கோவை மாநகருக்கு 1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் வருகை புரிந்தார். கோவை நகர மன்றம் அளித்த வரவேற்பு மடலில், 'ஒத்துழையாமை இயக்கத்தில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை' என்று தெளிவுபடுத்தியது. அப்போது, காந்தியடிகள் நகர் மன்றத் தலைவரையும், உறுப்பினர்களையும் நோக்கி ஒரு வேண்டுகோள் விடுத்தார். “கை ராட்டை சுழற்றுங்கள், கதர் அணியுங்கள்” என்பதுதான் அது. காந்தியடிகளின், “கைராட்டையின் கதிர் முனையில் சுயராஜ்யம் இருக்கிறது” என்னும் வாக்கியம் அய்யாமுத்துவின் நெஞ்சத்தில் ஆழப் பதிந்தது.

          அய்யாமுத்துவின் உள்ளத்தில் தேசபக்தி உணர்வு வளர்ந்தது. ஆங்கிலச் சீமாட்டிகளுக்கு அன்னியத் துணிகளையும், ஆடம்பரப் பொருட்களையும் விற்பனை செய்து வந்த, 'ரோவர் அண்கோ' என்னும் தமது கடையை இழுத்து மூடினார். தமது உள்ளத்தில் எழுந்த மனப்போராட்டத்தினால் கொல்கத்தா நகரம் சென்றார். அங்கிருந்து மியான்மர் (பர்மா) நாட்டின் தலைநகரான ரங்கூன் சென்றார். இரண்டு ஆண்டுகள் சுற்றி அலைந்து பின் 1923 ஆம் ஆண்டு மீண்டும் தமிழகம் திரும்பினார்.

          அன்னியத் துணிகளைப் புறக்கணித்துவிட்டுக் கதர் ஆடை அணிந்து, விடுதலைப் போராட்டத்தில் குதித்தார் அய்யாமுத்து.

          கோவையில் 1898 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அங்கண்ணனுக்கும், மாரக்காளுக்கும் மகனாகப் பிறந்தார் அய்யாமுத்து. கோவை செயிண்ட் அந்தோணியார் பள்ளியிலும், பின்னர் லண்டன் மிஷன் பள்ளியிலும் ஒன்பதாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் கற்றுத் தேர்ந்தார். தட்டச்சுப் பயின்றார். அதன் மூலம் சில ஆண்டு காலம் வழக்கறிஞர் அலுவலக உதவியாளராகப் பணி செய்தார். பின்னர் ஆங்கிலேயர் நடத்தி வந்த 'ஸ்பென்சர்'கம்பெனி'யில் பணியாளராகவும் இருந்தார். முதல் உலகப் போர் தொடங்கியபோது வெளிநாடு செல்ல வேண்டுமென முடிவு செய்தார். அதனால், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்பும் இளைஞர்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர், 1918 ஆம் ஆண்டு இராணுவ அலுவலகப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பஸ்ரா, பாக்தாத் முதலிய நாடுகளில் இரண்டாண்டுகள் பணியாற்றினார். பின்னர், 1920 ஆம் ஆண்டு தமிழகம் திரும்பினார்.

          தேசவிடுதலைப் போராட்டத்தில் இணைந்து போராட முடிவு செய்து, செட்டிபாளையம் சென்று, கோவை மாவட்டக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அய்யாசாமிக் கவுண்டரை அணுகிக் காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். தமது மனைவி கோவிந்தம்மாவையும் ராட்டை சுற்றச் செய்தார். கிராமப்புறங்களில் விடுதலைப் போராட்டப் பரப்புரைகளைத் தீவிரமாக மேற்கொண்டார். திருப்பூர் கதர் போர்டுக்கு நூல் நூற்று அனுப்பினார். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையன்று தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் சேரிப்பகுதிகளுக்குச் சென்று தூய்மைப்படுத்தும் பணி செய்தார்.

          அய்யாமுத்து பேச்சிலும், எழுத்திலும் வல்லவராகத் திகழ்ந்தார். வின்சென்ட் சகோதரர்கள் தொடங்கிய இருமொழி இதழான 'மகாஜன நேசன்' இதழில் தமிழ்ப் பகுதிக்கு ஆசிரியராகத் திகழ்ந்தார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தமது எழுத்தாற்றல் மூலம் தேசவிடுதலைப் போராட்டம் குறித்து எழுதி மக்களை விழிப்புணர்வு பெறச் செய்தார்.

          கோவையில் கதர்க்கடை ஒன்றை ஆரம்பித்து கதர் விற்பனை செய்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் திகழ்ந்த ஈ.வெ.ரா.வுடன் நெருங்கிய தோழமை கொண்டு அவருடன் இணைந்து கதர்த் துணி மூட்டைகளைச் சுமந்து கொண்டு கிராமம் கிராமமாகச் சென்று விற்பனையும், பரப்புரையும் செய்தார்.

          கேரளத்தில் வைக்கம் என்னும் ஊரில் ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் நடமாடக் கூடாது என்று கடட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து கேளப்பன், கே.பி.கேசவ மேனன் முதலிய அம்மாநிலத் தலைவர்கள் சத்தியாக்கிரகம் மேற்கொண்டனர். எனினும் தமிழகத் தலைவர்களின் ஆதரவு அப்போராட்ட வீரர்களுக்குத் தேவைப்பட்டது. ஈ.வெ.ரா., எஸ்.இராமநாதன், அய்யாமுத்து ஆகிய மூவரும் வைக்கம் நோக்கிப் பயணமாயினர். அங்கு சென்று போராட்டம் குறித்து மக்களிடம் பரப்புரை மேற்கொண்டனர். மக்களின் ஆதரவையும், தலைவர்களின் ஆவேசமான பேச்சுக்களையும் கண்டு அஞ்சிய திருவாங்கூர் மன்னர் பொதுக் கூட்டங்களில் பேசக் கூடாது எனத் தடை விதித்தார். தடையை மீறி மன்னரின் பிற்போக்குத்தனங்களையும், தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளையும் மேடையில் முழங்கினார் அய்யாமுத்து.

          இவரது உரையைக் கேட்ட காவல் அதிகாரி இவரைத் 'தீப்பொறி' என்று வருணித்தார். இவரது உரையை 'யுவகேசரி' 'வீரகேசரி' முதலிய நாளிதழ்கள் வெளியிட்டுப் பாராட்டின.

          மன்னரின் கோட்டையில் நடைபெற்ற விசாரணையில் அய்யாமுத்துவுக்கு ஒரு மாதம் கடுங்காவல் தண்டனையும், பதினைந்து ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. வைக்கம் போரில் தடையுத்தரவை மீறியதால் தண்டிக்கப்பட்ட முதல் போராளி – வீரத் தமிழர் - அய்யாமுத்துதான் என்பது வரலாற்றுச் செய்தி!

          தண்டனை முடிந்து சிறையிலிருந்து வெளிவந்த அய்யாமுத்துவை வரவேற்க ஏராளமான மக்கள் திரண்டு வந்திருந்தனர். ராஜாஜி தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், வைக்கம் போராட்டத்திற்கு மக்களிடம் நிதி திரட்டி வழங்கினார் அய்யாமுத்து.

          திருச்செங்கோடு புதுப்பாளையம் பி.கே.ரத்தின சபாபதியின் வேண்டுகோளை ஏற்று 'காந்தி ஆசிரமம்' அமைத்தார். அங்கு நூற்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கெனத் தொடக்கப்பள்ளி நிறுவப்பட்டது. அவர்களுக்குக் கல்வியுடன் மதிய உணவும் அளிக்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டு ஆசிரமப் பணிகள் நிறைவு பெற்று, தந்தை பெரியார் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.

          திருவண்ணாமலை, பொள்ளாச்சி, திருப்பூர், காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, அருப்புக்கோட்டை, திருமங்கலம், மேட்டுப்பாளையம், திருச்செங்கோடு, பரமக்குடி, ராஜபாளையம், திருநெல்வேலி எனப் பல ஊர்களில் நடைபெற்ற தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாடுகளில் கலந்து கொண்டு தமது வீரம் செறிந்த உரைகளால் தமிழக மக்களிடம் விடுதலை உணர்வை ஊட்டினார் அய்யாமுத்து!

          இவரது, மேடை முழக்கம் குறித்து நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், "இளைஞர்களுக்கு மன எழுச்சி உண்டாக்கவல்ல சிறந்த சொற்பொழிவாக அஃது இருக்கிறது என்பதும், அதன் நடையாவரும் அறிந்து கொள்ளக்கூடிய தெளிவும், அதனோடு கம்பீரமும், உடைய தாய் இருக்கிறது என்பதும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கக் கூடியனவாகும்" என்று போற்றிப் புகழ்ந்துரைத்து உள்ளார்.

          பெல்காம், லாகூர், கராச்சி, லக்னோ, ராம்கர், நாசிக், ஆவடி முதலிய இடங்களில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாடுகளிலும் பிரதிநிதியாக கலந்து கொண்ட பெருமைக்குரியவர் அய்யாமுத்து!

          'தமிழ்நாடு சர்க்கா சங்க'த்தின் தலைவராக விளங்கி, புதிய நூற்புக் கருவிகளை அறிமுகப்படுத்தினார், இடைத்தரகர்களை ஒழித்தார். தொண்டர்களுக்கு பயிற்சி அளித்தார். நூற்புப் போட்டிகளை நடத்தினார். நூற்போருக்கு ஊக்கப் பரிசாகச் சேலைகள் அளித்தார். உயர்ரகச் சாயங்களும், அச்சுகளும் பயன்படுத்த வழி செய்தார். நூற்புக் கண்காட்சிகள் நடத்தினார். அதனால்தான், “கதர் என்றால் அய்யாமுத்து; அய்யாமுத்து என்றால் கதர்” என்று ராஜாஜியால் புகழாரம் சூட்டப்பட்டார்.

          கோவை மாநகரில் தடையுத்தரவை மீறி தேசிய சுயமரியாதை மாநாடு நடத்தி உரையாற்றியமைக்காக ஒரு மாத வெறுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார் அய்யாமுத்து!

          அய்யாமுத்துவின் அடிச்சுவட்டில் பயணம் மேற்கொண்டார், அவரது மனைவி கோவிந்தம்மாள். 1932 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டு தாயகம் திரும்பிய காந்தியடிகளை, மும்பையில் சிறைபிடித்தது பிரிட்டிஷ் அரசு. அரசு அடக்குமுறையைக் கண்டித்து, கரங்களில் தேசியக் கொடி ஏந்தி புஞ்சை புளியம்பட்டித் தெருக்களில் வீரமுழக்கமிட்டுச் சென்ற கோவிந்தம்மாளை காவலர்கள் குண்டாந்தடியால் தாக்கினர். தாக்குதலுக்கு அஞ்சாமல் போராடினார். கைது செய்யப்பட்டு ஆறு மாதம் தண்டனை அளிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

          அய்யாமுத்துவும் போராட்டத்தில் குதித்தார். 1932 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு ஆறு மாதம் தண்டனை அளிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

          ராஜாஜி விடுத்த அழைப்பை ஏற்று 1933 ஆம் ஆண்டு திருச்செங்கோட்டில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் கோவிந்தம்மாள் கலந்து கொண்டு ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார். கண‌வரும், மனைவியும் இணைந்து தேசவிடுதலைக்காகப் போராடி, சிறையில் வாடினார்.

          அய்யாமுத்து மதுவிலக்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கள்ளுக் கடைகள் திறப்பதற்கு எதிராகப் போராடினார்.

          புஞ்சைப் புளியம்பட்டியில் 1931ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு ஊர் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கும் உரிமைக்காகக் கணவனும், மனைவியும் இணைந்து போராடி வெற்றி கண்டனர்!

          அய்யாமுத்து எழுதிய 'இன்ப சாகரன்' நாடகம் 1937 ஆம் ஆண்டு மேடை ஏறியது. 'கஞ்சன்' என்றும் திரைப்படத்துக்கு கதை, வசனம், பாட்டு, இயக்கம் என அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று வெற்றிபெறச் செய்தார் அய்யாமுத்து!

          இலக்கியத்துறையிலும் மகத்தான படைப்புகளை அளித்துள்ளார். 'எனது நினைவுகள்', 'காந்தி தரிசனம்', 'ராஜாஜி என் தந்தை', 'நான் கண்ட பெரியார்' முதலிய வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.

          கட்டுரை, சிறுகதை, நாடகம் எனப் பல துறைகளிலும் தமது முத்திரையைப் பதித்துச் சென்று உள்ளார். 'தேய்ந்த லாடம்', 'அக்காளும் தங்கையும்' 'நாட்டுப்புறம்' முதலிய அவரது கவிதைத் தொகுப்புகள் இலக்கியத் தரம் பெற்று விளங்குபவையாகும்.

          தந்தை பெரியாரின் 'குடி அரசு' இதழிலும், கதர் இயக்கத்துக்காக நடத்தப்பட்ட 'குடிநூல்' இதழிலும் பணிபுரிந்து மிகத் தேர்ந்த இதழாசிரியராகவும் திகழ்ந்தார். 'எங்கே செல்கிறோம்?' 'சுதந்திரத்துக்கு முன்னம் பின்னும்', 'சோசலிசம்', 'சுதந்திரா கட்சி ஏன்?' – முதலிய கட்டுரை நூல்களையும் தமிழுக்கு அளித்துள்ளார். மேலும் 'நச்சுப் பொய்கை', 'இராஜபக்தி , 'மேவாரின் வீழ்ச்சி', 'பிச்சைக்காரி' முதலிய நாடகங்களையும் படைத்தளித்துள்ளார்.

          மேனாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி 1972 ஆம் ஆண்டு அய்யாமுத்துவை டெல்லிக்க அழைத்து, சுதந்திர தின வெள்ளி விழாவில் தேசபக்தர்களுக்கான தாமிரப்பத்திரம் வழங்கிச் சிறப்பித்தார்.

          தேச விடுதலைப் போராட்ட வீரர், சிறைக்கு அஞ்சாத சிங்கம், சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி காணாத தலைவர், நேர்மைக்கும், தூய்மைக்கும், வாய்மைக்கும் நிறைகுடமாகத் திகழ்ந்தவர், 'அயர்வறியாத உழைப்பாளி' என மகாத்மா காந்தியடிகளால் பாராட்டப் பெற்றவர். அத்தியாகி, 21.12.1975 ஆம் நாள் இம்மண்ணை விட்டு மறைந்தார். அவர் மறைந்தாலும், அவரது தேசத் தொண்டு என்றும் நிலைத்து நிற்கும்!! அவரது தியாகம் வரலாறாகும்!!

- பி.தயாளன்

Pin It