அருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் வடலூர் இராமலிங்க அடிகள் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 5ஆம் நாள் சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூர் என்கின்ற கிராமத்தில் இராமய்யாப் பிள்ளை சின்னம்மையார் ஆகியோருக்குப் பிறந்தார். குழந்தையாக இருக்கும்போதே இவரின் தந்தை இறந்தார், இவரின் தாயார் சென்னை அருகே அமைந்துள்ள பொன்னேரியில் குடியேறினார்.

சென்னையில் ஏழுகிணறு பகுதியில் எண்.39, வீராசாமிப் பிள்ளைத் தெருவில் தனது அண்ணன் சபாபதி குடியிருந்த வீட்டின் மாடியில் இராமலிங்கம் பிள்ளை கல்வி கற்கத் தொடங்கினார். ஆனால் கல்வியில் நாட்டமில்லை. முருகக் கடவுளை வணங்குவதிலேயே காலத்தைக் கழித்தார். சிறு வயதிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு பல பாடல்களைப் பாடியுள்ளார். அப்பாடல்களே திருவருட்பா என்று போற்றப்படுகின்றன.

இராமலிங்கரின் அண்ணன் சபாபதியும் அண்ணியும் மூத்த சகோதரியின் மகள் தனக்கோட்டியை இராமலிங்கருக்குத் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், இவரோ இல்லற வாழ்க்கையில் ஈடுபட மறுத்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். அதன் பின்னரும் சில ஆண்டுகள் சென்னை நகரிலேயே தங்கி இருந்தார்.

சென்னையிலிருந்தபோது அடிக்கடி திருவொற்றியூர் சென்று வழிபட்டுவந்தார். அதேபோன்று சென்னை நகரத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கந்தக் கோட்டம் சென்று கந்தப் பெருமானை வழிபட்டு வந்தார். அங்கு செல்லும்போது பல மணிநேரம் தங்கி தியானத்தில் ஒன்றிவிடுவார்.

இராமலிங்க அடிகள் வடலூர் சென்று அங்கு நிலையாகத் தங்குவதற்கு முன்பே தமிழகம் முழுவதும் யாத்திரை சென்றுள்ளார், வள்ளலார் சென்னையில் 25 ஆண்டுகளும் வடலூரில் 26 ஆண்டுகளும் வாழ்ந்தார். அனைத்து, சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத் தன் வாழ்நாளை அர்ப்பளித்துக் பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் 1867 ஆம் ஆண்டு சத்திய ஞானசபை மற்றும் சத்திய தருமசாலை அமைத்தார்.

மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்லார் வழி வகுத்தார். இன்றுவரை வள்ளலார் பெயரில் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றுவிக்கம் வடலூரில் நடைபெறுகிறது.

மக்களைப் மயக்கப் பிடியிலிருந்து விடுவிக்க வள்ளலார் செய்த சீர்த்திருத்தங்களில் மற்றொன்று மக்களைக் கள் குடியிலிருந்து சீர்திருத்துவதாகும். வள்ளலார் வாழ்ந்த சமுதாயத்தில் மக்கள் கள்ளுண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். இதனால் நாடு பொருளாதாரம் ஒழுக்கம் ஆகியவற்றில் சீர்கேடுகளை அடைந்துள்ளது. எனவே இக்கள் குடியை மக்களிடமிருந்து அகற்ற வள்ளலார் பெரிதும் வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தார்.

கள் உண்ணுவது ஒருவரை எந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதை “கள், காமம், கொலை, களவு, பொய் இவையனைத்தும் கொடிய துன்பத்தை உண்டுபண்ணும். இவ்வைந்திலும் கொலை விசேட பாவம், எனினும் கள் உண்டவருக்கு காமம் உண்டாகாமல் இருக்காது, கொலை செய்யத் துணிவு வராமல் இராது. அவன் களவு செய்யாமல் இரான். பொய் பேச அஞ்சான், ஆகையால் இந்த ஐந்தையும் ஒழிக்க வேண்டியது அவசியம். இவற்றில் ஒன்றை அடைந்தவன் ஆனாலும் அவனை மற்றவை தொடராமல் இரா'' என வலியுறுத்தினார்.

இராமலிங்கர் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் கல்வி கற்க வேண்டும் என ஆர்வம் கொண்டிருந்தார். ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இராமலிங்கர் துறவறம் மேற்கொண்டாலும், குடும்பப் பெண்களைப் பழித்துப் பேசியவரல்லர். இல்வாழ்க்கையை வெறுத்துவிடுமாறு பிறருக்கு உபதேசிக்கவுமில்லை.

அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகளை மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் தொடங்கும்வரை, கொடிகட்டிப் பறந்த பார்ப்பனிய மதம். கிறித்துவப் பாதிரியார்களின் பிரச்சாரம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பாதிரியார்கள் வெறும் மதப்பிரச்சாரத்தோடு நின்றுவிடாமல், சாதியால், மதத்தால் ஒடுக்கப்பட்டுக்கிடந்த இந்து மதத்தைச் சார்ந்த மக்களை அணுகி அவர்கள் பால் அன்பு காட்டி, ஆக்க வழியில் தொண்டு புரிந்தனர். இதனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் கிறித்துவ மதத்தினராய் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெரிதும் பெற்றனர்.

பிற மதங்களின் படையெடுப்பால் இந்து மதம் அழிந்து கொண்டிருந்தது. இந்துக்களிடையே நிலவிய மூடநம்பிக்கைகள், சாதி வழிப்பட்ட உயர்வு தாழ்வு மனப்பான்மைகள், வைதிகர்களின் புரட்டுசடங்குகள் இந்து மதத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

இந்நிலையில் 1774 ஆம் ஆண்டு முதல் 1836 ஆம் ஆண்டு வரை நால்வர் ஒருவர் பின் ஒருவராக இந்து மதத்தில் தோன்றினார்.

இராமலிங்கர் தோன்றுவதற்கு 49 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1774 ஆண்டு மே திங்கள் 12 ஆம் நாள் ராம்மோகன்ராய் மேற்கு வங்கத்தில் பிறந்தார். இவர் ஒரு ஆன்மீகவாதியாகத் திகழ்ந்தாலும் கடுமையாக இந்து மத மூடநம்பிக்கைகளை எதிர்த்தார். சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்திற்குத் தடை விதிக்கக் காரணமானவர்.

இராமலிங்கர் தோன்றிய ஓராண்டில் தயானந்தர் (சரசுவதி) 1824 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 12 ஆம் நாள் குஜராத்தில் பிறந்தார். இவர் இந்து மதத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பால்ய விவாகத்தைக் கடுமையாக எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார். உருவ வழிபாட்டை ஏற்க மறுத்தார்.

இராமலிங்கர் தோன்றிய 13 ஆண்டுகளுக்குப்பின் அதாவது 1836 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 18 ஆம் நாள் மேற்கு வங்கத்தில் இராமகிருஷ்ணன் பிறந்தார். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்று வலியுறுத்தினார். விவேகானந்தர் இவரை குருவாக ஏற்றுக் கொண்டார்.

இராமலிங்கர் காலத்தில், மதங்கள் தங்களுக்குள்ளே போட்டியிட்டு போராடத் தொடங்கி ஒருமைப்பாட்டிற்குக் கேடிழைத்துவிட்டனர். அதனால் மதங்களை அழித்தாலன்றி, உலகிலுள்ள மக்கள் அனைவரும் ஒரு குடும்பம் ஆக ஒன்றுபட சாத்தியமில்லை என்றார்.

இராமலிங்கர் உலகிலுள்ள எல்லா மதங்களையுமே வெறுத்தார். இருப்பினும் அம்மதங்களைச் சார்ந்த மக்களிடையே ஒருமைப்பாடு காண விரும்பினார். தமது கொள்கைகளுக்கு ஆதரவு தேடிட முதலில் இந்து, சமண, பவுத்த மதங்களிடையே மட்டும் இணக்கம் மேற்கொண்டார்.

அன்பே தெய்வம் என்றார்.

தெய்வம் உண்டென்று நம்பி, அதுவும் ஒன்றென்று தெளிந்து

ஆன்ம நேய ஒருமைபாட்டுணர்வுடன் உலகிலுள்ளோர்

அனைவரும் ஒன்றுபட வேண்டும்'' என்றார்.

“சாதி வேற்றுமைகள் அடியோடு தொலைய வேண்டும்

மதங்கள் அனைத்துமே தொலைந்து மதங்களற்ற

மனித சமுதாயம் அமைய வேண்டும்'' என்றார்.

உயிர்கள் அனைத்தையும் சமமாகக் கருதி அவற்றின் பால்

அன்பு செலுத்த வேண்டும். பட்டினி தொலைந்து பாரினுள்ள அனைவரும் பசியாற உண்ண வேண்டும்'' என்றார்.

இராமலிங்கர் கண்ட சமரச சன்மார்க்கத்தில், சாதி, சமய பேதங்களுக்கு இடமில்லை. அவர் பாடுகிறார்

“சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே

சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகிர்

அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே''

என்று சாதி மதப் பற்றாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறார்.

வள்ளலார் காலத்தில் வறுமை சமுதாயம் பெற்ற சாபமாகக் கருதப்பட்டது. பட்டினி பாவத்தின் பரிசாகவும், பட்டினி கிடப்போன் பாவத்தின் சின்னமாகவும், பாவியாகவும் கருதும் இழிநிலை இருந்தது. பட்டினி கிடக்கும் பாவிக்கு உணவளிப்பவனும் பாவத்தில் பங்கு பெறுகிறான் என்று கூடப் பயமுறுத்தப்பட்டது. இந்தக் கொடுமை கண்டு உள்ளங்குமுறிய வள்ளலார் “இதனை நினைக்குந்தோறும் உள்ளம் எரிகின்றது, உடம்பும் எரிகிறது' என்று கூறினார்.

வள்ளலார் காலத்திற்கு முன்பு இந்த சமயத் தலைவர்கள், தங்கள் கொள்கையைப் பரப்ப மடங்களை அமைத்தனர். மடம் துறவிகளுக்கு மட்டுமே உரியது. சங்கம் இல்லறத்துக்கும் உரியது எனவே வள்ளலார் புத்தரைப் போல் சங்கம் அமைத்து தன் கொள்கைகளைப் பரப்பினார்.

வள்ளலார் மக்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்தார். தான் கண்டு சொல்லும் பேரூண்மையைக் கேட்க நாட்டு மக்களெல்லாம் தனது வழியிலேயே நடப்பார்கள் எனக் கருதினார்.ஆனால் மக்களின் போக்கினைக் கண்டு ஏமாற்றமடைந்தார். “கடைவிரித்தேன் கொள்வாரில்லை'' என மனமுடைந்து சங்கத்தை மூடிவிடும்படி ஆணையிட்டு சித்திவளாகத்திற்குச் சென்று கதவை மூடிக்கொண்டார்.

தமிழர்கள் சித்தி வளாகத்திற்குள் இன உணர்ச்சியற்றவர்கள் என்பதால் வள்ளார் பிறந்த தமிழகத்தில், தமிழர்கள் அவருடைய புரட்சிகரமான சீர்த்திருத்தக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் அதே நேரத்தில் ராசாராம் மோகன்ராய், தயானந்த சரசுவதி, இராமகிருஷ்ணர் ஆகிய மூவருக்கும் அவர்கள் விரும்பாத நிலையிலும், சுய இனச்சக்திகள் அவர்களை போற்றிப் புகழ்ந்தனர்.

வள்ளலாரின் சுய இனமோ உணர்ச்சியற்றது. எனவே அவரைப் போற்ற எவரும் இல்லை.

வள்ளலார் வழி நடப்போம், சாதி மத பேதங்களை குழி தோண்டிப் புதைப்போம்.

(பாசறை முரசு நவம்பர் 2011 இதழில் வெளியானது)

Pin It