தமிழர்களின் எகிப்திய வணிகமும் இரும்பு எஃகும்:

உலோகத்தொழில் கலையியல் வல்லுநர் கவுலாந்து (Gowland), ‘ஐரோப்பியர்கள் இரும்புத்தொழில் தொடங்குவதற்கு முன்பே தென்னிந்தியாவில் இரும்புத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர் எனவும் துருப்பிடிக்காத இரும்பைச் செய்யும் சிறப்புமிக்க தொழில் நுட்பத்தை அவர்கள் அறிந்திருந்தனர்’ எனவும் கூறுகிறார் (1).

தமிழகத்தில் கிமு 2000 முதலே இரும்புத் தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சி அடைந்திருந்ததால்தான் ஒரு இலட்சம் பழங்கால இரும்புப்பொருட்கள் தமிழகம் முழுவதிலும் இதுவரை நடந்த அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அடர் கருமைநிறம் கொண்ட முதல்தரமான மேக்னடைட் எனப்படும் தேனிரும்பு தமிழகத்தில் சேலம் போன்ற பகுதிகளில் கிடைக்கிறது. இரும்புத் தாதுவை உருக்கப் பயன்படும் சுண்ணாம்புக்கல்லும் அங்கு கிடைக்கிறது. ஆதலால் பண்டைய காலத்தில் தமிழகம் உலகின் இரும்புத் தொழிற்சாலையாக மாறியுள்ளது.

மிகப் பழங்கால இரும்புக்கருவி (உளி) ஒன்று கெப்ரான் (Kephron) என்ற எகிப்திய மன்னரின் பிரமிடில் கிடைத்துள்ளது. அதன் காலம் கி.மு. 2570. இதுதான் இரும்பு குறித்த மிகப் பண்டை கால குறிப்பு. அம்மன்னர் காலத்துக்கு முன் அங்கு செம்பு உளிகளே பயன்படுத்தப்பட்டன. கி.மு. 2500 வாக்கில் துருக்கியை ஆண்ட கிட்டடைட் அரசர் ஒருவனின் கல்லறையில் தங்கக் கைப்பிடியை உடைய இரும்பு வாள் ஒன்று கிடைத்துள்ளது. அதுபோன்றே கி.மு. 14ஆம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட மன்னர் துதங்கமானின் (Tutankamon) கல்லறையிலும் இரும்பு வாள் ஒன்று கிடைத்துள்ளது. அதனுடைய கைப்பிடியும் உறையும் தங்கத்தால்தான் செய்யப்பட்டிருந்தது. ஆகவே அன்று தங்கத்தைவிட இரும்பு உயர்வானதாக மதிக்கப்பட்டது (2).

mannar mannan bookஆனால் கி.மு. 1370இல்தான் கிட்டடைட்டுகள் இரும்பை உருக்கிப் பயன்படுத்த அறிந்து கொண்டார்கள். அதன்பின் 750 ஆண்டுகள் கழித்து கி.மு. 600இல்தான் எகிப்தியர்கள் இரும்பை உருக்கிப் பயன்படுத்த அறிந்து கொண்டார்கள். ஆனால் எகிப்தியர்கள், கிட்டடைட்டுகள் ஆகிய இருவரும் கி.மு. 2500 வாக்கிலேயே இரும்புப் பொருட்களை பயன்படுத்தியுள்ளார்கள் (3). ஆனால் அவற்றை அவர்கள் தயாரிக்கவில்லை. ஆகவே அவர்களுக்கு வேறு எங்கிருந்தோதான் அந்த இரும்புப் பொருட்கள் கிடைத்திருக்க வேண்டும்.

கி.மு. 2570 ஆம் ஆண்டில் எகிப்து மன்னன் கெப்ரானின் கல்லறையில் கிடைத்த இரும்பு உளியைச் சோதனை செய்து, அதில் காணப்பட்ட தரமான இரும்பு, அதன் வடிப்புமுறை, தாதுவளம் ஆகியனவற்றைக் கொண்டு ஜே.எம்.கீத், சர்.ஜே.ஜே. வில்கின்சன் ஆகியோர் அது சேலம் கஞ்சமலைப் பகுதியில் கிடைத்த இரும்புதான் என உறுதி செய்துள்ளனர். அக்கருத்தை பல ஐரோப்பிய அறிஞர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர் (4). ஆகவே தமிழகத்திலிருந்துதான் இந்த இரும்புப் பொருட்கள் கடல் வணிகம் வழியாக அங்கு சென்றன எனலாம்.

‘இரும்பு எஃகு’ உருவாக்கிய முதல் குடிகள் தமிழ்க்குடிகள்:

தங்கம், செம்பு, பித்தளை போன்ற உலோகங்களை பூமியிலிருந்து எடுத்துப் பயன்படுத்த ஒரு சாதாரண அடுப்பு போதும். வெண்கலத்தை உருவாக்க அடுப்புடன் சற்று அதிக அனல் வேண்டும். ஆனால் இரும்பை உருக்கிப் பயன்படுத்த ஒரு தொழிலகம் வேண்டும், தொழில்நுட்பம் வேண்டும், கருவிகள் வேண்டும், அனுபவமிக்க தொழில் வல்லுநர்கள் வேண்டும். கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் இவற்றைப் பெற்றிருந்தது.

2019இல் தமிழக அரசு வெளியிட்ட கீழடி அறிக்கை, “சேலம் மாங்காடு, தெலுங்கனூர் பகுதியில் கிடைத்த தொல்லியற் சான்றுகள் அறிவியல் காலக் கணிப்பின்படி தமிழக இரும்புக்காலம் என்பது கி.மு. 2000” என உறுதி செய்கிறது (5). கி.மு. 2000 என கண்டறியப்பட்ட சேலம் தொல்லியல் பகுதிகளில் நிறைய இரும்பு வாள்களும் இன்ன பிற இரும்பு ஆயுதங்களும் கிடைத்துள்ளன. அதன் தொழில் நுட்பங்கள் அவை உருவாக்கப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அங்கு இரும்புத் தொழில்கள் நடந்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கின்றன. ஆகவே அதன் தொடக்ககாலம் கிமு 2500க்கு முந்தையனவாக இருந்திருக்க வேண்டும் (6).

தமிழக முதலமைச்சர் 2022ஆம் ஆண்டு மே 9ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில் கிருட்டிணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை என்ற இடத்தில் நடந்த அகழாய்வில் கிடைத்த இரு இரும்பு பொருட்கள் (Iron Items), அமெரிக்காவின் புலோரிடா நகரத்தில் (Beta Analytic’s Radiocarbon Dating lab in Florida) அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் காலம் கி.மு. 1615, கி.மு. 2172 BCE என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே தமிழகத்தின் இரும்புக்காலத்தை கி.மு. 2200 என முடிவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார் (7). அகழாய்வில் கிடைத்து இரு இரும்பு வாட்களின் (Iron Swords) உலோக மாதிரிகள் (Metal Samples) தான் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழர்கள் இன்றைக்கு 4200 வருடங்களுக்கு முன்பே இரும்பு வாட்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்களை அறிந்தவர்களாக இருந்துள்ளனர் என்பதை இச்செய்தி உறுதிப்படுத்துகிறது.

கி.மு. 2570க்குரிய கெப்ரான் கல்லறையில் கிடைத்த இரும்பு உளி சேலம் கஞ்சமலைப்பகுதியை சேர்ந்தது என்பதால் கி.மு. 2600 வாக்கிலேயே தமிழகத்தில் இரும்புத் தொழில்கள் நடந்திருக்க வேண்டும். அன்று உலகில் வேறு எங்கும் இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் இருக்கவில்லை. ஆகவே உலகில் தமிழர்கள் தான் முதல்முதலாக இரும்பை உருக்கிப் பயன்படுத்தி இரும்புப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை அறிந்தவர்களாக இருந்தனர் எனலாம்.

பழந்தமிழக - எகிப்திய வணிகம்:

கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் எகிப்தோடு தங்கள் சொந்தக் கப்பல்களைக் கொண்டு வணிகம் புரிந்து வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் நிறையக் கிடைத்துள்ளன. ஆனால் தமிழர்கள் கி.மு. 26ஆம் நூற்றாண்டிலிருந்தே எகிப்துடன் வணிகம் புரிந்து வந்துள்ளனர் என்பது வியப்பைத் தருகிறது. கி.மு. 2589-2566 வரை ஆண்ட எகிப்திய மன்னன் குபூ (Khufu) கால ஆவணங்களில் ‘பண்ட்’ என்ற நாட்டிலிருந்து வந்த பொருட்கள் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன. கி.மு. 25ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சகூர் (Sahure) என்ற எகிப்திய அரசனின் குறிப்புகளும் அதனைக் கூறுகின்றன. கி.மு. 15ஆம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட ‘காப்செப்சுட்’ என்ற அரசியின் காலத்திய எகிப்திய குறிப்புகள் பண்ட் (Pand or Punt) என்ற நாட்டிலிருந்து வாசனைப் பொருட்கள், கருங்காலி மரம், சிறிய கொம்புகளை உடைய கால்நடைகள், தந்தம், தங்கம், தோல் போன்ற பொருட்கள் எகிப்துக்கு கொண்டு வரப்பட்டன எனக் கூறுகிறது (8).

ஆனால் எகிப்துக்கும் இந்த பண்ட் நாட்டுக்கும் இடையிலான வணிகமானது கி.மு. 11ஆம் நூற்றாண்டிலிருந்து நின்று போனது. பின்னர் பண்ட் நாடும் அதன் வணிகப்பொருட்களும் குறித்த குறிப்புகள் இல்லாது போயின. கி.மு. 25ஆம் நூற்றாண்டில் எகிப்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட கருங்காலி மரம் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி அம்மரம் டி.எபினம் (Diospyros Ebenum) என்ற அரிய வகையைச்சேர்ந்தது. இவை ஆப்ரிக்காவில் விளைவதில்லை. இவை தென்னிந்தியா, இலங்கைப் பகுதிகளில்தான் விளைகிறது. இம்மரம் சிலோன் எபோனி என்று அழைக்கப்படுகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வெளியீடான பண்டைய எகிப்தின் பொருட்களும் தொழில்நுட்பங்களும் (Ancient Egyptian Materials and Technology) என்ற நூலில் எகிப்தில் கிடைத்த சிலோன் எபோனி மரப்பொருட்கள் குறித்த விளக்கம் தரப்பட்டுள்ளது (9).

ஆகவே கி.மு. 25ஆம் நூற்றாண்டில் எகிப்தில் கிடைக்கும் சேலத்து இரும்பாலான இரும்புப் பொருளைக் கொண்டும், சிலோன் எபோனி என்ற கருங்காலி மரத்தைக் கொண்டும் எகிப்தோடு வணிக உறவில் இருந்த பண்ட் என்ற நாடு பண்டைய பாண்டிய நாடாகத்தான் இருந்திருக்க முடியும் எனலாம்.

கி.மு. 11ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட கடற்கோளால் பாண்டியர்களின் குமரி நிலப்பரப்பும் அதில் இருந்த துறைமுகமும் அழிந்து போயிருக்க வேண்டும். அதனால் எகிப்துக்கும் பாண்டிய நாட்டுக்குமான வணிகம் நின்று போய்விட்டது. அதன்பின்னரே பாண்டியர்கள் கொற்கைத் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தினர். கொற்கையின் காலம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என கார்பன் கணிப்பு உறுதி செய்துள்ளது. இசுரேலின் சாலமன் அரசன் கி.மு. 1000 வாக்கில் கொற்கைக்குத் தனது கப்பல்களை அனுப்பி வணிகம் செய்துள்ளான் (10). ஆகவே கி.மு. 2600 ஆம் ஆண்டு முதல் எகிப்தோடு தமிழகம் வணிகம் புரிந்துள்ளது எனக்கொள்ளலாம். இதுகுறித்து மேலும் ஆய்வுகள் செய்யப்படவேண்டும்.

இரும்பு வாளும் தமிழர்களும்:

கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மருத்துவர் கிடேசியசு (Ctesias) தனது வரலாற்றுக் குறிப்பில் தென்னிந்தியாவில் (பழந்தமிழகத்தில்) தரமான இரும்பு வாட்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டன எனக் கூறியுள்ளார். இவ்வகை வாட்கள் பாரசீகம், எகிப்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன என்கிற வார்மின்டன் (E.H.Warminton) போன்ற ஐரோப்பிய அறிஞர்களின் கூற்றுகள் இதனை உறுதி செய்கின்றன (11). பிளினி (Pliny the Elder) தமது இயற்கை வரலாறு (Natural History) என்ற நூலில் இரும்புப்பொருட்கள் சேர நாட்டிலிருந்து உரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன எனக் கூறியுள்ளார் (12).

சிரியாவின் தலைநகரான டெமாசுகசு (Damascus) என்ற நகரில் உற்பத்தி செய்யப்பட்ட போர் வாட்கள் உலகம் முழுவதும் கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 17ஆம் நூற்றாண்டுவரை விற்பனை செய்யப்பட்டு உலகப் போர்கள் அனைத்திலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த போர் வாட்கள் அதன் தொழில்நுட்பத்திற்கும், அதன் தரத்திற்கும், உறுதிக்கும் ‘டெமாசுகசு வாட்கள்’ என்ற பெயரில் உலகப் புகழ் பெற்றவையாக இருந்தன. இந்த வாட்களின் தயாரிப்புத் தொழில்நுட்பத்தை ஐரோப்பிய அறிஞர்களால் நவீன காலத்திலும்கூட கண்டறிய முடியவில்லை. இந்த வாட்களுக்கான இரும்பு என்பது தமிழகத்தில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்திய ஆய்வாளர் கே.என்.பி. இராவ் (K.N.P.Rao) இது குறித்து மிக விரிவான கட்டுரைகளை எழுதி இதனை உறுதி செய்துள்ளார். எகிப்தில் கிடைத்த உளியும், துருக்கியின் கிட்டடைட் கத்தியும், டெமாசுகசு வாளும் உயர்தர உருக்கு இரும்பு (ஊட்சு இரும்பு) வகையைச்சேர்ந்தவை (13).

இரும்புத் தொழில்நுட்பமும் தமிழர்களும்:

தமிழகத்தின் இரும்பு மூன்று வகையாக இருந்துள்ளது. அவை மெல்லிரும்பு (Wrought Iron), வார்ப்பிரும்பு (Cast Iron), எஃகு எனப்படும் உருக்கு அல்லது ஊட்சு இரும்பு (Steel/Wootz Iron) ஆகியன. முதல் வகையான மெல்லிரும்பு என்பது கார்பன் குறைவாகவும் வலிமையற்றும் இருக்கும். இரண்டாம் வகையான வார்ப்பிரும்பில் அதிக கார்பன் இருக்கும், இது ஓரளவு உறுதியோடு இருந்தாலும் உடையும் தன்மை அதிகமாக இருக்கும். இது ஆயுதம் செய்யத் தகுதியற்றது. ஆனால் இதனைக்கொண்டு வீட்டுக்கான, வேளாண்மைக்கான கருவிகள் செய்யலாம். மூன்றாவது எஃகு எனப்படும் உருக்கு இரும்பு (ஊட்சு). இதில் 1.2 % முதல் 2% வரை கார்பன் இருக்கும். 1.7% கார்பன் உள்ள எஃகு இரும்பு மிகச்சிறந்தது (14).

பழந்தமிழகத்தில் இரும்புத் தாதுவில் இருந்து இரும்பை உருக்க ஒருவகை உலைக்களனும், இரும்பு எஃகை உருவாக்க ஒருவகை உலைக்களனும் பயன்படுத்தப்பட்டது. தகடூர், கொடுமணல் ஆகிய இடங்களில் இந்த இருவகையான உலைக்களங்களும் கிடைத்துள்ளன. இரும்புத் தாதுவில் இருந்து இரும்பை உருக்க 1100 டிகிரி வெப்பம் தேவைப்படுகிறது. ஆனால் இரும்பு எஃகை உருவாக்க 1300 டிகிரி வெப்பம் தேவைப்படுகிறது. வார்ப்பிரும்பை செய்ய தனி நிபுணத்துவம் தேவை. இரும்பை 1300 டிகிரியில் உருக்கி நீண்ட நேரம் வைத்திருந்தால்தான் அது வார்ப்பிரும்பாக மாறும். உலைக்களன் அதனை நீண்ட நேரம் தாங்கும் அளவு திறன் மிக்கதாக இருக்க வேண்டும். இதனைக் கொடுமணலில் கிடைத்த உலைக்கலன்கள் அடைந்தன என்பதை இலண்டன் பல்கலைக்கழக உலோகவியல் பகுப்பாய்வும், இந்தியத் தொழில்நுட்பக் கழக பகுப்பாய்வும் உறுதி செய்துள்ளன (15).

இரும்புத் தொழில்நுட்பத்தில் இரும்பு உலை:

இரும்புத் தயாரிப்பில் உலை குறித்த அறிவு மிக முக்கியமானது, அதனை தமிழர்கள் பெற்றிருந்தனர். பழங்காலத்தில் பெரிய அளவு வெப்பத்தை உலையில் உருவாக்கி இரும்புத்தாதுவை உருக்கும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர் என்பதை தமிழகத்தில் நடந்த அகழாய்வுகள் உறுதி செய்துள்ளன.

துத்தநாகம் என்ற உலோகம் தமிழ்ச் சித்த மருத்துவத்தில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டது. துத்தநாகம் 420 டிகிரியில் உருகிவிடும். அது 910 டிகிரியில் ஆவியாக ஆகிவிடும். இவற்றைத் தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர். ஆதலால் துத்தநாகமும் இரும்பும் கலந்த உலோகத் தாதுவை பிரிக்க வேறுவகையான உலையைத் தமிழர்கள் பயன்படுத்தினர். இந்த வேறு வகையான உலை, குளிர்ந்த நீர் உள்ள தொட்டியில் ஒரு அண்டாவைக் குப்புற கவிழ்த்து வைத்தது போல் அமைந்திருக்கும். இதில் துத்தநாகத் தாதுவை போட்டு நெருப்பை மேலே வைப்பார்கள். வெப்பத்தால் தாதுவில் இருந்து பிரியும் துத்தநாகம் நீரால் குளிர்ந்து கலனின் அடியில் படிமமாகத் தங்கிவிடும் (16).

அதுபோன்றே 2466 டிகிரியில் உருகக்கூடிய மிகக்கடினமான இரிடியம் என்ற உலோகத்தை உருக்கும் தொழில்நுட்பத்தையும் தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வைத்திருந்தனர். இரிடியத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட கோவில் கலசம் ஒன்று கேரள மாநிலம் ஆலப்புழையை அடுத்த செங்கன்னூரில் உள்ள 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டநாடு மூத்தவழி சுப்ரமணியன் கோவிலில் இருந்தது. இதனை செர்மானிய ஆய்வாளர்கள்தான் ஆய்வு செய்து ஊடகங்களுக்கு அறிவித்தனர். அடுத்து வார்ப்பிரும்பை உருக்கப் பயன்படும் தமிழர்களின் உலைக்கலன் மிகப்பெரியதாக இருந்தது. 2.02 மீட்டர் நீளம், 0.63 மீட்டர் அகலம், 0.45 மீட்டர் ஆழம் ஆகிய அளவுகளைக் கொண்ட பெரிய உலைக்கலன் இதற்குப் பயன்படுத்தப்பட்டது என்பதை கிருட்டிணகிரி மாவட்டம் கிட்டூரில் கிடைத்த உலைக்கலன் உறுதி செய்துள்ளது (17).

ஆதிச்சநல்லூர் இரும்பு எஃகு, வெண்கலம் போன்ற பல்வேறு உலோகங்களை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்துறை நகராக இருந்துள்ளது என்பதை சசிசேகரன் குழுவினர் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர். Indian Journal of History of Science என்ற ஆங்கில இதழில் சசிசேகரன் குழுவினர் எழுதிய கட்டுரையில் ஆதிச்சநல்லூர் தொழில்நகரத்தின் காலம் சுமார் கி.மு. 1500 என கணித்துள்ளனர். (18).

ஆகவே இரும்பு போன்ற உலோகங்களை உருக்கும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் பண்டைய காலத்திலிருந்தே தலைசிறந்தவர்களாகவும் உலகத்தின் முன்னோடிகளாகவும் இருந்துள்ளனர் என உறுதி செய்யலாம்.

இரும்பும் வட இந்திய ஆரியர்களும்:

கி.மு. 1500 வரையான சிந்துவெளிப் பண்பாட்டு மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை. அன்று இந்தியா வந்த ஆரியர்களும் இரும்பை அறிந்திருக்கவில்லை. இன்று சமற்கிருதத்தில் இரும்புக்குப் பயன்படுத்தப்படும் அயசு என்ற சொல் வேத காலத்தில் செம்பைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. அன்று வேதகால ஆரியர்களுக்கு உலோகம் என்றால் அது செம்புதான். பின்னர்தான் அச்சொல் இரும்புக்கான சொல்லாக மாறியது. பிற நாட்டு மன்னர்களைப் போலவே வட இந்தியாவிலும் இரும்பு அரிதான உலோகமாக இருந்ததால் வட இந்திய மன்னர்களும் இரும்பின்மீது மிகப் பெரிய பற்றும் மதிப்பும் கொண்டவர்களாகவே இருந்தனர்.

அதனால்தான் கிரேக்கப் பேரரசன் அலெக்சாண்டருக்கு இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்திய அரசன் ‘போரசு’ 30 பவுண்ட் எஃகைப் பரிசாக அளித்தான் என்பது மிகப்பெரிய வரலாற்று நிகழ்வாகக் கருதப்பட்டது. ஏனெனில் அன்று இரும்பு என்பது அவர்கள் இருவருக்குமே மிகவும் பேரளவு மதிப்புமிக்கப் பொருளாக இருந்தது. ஆகவே வட இந்திய ஆரியர்கள் கி.மு. 800 வரை இரும்புத் தொழில்நுட்பம் குறித்து அறியாதவர்களாகவே இருந்துள்ளனர் எனலாம்.

தமிழக இரும்புக்காலம் கி.மு. 3000:

இன்றைக்கு 4200 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது அலெக்சாண்டருக்கு பரிசளித்த நிகழ்வு நடப்பதற்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பு எஃகுப் பொருட்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன என்பதை தற்போதைய அகழாய்வுகள் உறுதி செய்துள்ளன.

எகிப்து நாட்டில் கி.மு. 26ஆம் நூற்றாண்டில் கிடைத்த இரும்பு உளி தமிழ்நாட்டின் சேலம் பகுதியைச் சேர்ந்தது என்பதும் தமிழகம் அன்றே இரும்புப்பொருட்களை உற்பத்தி செய்து எகிப்து போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்துள்ளது என்பதும் தமிழர்கள்தான் உலகில் முதன்முதலில் இரும்பைப் பயன்படுத்தியவர்கள் என்பதும் முன்பே உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு 4500 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்துள்ளன எனில் அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை அறிந்தவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆகவே தமிழகத்தின் இரும்புக்காலம் என்பது கி.மு. 3000 முதல் (இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்) தொடங்கி இருக்கவேண்டும். அதனை எதிர்கால அகழாய்வுகள் உறுதி செய்யும்.

பழந்தமிழ்நாட்டின் இரும்பு எஃகுப்பொருட்கள்:

தமிழ்நாட்டில் இருந்த இரும்புத் தாதுப்பொருட்களில் டிட்டானியம், வனடியம், கார்பன் போன்ற பல தனிமங்கள் சேர்ந்திருந்ததால், இரும்பு, எஃகுப் பொருட்கள் மிகவும் உயர்ந்த தரம் வாய்ந்தவைகளாக இருந்தன. மேலும் உருக்குக் கலவையில் இருந்த தீதான வேதிப் பொருட்களை நீக்கும் தன்மையுள்ள வெண்ணாகம் உருக்கை உயர் விறைப்புத்தன்மையுடன் இழுக்க உதவும் என்பதோடு எளிய கார்பன் உருக்கைவிட எவ்விதத் தீங்கும் இல்லாமல் மிகப் பெருஞ்சூட்டில் உருக்கை உறுதிப்படுத்த உதவுகிறது. ஆதலால் கிட்டத்தட்ட ஒரு விழுக்காடு அளவு வெண்ணாகம் உருக்குக் கலவையில் சேர்க்கப்பட்டிருந்தது (19).

பி.சசிசேகரன், எசு.சுந்தரராசன், தி.வெங்கட்ராவ், பி.இரகுநாதராவ், எசு.பத்ரி நாராயணன், எசு.இராசவேல், தி.சத்தியமூர்த்தி, ஆர்.கே.கார்சியா ஆகிய தொல்லியல் வல்லுநர்களும், அறிவியல் அறிஞர்களும் ஆதிச்சநல்லூரிலும், கிருட்டிணாபுரத்திலும் பல்வேறு ஆய்வுகளை நடத்தியபின் இந்த இரண்டு ஊர்களிலும் தொன்மைக் காலத்தில் நிலத்தின் மேற்பகுதியிலேயே நீண்ட தொலைவுக்குச் சுரங்கங்கள் இருந்தன என்பது குறித்தும், அங்கு நடைபெற்ற சுரங்கத்தொழில் பற்றியும், அந்தச் சுரங்கங்களில் கிடைத்த இரும்பு, தாமிரம் போன்ற உலோகங்களின் தன்மைகள் பற்றியும் அவர்களுடைய அறிக்கையில் விரிவாகக் கூறியுள்ளனர். இந்த அறிக்கை பழந்தமிழ்நாட்டின் இரும்பு, எஃகு ஆகியவற்றின் உயர்தரத்தைப்பற்றிப் பேசுகிறது (20).

ஆதிச்சநல்லூரின் அகழாய்வில் பெரிய முனையுள்ள ஈட்டி, சிறிய முனையுள்ள ஈட்டி, செங்கோண வாயுள்ள ஈட்டி, கூர்மையான வாயுள்ள ஈட்டி, கூம்பான வாயுள்ள ஈட்டி, திரிசூழம், குத்துவாள், குழிவான விளிம்புகள் கொண்ட குத்துவாள், இரு பக்கமும் கூர்மையான வாள், ஒரு பக்கம் கூர்மையான வாள், உடைவாள், பலவகையான வளைவுகள் கொண்ட வாட்கள், எறியும் வேல், அம்புத்தலைகொண்ட வேல், கூரிய அம்புத் தலைகள், கைக்கோடாரி, நேரான கத்தி, வளைவான பலவகைக் கத்திகள், பட்டாக் கத்தி, கேடயம், பரசுக்கத்தி ஆகியவையும், இவைபோக சரியாக அடையாளம் காணப்பட முடியாத வேறுவகையான பலவகை இரும்பு ஆயுதங்களும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (21).

இவ்வளவு வகையான இரும்பு ஆயுதங்கள் அன்று உலகின் வேறு எந்தப் பகுதியிலும் பயன்பாட்டில் இருக்கவில்லை. ஆகவே பழந்தமிழ்நாடு இரும்பு எஃகு உற்பத்தியிலும், உயர்தரமிக்க இரும்பு எஃகு ஆயுதங்களை உற்பத்தி செய்வதிலும் உலகின் முதல் நாடாகவும், முன்னணி நாடாகவும் இருந்துள்ளது என்பதை இத்தரவுகள் உறுதி செய்கின்றன.

பழந்தமிழ் இலக்கியத்தில் இரும்பு சார்ந்த சொற்கள்:

தமிழகத்தின் மிகத் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியம் தொடங்கி பண்டைய தமிழ் இலக்கியங்களில் இரும்பு ஆயுதங்கள் குறித்தும் இரும்பாலான பிற பொருட்கள் குறித்தும் நிறையக் குறிப்புகள் இடம் பெறுகின்றன. தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தின் புறத்திணையியலின் 11ஆம் பாடல் ‘குடையும் வாளும்’ எனவும் அதன் 13ஆம் பாடல் ‘கணையும் வேலும்’ எனவும் தொடங்குகிறது. இவற்றில் வாள், கணை (அம்பு), வேல் ஆகிய இரும்பாலான ஆயுதங்கள் சொல்லப்படுகின்றன.

அதன் பொருளதிகாரத்தின் புறத்திணையியலின் 140 துறைகளில் வாள் வாய்க்கவிழ்தல், வாள்நாட்கோள், வென்ற வாளின் மண்ணுதல், வாளோர் ஆடும் அமலை, ஒள்வாள் வீசிய நூழில், வேலினது வென்றி ஆகிய 6 துறைகள் இரும்பாலான ஆயுதங்களின் பெயரிலேயே அமைந்துள்ளன. அதுபோன்றே இரும்புத்தொழில்நுட்பம் சார்ந்த, இரும்பு, எஃகு, கொல்லன், கருங்கைக்கொல்லன், உலை, உலைக்கூடம், துருத்தி, விசைவாங்கி, மிதியுலை, குடம், குறடு, குறுக்கு போன்ற பல தொழில்நுட்பச் சொற்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.

உவமைகள் என்பவை மக்கள் நன்றாக அறிந்த ஒன்றைக்கொண்டு அவர்கள் அறியாதனவற்றை விளக்கிக் கூறும் இலக்கிய வகையாகும். பழந்தமிழ் இலக்கியங்களில் இரும்பும், இரும்பு எஃகுப்பொருட்களும், இரும்பு உலையும் பலதடவை உவமைகளாகக் கூறப்பட்டுள்ளன என்பதால் இரும்பு குறித்துத் தமிழ் மக்கள் நன்கு அறிந்தவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. சான்றாக நற்றிணைப் புலவர் உலோச்சனார் தனது 249ஆம் பாடலின் முதல்வரியை ‘இரும்பின் அன்ன கருங்கோட்டுப்புன்னை’ எனத் தொடங்குகிறார். புன்னை மரத்தை விளக்க வந்த அவர் இரும்பைப்போல கருத்தக் கிளையைக் கொண்டது புன்னை மரம் எனக் கூறுகிறார். இரும்பைச்சொல்லி புன்னைமரக்கிளை இங்கு விளக்கப்படுகிறது.

அதுபோன்றே நற்றினையின் 133ஆம் பாடலைப்பாடிய புலவர் நற்றமனார் கொல்லன் உலையில் நடக்கும் நிகழ்வு ஒன்றை அப்பாடலின் இறுதியில் உவமையாகக்கூறுகிறார். ‘இரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த தோய்மடற் சில்நீர் போல நோய்மலி நெஞ்சிற்கு ஏமம்ஆம் சிறிதே’ அதாவது இரும்பு வேலை செய்யும் கொல்லன் தன்னுடைய வெப்பமான உலையில் சிறிதளவு நீரைத் தெளித்து நெருப்பின் வெப்பத்தைக் குறைப்பது போல நீ கூறும் அன்பான சொற்கள் எனது காதல் நோயைச் சிறிது தணிக்கும் எனக் காதலன் தனது காதலியிடம் கூறுகிறான் எனக் கூறுகிறார் புலவர். இந்த உவமைகள் மூலம் தமிழர்கள் இரும்பு குறித்தும் இரும்பு உலை குறித்தும் நன்கு அறிந்தவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

சங்க இலக்கியத்தில் இரும்பாலான ஆயுதங்கள் மிக அதிக அளவு சொல்லப்பட்டுள்ளன எனலாம். வில், அம்பு, வேல், அரிவாள், கதை, கவை, கல்லிடுகூடை, கணையம், கழுகுப்பொறி, கவசம், குத்துவாள், கைவாள், கொடுவாள், கோல், சிறுவாள், தகர்ப்பொறி, தொடக்கு, பிண்டிபாலம், ஞாயில், மழுவாள், விளைவிற்பொறி, அரிதூற்பொறி, இரும்புமுள், எரிரிரல், கழு, கருவிலூகம், கல்லமிழ் கவண், கற்றுப்பொறி, கழுமுள், குந்தம், கூன்வாள், கைபெயர், கோடரி, சதக்கணி, தண்டம், தூண்டில், தோமரம், புதை, நாராசம், வச்சிரம் ஆகிய ஆயுதங்கள் தமிழ்ச் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன (22).

இவை தவிர இரும்பு என்ற சொல் சங்க இலக்கியங்களில் ஆகுபெயராக இடம்பெற்று இரும்புப் பொருட்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சான்றாக புற நானூற்றின் 56ஆவது பாடலில், ‘இரும்புமுகம் சிதைய நூறி ஒன்னார்’ எனச்சொல்லப்படுகிறது. இங்கு இரும்பு என்ற சொல் ஆகுபெயராக வந்து இரும்பால் ஆன வேல், வாள் போன்ற இரும்பாலான ஆயுதங்களைக் குறிக்கிறது. அதுபோன்றே தமிழ் இலக்கியங்களில் எஃகு என்ற சொல்லும் ஆகுபெயராக வந்து இரும்பு எஃகால் ஆன ஆயுதங்களைக் குறிக்கப் பயன்பட்டு வந்துள்ளது. இவைபோக எஃகு என்பது மதிநுட்பம், கூர்மை, வலிமை போன்ற பிற சொற்களுக்குப் பதிலாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளுவர் இந்த எஃகு என்ற சொல்லை இவ்வாறு பல இடங்களில் பயன்படுத்துகிறார் (23).

வாளோடு முன் தோன்றிய மூத்த குடி:

ஆகவே பழந்தமிழர்கள் இரும்பையும், இரும்பு சார்ந்த பொருட்களையும் மிக நீண்ட காலமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை அவர்களின் இலக்கியத் தரவுகளும் உறுதி செய்கின்றன. கி.மு. 26ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எகிப்துக்கு இரும்பு உளியை ஏற்றுமதி செய்துள்ளனர். அகழாய்வு முடிவுகள் கி.மு. 2200இல் தமிழ்நாட்டில் இரும்புக்காலம் இருந்துள்ளது என்பதை உறுதி செய்துள்ளன. உலகம் முழுவதும் கி.மு. 2000 அளவில்கூட இரும்புக்காலம் என்பது தோன்றவில்லை. சிந்துவெளி மக்களோ, வட இந்திய ஆரியர்களோ கி.மு. 1500 வாக்கில் இரும்பை அறிந்திருக்கவில்லை. ஆகவே உலகில் முதன் முதலாக இரும்பை உருக்கி வாள் போன்ற இரும்புப் பொருட்களைப் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள்தான் என்பதை இதுவரையான தரவுகள் உறுதி செய்கின்றன. அதன் காரணமாக தமிழ்க்குடி, ‘வாளோடு முன் தோன்றிய மூத்த குடி’ என்பது இங்கு உறுதி செய்யப்படுகிறது.

பார்வை

1-4. ஆயுததேசம், இரா. மன்னர் மன்னன், பயிற்றுப்பதிப்பகம், 2021, பக்: 13-28.

5-6. ஆயுத தேசம், இரா. மன்னர் மன்னன், பயிற்று பதிப்பகம், 2021, பக்: 13-28.

7. https://www.dtnext.in/tamilnadu/2022/05/09/iron-age-in-tamil-nadu-dates-back-to-4200-yrs-says-stalin & https://indianexpress.com/article/explained/tamil-nadu-iron-usage-carbon-dating-cultural-significance-explained-7916375/ & https://www.thehindu.com/news/national/tamil-nadu/iron-age-in-tn-began-4200-years-ago-says-chief-minister/article65398242.ece.

8, 9. ஆயுததேசம், இரா. மன்னர்மன்னன், பயிற்றுப்பதிப்பகம், 2021, பக்: 13-28.

10. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, 125, 126.

11. ஆயுததேசம், இரா. மன்னர் மன்னன், பயிற்றுப் பதிப்பகம், 2021, பக்: 36.

12. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 113

13, 14. ஆயுததேசம், இரா. மன்னர் மன்னன், பயிற்றுப் பதிப்பகம், 2021, பக்: 37-40.

15. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 113, 114.

16. ஆயுததேசம், இரா. மன்னர் மன்னன், பயிற்றுப் பதிப்பகம், 2021, பக்: 39-40.

17. “ “ பக்: 40-41.

18, 19, 20. B.SASISEKARAN et al. ADICHANALUR: A PREHISTORIC MINING SITE, INDIAN JOURNAL OF HISTORY OF SCIENCE, 45. 3 (2010) PP. 369- 394 & D. VENKAT RAO et al., RECENT SCIENTIFIC STUDIES AT ADICHANALLUR: A PRE HISTORIC MINING SITE, Sangam: Numismatics and Cultural history, New Era Publications, Chennai - 2006, PP. 146-154. & முனைவர் அ. இராமசாமி, தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 88-93. & பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 113-116.

21, 22, 23. ஆயுததேசம், இரா. மன்னர் மன்னன், பயிற்றுப்பதிப்பகம், 2021, பக்: 48, 49.

பார்வை நூல்கள்:

1.ADICHANALLUR: A PREHISTORIC MINING SITE, Indian Journal of History of Science, 45.3 (2010) 369-394, B SASISEKARAN*, S SUNDARARAJAN*, D VENKATA RAO*, B RAGHUNATHA RAO+S BADRINARAYANAN++, S RAJAVEL.

2. Rao, K N P (1963) A brief History of the Indian Iron and Steel Industry. In: International symposium on recent developments in iron- and steelmaking with special reference to Indian conditions, Feb., 1963, NML, Jamshedpur.

3.Ancient Egyptian Materials and Technology – Nicholson, Paul T; Shaw, Ian. Press, Cambridge University (2000).

4.CATALOGUE OF THE PREHISTORIC ANTIQUITIES FROM ADICHANALLUR AND PERUMBAIR BY ALEXANDER REA, f.s.a. (Scot.), Puplished by The Principal Commissioner of Museum chennai, Re printed in 1998.

5.Damascus Steel: History, Processing, Properties and Carban Dating - Wadsworth

6.Metallurgy and Metal Industry in Ancient Tamil Nadu – An Archaeological study - B.Sasisekaran

- கணியன் பாலன்