உலகில் மிகப் பெரிய உயிரினம் எது? நீலத் திமிங்கலமா? இல்லவே இல்லை. அது ஒரு காளான். அமெரிக்காவில் ஆரிகான் தேசியப் பூங்காவில் மனி நதியில் 8.8 சதுர கிலோமீட்டர் பரவியிருக்கும் ஹனி பூஞ்சை அல்லது ஆர்மிலேரியா ரெஸ்டியின் நுண் உயிரிகளின் வலையமைப்பே அது. அங்கு மரத்தில் வளரும் நாய்க்குடைகளைக் காணலாம். மண்ணில் வாழும் பூஞ்சைகள் சுற்றுப்புறம், வயல்வெளி, வனங்களில் உள்ள உயிரிக் கழிவுகளை மக்கவைத்து மண்ணிற்கு வளம் சேர்க்கின்றன.

90% மரம் செடி கொடிகள்

இயற்கையில் 90% மரம் செடிகள் பூஞ்சைகளுடன் பரஸ்பர தொடர்புடையவை. மண்ணின் அடியில் மைக்ரோரைஸா பூஞ்சைகள் நுண் உயிரினங்களின் ஒரு வலையமைப்பை உருவாக்கி, தங்கள் வாழிடப் பரப்பை அதிகரிக்கின்றன. செடிகள் ஒளிச்சேர்க்கை நடத்தி உருவாக்கும் கார்போஹைடிரேட்டை உணவாக்கும் பூஞ்சைகள் பதிலிற்கு செடிகளின் வளர்ச்சிக்கு உதவும் சத்துகள், மூலகங்களை மண்ணில் இருந்து உறிஞ்சி அளிக்கின்றன.

காடுகளின் வலையமைப்பு

இத்தொடர்பு மர வலை (wood wide web)/காடுகளின் வலையமைப்பு (Internet of forests) எனப்படுகிறது. 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் தோன்றினான். ஆனால் பூஞ்சைகள் (fungus) பூமியில் ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானவை. மண்ணிற்கு அடியில் வாழும் இவை இனப்பெருக்கம் செய்யும்போது உருவாகும் புதிய தலைமுறையே நாம் காணும் நாய்க்குடைகள். இவை திடீரென்று தோன்றுபவை. ஒரு இடி இடித்து மழை பெய்தால் அடுத்த நாள் இவை தென்படுகின்றன.Mushrooms 600மண்ணில் இருந்து உயிர்த்தெழும் உயிரினம்

இயல்பாக எதிர்பாராதவிதமாக மண்ணில் இருந்து உயிர்த்தெழும் இந்நிகழ்வே mushrooming என்ற சொல் பிறக்கக் காரணம். சுற்றுப்புற வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவை இவற்றின் இனப்பெருக்கத்தை நிர்ணயிக்கும் அம்சங்கள். இதனால் காலநிலை மாற்றம், புவி வெப்ப உயர்வு இவற்றைப் பாதிக்கிறது. மனிதனின் உணவுமுறை, கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய இவை பாரம்பரிய நாட்டறிவுகள், சடங்கு சம்பிரதாயங்கள், நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன.

கலாச்சாரத் தொடர்புகள்

சைபீரியாவில் இவை சாமூக் சடங்குகளில் முக்கிய பங்கு வகித்தன என்று 1690களில் அந்நாட்டில் கைதியாக இருந்த பொலிஷ் குடிமகன் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் குளிரில் அமானிட்டா மஸ்காரியா என்ற அறிவியல் பெயரில் அறியப்படும் ப்ளை அபாரிக் நாய்க்குடைகளில் இருந்து திரவப் பொருட்களை சைபீரியா மக்கள் உருவாக்கி பயன்படுத்தி வந்தனர். இதில் அடங்கியிருந்த ரசாயனப் பொருட்கள் போதையூட்டுபவை.

ரிக் வேதத்தில் தேவர்கள் உண்டாக்கிய சோமரசத்தில் இவை இருந்தன என்று கூறப்படுகிறது. இவ்வகை உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பைப் பற்றி கூறும் அறிவியல் பிரிவு தொல் மைக்காலஜி (ethano mycology). உலகளவில் சீனா மற்றும் மெக்சிகோ இவற்றின் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கின்றன. சீனாவில் 51 இனங்கள் உள்ளன. இதில் 23 இனங்களில் இருந்து 1020 வகை காளான் உணவுகள் உருவாக்கப்படுகின்றன.

புராதன காலத்தில் இருந்தே சீனாவில் இவை நாட்டு சிகிச்சையில் பயன்படுகின்றன. 2018 புள்ளிவிவரங்களின்படி இவற்றின் உலக உற்பத்தியில் 75% சீனாவில் இருந்தே வருகிறது. இந்தியாவில் இருந்து இது வெறும் 2% மட்டுமே. ஆண்டுதோறும் இவற்றின் ஏற்றுமதி மூலம் சீனா 100 இலட்சம் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டுகிறது. இதில் கும்மிங், நார்ப்புவா ஆகிய பிரதேசங்கள் முதலிடம் பிடிக்கின்றன.

உலகில் விலையுயர்ந்த காளான்கள்

மாக்சி டாக்கி, டபில்கள் உலகில் விலையுயர்ந்த வகைகளாகக் கருதப்படுகின்றன. மாக்சிடாக்கி ஒன்றின் விலை $80. டபில்கள் மண்ணில் அடியில் வளர்பவை. சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்கள் மூலமே இவை கண்டறியப்படுகின்றன. லகோட்டோ ரொமோனியோலோ என்ற இனத்தின் விலை $3000 முதல் 5000 வரை. ஒரு கிலோ டபிலின் விலை $80 முதல் 4000. மிதமிஞ்சிய சுரண்டலால் சீனாவில் 1990 முதல் இந்த இரு இனங்கள் அச்சுறுத்தலை சந்திக்கின்றன.

சீனாவின் முன்மாதிரித் திட்டம்

இப்பிரச்சனையை நேரிட சீனா வன மறுசீரமைப்பு கொள்கை (Forest ownership reformation) என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. தனி நபருக்கு நிலத்தை சொந்தமாக்காத நாட்டில் இயற்கை வளங்கள் பாதுகாப்பில் பங்காளிகளாக இவற்றைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு சட்டரீதியான உரிமை கொடுக்கப்பட்டது. அங்கு மட்டுமே வளரும் இனங்கள் பற்றி அறிய சோதனைரீதியில் காப்பு வனங்கள், தோட்டங்கள் அமைக்கப்பட்டன.

மெக்சிகோவில்

மெக்சிகோ உயிர்ப் பன்மயத்தன்மை செழுமை மிக்க ஒரு நாடு. 32 மாகாணங்கள் உள்ள இங்கு ஆதிவாசிகள் அதிகம் வாழ்கின்றனர். காளான்கள் பற்றிய அறிவு இவர்களிடையில் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. 480 காளான் உணவுவகைகள் இங்கு உருவாக்கப் படுகின்றன. பன்னாட்டு அளவில் 120 வகை காளான் பொருட்கள் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆசியாவில் சந்தை படுத்தப்படுகின்றன. மைக்கோ கேஸ்ட்ரானமி (Mico gastronomy) என்பது உணவு, கலை மற்றும் அறிவியல்ரீதியாக இவற்றை சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் குறித்த கல்விப் பிரிவு.

சிவப்புப் புத்தகத்தில்

1948ல் ஐநாவால் சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு யூனியன் (IUCN) அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு 160 நாடுகளில் செயல்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது, தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அழியும் நிலையில் இருக்கும் காளான் வகைகளை சிவப்புப் புத்தகத்தில் வெளியிடுகிறது. உலகில் முதல்முதலாக 1984ல் தேசிய அளவில் அழியும் இனங்களை ஜெர்மனி சிவப்புப் புத்தகத்தில் வெளியிட்டது.

இன்று சிவப்புப் புத்தகத்தில் உள்ள 1,41,000 உயிரினங்களில் இன அழிவை சந்திக்கும் காளான்கள் 285. ஐம்பது இலட்சம் வகைகள் இருப்பதாகக் கருதப்படும் இவற்றில் 285 என்பது 1 சதவிகிதத்திற்கும் குறைவு. 

பூஞ்சைகளுக்கும் வேண்டும் அங்கீகாரம்

2022 டிசம்பரில் கனடா மாண்ட்ரீலில் நடக்கவிருக்கும் ஐநா காப் 15 உயிர்ப் பன்மயத்தன்மை உச்சிமாநாட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தாவர மற்றும் விலங்குகள் போல இவற்றையும் தனிப்பெரும் வளமாக என்று வகைப்படுத்த வேண்டும் என்று பூஞ்சையியல் விஞ்ஞானிகள் வலியுறுத்தவுள்ளனர்.

பூஞ்சைகளை அங்கீகரித்த முதல் உலக நாடு

2012ல் உலகில் முதல்முறையாக இந்த உயிரினங்களுக்கு தேசிய அளவில் சட்டப் பாதுகாப்பை தென்னமெரிக்கா சிலி அளித்தது. அணைக்கட்டுகள், சாலைகள், வீடுகள், தேசிய நெடுஞ்சாலைகள் போன்றவற்றை அமைப்பது பூஞ்சைகளின் வாழிடம், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே நடக்கிறது. டாக்டர் ஜூலியானா கொச்சி என்ற இளம் சிலி பூஞ்சையியல் விஞ்ஞானியின் இடைவிடா முயற்சியால் இது சாத்தியமானது.

இந்த அதிசய உயிரினங்களின் உலகை அறியும் ஆர்வத்தில் 1999ல் அவர் தனது 20வது வயதில் பூஞ்சைக்கான தன்னார்வ அறக்கட்டளையை (Fungi Foundation) நிறுவினார்.

இந்தியாவில்

இந்தியாவிலும் பல மருத்துவ குணங்கள் உடைய பூஞ்சைகள் உள்ளன. அதில் ஒன்று கேரளா பாலக்காடு பகுதியில் காணப்படும் இள மாங்காய். இது ஒரு நாய்க்குடை இனம். இது நாட்டு வைத்தியத்தில் பல நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

பூஞ்சை உணவுச் சுற்றுலா

இந்த உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, பாதுகாக்க கேரள உயிர்ப் பன்மயத்தன்மை பாதுகாப்பு வாரியம் (Kerala Biodiversity Board) முதுகலை படிப்பு முடித்தவர்களுக்கு பூஞ்சை நாய்க்குடைகள் பற்றி சான்றிதழ் படிப்பு ஒன்றைத் தொடங்கியிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளை வரவேற்று விருப்பமுள்ளவர்களுடன் இணைந்து இவை வளரும் வாழிடங்களுக்கு நேரில் சென்று, அவற்றைக் கண்டு, ஆரோக்கியமான உணவு சமைத்துக் கொடுக்கும் மைக்கோ சுற்றுலாவிற்கான திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. மிதமிஞ்சிய பயன்பாட்டினால் இந்த அதிசய உயிரினங்கள் அழியாமல் பாதுகாப்போம்.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It