பெரியாரும், அவருடைய திராவிடர் கழகமும் தேர்தலில் போட்டியிட்டது இல்லை. அதை அரசியல் இயக்கமாக நடத்துவதை விட சமூக, சீர்திருத்த இயக்கமாகவே நடத்தி வந்தார். திமுகவும் முதலில் அப்படித்தான் இருந்து பிறகு தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவினை எடுத்தது. ஆனால் பெரியார் எந்த தேர்தலிலும் திமுகவை ஆதரிக்கவில்லை. (1967க்கு முன்) காமராசர் அவர்களையே ஆதரித்து வந்தார். காமராசு காங்கிரசுக்காரர் என்பது பெரியாருக்குத் தெரியாதா? காங்கிரசு பார்ப்பனீயக் கட்சி, நேரு ஒரு காசுமீரத்துப் பார்ப்பனப் பண்டிதர். அவருடைய தொங்குசதை தான் காமராசர் என்பது தெரியாதா? தமிழ்நாடு என்ற அளவில் பார்த்தாலும் கூட காமராசரின் அரசியல் குரு சத்யமூர்த்தி  என்ற பார்ப்பனர்தான் என்பது தெரியாதா? ஆயினும் சத்யமூர்த்தி என்ற பார்ப்பனருக்கும், இராசாசி என்ற அய்யங்கார் பார்ப்பனருக்கும் இடையே இருந்த மோதலைப் பயன்படுத்தி காமராசரை தன்வயப்படுத்தினார் பெரியார்.   சத்யமூர்த்தி மறைவிற்குப் பிறகு பெரியாரின் வேலை எளிதாயிற்று. இராசாசி கொண்டு வந்த குலதர்மக் கல்வி முறை, இந்தி திணிப்பு, பார்ப்பனீய ஆதிக்கத்தை மீட்கொணர்தல் போன்றவற்றை  எதிர்ப்பதற்கும் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு இவற்றை கொணர்வதற்கும் காமராசரை  பயன்படுத்திக்கொண்டார் பெரியார். அதற்காக அவர் காமராசரின் அடிமையாக ஆகிவிட்டார் என்பது அல்ல, காமராசரைப் பயன்படுத்திக் கொண்டார் என்பதே வரலாறு.

காமராசரின் காங்கிரசு பற்று, பிற்போக்குத்தனம், முதலாளித்துவ சார்பு குறிப்பாக அவருடைய சாதிப் பற்று இவையெல்லாம் பெரியார் அறிந்தவையே. தன்னுடைய இறுதிக்கூட்டத்தில் பெரியார்  கூறுவதைக் காண்போம். "நாம் சாதி ஒழிக என்று கத்துகிறோமே எவனாவது நம்முடன் வந்து சேருகிறானா? சாதி ஒழிப்பு மாநாடு, அர்ச்சகர் உரிமை மாநாடு என்று பேசுகிறோமே எவனாவது வேறு கட்சிக்காரன் ஆதரிக்கிறானா? கம்யூனிஸ்டு ஆதரிக்கிறானா? காமராசர் சாதி ஒழிக என்று சத்தமிட்டுச் சொல்கிறாரா? அவரால் முடியுமா? முடியாதே. கண்ணீர்த்துளிகளில் (திமுகவை பெரியார் அப்படித்தான் குறிப்பிடுவார்) சில பேர் வருவார்கள் அது கூட அய்யந்தான். மற்றபடி வேறு எவன் வந்தான்.?" (சான்று பெரியாரின் இறுதிப் பேருரை) பெரியாருக்கு காமராசருடன் பலவகை வேறுபாடுகள் இருந்தும் அவர் பார்ப்பனர் அல்ல என்பதற்காக மட்டுமே அவரை அவரை இராசாசிக்கு எதிராக உயர்த்திப்பிடித்தார்.

பெரியாரின் மற்றும் ஒரு செய்கையும் காண்போம். 1967 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் காங்கிரசு தோற்றுக் கொண்டு இருந்தது. அண்ணா அமைத்த கூட்டணி பெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது. இது பெரியார் எதிர்ப்பார்க்காத ஒன்று. ஆனால் காமராசர் முதலமைச்சர் பதவியை விட்டு விலகி கட்சித் தொண்டு என்ற பெயரில் வட நாட்டுக்கு சென்றபொழுது அதைத் தடுக்க முயன்றவர் பெரியார். காமராசர் இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் காங்கிரசின் கதி அதோகதி என்பதை உணர்ந்த பெரியார் தடுத்துப் பார்த்தும் காமராசர் கேட்கவில்லை. ஆனாலும் காமராசரும் காங்கிரசும் தோற்கும் அளவிற்கு மோசமாகப் போகும் என்று பெரியார் நினைக்கவில்லை. அந்த தேர்தலில் பெரியாரும் திராவிடர் கழகமும் காங்கிரசைத்தான் ஆதரித்தன. இராசாசி, பொது உடைமைக் கட்சிகள், மா.பொ.சி., ஆதித்தனார் என்று அனைவரையும் திரட்டி அண்ணா கூட்டணி அமைத்திருந்தார். குறிப்பாக இராசாசியை கூட்டணியில் சேர்த்தது, பார்ப்பன வாக்கு வங்கியை முதல் தடவையாக திராவிட இயக்கத்தை நோக்கித் திருப்பியது. இராசாசியும் காங்கிரசுடன் தனக்கு இருந்த பழைய பகையை அண்ணாவின் மூலம் தீர்த்துக் கொண்டார். பெரியாருக்கு அச்சம் ஏற்பட்டு விட்டது. "போச்சு போச்சு எல்லாம் போச்சு. அப்போதே சொன்னேன் டில்லிக்கு போக வேண்டாம் என்று கேட்கவில்லை. (காமராசரை குறிப்பிடுகிறார்) இப்போது அதன் பலன் இப்படி ஆயிற்று" என்று குமுறினார்.

அந்த நேரத்தில் திமுக அரசு அமைத்தது. அண்ணா அவர்கள் பெரியாரை சந்தித்து ஆசி பெற விரும்பினார். பெரியார் சம்மதிப்பாரா என்ற அச்சம். பெரியார் அப்போது திருச்சியில் உள்ள பெரியார் மாளிகையில் தங்கி இருந்தார். அப்பொழுது திருச்சி திமுக தலைவர்களில் முதன்மையானவரும், பெரியாரின் அன்புக்கு உரியவரும் ஆகிய அன்பில் தருமலிங்கம் அவர்களிடம் இருந்து தொலைபேசி வந்தது. அண்ணா அவர்கள் பெரியாரை சந்தித்து வாழ்த்து பெற விரும்புகிறார் என்ற தகவல். சிறிது நேரம் சிந்தனைக்குப் பிறகு பெரியார் சரி என்றார். சென்னையில் இருந்து அண்ணா, கருணாநிதி, அன்பில் என்று திமுக தலைவர்கள் பெரியாரை சந்தித்து தங்களது வெற்றியை காணிக்கையாக்குவதாக சொல்லி, வணங்கி வாழ்த்தும் பெற்று சென்றனர். அதன்பிறகு சென்னை சென்று இராசாசியையும் சந்தித்தனர். அது வேறு செய்தி.

இந்த இடத்தில் பெரியாரின் நடவடிக்கையை நாம் சற்று கூர்ந்து நோக்க வேண்டும். முதல் நாள் வரை  திமுகவைக் கடுமையாக சாடி எதிர்த்தவர்; காங்கிரசை மிகவும் ஆதரித்தவர். இன்று அப்படியே மாறி திமுகவின் வெற்றியை ஏற்றுக்கொண்டு வாழ்த்தவும் செய்தார். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று இப்பொழுது சொல்லிவிடலாம். ஆனால் பெரியாரின் குண நலங்களுக்கு இது முற்றிலும் மாறுபட்டது. திமுக தலைவர்கள் வந்து சென்ற பிறகு அங்கு ஒரு கனத்த அமைதி நிலவியது. மணியம்மையார், கி.வீரமணி, அப்பொழுது திகவில் இருந்த (தற்பொழுது திமுகவில் இருக்கும்) திருச்சி செல்வேந்திரன் ஆகியோர் அங்கு இருந்தனர். அவர்கள் பெரியாரை வியப்புடனும் சிறிது சினத்துடனும் நோக்கினார். பெரியார் அமைதியைக் கலைத்து "நான் அவர்கள் கொடுத்த மரியாதையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அது பார்ப்பனனுக்குப் (இராசாசி) போய்ச் சேர்ந்துவிடும். அவன் அந்த இடத்தைப் பிடித்துக் கொள்வான். எனவேதான் நான் திமுக வெற்றியை எனது வெற்றியாக ஏற்றுக் கொண்டேன்" என்று கூறினார். இதை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் மணியம்மையார் தன்னுடைய கீச்சுக்குரலில் வெகுநேரம் பெரியாருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார் என்று திருச்சி செல்வேந்திரன் தன்னுடைய நினைவுகளில் பதிவு செய்துள்ளார். எந்த சூழ்நிலையிலும் பார்ப்பனனுக்கு எதிரான நிலையை எடுப்பது என்ற தமது உறுதியான கொள்கையில் பெரியார் திடமாக நின்றார்.

இது போன்றே மற்றொரு நிகழ்வையும் குறிப்பிடலாம். திருச்சியில் குன்றக்குடி அடிகளார் தலைமையில் பெரியாருக்குப் பாராட்டுவிழாவும் (பணமுடிப்பும்..... அது இல்லாமலா) நடைபெற்றது. குன்றக்குடி  அடிகளார் பெரியாருக்கு பொன்னாடை போர்த்தி பணமுடிப்பு வழங்கினார். பெரியார் மிக்க சிரமத்துடன் ஆசனத்தில் இருந்து எழுந்து வணங்கினார். அப்பொழுது அவர் யாரும் எதிர்ப்பாராத வகையில் ஒரு செயலை செய்தார். அதைக் கண்டு அவையினர் அனைவரும் திகைத்து அமைதியில் உறைந்துவிட்டனர். பெரியார் சடாரென்று குன்றக்குடி அடிகளாரின் கால்களில் விழுந்து வணங்கினார். பிறகு மற்றவர்கள் தூக்கிவிட எழுந்து நாற்காலியில் அமர்ந்தார். கூட்டத்தினர் அதிர்ச்சியுற்றதில் வியப்பு என்ன இருக்கிறது? பெரியார் அவர்கள் ஒரு ஆதிக்கவாதியின், சாமியாரின், மடாதிபதியின் காலில் வீழ்ந்து வணங்குவதா? அதிலும் ஒரு பொதுக்கூட்டத்தில் !! சுயமரியாதைக் கட்சி என்று ஏற்படுத்தியவரே தன்னுடைய மரியாதையை இழந்து இன்னொரு மனிதனின் காலில் விழுவதா? வயது முதிர்வின் காரணமாக பெரியாருக்கு புத்தி பேதலித்து விட்டதா? என்று பலவாறான எண்ணங்கள் கூட்டத்தினர் நடுவே தோன்றின. 

கூட்டம் முடிந்து செல்லும்போதும் பெரியார் உட்பட அனைவரும் அமைதி காத்தனர். பெரியார் மாளிகையை அடைந்தும் யாருக்கும் பெரியாரிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்கத் துணிவில்லை. பெரியாரே அமைதியைக் கலைத்தார். "நான் ஏன் அப்படி செய்தேன் என்று உங்களில் யாருக்காவது விளங்குகிறதா?" என்று கேட்டார். ஒருவரும் அமைதியைக் கலைக்கவில்லை. பிறகு பெரியாரே தொடர்ந்தார். "சூத்திரன் ஒருவன் மடாதிபதியாய் வருவது அரிது. எனவே அவருக்கு நான் செய்யும் மரியாதையின் காரணமாகப் புகழ் கூடும். சூத்திரன்  புகழ் கூடினால் அது நன்மைதானே. அதற்காக நான் காலில் விழவும் தயங்கமாட்டேன்" என்று கூறினார். இதையும் திருச்சி செல்வேந்திரன் அவர்கள் தமது நினைவுகளில் பதிவு செய்துள்ளார்.

மேலும் பெரியார் கூறியது. "சர்.சி.பி.இராமசாமி அய்யர் என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உயர்ந்த படிப்பு படித்தவர். உலகமெல்லாம் சுற்றியவர். இந்தியாவில் இருக்கும்போது சுத்தசைவமாக இருக்கும் இவர், வெளிநாட்டிற்கு சென்றால் மாட்டுக் கறியை உண்ணுவார். அதிலும் மாட்டு நாக்கு என்றால் விரும்பி உண்ணுவார். அப்படிப்பட்ட பார்ப்பனர் அடிக்கடி காஞ்சி சங்கர மடத்திற்கு அடிக்கடி செல்லுவார். அப்படி செல்லும் பொழுது எல்லாம் தன்னைவிட வயதில் மிக இளையவரான சந்திரசேகரசுவாமிகள் காலில் வீழ்ந்து வணங்குவார். ஏன்? அப்பொழுதுதான் பார்க்கும் மக்கள் எல்லாம் அடா அடா சுவாமிகள் எவ்வளவு பெரிய மகான். சர்.சி.பி.இராமசாமி அய்யரே காலில் வீழ்ந்து வணங்குகிறாரே என்று வியந்து காஞ்சி மடத்தையும் பெரியதாக எண்ணிக் கொள்வார்கள். பார்ப்பனன் அவன் சாதியை முன்னேற்றுவதற்காக காலில் விழுவதை தவறு என்று நினைக்கவில்லை. அதுபோல நானும் சூத்திரன்  பெருமை வளரும் என்று நினைத்தால் காலில் விழவும் தயங்க மாட்டேன். எனக்கு என்னுடைய மரியாதையை விட என்னுடைய இனத்தின் மரியாதையே முக்கியமாகும்".

பெரியாரின் இந்த கருத்து ஆழ்ந்து சிந்திக்கக் வேண்டிய ஒன்று. இன்றைய பெரியார்வாதிகள் தங்கள் மனச் செருக்கினை சுயமரியாதை என்று தவறாக என்னுகின்றனர். பார்ப்பனன்/சூத்திரன்  என்ற அளவுகோலை மாற்றி அவர்களும் தங்களுடைய மெத்தப் படித்த மேதாவித்தனத்தால் புதிய பார்ப்பனர்களாகச் செயல்படுகின்றனர். அதன் ஒரு சிறிய வெளிப்பாடே மாமி ஆட்சிக்கு வந்த செய்தியாகும்.