பணிவார்ந்த வணக்கம்.

கடந்த 29.04.2010 இந்து நாளிதழில் முதல் பக்கத்தின் இறுதியில் வெளியாகியுள்ள செய்தியில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் இரவிகுமார் “பிராமி’’ எழுத்தைத் “தமிழி’’ என்று அழைக்கலாம் என்று கூறிய கருத்துக்குக் “கல்வெட்டுகள் புத்த பிராமி, அசோகன் பிராமி, மௌரிய பிராமி என்று பகுக்கப் பெற்றுள்ளதாகவும், “இலலிதவி சுக்தரம்’’ என்னும் புத்த சமய நூல் “திராவிடி’’ என்று அழைத்துள்ளது என்றும் கூறிவிட்டு, ஐராவதம் மகாதேவன் போன்ற கல்வெட்டாய்வாளர்கள் “தமிழ் பிராமி’’ என்று அழைப்பதே சரி என்று கூறியுள்ளதாலும், “தமிழ் பிராமி’’ என்பதைத் “தமிழி’’ என மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லையென்றும் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விடையளித்திருக்கிறார்.

இதுபற்றிய எமது தாழ்மையான கருத்தைப் பணிந்து தெரிவிக்க விரும்புகிறேன்.

இதுபற்றி முதலில் மறைந்த தமிழறிஞர் சா. கணேசன் கூறியுள்ளதைக் காணலாம்.

“தமிழகத்தில் உள்ள எழுத்துக்களைப் “பிராம்மி’’ என்று அழைத்தல் சரியா என்பது சிந்திக்கத்தக்கதாகும். சமண நூலில் காணப்படுவதுபோல “தாமிழி’’ என்ற பெயர் தான் பொருத்தமானது என்று இரா. நாகசாமி கருதுகிறார். தமிழகத்தில் வழங்கிய எழுத்துக்குத் தமிழரல்லாதவர்கள் அவர்கள் மொழி மரபுக்கேற்பத் “தாமிழி’’ என்று பெயர் கூறலாம். ஆனால் நாம் நம் மரபுக்கேற்ப, “தமிழ் எழுத்து’’ என்று கூறுவதுதான் பொருத்தம் என்பதே என் அழுத்தமான கருத்து’’ என்று தமிழ்நாடு அரசுத் தொல்லியல்துறை வெளியிட்டுள்ள “கல்வெட்டுக் கருத்தரங்கு’’ என்னும் நூலில் பக்கம் 52இல் தெளிவாக எழுதியிருக்கிறார்.

அதே கட்டுரையில் பக்கம் 53இல் “ஆதலால் அவர்கள் “திராமிடம்’’ என்றது தமிழையே குறிக்கும். சங்ககாலம் என்பது கிறித்துவாப்தத்தின் தொடக்கம் வரை நிலவிய காலம் எனலாம். அக்காலத்தே நிலவிய இருபெரும் நாகரிகங்கள் பிராகிருத நாகரிகமும், தமிழ் நாகரிகமுமே எனலாம். எனவே, தமிழ்மொழியை அக்காலத்தே எழுத உபயோகித்த எழுத்திற்குத் “தாமிழி’’ என்று வடபுலத்தவர் அழைத்தது நியாயமே. உண்மையாகப் பார்க்கப்போனால் அதைத் “தமிழ்’’ என்றே குறிக்க வேண்டும்’’ என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

இரண்டாவதாக நடுவணரசு கல்வெட்டுத் துறையில் சமற்கிருதப் பகுதியில் உயர் கல்வெட்டாய்வாளராகப் பணி புரிந்த முனைவர் சங்கரநாராயணன் சமற்கிருத மொழியில் மிகச் சிறந்த அறிஞர். அப்பெரியார் “பிராமி’’ எழுத்து பற்றிக் கூறும் கருத்து இங்கு நோக்கத்தக்கது.

“பதஞ்சலி என்னும் சமற்கிருத எழுத்தாளர் “பிராமி’’ எனும் சொல்லை ஒரு “மருத்துவ மூலிகை’’ என்று கூறியிருக்கிறார். அமரகோசம் எனும் நூல் “பிராமி’’ என்பதை “வாக்குத் தெய்வம்’’ என்றும், “மருத்துவ மூலிகை’’ என்றும் பேசுகிறது. இதிகாச நூல்களிலும் மற்றும் புராணங்களிலும் “பிராமி’’ எனும் சொல் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவை அது ஒரு எழுத்து என்ற முறையில் ஆளப் படவில்லை. “நாரதசுமிருதி’’ எனும் நூல் எழுத்தைப் பிரமன் தோற்றுவித்தார் என்று கூறுகிறதேயழிய, எழுத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால் இந்துக்களின் எண்ணத்தில் இந்த உலகமே பிரம்மாவால் தோற்றுவிக்கப்பட்டது என்று கருதப்பெறுகிறது. “பிராமி’’ எனும் சொல் எழுத்தைக் குறிப்பதாகச் சமண, பௌத்த இலக்கியங்களில் தவிர வேறு எந்த இலக்கியங்களிலும் குறிக்கப்பெறவில்லை.

பிறிதோரிடத்தில், “இந்தியத் தத்துவ ஞானிகள், பேச்சைத்தான் தெய்வமாகப் போற்றினார்கள். எழுத்தை அல்ல’’ என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஆதலால் அசோகனது கல்வெட்டுகள் “பிராமி’’ எழுத்தில் எழுதப்பட்டுள்ளன என்று கருதுவதே தவறான தாகும். அம்மன்னனது கல்வெட்டுக்கள் “தர்மலிபி’’யில் எழுதப்பெற்றிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அசோகனது பெரும்பாலான கல்வெட்டுக்கள் எழுதப் பெற்றிருக்கும் எழுத்துக்குப் “பிராமி’’ என்ற பெயரைச் சூட்டியவர் பியூலர் என்ற வெளிநாட்டாரே ஆவார். அவர் இவ்வாறு இந்தப் பெயரைத் தந்திருப்பது ஐயத்திற்கு அப்பாற்பட்டதன்று என்றும், மேலும் அசோகன் கல்வெட்டு எழுத்துக்களுக்குப் “பிராமி’’ என்ற பெயர் தந்திருப்பது நம் வசதிக்காகவே தவிர அதுதான் உண்மை என்றல்ல என்றும் டி.பி. வர்மா எனும் வடநாட்டு அறிஞர் தெரிவித்திருக்கிறார்.

அசோகனது கல்வெட்டுக்களே “பிராமி’’ எனும் எழுத்தில் எழுதப்பெறவில்லை என்றிருக்கையில் தமிழ் நாட்டுப் பண்டைக் கல்வெட்டுக்கள் “தமிழ் பிராமி’’யில் எழுதப்பெற்றிருக்கின்றன என்று கூறுவது எங்ஙனம் பொருந்தும்? “பிராமி’’ என்பது பேச்சுக்குரிய தெய்வமே தவிர எழுத்துக்குரிய தெய்வமில்லை.

சமண நூல்களிலும், பௌத்த நூல்களிலும் குறிப்பிடுகிற அச்சொல் எகிப்து நாட்டின் “ஈரோகிளிப்’’ போன்று இந்திய நாட்டின் உருவ எழுத்தைக்  (Pictograph) குறித்ததோ என்று டி.பி. வர்மா கருதுகிறார்.

மேற்கூறப்பெற்ற அனைத்துக் கருத்துக்களையும் கருதிப் பார்க்கையில் தமிழ்நாட்டில் காணப்பெறும் பழமை யான கல்வெட்டுக்கள் “தமிழ்’’ எழுத்தில்தான் எழுதப்பெற் றுள்ளன என்று கொள்வதே சாலப்பொருத்தமாகும்.

தமிழ்நாட்டில் கி.மு.5ஆம் நூற்றாண்டு முதல் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியில் காணப்படுகின்றன. இவற்றுக்கான எழுத்து தமிழ் எழுத்தாகத்தான் இருக்கும். கி.மு.3ஆம் நூற்றாண்டில் (200 ஆண்டு களுக்குப் பின்பு) அசோகன் தம் கல்வெட்டுக்களுக்கான எழுத்தை (தர்மலிபியை) முதன் முதலில் உருவாக்கினான் என்று கருதப் பெறுகிறது. அவ்வாறிருக்கையில் அவனது கல்வெட்டுக்களும் நம் தமிழ் எழுத்திலும், பிராகிருத மொழியிலும்தான் உள்ளன என்று கொள்வதே நடுநிலையாளர்களின் சரியான முடிவாக அமையும்.

ஆதலால் மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், நம் தமிழ் மொழிக்குச் “செம்மொழி’’ என்ற பெருமையைப் பெற்றுத் தந்தது போன்று நம் தமிழ்நாட்டில் காணப்பெறும் பண்டைக் கல்வெட்டுக்கள் அனைத்தும் தமிழர்களின் எழுத்தான “தமிழ் எழுத்திலேயே’’ உள்ளன என்ற ஒரு முடிவை, விரைவில் நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவித்துவிட வேண்டு மாய், தமிழார்வலர்களின் சார்பாகவும், தமிழ்மொழி மற்றும் தமிழ் எழுத்து ஆகியவை மீது நான் கொண்டுள்ள பற்று காரணமாகவும் பணிவுடன் வேண்டுகிறேன்.

(கட்டுரை: 'முதன்மொழி' - 2010 ஏப்ரல் இதழில் வெளியானது)

Pin It