“பன்னூற்றாண்டுகளுக்கு முன்னர்..... மறைந்த சான்றோர்களைப் பற்றி மனிதன் அறிந்து கொள்வதற்குக் கருவியாய் அமைந்த நூல்களுக்குக் கருவாய் அமைந்தது மொழியேயாகும். ஏனைய உயிர்களிலும் மக்கள் உயிர் ஏற்றம் வாய்ந்தது என்று கொள்ளுவதற்குக் கருவியாய் அமைந்த பண்புகளுள் மொழித்திறமே முதலிடம் பெறுகின்றது என்று கூறலாம். இத்தகு சீரிய நலம் பயக்கும் மொழியினைச் செப்பமுற வளர்த்துப் பாதுகாத்தல் மக்கள் ஆற்றும் செயல்களுள் மாண்புறு செயல் எனக் கருதலாம்" - என மொழியினைச் சிதைவுறாமல் பேணிப் பாதுகாப்பதன் அவசியத்தை பெரும்புலவர் மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

 தமிழகத்தில் " இலக்கணத் தாத்தா" எனவும், " மகாவித்துவான் " எனவும் அன்போடு அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை.

 சென்னை சைதாப்பேட்டைக்கு மேற்கில் உள்ள மேட்டுப்பாளையம் என்னும் சிற்றூரில் 31.08.1896 அன்று பிறந்தார். தந்தை வீராசாமிப்பிள்ளை. தாயார் பாக்கியம் அம்மையார்.

 வறுமையினால் மாதிரிப் பள்ளியில் இருந்து திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். தமிழறிஞர்கள் வி.ஆர். அரங்கநாத முதலியார், அருங்கலை விநோதர் கே.மாசிலாமணி முதலியார், பேராசிரியர் கா.நமச்சிவாய முதலியார், வழக்கறிஞர்களான எம்.தாமோதர நாயுடு, மோகனரங்கம் பிள்ளை ஆகியோர்களிடம் தமிழ்ப் பயின்று, பல்வேறு பட்டங்களும் பெற்றார்.

 சென்னை வேப்பேரியிலுள்ள எஸ்.பி.ஸி.கே. இல் அச்சகப் பணி புரிந்தார். பின்னர், அஞ்சலகத்தில் உதவியாளராகவும், வழக்கறிஞராகவும்;, ஒருவருக்கு குமாஸ்தாவாகவும், பின்னர் ஒப்பந்த அலுவலகத்தில் எழுத்தராகவும் பணிபுரிந்தார்.

 சென்னைப் புரசைவாக்கத்தில் உள்ள பெப்ரீ~pயஸ் உயர்நிலைப் பள்ளியில் 1924 முதல் 1938 வரை தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பணிபுரிந்து கொண்டே சென்னைப் பல்கலைக் கழகம் நடத்திய வித்துவான் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 1938 ஆம் ஆண்டு ஆசிரியப் பணியைத் துறந்து, எழுத்துப் பணியிலும், பதிப்புத் தொழிலிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.

 தமிழ்நாடு அரசாங்கம் மாணவர்களுக்காக வெளியிட்டுக் கொண்டிருக்கும் இலக்கிய, இலக்கணப் பாடநூல்கள் பலவற்றிற்கு இவர் தலைமைப் பதிப்பாசிரியராக பொறுப்பு வகித்தார். சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட தமிழ் பேரகராதி திருத்தக் குழுவில் தலைமைப் பதிப்பாசிரியராக இருந்து செயல்பட்டார்.

 திருவாய்மொழி ஏட்டின் தமிழாக்கம் பத்துத் தொகுதிகளையும் பதிப்பித்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஏற்படுத்திய கம்பராமாயணப் பதிப்புக் குழுவின் உறுப்பினராக செயல்பட்டார். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் நடத்திய தமிழகப் புலவர் குழுவின் தலைவராக விளங்கினார்.

 திருப்பனந்தாள் ஆதீனம் சோமசுந்தரத் தம்பிரான் தலைமையில் 29.10.1967 அன்று நடைபெற்ற விழாவில், அன்றைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா, அறிஞர் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளைக்கு "செந்தமிழ்க் களஞ்சியம் " என்னும் பட்டம் அளித்து சிறப்பித்தார்.

 காஞ்சியில் சமணக் காப்பியமான சிந்தாமணி பற்றி வகுப்பு நடத்தியதைப் பாராட்டி, திரு.வி.க. மூலம் "சிந்தாமணிச் செல்வர் " என்னும் பட்டம் அளித்து பாராட்டப்பட்டார்.

 கூத்த நூலைச் செம்மையாகப் பதிப்பித்ததற்காக, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின்ர் "கலைமாமணி" பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தினர். அமெரிக்க உறவு பூண்ட உலகப் பல்கலைக் கழகம் 01.10.1981 அன்று அறிஞர் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளைக்கு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. மேலும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் அவருக்குத் "தமிழ்ப் பேரவைச் செம்மல்" என்ற பட்டம் வழங்கி கௌரவித்தது. இவையனைத்திற்கும் மேலாக, அன்னைத் தமிழ் இலக்கிய நற்பணி மன்றம் "இலக்கணத் தாத்தா" எனப் பட்டமளித்து சிறப்புப் செய்தது.

‘இன்சொல் இயல்பு‘ ‘குணவீர சிகாமணி‘, ‘தமிழ் அன்றும் இன்றும்‘, ‘துருவன்‘, ‘பொது நலப்புரவலர்கள்‘, ‘விமலன்‘, ‘விநோதரசமஞ்சரி‘ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இளைஞர் தமிழ்க் கையகராதி, இறையனார் அகப்பொருள் உரை, தஞ்சை வாணன் கோவை, நாலாயிர திவ்வியப் பிரபந்தம், நீதி நூல்கள், பஞ்ச தந்திரப் பாடல்கள், தொல்காப்பியம், சொல்லதிகாரம், விசாகப் பெருமாள், தமிழ் இலக்கணம்- எழுத்து, சொல், யாப்பருங்கலக் காரிகை போன்ற நூல்களை பதிப்பித்துள்ளார். பண்டைய ஏட்டுச் சுவடிகளைப் படித்தறிந்து நூல்களாகப் பதிப்பித்தார்.

 மொழிக்கட்டமைப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எளிமையாக எழுதுகிறோம் என்ற பெயரில் பேச்சுமொழி நடையில் எழுதினால், காலப்போக்கில் மொழி சிதைந்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

 இலக்கணத்திலும், பதிப்புத்துறையிலும் வல்லவராக விளங்கி தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்ட அறிஞர் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, 04.02.1985 ஆம் நாள் இயற்கை எய்தினார். தமிழ் போல் அவரது தொண்டும் வாழும்.

Pin It