செத்தபின் தம்பிடிக்குக்கூட பிரயோஜனமில்லாத மனிதத்தோலுக்கு உயிரோடு இருக்கும்போது உள்ள மதிப்பு வேறெதற்குமில்லை. சோப்புகள், சென்ட்டுகள், கிரீம்கள் என்று எத்தனை வகை அழகு சாதனங்கள் தோலுக்குத் தேவைப்படுகின்றன. இரண்டு வாரங்களில் தோலை வெளுப்பாக்குவோம் என்று உத்திரவாதம் தரும் கிரீம்களுக்கு பெண்களிடையே எத்தனை கிராக்கி! மனிதனின் தோலில் ரோமங்கள் இல்லாததால்தானே இத்தனை கூத்துக்களும். நாய், குரங்கு, கரடி போல உடலோடு முகம் முழுக்க ரோமங்கள் புசுபுசு என்று கம்பளம்போல் வளர்ந்திருந்தால், மேக்கப் செய்வது சாத்தியமா? வழுவழுவென்று ரோமமே இல்லாமல் இருப்பதானால் தானே இது சாத்தியமாகிறது. வெறும் தோலோடு உலகில் உலவும் ஒரே மிருகம் மனிதனாகத்தான் இருக்கும்!

dog_400மனிதனின் தோலிலிருந்து ஏன், எப்போது மயிர்கள் உதிர்ந்தன? அதனால் மனிதன் அடைந்த பரிணாமப் பயன் என்ன? என்பதை அலசுவதுதான் இங்கு நமது நோக்கம். மிருகங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுபவை நிமிர்ந்த இரண்டுகால் நடை, மயிரில்லாத தோல், நீண்ட கை கால்கள், பெரிய தலை, அதனுள் பெரிய மூளை; மொழி, முகபாவனைகள்... ஆகியவை. இவற்றிற்கெல்லாம் தோற்றுவாயாக இருந்தது மனிதனது மயிர்களற்ற தோல்தான் என்கிற புதிய கருத்து உருவாகியிருக்கிறது.

மயிரில்லாமல் உயிரில்லை 

குட்டி போட்டு பாலூட்டும் மிருகங்களுக்கான தனி அடையாளம் உடல்மயிர்தான். மீன்களில் செதில்களாக இருந்தவை பாம்புகளின் செதில்களாகி பின்னர் பறவைகளின் சிறகுகளாகவும் முடிவில் பாலூட்டிகளிடம் மயிராகவும் மாறியிருக்கிறது. அடிப்படையில் அனைத்துமே ஒரே பொருள்தான்.

மிருகங்களால் உடலில் மயிரில்லாமல் உயிர் வாழவே முடியாது. குளிருக்கு நல்ல கம்பளமாகவும், அடி தடி சண்டைகளின்போது உடல் கவசமாகவும் வெயிலுக்குக் குடையாகவும், கிருமிகளிடமிருந்து பாதுகாப்பதில் அரணாகவும் மறைவாகப் பதுங்கிக் கொள்வதற்குத் தக்க கேமொஃப்ளாஜ் ஆகவும், உறவுகள் அடையாளம் கண்டு கொள்வதற்காக அடையாளமாகவும் (புள்ளிமான், வரிகுதிரை, புலிவரிகள்...) பயம், கோபம், ஆக்கிரமிப்பு போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்த சிலிர்த்திடும் பிடறி மயிராகவும் இருப்பது உரோமங்கள்தானே?

வழுக்கைகளும் உண்டு 

மண்ணுக்கடியில் வளை தோண்டி வாழ்நாள் முழுவதையும் நிலத்தடியிலேயே கழிக்கும் மூஞ்சூறுக்கு உடம்பில் ரோமமே கிடையாது. தேவைப்படுவதுமில்லை. பூமிக்கடியில் நெருக்கமாக, கட்டிப்பிடித்துக்கொண்டு கதகதப்பான சூழலில் வாழ்வதால் அவற்றிற்கு ரோமம் தேவைப்படவில்லை. கருங் கும்மிருட்டில் அவை எதைப் பார்த்து என்ன செய்யப்போகின்றன. ஆதலால் கண்களுமில்லை. தேவையற்றவைகளை பரிணாமம் அகற்றிவிடுகிறது. சிக்கன நடவடிக்கை!

கடலில் வாழும் பாலூட்டிகளான திமிங்கலங்களுக்கும், டால்ஃபின்களுக்கும்கூட உடலில் மயிர்கள் கிடையாது. பாதிகாலம் குளம் குட்டைகளிலேயே மூழ்கி வாழும் நீர்யானைக்குக்கூட உடம்பில் மயிர் கிடையாது. எருமைகளுக்கும் அப்படித்தானே. இதற்கெல்லாம் காரணம் உடல் உரோமங்கள் தண்ணீரில் வாழ்வதற்கு இடையூறாக இருப்பதே. இருந்தாலும், நீர் நாய்க்கு மட்டும் உடலில் நெருக்கமாக வெல்வெட் மாதிரி ரோமம் இருக்கிறது. விதிவிலக்கு! மெழுகு பூசியதுபோல நீர் ஒட்டாமல் இருப்பதால் ரோமம் அதற்குப் பிரச்சனையாக இல்லை.

கனமும் பரப்பும் 

பத்தடிக்கு பத்தடி கனமுள்ள கட்டைக்கு பெயின்ட் பூச விரும்புகிறீர்கள். கனசதுரத்திற்கு 6 பக்கங்கள் இருப்பதால் எளிதில் பூசி முடித்துவிடுகிறீர்கள். கன சதுரக் கட்டையை இரண்டு துண்டுகளாகப் பிளந்துவிட்டால் அவ்விரண்டு துண்டுகளின் மொத்த கொள்ளளவு முன்னைப்போலவே அதே அளவு இருந்தாலும், புதிதாக இரண்டு பக்கங்கள் அந்தத் துண்டுகளில் உருவாகியிருப்பதால் அவற்றின் மொத்தப் பரப்பளவு அதிகமாகிறது. தொடர்ந்து பல துண்டுகளாகப் பகுத்துக் கொண்டே போனால் மொத்த கனம் மாறாவிட்டாலும் மொத்த பரப்புகள் பலமடங்கு அதிமாகிக் கொண்டிருப்பது தெரியும்.

கனஅளவுக்கும், பரப்பளவுக்கும் உள்ள விகிதமானது மாறிக்கொண்டே இருக்கும். கனஅளவு சிறிதாகும்போது கனம்-பரப்பு இரண்டுக்குமிடையே உள்ள விகிதம் அதிகமாகிக் கொண்டிருக்கும். அதாவது யானையின் கனபரிமானத்திற்கும் அதன் தோல்பரப்பிற்கும் உள்ள விகிதம் 10 என்று வைத்துக் கொண்டால் எலியின் கனபரிமானத்திற்கும் அதன் தோல் பரப்பளவுக்குமுள்ள விகிதமானது 100 ஆக இருக்கும். குழந்தைகள் பெரியவர்களைவிட அதிக கன-பரப்பு விகிதம் கொண்டிருக்கிறார்கள். பெரிய தோல் பரப்பு இருப்பதால் உடல் உஷ்ணம் சீக்கிரமே குழந்தைகளுக்கு வெளியேறிவிடுகிறது. அதனால்தான் அம்மாவின் அணைப்பில்லாவிட்டால் குழந்தைகள் ரகளை பண்ணுகின்றன.

பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகத் தோல்பரப்பு உள்ளது என்று நினைத்துவிடவேண்டாம். உடம்பு அளவுக்கும் தோல் பரப்புக்குமுள்ள விகிதம்தான் அதிகம் என்று புரிந்து கொள்ளவேண்டும். யானையைவிட எலிகள் சீக்கிரமே உடல் வெப்பத்தை இழந்துவிடுவதால் எலிகளுக்கு ரோமக் கம்பளம் அவசியமாகிறது. மாறாக யானை, காண்டாமிருகம், நீர்யானை, எருமை போன்றவற்றிற்கு தோலில் அதிகம் மயிர்கள் இருந்தால் பிரச்சனைதான். உடம்பின் சூடு சீக்கிரம் வெளியாகாமல் வெந்துபோகும்.

ஏன் ரோமம்?

man_435மனிதனுக்கு உடலில் ரோமம் ஏன் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டுமானால் நமக்கு முன் தோன்றிய மிருகங்களுக்கு ஏன் அது தேவைப்பட்டது என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். உலகம் தோன்றி 3 யுகங்கள் ஓடிவிட்டன. மூன்றாவதாகிய சீனோசோயிக் யுகத்தின் கடைசி ஊழாகிய ப்ளையிஸ்டோசீன் கடுமையான பனி ஊழாக இருந்தது. கடந்த 4 மில்லியன் ஆண்டுகளாகவே பனி ஊழினால் பூமி ஃப்ரிட்ஜ் மாதிரி ஐஸôல் மூடிக் கிடந்தது. சென்ற 10,000 ஆண்டுகளாகத்தான் உலகம் மெள்ள வெதுவெதுப்பாகி இப்போது "குளோபல் வாமிங்' என்ற காய்ச்சலை நோக்கி நகர்ந்தபடி இருக்கிறது.

பாலூட்டிகள் பல்கிப் பெருகிய சீனோசோயிக் காலத்தில், உலகம் கடும் குளிரால் சூழப்பட்டிருந்ததால் குளிருக்குப் பாதுகாப்பாக கம்பளப் போர்வைபோல ""ஃபர்'' உருவானது.

மனித இனம் பிரிந்தது 

பனி ஊழின் இடையிடையே நிலவிய வெதுவெதுப்பான இடைவெளியில் ஆப்பிரிக்காவில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. அடர்ந்த கானகங்கள் சுருங்கி அகண்டு விரிந்த சவான்னா புல்வெளிகள் தோன்றின. அப்போதுதான் மனித இனம், சிம்பன்ஸி, உராங் உட்டான் ஆகிய சக ஹோமினிட் கூட்டத்திலிருந்து பிரிந்தது. ஆப்பிரிக்காவில் ஏறத்தாழ 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனித இனத்தின் பாசில்கள் கிடைத்தன. அந்த மனித இனம் கல்லால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கிறது. அம்மனிதர்களின் உடம்பில் மயிர்கள் இருந்தனவா இல்லையா என்பது ஃபாசில்களில் தெரியவில்லை. இருப்பதிலேயே மிகப் பழைய மனித ஃபாசில்கள் அவை என்பதில் மட்டும் சந்தேகமில்லை.

விரிந்து பரந்த சவான்னா புல்வெளியில் நெடுந்தூரம் வெயிலில் நடந்து, ஓடித் திரிந்து வேட்டையாடிய அந்த மனிதர்களுக்கு உடல் ரோமம் பெரும் பிரச்சனையாக இருந்திருக்கிறது. குளிருக்கு வசதியாக இருந்த ரோமங்கள் வெயிலுக்கு இடைஞ்சலாக இருந்திருக்கிறது. அந்த காலக்கட்டத்தில்தான் ரோமம் குறைவான அல்லது ரோமமே இல்லாத இனம் அதிலிருந்து பிரிந்து வெற்றியுடன் வேகமாகத் தழைக்க ஆரம்பித்திருக்கிறது.

குளிர்சாதனம் 

உடலை எப்போதும் ஒரே சூட்டில் சமச்சீராக வைத்துக் கொள்வதற்காக தோலிலிருந்து வியர்வை உற்பத்தியாகிறது. வியர்வையை உலர்த்துவதன் மூலம் உடம்பு குளிர்கிறது. வியர்வை மூலம் உடலைக் குளிர வைப்பதில் மனிதத்தோல் மிருகத் தோலைவிட திறமையானது. தோலில் ரோமங்களுக்கு இடையேயும், ரோமக்கால்களுக்கு அருகேயும் மூன்று வித சுரப்பிகள் உள்ளன. அவற்றில் ஒன்றாகிய செபேசியஸ் சுரப்பி கொழுப்புபோன்ற பொருளை (முகத்தில் அசடு வழிகிறது என்கிறார்களே அது! எண்ணெய்ப்பசை மிக்கது) உற்பத்தி செய்கிறது. அபோக்ரைன் என்பது இன்னொரு சுரப்பி. அதுவும் உடலைக் குளிரவைக்க ஈரத்தை வெளியிடும் சுரப்பிதான். அது சோப்புத் தண்ணீர் போன்ற திரவத்தை வெளியிடும். மூன்றாவதாகிய எக்ரைன் சுரப்பிதான் உண்மையான வியர்வை சுரப்பி. இந்தச் சுரப்பிதான் மனிதத்தோலில் அதிகமாகக் காணமுடிகிறது. மனித உடலில் உள்ள எல்லா எக்ரைன் சுரப்பிகளும் சேர்ந்து ஒரு நாள் முழுவதும் வேலை செய்தால் 12 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்த முடியும்.

முடிகளற்ற மழுக்கென்ற தோலும், ஏராளமான எக்ரைன் சுரப்பிகளும் சேர்ந்து மிகவும் செயல்திறமையுடைய "கூலிங் சிஸ்ட்டத்தை' மனிதனுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளன. மற்ற மிருகங்களிடம் எக்ரைன் சுரப்பிகள் இல்லாததால் அவற்றால் மனிதனைப் போல உடலை குளு குளுவென்று வைத்துக் கொள்ளமுடியவில்லை. பந்தய குதிரையையும் மனிதனையும் நல்ல வெயிலில் மராத்தன் ஓட்டத்தில் பந்தயம் வைத்தால் குதிரை வெயிலில் சுருண்டு விழுந்துவிடும் மனிதன் வென்றுவிடுவான். குதிரைகளால் தோல் வழியாக உடலைக் குளிர்வித்துக் கொள்ளமுடியாது. ரேஸ் பந்தயத்தில் ஓடிவிட்டு இளைப்பாறிக்கொண்டிருக்கும் குதிரையின் தோலில் சோப்பு நுரைமாதிரி வியர்வை சுரந்திருப்பதைக் காணலாம். அது அப்போக்ரைன் திரவம். சோப்புத் தண்ணீர் மாதிரி நுரைவிடும் அந்த திரவம் வியர்வையைப் போல எளிதில் ஆவியாகி உடலை குளிரச் செய்யாது.

நாய்கள் உடல் சூட்டைத்தணிக்க நாக்கை வெளியே தொங்கவிட்டக் கொண்டு இளைக்கும். நாக்கின் வழியாக ஈரம் காய்ந்து உடல் குளிரும். மான் தனது மூச்சுக்காற்றின் வாயிலாக சூட்டை வெளித்தள்ளுகிறது. பூனைகள் வெயிலில் நடமாடுவதைத் தவிர்த்து இரவில் வேட்டையாடுகின்றன.

மூளையும் தோலும்  

வியர்வையால் உடலை குளுகுளு வென்று வைத்துக்கொள்ள முடிந்ததால் மனிதனால் நீண்ட நேரம், நீண்ட தூரம் நடந்து வேட்டை ஆட முடிந்தது. சக மனிதக்குரங்குகள் பெரும்பாலும் பழம் கிழங்குகளை சாப்பிட்டுக் கொண்டு காலம் தள்ளும்போது மனிதனால் மட்டும் ஊட்டமும், ஆற்றலுமிக்க மாமிச உணவைப் பெற முடிந்தது. அதிக கலோரி உணவு மற்றும் உடல்சூட்டைத் தணிக்கும் ரோமமற்ற தோல் இரண்டும் சேர்ந்து அவனது மூளை பெரிதாக வளர உதவின.

உடல் உறுப்புகளிலேயே அதிக சூடாகும் பகுதி மூளைதான். மூளை நொய்மையான உறுப்பாகையால் அது அதிக சூட்டில் மக்கர் செய்ய ஆரம்பித்துவிடும். வெயிலில் திரியும்போது சிலர் மயக்கமடைந்து சுருண்டு விழுவதன் காரணம் இதுதான். மூளையின் சூட்டைத் தணிக்காவிட்டால் மரணம் நிச்சயம். மிருகங்களுக்கு மூளை சிறிதாகவே இருந்துவிட்டதற்குக் காரணம் அவற்றின் கூலிங் சிஸ்ட்டத்தின் இயலாமைதான். மனித குலத்தின் மூதாதைகளாகிய ஆஸ்ட்ரலோ பித்தேசைன் இனத்திற்கு (இப்போது அந்த இனத்தில் எதுவும் எஞ்சி இல்லை- மனிதனைத்தவிர) வெறும் 400 கிராம் மூளைதான். இப்போதிருக்கும் சிம்பன்சியின் மூளையும் அவ்வளவே. இவற்றிலிருந்து பிரிந்து மயிரற்ற உடம்பு பெற்ற மனித இனத்திற்கு மூளையின் அளவு மூன்று மடங்கு பெரியது. ஹோமோ எர்காஸ்ட்டர் என்ற ஒரு பழைய மானுட இனத்தின் கபாலத்தின் கொள்ளளவு 800 சிசிதான். சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றுத் தந்த நமது பெரிய மூளை, நமக்கு பண்பாடு, நாகரிகம் என்ற இரு முக்கிய சமுதாயக் கூறுகளையும் வழங்கியது அதன் உற்பத்திதான் மொழி.

தலைமுடி

உடம்பிலிருந்து ரோமங்களை இழந்த மனிதனுக்கு தலையில் மட்டும் ஏன் முடி? மனிதன் நிமிர்ந்து நடக்க ஆரம்பித்ததும் அதிகமாக சூரிய ஒளிபடும் இடம் தலையாக இருந்ததால் சூரியனின் ஆபத்தான புறஊதாக் கதிரிலிருந்து பாதுகாக்க புருவமும், கருத்த தலை முடியும் நிலைத்துவிட்டது. தலைமுடி காபலத்தை குளிரவாக்கவும் உதவுகிறது. புசுபுசுவென்று நீண்டு சுருண்ட முடிகளின் ஊடே காற்று சுலபமாகப் புகுந்து வெளியேறி மண்டைத்தோலில் கசியும் வியர்வையை ஆவியாக்கி குளிர்விக்கின்றது.

ஒருவகையில் ஒளிக்கு வடிகட்டியாகவும், இன்னொரு வகையில் காற்றுக்கு பலகணியாகவும் இருந்தது. தலைமுடி தவிர்க்க முடியாத இடைஞ்சல் என்றாலும் சரிதான். அதுசரி ஏன் அக்குள்களிலும் தொடை இடுக்கிலும் ரோமங்கள் தங்கிவிட்டன? ஓடும்போது ஏற்படும் உராய்வைக் குறைக்கின்றன என்பது ஒருபக்கம் என்றாலும் இனக் கவர்ச்சி மிக்க வாசனையை தக்க வைக்கவும் அது உதவுகிறது.

தாடி மீசை ஏன்? என்பதற்கும் விளக்கம் இருக்கிறது. எல்லா மாற்றங்களும், மாற்றங்களின் நிலைப்புகளும் இயற்கைத் தேர்விற்கே மனிதன் விட்டுவிடவில்லை. தனது ரசனை என்னும் தேர்வினையும் பயன்படுத்தி சில பண்புகளைத் தக்க வைத்துக் கொண்டான். ஆண்களிடம் அதிகமாக டெஸ்ட்டோஸ்டீரோன் இருப்பதால் ஆண்மையும், கூடவே அதிக ரோமமும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. பெண்களிடம் டெஸ்ட்டோஸ்டீரோன் குறைவாக இருப்பதால் மீசை, தாடி, மார்பில் ரோமம் முதலியவை இல்லாது போயின. நெஞ்சில் அதிக மயிருடன், தாடி, மீசை அடர்த்தியாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்பியதால் இயற்கையுடன், செயற்கைத் தேர்வும் கைகோர்த்து, முகமயிர்களை ஆண்களிடம் நிறுத்திவிட்டது. இதற்கு எதிர் மறையாக ஆண்கள் பெண்களிடம் மயிர் இல்லாத வழுவழுப்பான சருமத்தையே விரும்பினர். வழுவழுப்பான சருமம் குழந்தைகளுக்கே உரிததானது. எனவே அது இளமையின் அடையாளமாக ஆண்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஈடுகட்டல்

மிருகங்களுக்கு, உடல் ரோமம், குளிருக்கான கம்பளமாக மட்டுமல்லாமல், இன அடையாளங்களையும், மன உணர்வுகளை வெளிப்படுத்தும் சாதனமாகவும் இருக்கிறது. மனிதன் அந்த அநுகூலத்தை இழந்துவிட்டதால் அதை வேறு வகையில் ஈடு செய்து கொண்டான் அதுவே அவனது மொழியாகவும் பண்பாடாகவும் உருவெடுத்தது.

சிங்கம் பிடரி மயிரால் ஆண்மையைத் தெரிவிக்கிறது. சேவல் கழுத்து சிறகுகளைச் சிலிர்த்துக்காட்டி தன் ஆதிக்கத்தை விளம்பரப்படுத்துகிறது. மனிதர் பிடரியால் ஆதிக்கத்தை விளம்பரப்படுத்துவதற்கு பதிலாக போலீஸ் யூனிபார்ம், ராஜ கிரீடம் போன்ற ஆடை, ஆபரணங்களால் ஈடுகட்டிக் கொள்கிறான். சோகம், கண்ணீர், சிரிப்பு போன்ற முகபாவங்களை வெளிப்படுத்த ரோமமில்லாத முகமே சிறப்பாக இருக்கிறது. உடல்முழுவதும் பச்சைக் குத்திக் கொண்டு இனக் குறியீட்டைக் காட்டுதல், நெற்றியில் நாமம் பட்டை என்று சமய அடையாளங்களை வெளிப்படுத்துதல் போன்றவை ரோமங்கள் செய்ய வேண்டியதை பலமடங்கு தீவிரமாகவே செய்கின்றன. பார்த்தீர்களா, போனது உடல் பயிர்! முளைத்தது பண்பாட்டுப் பயிர்!

குழு அடையாளம் என்பது விலங்குகளுக்கு மிக முக்கியமானது. அதற்கு உடலில் உள்ள ரோமங்களும் அதனால் ஏற்படும் அடையாளங்களும் உதவுகின்றன. சிறுத்தைப் புலியின் பிடரியில் சிலிர்த்துக் கொண்டிருக்கும் மயிர் அதன் கோபத்தையும் ஆதிக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. நமக்கு உடலில் ரோமங்கள் இல்லாத குறையை பச்சைக் குத்திக்கொள்வது, நகப்பாலீஷ் போட்டுக்கொள்வது, மருதானி வைத்துக்கொள்வது என்று தீர்த்துக் கொள்கிறோம். பலவிதமான முகபாவங்களைக் காட்டும் விதத்தில் நமது முகம் அதிக மயிர்கள் இல்லாமல் இருப்பதும் ஒருவகையில் வசதியாக இருக்கிறது அல்லவா!
.


monkey_1
(மேலே)

ஆஸ்ட்ரலோபித்தேக்கஸ் அஃபெரென்சிஸ்- 3.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த மனித இனம். இது பெண்ணின் ஃபாசில் என்பதால் லூசி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு கிட்டத்தட்ட வாலில்லாத குரங்குபோல் குட்டையான கால்கள் கொண்டிருக்கிறது. இது மனிதரைப்போல் நெடுந்தொலைவு நடந்து வேட்டையாடியிருக்க வாய்ப்பில்லை. உடல் முழுவதும் ரோமம் முளைத்திருந்திருக்க வேண்டும்.

(கீழே)

ஹோமோ எர்காஸ்ட்டர் தான் கிட்டத்தட்ட மனிதனைப்போல உடல்கொண்ட இனம். கால்கள் வீசி நடப்பதற்கும் பாய்ந்து ஓடுவதற்கும் ஏற்ப நீளமாக இருந்தன. இது 1.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஃபாசில் படிவத்தை அடிப்படையாக வைத்து வரையப்பட்டது. இந்த தருணத்தில்தான் உடலில் முடிகள் அவசியமில்லாமல் போய் மறைந்திருக்க வேண்டும்.

monkey_2

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It