வரலாறு:

மனித இன நடவடிக்கைகள் குறித்தக் காலவரிசைப் படியான தொகுப்பே வரலாறு ஆகும். மொழிக்கு எழுத்து உருவான காலம் முதல் வரலாறு தொடங்குகிறது. அதற்கு முந்திய காலம் வரலாற்றுக்கு முந்திய காலமாகும். வரலாற்றுக்கு முந்திய காலத்தை பழங்கற்காலம், புதியகற்காலம், நுண்கருவிக்கற்காலம், செம்புக்காலம், இரும்புக்காலம் என மனித இனத்தின் பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு வகை பிரித்து ஆய்வு செய்கின்றனர்.

உற்பத்திக்கான உழைப்பு நடவடிக்கைகள் தான் மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்தி, மனித இனத்தின் படிப்படியான பரிணாம வளர்ச்சிக்குக் காரணமாகியது. எனவே உற்பத்தி நடவடிக்கைகளின் அடிப்படையில் மனித இனத்தின் வரலாற்றை வகைப்படுத்தி காலவரிசைப்படி தொகுப்பது என்பதே உண்மையான மனித வரலாறாக இருக்கும்.

வலாற்றுக்கு முந்திய காலத்துக்கு பயன்படுத்தப்படும் இந்தமுறை, வரலாற்றுக்காலம் தொடங்கிய பின் பின்பற்றப் படுவதில்லை. வரலாற்றுக் காலத்திலும் இம்முறையைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே உண்மையான மனித இன வரலாற்றைக் கண்டறிய முடியும்.

வரலாற்றுக் காலத்தில் அரசுகளின் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டும், மனித சமூகத்தின் தலைமையில் இருப்பவர்கள் அல்லது ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டுமே வரலாறு எழுதப்படுகிறது. இவைகளுடன் அந்தந்தக் கால கலை, இலக்கியம், அறிவியல் போன்றவைகளும் ஓரளவு இடம் பெறுகின்றன.

ஆனால் இவைகள் முழுமையான மனித இன வரலாற்றைப் பிரதிபலிக்க இயலாது. வரலாற்றுக் காலத்திற்கான மனித சமூகத்தின் பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகள் குறித்த ஆழமான விரிவான ஆய்வு அவசியமாகும். அந்த ஆய்வின் அடிப்படையிலான காலவரிசைப்படியான வரலாறு முழுமையாகத் தொகுக்கப்படும் பொழுது மட்டுமே முழுமையான மனித இன வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடியும். 

சங்ககால வரலாறு:

நமது பழந்தமிழகத்தை எடுத்துக்கொண்டால், அதன் வரலாறு சங்ககாலத்திலிருந்து தொடங்குகிறது எனலாம். சங்ககாலம் என்பது கி.மு. 600 முதல் கி.பி. 200 வரையான காலமாகும். சங்க இலக்கியங்களை மட்டும் ஆய்வு செய்து சங்ககாலச் சமூகவரலாறு குறித்து முடிவு செய்யும் போக்கு இங்குள்ளது. சங்க இலக்கியங்கள் சங்க காலச் சமுதாயத்தின் ஒரு பகுதியை மட்டுமே காட்டவல்லன. அந்த ஒரு பகுதியும்கூட தொகுப்பித்தவர்களின் கண்ணோட்டத்திலேயே இருக்கமுடியும்.

சங்ககாலத்திலேயே வைதீக இந்துமதக் கருத்தாக்கத்தின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது எனலாம். ஆட்சியாளர்களின் ஆதரவும் அதற்கு இருந்தது. அதன் முடிவில் வைதீக இந்துமதச் சார்பான ஆட்சியாளர்களால் தொகுப்பிக்கப்பட்ட சங்ககால இலக்கியங்கள், அம்மதச் சார்பான பல பாடல்களைக் கொண்டிருந்த போதிலும், பெரும்பாலான பாடல்களில் பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்கள் உள்ளன. சங்ககாலத்திலும், சங்க காலத்திற்கு முன்பும் பாடப்பட்ட பல பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துக் கொண்ட  பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்புகளில் இடம்பெறவில்லை.

சங்ககாலத்தில் இருந்த வளர்ச்சிபெற்ற தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறன், உலகளாவிய வணிகம், தமிழர்கள் வணிகத்துக்காகப் பிறநாடுகளில் சென்று தங்கியது, அவர்களிடம் இருந்த மிகப்பரவலான கல்வியறிவு, எழுத்தறிவு போன்ற பல தரவுகள் சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை.  தொல்லியல், நாணயவியல், கல்வெட்டியல், மொழியியல், மனித இனவியல் போன்றவற்றில் நடைபெற்று வரும் தற்போதைய ஆய்வுகள் அதனை உறுதிப்படுத்துகின்றன.

எனவே சங்ககால வரலாற்றை மீட்டெடுக்க, இந்தச் சங்ககாலத்தில் நடைபெற்ற பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகள் குறித்த ஆழமான விரிவான ஆய்வும், அதன் காலவரிசைப்படியான தொகுப்பும் அவசியம். கி.மு. 6ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கி.மு. 1000 முதல் தொடங்கி சங்ககாலம் முடியும் வரையான காலகட்டம் வரை இந்த ஆய்வு நடைபெற வேண்டும்.  

பழந்தமிழக வரலாறு:

பழந்தமிழகத்தில் கி.மு. 1000 முதல் கி.பி.200 வரையான காலத்தில் நடைபெற்ற வேளாண்மை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், பிற கைத்தொழில்களில், பட்டறைத் தொழில்களில் உருவான உற்பத்திப் பொருட்கள், அவைகளுக்கான உலோகங்கள் போன்ற மூலப்பொருட்கள், அக்காலத்தில் இருந்த போக்குவரத்துச் சாதனங்கள், கட்டிடப் பொருட்கள் போன்ற பலவற்றைக் குறித்தும் விரிவான ஆழமான ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

பின், கிடைத்த அத்தரவுகள் காலவரிசைப்படி தொகுக்கப் படவேண்டும். இக்காலவரிசைப் படியான தொகுப்பு என்பது ஆண்டுக்கணக்கில் இல்லாவிடினும் நூற்றாண்டுக் கணக்கில், அல்லது இரண்டு மூன்று நூற்றாண்டுகளை ஒன்றுசேர்த்து உருவாக்கப்பட்ட காலகட்டங்களைக் கொண்டவைகளாக  இருக்க வேண்டும்.

இவைகளுடன் உள்நாட்டு வணிகம், வெளிநாட்டு வணிகம், வெளிநாடுகளுக் கிடையேயான போக்குவரத்து வசதிகள், ஏற்றுமதி இறக்குமதி பொருட்கள் போன்றவைகளும், மருத்துவம் போன்ற சேவைத் தொழில்கள், கல்வி, கலை, இலக்கியம், இசை, நாடகம் போன்ற பண்பாட்டு நடவடிக்கைகள், அரசின், ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் போன்ற இன்ன பிற அனைத்துச் சமூக நடவடிக்கைகள் குறித்தத் தரவுகளும் காலவரிசைப்படி தொகுக்கப்பட வேண்டும்.

நமது பழந்தமிழகம் குறித்த இதுபோன்ற விரிவான ஆழமான ஆய்வுகளைச் செய்வதன் மூலம் மட்டுமே, நமது பழந்தமிழக வரலாறு குறித்து, ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியும். நமது பழந்தமிழக வரலாற்றில் நடந்த பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்கான காரணத்தை இது போன்ற ஆய்வுகள் வெளிக்கொணரும்.

சங்ககாலத்தில் அரசு உருவாக்கம் போன்ற கருத்தியல்களில் ஒரு தெளிவைக் கொண்டு வரும்.தொழில், சொத்துடமை அடிப்படையில் உருவான வகுப்புப் பிரிவினைகள் சாதிகளாகப் பரிணமித்ததற்கான காரணத்தைக் கண்டறிய முடியும். இன்னும் இது போன்று புரியாத புதிராக இருக்கும் பழந்தமிழக வரலாற்றின் பல அம்சங்களில் தெளிவு கிடைக்கும்.

உலகின் பிற மனித இன வரலாறுகளிலும் இம்முறை பயன்படுத்தப்படும் பொழுது மனித இன வரலாறு குறித்தப் பல புரியாத புதிரான கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அறிவியல் போன்றே வரலாற்றுக்கும் பல விதிமுறைகளை உருவாக்கிக் கொள்ள முடியும். பழங்கால வரலாற்றை ஆழ்ந்து அறிந்து கொள்வதன் மூலம் நிகழ்கால வரலாற்றைப் புரிந்து கொள்வதும், எதிர்கால வரலாற்றை ஊகிப்பதும் சாத்தியமாகிவிடும்.

அரசு உருவாக்கமும் நகர உருவாக்கமும்:

சங்ககாலத்தில் அரசு உருவாக்கம் என்பது குறித்து நிறையப் பேசப்படுகிறது. அரசு உருவாக்கம் என்பது நகர உருவாக்கத்தோடு தொடர்பு உடையதாகும். வேளாண்மையை அறிந்தபின் மனிதன் ஓரிடத்தில் தங்கி வாழத் தொடங்கினான். வேளாண்மையில் ஏற்பட்ட வளர்ச்சி சிற்றூர்களையும், பேரூர்களையும் தோற்றுவித்தது.

வேளாண்மையில் கிடைத்த உபரி உற்பத்தியோ, கைத்தொழில், பட்டறைத்தொழில், வணிகம் முதலியவற்றை வளர்த்தெடுத்தது. சொத்துடமை வர்க்கம் உருவாகி வளரத் தொடங்கியது. சொத்துடமை ஆணாதிக்கத்தைக் கொண்டு வந்தது. ஆணாதிக்கம் இன்றையக் குடும்ப முறையைக் கொண்டு வந்தது. குடும்பத்தில் பெண் ஆணுக்கு அடிமையாக்கப்பட்டாள். பெண்ணின் கற்பு புனிதமாக மாற்றப்பட்டது.

கைத்தொழில்களிலும், பட்டறைத்தொழில்களிலும், வணிகத்திலும் ஏற்பட்ட வளர்ச்சி சிற்றூர்களையும் பேரூர்களையும் சிறு நகரங்களாகவும், பெரு நகரங்களாகவும் மாற்றத் தொடங்கின. இவ்விதமாக அரசின் தோற்றத்திற்கான அடித்தளம் உருவாக்கப்பட்டது.

நகர உருவாக்கத்தில், அதன் வளர்ச்சியின் தொடக்கத்தில் ஏதாவது ஒரு இனக்குழுவின் தலைமையில் பிற இனக்குழுக்கள் இணைந்து செயல்பட்டன.  நகர உருவாக்கத்திற்குப் பின் இனக்குழுக்களின் முக்கியத்துவம் குறைந்து போனது. இதற்கு முன்புவரை இனக்குழுக்களிடையே தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டியும், தங்களது தேவைகளுக்காகவும் அடிக்கடி போர் நடைபெற்று வந்தது.

நகர உருவாக்கத்திற்குப் பின் இந்நிலை மாறிப்போய், நகரங்கள் தங்கள் பாதுகாப்புக்காகவும், தங்கள் தேவைகளுக்காகவும் நடத்தும் போராக அது மாறிப் போனது. நகரங்களில் இனக்குழுக்கள் என்பது இல்லாதுபோய் அவ்விடத்தில் பல இனக்குழுக்கள் இணைந்த நகரப் பொதுமக்கள் உருவாகி இருந்தனர். நகரத்தில் இருந்த சொத்துடமை வர்க்கம் தன்னையும், தனது சொத்துக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒட்டுமொத்த நகரத்தையே பாதுகாப்பவனாகவும் பராமரிப்பவனாகவும் தன்னை உருமாற்றிக் கொண்டது. இதன் காரணமாக நகர மக்களுக்கு மேம்பட்ட ஒன்று உருவாகி, அது அரசாக வடிவமெடுக்கத் தொடங்கியது.

நாளடைவில் நகரின் பாதுகாப்புக்காக நிரந்தர சிறு இராணுவமும், அதன் பராமரிப்புக்காக ஒரு நிரந்தர சிறு நிர்வாக அமைப்பும் உருவாகியது. முதலில் இவைகளைக் கண்காணிக்க நகர மக்கள் முழுவதும் அடங்கிய ஒருவித ஜனநாயகத் தலைமைகள் உருவாகின. பின் பிரபுக்கள் சிலரின் ஆட்சியும், ஆண்டான் அடிமைகள் ஆட்சியும் ஏற்பட்டது. ஆனால் அவை சில சிறப்பு உரிமை கொண்ட தலைவர்களை உருவாக்கத் தொடங்கி இறுதியில் பரம்பரை அரச வம்சங்களைத் தோற்றுவிப்பதில் முடிந்தது.

தம்மைப் பாதுகாக்கவும், தமது தேவைகளுக்காகவும் பக்கத்து நகரங்களோடு நடத்திய போர்கள் நகரத் தலைவர்களுக்கு வலிமையைத் தந்து, பரம்பரை உரிமையைக் கொண்டுவர உதவின. இவ்விதமாக நகரங்களில் அரசு உருவாகி, அந்நகரம் பல நகரங்களைக் கொண்ட பெரிய அரசாக உருவான போது, அரசர்களும் தோற்றுவிக்கப் பட்டனர்.

ஆகவே தொடக்கத்தில் உலகெங்கும் அரசு உருவாக்கம் நகரங்களில் தான் தொடங்கியது. உலகெங்கும் நகர அரசுகளே முதலில் உருவாகின. உலக வரைபடத்தில் ஆரம்பத்தில் உருவான அத்தனை நாகரிகங்களிலும் முதலில் நகர அரசுகள் உருவாவதை நாம் காண முடிகிறது. கிரேக்கத்தில், இரோமில், கார்த்தேஜில் முதலில் நகர அரசுகளே தோன்றின.

மெசபடோமியாப் பகுதியில் உருவான சுமேரியா நாகரிகமும், பிற நாகரிகங்களும் முதலில் நகர அரசுகளையே தோற்றுவித்தன. சுமேரியா நாகரிகம் என்பது உண்மையில் நகர அரசுகளின் நாகரிகமே ஆகும். அங்கு இன்றைக்கு 5000 வருடங்களுக்கு முன்பே நகர அரசுகள் தோன்றி விட்டன. அங்கு ‘ஊர் என்ற நகர அரசு மிகப் புகழ்பெற்ற நகர அரசாக இருந்தது. சுமேரியர்களின் வீழ்ச்சிக்குப்பின் பாபிலோனிய நகர அரசு அங்கு முக்கியத்துவம் பெற்றது. இன்றைக்கு 3750 வருடங்களுக்கு முன்பு இந்த நகர அரசு பிற நகர அரசுகளை வென்று ஒரு பேரரசாக உருவாகியது.

எகிப்திலும் முதலில் சிறு சிறு நகர அரசுகளே தோன்றின. பின் அவை ஒன்று சேர்க்கப்பட்டு இரு பெரிய அரசுகள் எகிப்தில் உருவாகின. பின் அவைகளும் ஒன்றிணைக்கப் பட்டு எகிப்தியப் பேரரசு உருவாகியது.நமது சிந்துவெளி நாகரிகத்திலும் முதலில் நகர அரசுகளே தோன்றின. அந்நாகரிகம் பல நகர அரசுகளின் நாகரிகமே ஆகும்.

ஆரிய வருகைக்குப் பின் உருவான வட இந்திய நாகரிகத்தில் கூட முதலில் 16 ஜனபதங்கள் எனப்படும் நகர்மைய அரசுகளே தோன்றின. இந்த நகர்மைய அரசுகளிடையே ஏற்பட்ட போட்டிகளாலும், போர்களாலும் கி.மு. 6ம் 5ம் நூற்றாண்டு வாக்கில் மகத அரசு பிற நகர்மைய அரசுகளை வென்று ஒரு பேரரசாக உருவெடுத்தது.

எனவே உலகெங்கும் ஆரம்பகால நகர உருவாக்கம் என்பது அரசு உருவாக்கத்தின் தொடக்கமாக இருந்துள்ளது. பின்னர் இந்த நகரங்கள் வளர்ச்சியடைந்து நிலைபெற்ற பொழுது அதன் அரசு உறுப்புகளும் வளர்ச்சியடைந்து நிலைபெற்று நகர அரசு உருவாகியது. அதன்பின் இந்த நகர அரசுகள் பிற நகர அரசுகளை வென்று பெரிய அரசுகளாக, பேரரசுகளாக உருவாகின. உலகெங்கும் கிட்டத்தட்ட இதே நிலைமை தான் இருந்தது எனலாம்.

சங்ககாலத்தில் அரசு உருவாக்கம்:

பழந்தமிழகத்தில் கி.மு. 1000 வாக்கிலேயே சிறு சிறு நகரங்களும், நகர்மையங்களும் உருவாகி, பின் அவை நகர்மைய அரசுகளாகப் பரிணமித்தன. கி.மு 7ம் 8ம் நூற்றாண்டு வாக்கில் சேர, சோழ, பாண்டிய இனக்குழு அரசுகள் வலிமை பெற்று இந்த நகர்மைய அரசுகள் பலவற்றை வென்று ஒன்று சேர்த்துப் பெரிய அரசுகளாக உருவெடுத்தன.

அதன் பின்னரும் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் உறவினர்களால் இந்த நகர்மைய அரசுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகவே ஆளப்பட்டு வந்தன. “ஐந்து பாண்டியர்களால் ஆளப்பட்ட ஐந்து பாண்டிய அரசுகள் இருந்தன என்பது ஒரு தொன்மக்கருத்தாகும். பாண்டியர்கள் பலர் பல நகர்மைய அரசுகளை ஆண்டு வந்தனர் என்பதை இக்கருத்து உறுதிப்படுத்துகிறது.

பாண்டியர்களைப் போன்றே சேர சோழ அரசுகளும் பல நகர்மைய அரசுகளைக் கொண்டிருந்தன.சேர, சோழ, பாண்டிய அரசுகள் போக பல குறுநில மன்னர்களும், வேளிர்களும் பல சிறு சிறு நகர்மைய அரசுகளை ஆண்டு வந்தனர். அவர்கள் அந்தந்தச் சிறு சிறு நகர்மைய அரசுகளின் நகரங்களைக் கொண்டே அழைக்கப்பட்டு வந்தனர்.

பாழிநகர் நன்னன், வியலூர் நன்னன், போஓர் பழையன், மோகூர் பழையன், எயில் ஊர் ஆந்தை, நீடூர்த் தலைவன் எவ்வி, உறையூர் தித்தன், காமூர்த் தலைவன் கழுவுள், இருப்பையூர் வீரான், ஊனூர் தழும்பன், ஆர்க்காட்டு அழிசி எனப் பல குறுநில மன்னர்களும், வேளிர்களும் அவரவர்களின் நகரங்களைக் கொண்டே அழைக்கப்பட்டு வந்துள்ளனர். பழந்தமிழகத்தின் குறுநில மன்னர்களும், வேளிர்களும் நகரங்களை மையமாகக் கொண்ட நகர்மைய அரசுகளையே ஆண்டு வந்தனர் என்பதை இப்பெயர்கள் உறுதி செய்கின்றன.

பாரியின் அரசு 300 சிற்றூர்களைச் சுற்றிலும் உடையதாகவும், “பறம்பு என்ற குன்றின் மேல் இருந்த ஒரு சிறு நகரத்தை மையமாகக் கொண்டதாகவும் இருந்துள்ளது என்பதை சங்க இலக்கியப் புலவர் கபிலர் தெரிவிக்கிறார்.(புறம்:110) பாரியைப் பறம்பின் கோமான் எனக் கபிலர் குறிப்பிடுகிறார்.(புறம்:201) பாரியின் நகர்மைய அரசு ஒரு வளர்ந்த அரசு அல்ல. அது அரசின் தொடக்கம் தான். அவரது பரம்பு நகரும் ஒரு மிகச் சிறிய நகரமே.

கபிலர் இருங்கோவேள் என்ற குறுநில மன்னனைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது, அவனது முன்னோர்கள் 49 தலைமுறைகளாகத் துவரை என்ற நகரை ஆண்டவர்கள் என்றும், கழாஅத்தலையார் என்ற புலவரை அவமதித்ததால் அரையம் என்ற நகரை இழந்தனர் எனவும் குறிப்பிடுகிறார். (புறம்:201,202) இருங்கோவேளின் அரசு பாரியின் அரசைவிட முன்னேறிய நகர்மைய அரசு ஆகும். மூவேந்தர்களின் அரசுகளே முழுமை பெற்ற அரசுகள் ஆகும். நன்னன், அதியன் போன்ற அரச வம்சாவழிகளின் அரசுகள் ஓரளவு வளர்ச்சி பெற்ற அரசுகள் ஆகும்.

எனவே பழந்தமிழகத்தில்  தொடக்க கால அரசுகளும், முதிர்ந்த அரசுகளும் அருகருகே இருந்தன. எனினும் அவை அனைத்தும் நகர்மைய அரசுகளாகவே  இருந்தன என்பதைக் கபிலரின் பாடல் போன்ற பல சங்க இலக்கியங்கள் உறுதி செய்கின்றன எனலாம்.

 சேர, சோழ, பாண்டியர்கள் கூட தொண்டி அரசன், கொற்கைப் பாண்டியன், புகார்த்தலைவன் என நகரங்களைக் கொண்டே அழைக்கப்பட்டு வந்துள்ளதைக் காணமுடிகிறது. ஆக நகரங்கள் அன்று அரசின் மிக மிக முக்கிய அங்கமாக இருந்தன என்பதை இவை தெரிவிக்கின்றன. மூவேந்தர்கள் தவிர அதியன், நன்னன் போன்ற அரச பரம்பரைகளும் ஒருசில நகர்மைய அரசுகளை வென்று, பெரிய அரசுகளாக ஆக முயன்றுள்ளன. ஆனால் அம்முயற்சி மூவேந்தர்களால் முறியடிக்கப்பட்டது.

மூவேந்தர்கள் உருவாகிய பின்னரும், நகர்மைய அரசுகள் முழுச் சுதந்திரத்தோடு தனி அரசுகளாகவே செயல்பட்டு வந்துள்ளன. வேந்தன் ஒரு பெரிய நகர்மைய அரசை ஆண்டான் எனில், அவனது கிளை உறவினர்கள் பிற நகர்மைய அரசுகளை ஆண்டனர். இவைபோக குறுநில மன்னர்களும், வேளிர்களும் இருந்தனர். எனவே பொதுவாகத் தமிழகமெங்கும் நகரங்கள் பல ஊர்களைக் கொண்ட தனித்தனி அரசுகளாக இயங்கி, தனித்தனி அரசர்களால் ஆளப்பட்டு வந்தன.

நகர்மைய அரசு:

நகர்மைய அரசு என்பது ஒரு நகரத்தை மையமாகக் கொண்டு பல சிற்றூர்களையும், பேரூர்களையும் உடைய அரசு ஆகும். நகர்மைய அரசுகளில் இருந்த சிற்றூர்களும், பேரூர்களும் தனித்தனி உள்ளுர் தலைவர்களைக் கொண்டு இயங்கின. அதே சமயம் அவை நகர்மைய அரசின் தலைமைக்கு கட்டுப்பட்டு இருந்தன. நகர்மைய அரசுகளில் வேளாண்மையே முக்கியத் தொழிலாக இருந்தது. நகர்மைய அரசுகளில் ஆண்டான் அடிமை முறை இருக்கவில்லை. காட்டுமிராண்டி இனக்குழுக்களால் அடிக்கடி நகர அரசுகள் தாக்கப்பட்டதும், எதிரிகளை அடிமைகளாகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை அங்கு நிலவியதும் அங்கு அடிமை முறை ஏற்படுவதற்கான ஒரு சில காரணங்களாகும். நகர்மைய அரசுகளில் அச்சூழல் உருவாகவில்லை.

அடிமை முறைக்குப் பதில் நகர்மைய அரசுகளில், தொழில் மற்றும் சொத்துடைமை அடிப்படையில் வேறுபட்ட வகுப்புப் பிரிவினைகள் உருவாகின. நகர அரசுகளில் வேளாண்மையும், கைத்தொழில்களும் அடிமைகளால் செய்யப்பட்டு வந்தன. எனினும், இந்த அடிமைகள் நகர அரசில் எவ்வித செல்வாக்கும் அற்றவர்களாக இருந்தனர். அங்கு பிரபுக்களின் ஆட்சியும், ஆண்டான்களின் ஜனநாயக அரசுகளும் உருவாகின.

நகர்மைய அரசுகளில் விவசாயம் கைத்தொழில் முதலியன ஓரளவு சுதந்திரமான தனி நபர்களால் அல்லது குழுக்களால் செய்யப்பட்டு வந்தன. நகர்மைய அரசுகளில் அதிகஅளவில் கைத்தொழில் வணிகம் முதலியன வளர்ந்த போதும் வேளாண்மை உற்பத்தியைக்கொண்ட சிற்றூர்களும் பேரூர்களும் மிக அதிக அளவில் இருந்தன. அதன் காரணமாக நகர்மைய அரசுகளில் ayaநிலப்பிரபத்துவத் தன்மை மிகுந்து, பரம்பரை ஆட்சிமுறை அதாவது மன்னர் ஆட்சிமுறை உருவாகியது.

பல சிற்றூர்களும் பேரூர்களும் நகர்மைய அரசில் இருந்த போதிலும் அந்த நகரமே நகர்மைய அரசின் முக்கிய அங்கமாக, முக்கியப் பிரதிநிதியாக இருந்தது. ஒட்டுமொத்தமாக அந்த நகர்மைய அரசின் அச்சாணியாக அந்த நகரமே இருந்தது. மேலும் ஒவ்வொரு நகர்மைய அரசும் தனித்தனி அரசுகளாகச் சுதந்திரமாக இயங்கின. இத்தகைய அரசுகளே நகர்மைய அரசுகளாகும்.

நகர அரசுகளும் நகர்மைய அரசுகளும் அந்தந்த நகரத்தை அடிப்படையாகக் கொண்டு தனித்தனி அரசுகளாக சுதந்திரமாக இயங்கி வந்ததும், அந்த நகரமே இவைகளின் ஆட்சிக்கான அச்சாணியாக இருந்து வந்ததும் தான் இவைகளுக்கிடையே இருந்த ஒற்றுமையாகும். 

அரசும் எழுத்தும்:

கிரேக்கத்தில் கி.மு. 8ஆம் நூற்றாண்டில் நகர அரசுகள் உருவாகி நிலைபெற்ற பொழுதுதான் கிரேக்க மொழிக்கு எழுத்துக்கள் உருவாகின. அதுபோன்றே இரோமில் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் இரோம் நகர அரசு உருவாகி நிலை பெற்றபொழுதுதான் இலத்தின் மொழிக்கு எழுத்து முறை உருவானது. எகிப்து, சுமேரியா போன்ற நாகரிகங்களிலும் நகர அரசுகள் உருவாகி நிலை பெற்றபொழுதுதான் எழுத்துக்கள் உருவாகின. சீனாவில் கி.மு 15ஆம் நூற்றண்டு வாக்கில் எழுத்து உருவானது. ஆனால் அத்ற்கு முன்னரே அங்கு அரசு உருவாகிவிட்டது.

இந்தியாவில் கூட மௌரியப் பேரரசு உருவாகிய பின் அசோகர் ஆட்சிக் காலத்தில்தான் அசோகன் பிராமி எழுத்து பயன்படுத்தப்பட்டது. கன்னட எழுத்துக்கள் கடம்ப அரசர்கள் காலத்திலும், தெலுங்கு எழுத்துக்கள் இரேனாடு சோழ அரசர்கள் காலத்திலும் உருவாகின. சிந்துவெளி நாகரிகத்திலும் நகர அரசுகள் உருவாகிய பின்னரே எழுத்துக்கள் உருவாகின. எனவே அரசுகள் உருவாகி நிலைபெற்ற பின்னர்தான் மொழிக்கு எழுத்துக்கள் உருவாகின்றன என்பதுதான் உலகெங்கும் இருந்து வந்த நிலைமையாகும்.

கிரீட்(CRETE) தீவின் மினோன்(MINOAN) எழுத்துக்களைக் கிரேக்கத்தில் இருந்த மைசீனியர்களின் (MYCENAEANS) நகர அரசுகள் கி.மு. 15ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 13ஆம் நூற்றண்டு வரை பயன்படுத்தினர். அதன் பின் கிரேக்கத்தில் இருந்த மைசீனியர்களின் நகர நாகரிகம் அழிந்து போனதால் அவர்கள் எழுத்தும் இல்லாது மறைந்து போயிற்று. அதன் பின் வந்த மூன்று, நான்கு நூற்றாண்டுகள் கிரேக்க வரலாற்றில் இருண்ட காலமாகும்.

கி.மு. 1000 வாக்கில், மீண்டும் கிரேக்க நகர அரசுகள் உருவாகத் தொடங்கி, கி.மு. 8ம் நூற்றாண்டு வாக்கில், அவை நிலைபெற்ற அரசுகளாக உருவான பொழுது தான், பொனிசியன்(PHOENICIAN) எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கிரேக்க எழுத்து முறை உருவாகியது. எனவே அரசுகள் உருவாகிய பிறகு தான் எழுத்துக்கள் உருவாகின்றன என்பதற்கும், அரசுகள் அழியும் பொழுது எழுத்துக்களும் இல்லாது போய் விடுகின்றன என்பதற்கும் கிரேக்க வரலாறே ஒரு உதாரணமாகத் திகழ்கிறது எனலாம்.(source: page 396, vol-8, The World Book Encyclopedia)

தமிழகத்தில் தமிழி எழுத்து கி.மு. 8ஆம் நூற்றாண்டு வாக்கில் உருவாகிவிட்டது. எனவே அப்பொழுதே நகர அரசுகள் உருவாகி நிலைபெற்று விட்டன. கி.மு. 1000ஆம் ஆண்டு வாக்கில் தமிழர்கள் குறியீடுகளை எழுத்துக்களாகப் பெரிய அளவில் பயன்படுத்தினர் என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் கி.இராஜன் அவர்கள். அதனால்தான் கி.மு. 1000ஆம் ஆண்டு வாக்கிலேயே தமிழகத்தில் சிறு சிறு நகரங்கள் உருவாகி விட்டன எனலாம்.

அரசு உருவாக்கம் என்பது நகர உருவாக்கத்தோடு தொடர்புடையது என்பதால் அப்பொழுதே அரசுகள் உருவாகத் தொடங்கி, கி.மு. 8ஆம் நூற்றாண்டு வாக்கில் தமிழகத்தில் அரசுகள் வளர்ந்து  நிலைபெற்று விட்டன எனலாம். ஆகவே அரசு உருவாக்கம் என்பது சங்க காலத்திற்கு முன்பே உருவாகி விட்டது என உறுதிபடக்கூறலாம்.

தமிழக அரசுகளும் வளர்ச்சியும்:

தமிழகச் சேர சோழ பாண்டிய அரசுகளின் ஆட்சிக்கும், வட இந்திய மகதப் பேரரசின் ஆட்சிக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. மிகப்பெரிய, பரந்து விரிந்த பேரரசுகளின் நகரங்களை பேரரசின் மண்டல அதிகாரிகளே ஆட்சி செய்து வந்தனர். பேரரசுகளில் படிப்படியான அதிகாரவர்க்க நிர்வாகமுறை இருந்து வந்தது. அதனால் பேரரசின் நகரங்களும் பிற பிரதேசங்களும் போதிய சுதந்திரம் இல்லாதவனாக இருந்தன. பேரரசரால் மண்டல அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படவும் வாய்ப்பிருந்தது. இந்நிலைமை பாரசீகப் பேரரசிலும், இந்தியாவில் மகதப் பேரரசிலும் இருந்தது.

ஆனால் தமிழக நகர்மைய அரசுகள் பெரும்பாலும் மூவேந்தர்களின் கிளை அரசர்களால் ஆளப்பட்டன. அல்லது குறுநில மன்னர்களாலும், வேளிர்களாலும் ஆளப்பட்டன. அவை அனைத்துமே தங்கள் நகர்மைய அரசுகளை நிர்வகிப்பதில் முழு சுதந்திரம் உடையவைகளாகவும், தனித்தனி அரசர்களால் ஆளப்பட்டவைகளாகவும் இருந்தன. அவை மிக நீண்ட காலமாக ஆளப்பட்டு வந்தன. இவைகளின் காரணமாக நன்கு வளர்ச்சி அடைந்தவனாக உருவாகின.

சங்ககாலத்தில் இருந்த அளவு எழுத்தறிவும், கல்வியறிவும் வட இந்தியாவில் இருக்க வில்லை. பிற தொழில்நுட்பமும், உற்பத்தித்திறனும், வணிகமும்கூட பழந்தமிழகத்தில் இருந்த அளவு வட இந்தியாவில் இருக்கவில்லை. பழந்தமிழகத்தில் இருந்து உலகம் முழுவதும் பெரிய அளவில் வணிகம் நடைபெற்றது. இவ்வளர்ச்சிகளால் தான் கி.மு. 3ம் நுற்றாண்டின் தொடக்கத்தில் தமிழக அரசுகளின் ஐக்கியக் கூட்டணி மௌரியப் பேரரசைத் தோற்கடிக்க முடிந்தது. சங்க இலக்கியம் போன்ற செவ்வியல் இலக்கியங்களை உருவாக்க முடிந்தது. வட இந்தியாவில் இது போன்ற செவ்வியல் இலக்கியங்கள் அக்காலத்தில் உருவாகவில்லை.

ஆனால் பல வட இந்திய வரலாற்று அறிஞர்கள் வட இந்தியாவில் அரசு உருவாக்கம் ஏற்பட்டு, மிக நீண்ட காலத்திற்குப் பின்னரே தமிழகத்தில் அரசு உருவாக்கம் ஏற்பட்டதாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் தான் முதலில் எழுத்து உருவாகியது. இங்குதான் சங்க இலக்கியம் போன்ற செவ்விலக்கியங்கள் படைக்கப்பட்டது. பல துறைகளிலும் மிக உன்னதமான வளர்ச்சி இங்கு ஏற்பட்டிருந்தது. வட இந்தியாவைவிட தொழிநுட்பமும், உற்பத்தித் திறனும் இங்கு அதிகமாக வளர்ந்து, வணிகம் உலகளாவிய அளவில் நடைபெற்றது. இதெல்லாம் அரசு உருவாக்கம் இல்லாமல் சாத்தியமாகுமா?

கிரேக்கத்திலும், சுமேரியாவிலும் நகர அரசுகளே இருந்தன. பேரரசுகள் உருவாகவில்லை. அங்கு அரசு உருவாக்கம் ஏற்படவில்லையா? அல்லது நாகரிக வளர்ச்சி ஏற்படவில்லையா? பேரரசுகள் தான் அரசு உருவாக்கத்திற்கான அலகு எனக் கருதுவது அரசு என்பது குறித்தத் தவறான புரிதல் ஆகும். ஆரம்பகால நகர உருவாக்கமே ஆரம்பகால அரசு உருவாக்கத் திற்கான தொடக்கம் என்பது உலகளாவிய விதியாக இருந்துள்ளது. அதன்படி பார்த்தால் தமிழகத்தில் வட இந்தியாவிற்கு முன் நகர்மைய அரசுகள் உருவாகி அரசு உருவாக்கமும் முதலிலேயே ஏற்பட்டுவிட்டது.

தமிழ் மொழிக்கான தமிழி எழுத்து கி.மு. 8ஆம் நூற்றாண்டிலேயே இங்கு உருவாகி விட்டது. அதன் பின் 500 ஆண்டுகள் கழித்து, கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தான் வட இந்தியாவில் அசோகன் பிராமி எழுத்து  பயன்படுத்தப்பட்டது. தமிழி எழுத்து உருவானபின் 1000 ஆண்டுகள் கழித்து, கி.பி. 2ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் முதல் முதலாக சமற்கிருத மொழி அசோகன் பிராமி எழுத்தைக் கொண்டு கல்வெட்டில் பதிக்கப்பட்டது.

மகதப் பேரரசு காலத்தில் வட இந்தியாவில் செவ்வியல் இலக்கியம் எதுவும் உருவாகவில்லை என டி. டி. கோசாம்பி குறிப்பிடுகிறார். உலக அளவில் நடந்த பண்டைய இந்திய வணிகம் பெருமளவு தமிழகம் வழியேதான் நடந்தது என்பதைப் பல்வேறு ஆய்வுகள் இன்று உறுதி செய்துள்ளன. சங்ககாலத் தமிழ் மக்கள் மிக அதிக அளவில் எழுத்தறிவு கொண்டிருந்தனர் என ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுகிறார்.

மிக நீண்டகாலத்திற்கு முன்னரே தமிழகத்தில் நகர அரசுகள் உருவாகி அவை சுதந்திரமானத் தனி அரசுகளாகச் செயல்பட்டு வந்ததே இவ்வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாகும். கி. மு. 500 வாக்கிலேயே பல நகரங்கள் தமிழகத்தில் இருந்தன என்பதை இன்றையத் தொல்லியல் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. கி.மு. 1000 வாக்கிலேயே சிறு நகரங்கள் பல தமிழகத்தில் இருந்தன என்பதை எதிர்காலத் தொல்லியல் ஆய்வு உறுதி செய்யும்.

பொருள்முதல்வாத மெய்யியல்:

கி.மு.1000 முதல் கி.மு. முடியும் வரையான 1000 வருடகால பழந்தமிழ்ச் சமூகத்தின் அடித்தளமாக உலகாய்தம், பூதவாதம், சாங்கியம், ஆசிவகம் போன்ற பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துக்களே இருந்தன. பேராசிரியர் நா. வானமாமலை தனது ‘தமிழர் பண்பாடும் தத்துவமும் என்ற நூலில்(பக்: 136,137) “புத்தர் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் பூதவாதம் என்ற பொருள்முதல்வாதக் கருத்துக்கள் நிலவின. அதனைப் படிப்பதற்காக வட இந்தியத் தத்துவ அறிஞர்கள் தமிழகம் வந்தனர் என்ற செய்தியைக் குறிப்பிட்டுள்ளார்.

சமற்கிருத நூற்சான்றுகளைக் கொண்டு உலகாயதம் தமிழகத்தில் மிகத் தொன்மையான காலத்திலிருந்து இருந்துவருவதாகத் தத்துவ அறிஞர் தட்சிண நாராயண சாஸ்திரி அவர்களும், பேராசிரியர் சக்கரவர்த்தி நயினார் அவர்களும் கூறியுள்ளதாக வானமாமலை தனது அதே நூலில் அதே பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார். இவை தமிழகத்தில் தொன்மைக்காலம் முதல் பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துக்கள் நிலவின என்பதை உறுதிப் படுத்துகின்றன.

சங்கம் மருவிய காலமான கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கம் முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரையிலும், களப்பிரர் காலமான கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரையிலும் (கிட்டத்தட்ட 550 ஆண்டுகள்) சமண பௌத்த மதங்களின் மெய்யியல் கருத்துக்களே தமிழ்ச் சமூக வரலாற்றில் மேலாதிக்கம் பெற்ற கருத்துக்களாக இருந்தன. உலகாய்தம், பூதவாதம், சாங்கியம், ஆசிவகம் போன்ற பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துக்கள், சமண, பௌத்த மெய்யியல் கருத்துக்களால் தமிழ் சமூகத்திலிருந்து சிறிது சிறிதாக வெளியேற்றப் பட்டன.

தமிழகத்தில் வைதீக இந்துமதக் கருத்துக்கள் சங்ககாலம் முதல் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்றிருந்த போதிலும், பக்தி காலகட்டம்வரை தமிழ்ச் சமூகத்தில், அவை ஒரு மேலாதிக்கம் பெற்ற மெய்யியல் கருத்தாக உருவாகவில்லை என்பதே உண்மை. பக்தி காலத்திற்குப் பின்னரே அக்கருத்துக்கள் தமிழ் சமூகத்தில் மேலாதிக்கம் பெறத் தொடங்கின.

பல்லவர்கள் ஆட்சியும், இடைக்காலப் பாண்டியர்கள் ஆட்சியும் அதற்குப் பெருந்துணை புரிந்தன. பிற்காலச் சோழர்கள் ஆட்சியும், பிற்காலப் பாண்டியர்கள் ஆட்சியும் அவைகளுக்கு நல்லாதரவு தந்தன. ஆளும் வர்க்கம் எப்பொழுதுமே வைதீக இந்து மதத்திற்கு ஆதரவாகவே இருந்தது.

பல்லவர்கள் ஆட்சி தமிழகத்தில் சமற்கிருதமயமாக்களுக்கு அடித்தளம் அமைத்தது என்றால் விஜயநகரப் பேரரசுகால நாயக்கர் ஆட்சி தமிழகத்தில் பரிபூர்ண பிராமணியமயமாக்களுக்கு வழிவகுத்தது. நாயக்கர் கால ஆட்சியில் தான் வைதீக இந்துமதம் முழுமையாகத் தமிழ்ச் சமூகத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து  அடிமைப் படுத்தியது. பிராமணியத்தின் முழுமைபெற்ற ஆதிக்க ஆட்சி அப்பொழுது நடைபெற்றது எனலாம்.

பண்டைய தமிழ்ச் சமூகத்தின் பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனது. சமற்கிருதமயமாக்கம் என்பது முழுமை பெற்றது. கோயில்களில் இருந்து தமிழ் முழுமையாக அகற்றப்பட்டு அங்கு சமற்கிருதம் முழுமையாக நிலைநிறுத்தப்பட்டது.

திருமலை நாயக்கர் காலத்தில் பழனி முருகர் கோயிலில் பூசை செய்து வந்த புலிப்பாணி  மரபில் வந்த  பண்டாரங்கள் (தமிழ்) அகற்றப்பட்டு அவ்விடத்தில் தெலுங்கு சிவப் பிராமணர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். (ஆதாரம்: ச.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ்நாட்டுச் செப்பேடுகள், தொகுதி-2, பக்:81) அதன் மூலம் தமிழும் அகற்றப்பட்டது.

நாயக்கர்கள் ஆட்சியில், தமிழ் ஆரியர் எனப்பட்ட தமிழ் பிராமணர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு, மராட்டிய, தெலுங்கு, கன்னட, மழையாள பிராமணர்கள் எனப்படும் திராவிட பிராமணர்கள்(தமிழ் அல்லாத) தமிழகமெங்கும் ஆதிக்கம் பெற்றனர். திருச்செந்தூரில் மழையாள பிராமணர்கள் ஆதிக்கம் பெற்றதை, திருச்செந்தூர் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. (ஆதாரம்: அதே நூல், பக்;97)

தமிழ் மொழியின் நிலை:

பல்லவர்காலம் முதல் சமற்கிருத மொழி தமிழகத்தில் ஆதிக்கம் பெறத்துவங்கிய போதிலும்  பக்திகாலம் வரையிலும் தமிழ் மொழி நல்ல நிலையில் இருந்தது. அதன் பிறகும் பிற்கால பாண்டியர் ஆட்சி முடியும் வரையிலும் தமிழ் ஆட்சிமொழியாக இருந்ததோடு, சமற்கிருதத்திற்குச் சமமான மதிப்பையும் பெற்றிருந்தது. அதன் பின்னர் நாயக்கர்கள் ஆட்சியில் தான் ஆட்சிமொழி என்ற தகுதியையும், அதன் மதிப்பையும் தமிழ் இழந்தது.

நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் ஆட்சி மொழியாகத் தெலுங்கு ஏற்றம் பெற்றது. அந்நிய மொழி ஆட்சியாளர்களாலும், பிராமணிய ஆதிக்கத்தாலும் தமிழ் புறக்கணிக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் தமிழ் மரபில் வந்த சேதுபதி மன்னர்கள் கூட செப்பேடுகளில் தங்கள் பெயர்களைத் தெலுங்கில் எழுதுவதோடு தெலுங்கிலேயே கையெழுத்தும் இட்டனர். (ஆதாரம்: ச.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ்நாட்டுச் செப்பேடுகள், தொகுதி-2, பக்:83)

தமிழகக் கோயில்களில் சமற்கிருதம் இருந்தது; ஆட்சி மொழியாகத் தெலுங்கு இருந்தது. தமிழகத்தில் சமற்கிருதமும் தெலுங்கும் ஏற்றம் பெற்றன. அதன் காரணமாகத் தமிழிசை கூடக் கர்னாடக இசை எனப்பெயர்பெற்று அதனைத் தெலுங்காலும் சமற்கிருதத்தாலும் பாடுவதே பெருமை என்ற நிலை உருவாகி இசையிலிருந்தும் தமிழ் அப்புறப்படுத்தப் பட்டது. 2000 வருடங்களாக இசையை வளர்த்தத் தமிழ், தமிழகத்திலேயே வெளியேற்றப்பட்டது.  சாதாரணத் தமிழ் மக்களிடம் மட்டுமே தமிழ் இருந்தது.

தமிழகத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்:

தமிழக வரலாற்றில் “வைதீக இந்துமத ஆதிக்கத்தின் தொடக்கம் என்பது தமிழகத்தின், தமிழ் மொழியின் வீழ்ச்சிக்கான தொடக்கம் என்பதைக் காண முடிகிறது. நாயக்கர்கள் ஆட்சி இங்கு நிலைத்து நின்றதற்கு  வைதீக இந்துமத ஆதிக்கம் ஒரு முக்கியக் காரணமாகும்.  வைதீக இந்துமத ஆதிக்கத்தின் மறு வடிவமே பிராமணிய ஆதிக்கமாகும். இவைகளே தமிழகத்தின் வீழ்ச்சிக்கும், தமிழின் வீழ்ச்சிக்கும் மிக முக்கியக் காரணி என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

தமிழின் வீழ்ச்சி என்பது தமிழ் சமூகத்தின் வீழ்ச்சிக்கும்,  தமிழ் சமூகத்தின் வீழ்ச்சி என்பது தமிழின் வீழ்ச்சிக்கும் காரணமாகியுள்ளது என்பதையும் தமிழக வரலாறு நமக்குப் போதிக்கிறது. ஆகவே தமிழ்மொழிக்கு ஏற்படும் வீழ்ச்சி என்பது தமிழ் சமூகத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்து ஆங்கிலத்தின் ஆதிக்கத்திலிருந்தும் சமற்கிருத, இந்தி மொழி ஆதிக்கத்திலிருந்தும் தமிழ்மொழியைப் பாதுகாப்போமாக!

பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்கள் தமிழ்ச் சமூகத்தில் வலிமை பெற்றிருந்தவரை தமிழ்ச் சமூகம் நல்ல வளர்ச்சி நிலையில் இருந்தது. சமண பௌத்த மதக் கருத்துக்களின் ஆதிக்கத்திற்கு முன்பே, சங்ககாலத் தமிழ்ச் சமூகம் பரவலான கல்வியறிவை, எழுத்தறிவைக் கொண்டிருந்தது. தொழில் நுட்ப வளர்ச்சியிலும், உற்பத்தித் திறனிலும், உலகளாவிய வணிகத்திலும் தொடர்ந்து வளர்ச்சி பெறும் சமூகமாக இருந்தது. சங்கம் மருவிய காலத்தில் இவ்வளர்ச்சி மேலும் வளர்ந்து உச்சகட்டத்தைத் தொட்டது.

அதே சமயம் சமூக மேல்தளத்தில் ஏற்பட்ட கருத்து மோதல்களும், சமூக அடித்தளத்தில் ஏற்பட்ட பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும், உற்பத்தி முரண்பாடுகளும் வளர்ந்து உச்ச நிலையை அடைந்தன. மணிமேகலைக் காப்பியம் சமூக மேல்தளத்தில் கடுமையான கருத்து மோதல்கள் நடைபெற்றன என்பதையும், சிலப்பதிகாரக் காப்பியம் சமூக அடித்தளத்தில் இருந்த ொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும், வணிகர்கள் அரசனுக்கு எதிராக நின்றதையும் தெளிவு படுத்துகின்றன.

மூவேந்தர்களிடம் இருந்த வைதீக இந்து மதத் தாக்கம் ஆதிக்கக் கண்ணோட்டத்தை வளர்த்து, தமிழகத்தின் வடஎல்லையில் பாதுகாப்பு அரணாகவும் கொங்கு, தொண்டை மண்டலங்களில் சுதந்திரத் தனி  அரசுகளாகவும் இருந்த பல குறுநில மன்னர்களையும் வேளிர்களையும் அழித்து ஒழிக்கக் காரணமாகியது. சமூகத்தளத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் (கருத்து மோதல்களும், ஏற்றத்தாழ்வுகளும்), சுதந்திரத் தனி அரசுகள் அழிக்கப்பட்டதும், சர்வதேசக் காரணங்களால் ஏற்பட்ட தமிழக வணிகத்தின் வீழ்ச்சியும், தமிழகத்தின் வடக்கே இருந்த சாதவ கன்னர்களின் வீழ்ச்சியும், களப்பிரர் படையெடுப்புக்குக் காரணமாகி, தமிழகத்தின் வீழ்ச்சிக்கு வழிகோழியது எனலாம்.

சமண, பௌத்த மதக் கருத்துக்களின் ஆதிக்கத்திற்குப் பின்னரே தமிழ்ச் சமூகம் பரவலான எழுத்தறிவை, கல்வியறிவைப் பெற்றது எனக் கருதப் படுகிறது. அது உண்மையல்ல. சமண, பௌத்த மதக் கருத்துக்கள் மிக அதிக ஆதிக்கம் பெற்ற வட இந்தியாவிலும், தமிழகம் தவிர்த்தப் பிற தென்னிந்திப் பகுதியிலும் பரவலான கல்வியறிவோ, எழுத்தறிவோ இருக்கவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்வது நல்லது. மேலும், சமண, பௌத்த மதக் கருத்துக்கள் சங்கம் மருவிய காலத்தில் தான் தமிழகத்தில் ஆதிக்கம் பெற்றன.

ஆனால் அதற்கும் முன்னரே தமிழகம் பரவலான எழுத்தறிவை, கல்வியறிவைப் பெற்றிருந்தது.  தமிழ்ச் சமூகத்தில் மிக நீண்டகாலமாக இருந்து வந்த பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்களும், தமிழகத்தில் நகர்மைய அரசுகளில் இருந்த, சுதந்திரமான தனி அரசுகளும் தான் இந்தப் பரவலான கல்வியறிவுக்கும், எழுத்தறிவுக்கும் காரணமாகும். தமிழகத்தின் தொழிநுட்பம் மற்றும் உற்பத்தித் திறன் வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி, உலகளாவிய வணிக வளர்ச்சி போன்றவைகளுக்கும் இவைகளே காரணங்களாகும்.

எனவே சங்க இலக்கியங்களைக் கொண்டு மட்டும் சங்ககால வரலாற்றைக் கண்டறிவது என்பது குருடர்கள் யானையைப் பற்றி அறிந்து கொண்டது போலாகிவிடும். சங்ககாலத்தில் வைதீக இந்துமதக் கருத்துக்கள், சமண பௌத்த மதக்கருத்துக்கள் போன்ற பல கருத்துமுதல்வாத மெய்யியல்கள் இருந்த போதிலும், தமிழ்ச் சமூகத்தின் அடித்தளமாகப் பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்களே இருந்தன.

இன்றைய நவீனச் சமூகத்தில் பல கருத்து முதல்வாத மெய்யியல் கருத்துக்கள் இருந்த போதிலும், அதன் அடித்தளமாக இருப்பது பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துக்களே என்பதைப் போன்று தான் சங்ககாலத்திலும் இருந்தது. அதனைச் சங்க இலக்கியம் கொண்டு மட்டும் கண்டறிவது இயலாது. அக்காலத் தொல்லியல், நாணயவியல், கல்வெட்டியல், மொழியியல் போன்ற பல்வேறு துறைகளின் ஆய்வுகள் மூலமே அதனைக் கண்டறிய இயலும்.

சங்ககாலக் கல்வெட்டியல் சங்ககாலத்தில் சமண பௌத்த மதக் கருத்துக்கள் ஆதிக்கம் பெற்றிருந்தன என்ற தோற்றத்தைத் தருகிறது. அக்கல்வெட்டுகளில் பல ஆசிவகச் சார்புக் கல்வெட்டுக்கள் என்ற கருத்தும் உள்ளது. தமிழகத்தில் சங்ககாலத்தில் இருந்த 2000 ஊர்கள் தற்பொழுது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக திரு இராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்றவற்றில் இதுவரை ஒரு சதவீதத்துக்கும் குறைவான ஆய்வே நடந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுபோன்றே பல ஆயிரம் கல்வெட்டுக்கள் இன்னும் படியெடுத்துப் படிக்கப்படவில்லை. ஆகவே அதிக அளவில் ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்பது உறுதியாகிறது. அதிக அளவிலான ஆய்வுகள் ஒவ்வொன்றும் தமிழகத்தின் பழமையை,  அதன் நாகரிகத்தை, அதன் பண்பாட்டு மேன்மையை உயர்த்தி வந்துள்ளது என்பதே இதுவரையான வரலாறு ஆகும்.

முடிவுகள்:

கீழ்க் கண்ட முடிவுகளைக் கருதுகோள்களாகக் கொண்டு, விரிவான ஆழமான ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம்.

1.வரலாற்றுக்கு முந்திய காலத்தை, மனித இனத்தின் பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்து தொகுப்பது போலவே, வரலாற்றுக் காலத்தையும் பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்து தொகுப்பது என்பதுவே  உண்மையான வரலாறு ஆகும்.

2. நகர உருவாக்கமே அரச உருவாக்கத்தின் தொடக்கம் என்பதோடு, அரசு உருவான பின்னரே ஒரு மொழிக்கு எழுத்து உருவாக முடியும்.

3. தமிழகத்தில் கி.மு. 7ம், 8ம் நூற்றாண்டு வாக்கிலேயே சேர, சோழ. பாண்டிய அரசுகள் உருவாகிவிட்டன.

4. தமிழகத்தில் கி.மு. 1000 முதல் கி.மு. முடியும் வரையான 1000 ஆண்டுகளில், பல கருத்து முதல்வாத மெய்யியல் கருத்துக்கள் இருந்த போதிலும், பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்களே தமிழ் சமூகத்தின் அடித்தளமாக இருந்தது.

5. தமிழ் சமூகத்தில் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்துதான் வைதீக இந்து மதம் ஒரு ஆதிக்கம்பெற்ற மதமாக மாறியது எனினும், நாயக்கர் கால ஆட்சியில் தான் அது முழுமை பெற்று, பரிபூர்ண பிராமணியத்தையும், சமற்கிருதமயமாக்கலையும் தமிழகத்தில் அது நிறுவியது எனலாம்.

6. பிற்கால பாண்டியர் ஆட்சிக்காலம் வரை தமிழகத்தின் ஆட்சி மொழி யாகவும் ஓரளவு கோயில் மொழியாகவும் இருந்த தமிழ் புறக்கணிக்கப்பட்டு, நாயக்கர் ஆட்சிகாலத்தில் தெலுங்கு ஆட்சி மொழியாகவும் சமற்கிருதம் முழுமையான கோயில் மொழியாகவும் மாற்றப்பட்டது.

7. தமிழ் மொழியின் வீழ்ச்சி என்பது தமிழ் சமூகத்தின் வீழ்ச்சிக்கும், தமிழ் சமூகத்தின் வீழ்ச்சி என்பது தமிழ் மொழியின் வீழ்ச்சிக்கும் காரணமாகியுள்ளது என்பதை தமிழக வரலாறு நமக்கு உணர்த்துகிறது.  

- கணியன்பாலன் 

சில ஆதாரநூல்கள்:

1.‘தொல்லியல் நோக்கில் சங்க காலம்-கா.ராஜன்

2.TAMILS HERITAGE- NATANA. KASINATHAN

3.AN EPIGRAPHIC PERSPECTIVE ON THE ANTIQUITY OF TAMIL BY IRAVATHAM  MAHADEVAN - THE HINDU, DT : 24.6.2010)

4.சங்ககாலச் சமுதாயமும் செவ்வியல் தமிழும்-கணியன்பாலன்

Pin It