கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கோவை சிறையில் செக்கிழுத்த செய்தியினையும், அவருக்கு ஆங்லேயர்கள் இழைத்த கொடுமைகளையும் கேட்டு அவர் உள்ளம் கொதித்தெழுந்தது. ஆங்கிலேயர்கள் மீது தீராத கோபமும், வெறுப்பும் கொண்டார். மகாகவி பாரதியின் கவிதை வரிகள் அவரது உள்ளத்தில் விடுதலை விதையை விதைத்தது. சுதந்திர தாகம் கொண்டு தமது மாணவப் பருவத்திலேயே விடுதலைப் போரில் குதித்தார். அவர்தான் ‘தியாகச் செம்மல்’ எனப் போற்றப்படும் எம்.ஏ.ஈஸ்வரன்!

எம்.ஏ.ஈஸ்வரன் 1899 ஆம் ஆண்டு ஈரோட்டில், முத்துகருப்பணபிள்ளை – வேங்கடலட்சுமி வாழ்விணையருக்கு மகனாகப் பிறந்தார்.

ஈரோட்டிற்கு அருகில் உள்ள கருங்கல்பாளையத்தில், கே.எம்.தங்கப்பெருமாள் பிள்ளை என்ற காங்கிரஸ் பிரமுகர் 1916 ஆம் ஆண்டு ‘பாரதிவாசக சாலை’ ஏற்படுத்தி, விடுதலைப் போராட்டச் செய்திகளை மக்களிடையே பரப்பி வந்தார். பள்ளிக்கூடம் செல்லும் நேரம் போக, மீதி நேரம் எல்லாம் ‘பாரதிவாசக சாலை’க்குச் சென்று தின இதழ்களையும், விடுதலைப் போராட்டத் தலைவர்களின் வரலாற்று நூல்களையும் ஆர்வமுடன் படித்தார் எம்.ஏ.ஈஸ்வரன்.

அன்னிபெசன்ட் அம்மையார் கைது செய்யப்பட்டு ஊட்டியில் சிறை வைக்கப்பட்டிருந்தார். 1917 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டு இரயில் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். ஈரோடு இரயில் நிலையத்தில் தங்கப் பெருமாள் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் அன்னிபெசன்ட் அம்மையாருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்கள். அந்த நிகழ்ச்சியில் ஈஸ்வரன் தனது மாணவத் தோழர்களைத் திரட்டிக் கொண்டு சென்று ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.

ஈஸ்வரன் 1916 ஆம் ஆண்டு தமது பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர், திருச்சி சென்று செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்து இன்டர்மீடியட் படித்துத் தேறினார். அக்கல்லூரியிலேயே பி.ஏ. பட்டப்படிப்பில் சேர்ந்து பயின்றார். அப்போது, மகாத்மா காந்தியடிகள், “ஆங்கிலேயர்கள் நடத்தும் கல்விக் கூடங்களை மாணவர்கள் புறக்கணிக்க வேண்டும்” என 1920 ஆம் ஆண்டு அறைகூவல் விடுத்தார். அதனை ஏற்று தமது கல்லூரிப் படிப்பைத் தூக்கி எறிந்துவிட்டு ஈரோடு திரும்பினார்.

‘கிலாபத்’ இயக்கத்திற்கும், ஒத்துழையாமை இயக்கத்திற்கும் மக்களிடம் ஆதரவு திரட்டிட, 1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் மகாத்மா காந்தி ஈரோடு நகருக்கு வருகை புரிந்தார். அப்போது, ஈஸ்வரன் மகாத்மா காந்தியை சந்தித்து உரையாடினார். அவரது அன்புக்குரியவர் ஆனார்.

கருங்கல்பாளையத்திற்கு 1921 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் ‘பாரதிவாசக சாலை’யின் அய்ந்தாம் ஆண்டுவிழாவில் கலந்து கொள்ள மகாகவி பாரதி வருகை புரிந்தார். பாரதியைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார். விடுதலை இயக்கப் பாடல்களைப் பாரதியாரே பாடக்கேட்கும் நல்வாய்ப்பைப் பெற்றார்.

ஈரோட்டில் 1921 ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில், ஒத்துழையாமை இயக்கப் போராட்டம் நடைபெற்றது. ஈஸ்வரன் அப்போராட்டத்தில் கலந்து கொண்டு மூன்றுமாத சிறைத்தண்டனை பெற்றுக் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இப்போராட்டத்தில், ஈரோடு பகுதி இந்துக்களும், இசுலாமியர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.

மகாத்மா காந்தியடிகள் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் மதுரைச் சுற்றுப்பயணத்தின்போது, முழத் துண்டும், வேட்டியும் அணிந்தார். அதைக் கேள்விப்பட்ட ஈஸ்வரன், “நாடு சுதந்திரம் அடையும்வரை காலில் செருப்பு அணிவதில்லை என்றும், திருமணம் செய்துகொள்வதில்லை” என்றும் உறுதி ஏற்றார். இறுதிவரை தமது உறுதியில் விடாப்பிடியாக இருந்தார். கடைசிவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றிருந்த நாகபுரி நகரசபைக் கட்டிடத்தில் 1923 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர்களின் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, காங்கிரஸ் கட்சியின் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது. அதற்கு ஆங்கிலேய அரசு தடைவிதித்தது. அதை எதிர்த்தும், கண்டித்தும் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டத்திலிருந்து 16 பேர்கொண்ட குழு நாகபுரி சென்று போராட்டத்தில் கலந்து கொண்டது. அக்குழுவின் ஈஸ்வரனும் பங்கேற்று ஓராண்டு சிறைத் தண்டனை பெற்று அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார்.

மகாத்மா காந்தி வைக்கம் அறப்போர் வெற்றி விழாவில் கலந்து கொள்ள 1925 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் சென்னை வந்து, அங்கிருந்து ஈரோடு வழியாக திருவனந்தபுரம் செல்லும்போது, தந்தை பெரியாரும், ஈஸ்வரனும் ஈரோட்டில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர், திரும்பி வரும்போது திருச்செங்கோடு சென்று இராஜாஜியின் காந்தி ஆசிரமத்தில் இரண்டு நாட்கள் காந்தியடிகள் தங்கினார். அப்போது காந்தியடிகளுடன் தங்கியிருந்தார். அப்போது, இராஜாஜியின் நெருங்கிய நண்பரானார் ஈஸ்வரன்.

காஞ்சிபுரத்தில் 1925 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21, 22 தேதிகளில் திரு.வி.க. தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில், “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் தனது கொள்கையாக ஏற்று அறிவிக்க வேண்டும்” என்று பெரியார் தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானத்தை மாநாட்டுத் தலைவர் திரு.வி.க. ஏற்க மறுத்துவிட்டார். அதனைக் கண்டித்து பெரியாருடன் ப.ஜீவானந்தம், எஸ்.இராமநாதன், சேலம் வரதராஜீலு நாயுடு முதலிய தலைவர்கள் மாநாட்டை விட்டு வெளியேறினர். அம்மாநாட்டில் ஈரோட்டிலிருந்து கலந்து கொண்ட ஒரு வாலிபர் மட்டும் வெளியேறவில்லை. அவர்தான் ஈஸ்வரன். மாநாடு முடிந்ததும் “பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினாலும், ஈரோட்டில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என்னும் உறுதியை அளித்தார் ஈஸ்வரன்.

தமது உறுதியின்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்குப் பயணம் செய்து, மக்களிடம் விடுதலை உணர்வை ஏற்படுத்திட இரவுபகல் பாராமல் பாடுபட்டார்.

ஈஸ்வரன், காங்கிரஸின் அறைகூவலை ஏற்று, அந்நியத் துணிகளைத் தீயிட்டு கொளுத்தும் போராட்டத்திலும், கள்ளுக்கடை மறியல் போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறை சென்றார். மேலும், தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் சேரிப் பகுதிகளுக்குச் சென்று சேவை செய்தார். அவர்களின் முன்னேற்றத்திற்கு அயராது பாடுபட்டார்.

ஈரோட்டில் 1930 ஆம் ஆண்டு உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

இந்திய விடுதலைப் புரட்சி வீரர்கள் பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் மூவரும் 1931 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 23 ஆம் நாள் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து, நாடெங்கும் இளைஞர்கள் கொதிப்படைந்தனர். அப்போது கராச்சியில் காங்கிரஸ் மகாசபை கூடியது. மாவீரன் பகத்சிங் முதலானோர் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து, சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ‘நவஜவான் பாரத்சபா’ மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஈஸ்வரன் தமிழ்நாட்டிலும் ‘நவஜவான் பாரத்சபா’ மாநாட்டை நடத்திட வேண்டுமென ஆர்வம் கொண்டு, ஈரோட்டில் மாநாட்டை நடத்திட முடிவு செய்து சுபாஷ்சந்திரபோஸிடம் நேரில் சென்று தலைமையேற்க அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாடு நவஜவான் பாரத்சபா மாநாட்டை ஈரோட்டில் 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் 11,12,13 ஆகிய மூன்று தினங்கள் நடத்தினார். அம்மாநாட்டிற்கு சுபாஷ் சந்திரபோஸின் பிரதிநிதியாக கிரண்தாஸ் கலந்துகொண்டார்.

சட்டமறுப்புப்போர் 1932 ஆம் ஆண்டு நாடெங்கும் தீவிரமாக நடைபெற்றது. இப்போராட்டத்தில் தான் திருப்பூரில் கொடிகாத்த குமரன் போலிசாரால் அடித்துக் கொல்லப்பட்டார். ஈரோட்டில் நடைபெற்ற சட்ட மறுப்புப் போரில் ஈஸ்வரன் கலந்து கொண்டு பதினான்கு மாதங்கள் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

ஆங்கிலேய ஆட்சியின் கொடுமைகளையும், போலிசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும் கண்டித்து பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார் ஈஸ்வரன். இவரது கண்டன உரையைக் கேட்டுக் கொண்டிருந்த போலீஸ் அதிகாரிக்கு கோபமும், ஆத்திரமும் ஏற்பட்டது. சில போலிஸ்காரர்களை அழைத்து, ‘ஈஸ்வரனுக்குப் பாடம் புகட்டுங்கள்’ - என்று சங்தே மொழியில் கூறினார். போலிசார்கள் ஈஸ்வரனைப் பொள்ளாச்சிக்கும் பாலக்காட்டிற்கும் இடையே உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு அவரது தலைமுடியையும், மீசையையும் ‘சிம்டா’ என்ற இடுக்கி போன்ற கருவியால் மயிர் ஒவ்வொன்றாகப் பிடுங்கிக் கதறக்கதறச் சித்ரவதை செய்தனர். ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை அகற்றிட எண்ணற்ற கொடுமைகளையும், சித்ரவதைகளையும் அனுபவித்தவர் ஈஸ்வரன்.

பீகாரில் 1933 ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தினால் லட்சக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டது. பீகார் பூகம்ப நிவாரண நிதி திரட்ட காங்கிரஸ் தலைவர் இராஜேந்திரபிரசாத் ஈரோட்டிற்கு வருகைபுரிந்தார். அப்போது, பொது மக்களும், வணிகர்களும் எதிர்பாராத அளவில் நிதியை வாரி வழங்கினார்கள். பெரும் தொகையைத் திரட்டி இராஜேந்திர பிரசாத்திடம் ஈஸ்வரன் வழங்கினார்.

இளைஞர்களின் உள்ளத்தில் தேசபக்திக் கனலை மூட்டிட, ‘இளைஞர் சன்மார்க்க சங்கம்’ என்னும் அமைப்பை ஈரோட்டில் தோற்றுவித்தார். அந்த அமைப்பில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள இளைஞர்களைச் சேர்த்தார். இளைஞர்கள் மத்தியில் நாட்டுப் பற்று உருவாகி பல தலைவர்களை அழைத்து உரையாற்றிடச் செய்தார்.

ஈரோடு நகரசபையின் துணைத் தலைவராக 1938 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1941 ஆம் ஆண்டு காங்கிரஸ் நகரசபைத் தலைவர்களும், உறுப்பினர்களும் பதவி விலகிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்டளை பிறப்பித்தது. அதை ஏற்று ஈஸ்வரன் நகரசபை துணைத் தலைவர் பதவியைத் தூக்கியெறிந்தார்.

கோவை மாவட்டப் பஞ்சாலைத் தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபட்டு, தொழிலாளர்களின் போராட்டங்களுக்குத் துணை நின்றார். திருப்பூரில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் 1930 ஆம் ஆண்டு 47 நாட்கள் நடத்திய போராட்டத்திற்கு, நிதி வசூல் செய்தும், வழங்கியும், பொருள் திரட்டி அளித்தும் உதவினார்.

1942 ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் அறிவித்த ‘வெள்ளையனே வெளியேறு”! போராட்டத்தில் கலந்து கொண்டு, கைது செய்யப்பட்டு அலிப்புரம் சிறையில் ஓராண்டு காலம் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலையான பின்னர், மீண்டும் கைது செய்யப்பட்டுப் பாதுகாப்புக் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஈஸ்வரன் விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டு பதினொன்றரை ஆண்டுகள் சிறைவாசம் பெற்றார்.

சென்னை மாகாணச் சட்டசபைக்கு 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஈஸ்வரன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

‘கீழ்பவானித் திட்டம்’ கொண்டு வரக் காரணமாக விளங்கியவர் ஈஸ்வரன்.

மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு சனவரி 30 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மறைவுச் செய்தி ஈஸ்வரனின் உள்ளத்தை உலுக்கியது. அப்போது, மகாத்மா காந்தியை ஒரு முஸ்லிம்தான் சுட்டுக் கொன்றான் என்று சில சமூக விரோதிகள் வதந்தியை பரப்பினர். அதனால் முஸ்லிம் மக்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. மசூதிகள் சேதப்படுத்தப்பட்டன. இதைக் கேள்வியுற்ற ஈஸ்வரன், தமது தொண்டர்களுடன் சைக்கிளில் சென்று மெகாபோன் மூலம் “மகாத்மாவைச் சுட்டுக் கொன்றது ஓர் இந்து, முஸ்லிம் அல்ல” என்று அறிவித்ததுடன், போலீஸ் ஜீப்பில் அமர்ந்து ஒலிபெருக்கி மூலம் நகர் முழுவதும் அறிவிப்பு செய்தார்.

நாட்டு விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தமது இறுதி மூச்சுள்ளவரை பாடுபட்ட ஈஸ்வரன் 1978 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவரது பெயர் என்றும் நிலைத்து நிற்கும்.

Pin It