்களாக இருக்கின்றனர், சிலர் விவசாயிக்கு தேவையான பொருள்களை செய்பவர்களாக இருக்கின்றனர் மேலும் மற்றவர்கள் பல் வேறு செயல்களுக்குத் தேவையான பல்வேறுப் பொருள்களை உருவாக்குபவர்களாக இருக்கின்றனர். கப்பல் செய்பவர்களும் மாலுமிகளும் இந்த சாதியிலையே இருக்கின்றனர். இந்த சாதியினரில் போர் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பொருட்கள் செய்பவர்கள் மட்டும் முழு வரி விலக்கு பெற்று இருக்கின்றனர். மேலும் இவர்கள் அரசிடம் இருந்து மானியமும் பெறுகின்றனர். சிலர் அரசுக்கு வரி கட்டி அரசு அனுமதித்த சில சேவைகள் செய்கின்றனர். கப்பல் படைத் தலைவன் படகுகளை மக்களின் போக்குவரத்துக்கும் சரி வணிகத்துக்கும் சரி வாடகைக்கு தருகின்றான்.

௫) ஐந்தாவது சாதியாக போர்வீரர்கள் இருக்கின்றனர். போர் முறைகளில் நேர்த்தியாகவும் கட்டுப்பாட்டோடும் இருக்கும் இவர்கள் யுத்தத்திற்கு  ஆயுதங்களுடன் ஆயுத்தமாகியும், எண்ணிக்கையில் விவசாயிகளுக்கு அடுத்த நிலையிலும் இருக்கின்றனர். அமைதிக் காலங்களில் களிப்பு நிகழ்சிகளில் பங்கு எடுத்துக் கொண்டும் குடித்துக் கொண்டும் தங்களின் நேரத்தினை இவர்கள் கழிக்கின்றனர். முழுப்படையும், அதாவது காலாட்படை,போர்க்குதிரைகள், போர்யானைகள் மற்றும் இன்ன பிற படை அனைத்தும் அரசனின் செலவிலேயே இயங்குகின்றன. அவர்கள் எப்பொழுது போர் என்று அழைப்பு வந்தாலும் அதற்கு ஆயுத்தமாகவே இருக்கின்றனர். காரணம் அவர்கள் அவர்களின் உடல்களைத் தவிர அவர்களின் பொருள் என்று வேறு எதையும் சுமந்து கொள்வது இல்லை.

௬) ஆறாவது சாதி ஒற்றர்களால் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இவர்களின் ஆதிக்கத்தில் அனைத்து நாட்டில் நடக்கும் அனைத்து விடயங்களை ஆராய்வதும் மேற்ப்பார்வைப் பார்த்து அனைத்தையும் ரகசியமாக அரசனிடம் கொண்டு வந்து சேர்ப்பதும் ஆகிய செயல்கள் அடங்கும். சிலர் நாட்டினை கவனிக்கும் பொறுப்பில் இருக்கின்றனர். சிலர் படைகளை ரகசியமாக கவனிக்கின்றனர். அவர்கள் அந்த அந்த முகாம்களிலேயே இருந்து தங்களது பணியை ரகசியமாக செய்கின்றனர். எனவே மிகவும் திறமை உடையவர்களே அப்பணிகளுக்கு தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். அரசன் இல்லாத நிலையில் இவர்கள் தங்களின் தகவல்களை அந்தந்த ஊர் நீதிபதியிடம் தெரிவிப்பர்.

௭) ஏழாவது சாதியில் பொதுக் கடமைகளை நிர்வாகம் பண்ணுபவர்களும், ஆலோசகர்களும் ஆய்வாளர்களும் இருக்கின்றனர். அளவில் மிகவும் சிறியதாக இருந்தாலும் அதிகம் மதிக்கப்படும் ஒரு சாதியாக இவர்கள் இருக்கின்றனர். காரணம் இவர்களின் உயர்ந்த குணமும் அறிவுமே ஆகும். இவர்களில் இருந்தே அரசின் ஆலோசகர்களும் பொருளாளர்களும் நாட்டுக்கு தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். மேலும் விவாதங்களைத் தீர்த்து வைக்கும் நபர்களும் இவர்களிடம் இருந்தே தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். படைத் தளபதிகளும், நீதிபதிகளுமே கூட இவர்களிடம் இருந்தே தேர்வு செய்யப் படுகின்றனர். இவையே, அரசியல் அமைப்பில் இந்தியா பிரிந்து இருக்கும் பல்வேறு பாக நிலைகள் ஆகும்.

ஒரு சாதியில் இருந்து மற்றொரு சாதியில் பெண்ணெடுக்க அல்லது மனமுடிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. அதே போல் ஒருவர் செய்யும் ஒரு செயலை மற்றொருவர் செய்யவும் அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு போர்வீரன் விவசாயி ஆக முடியாது. அதேப் போல் ஒரு ஒரு பொருள் உற்பத்தியாளன் தத்துவ ஞானியாக முடியாது. மேலும் ஒருவன் பல வணிகம் செய்வதற்கும் அனுமதி கிடையாது. ஒருவன் ஒரு வியாபாரம் தான் செய்ய வேண்டும். இந்த நியதி தத்துவ ஞானிகளுக்கு மட்டும் தளர்த்தப்பட்டு உள்ளது.

மொழிபெயர்ப்பு முடிந்தது.

மேலே கூறியவை தான் மெகஸ்தனீஸ் கண்ட இந்தியாவில் இருந்த மக்கள் பிரிவுகள். நாம் இன்றுக் காணும் பிரிவுக்கும் அன்று நிலவியது என்று நாம் அறியப்படும் பிரிவுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் சிந்திக்க வைக்கின்றன.  மெகஸ்தனீஸ் கூறிய கருத்துக்கள் சரியானவையா?...அல்லது அவை தவறானவையா... பண்டைய இந்தியா எவ்வாறு இருந்தது...ஆராய வேண்டும். இந்தியாவினை நேசிப்பவர் அனைவரும் ஆராய்ந்து பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. உண்மை என்ன என்று அப்பொழுது தான் நாம் அறிய முடியும்.   வரலாற்றின் பக்கங்கள் பெரியவை...இருந்தும் முயல்வோம்...!!!

Pin It