உலகம் தோன்றி பல கோடிக்கணக்கான ஆண்டுகளில் பல்கிப்பெருகிய உயிரினங்களின் வாழ்க்கை வெவ்வேறு வகைகளில் பரிணாமம் பெற்றுக் கொண்டே வருவதை உலக சரித்திரம் நிரூபித்துக் கொண்டே வருகிறது. உலகில் மற்ற வகை விலங்குகளைக் காட்டிலும் பாலூட்டிகளே முதன் முதலில் உருவானது. உச்ச உயர்வு பால்குடி உயிரினங்களான வாலில்லா குரங்குகள், குரங்குகள், மனிதர்கள் என விரிந்தார்கள். இன்று மனிதர்களின் ஆசைகளினாலும் அத்து மீறல்களாலும் சத்துகுறைவுற்ற உணவு, மிகுந்த மாசு, இரசாயன உரம் மற்றும் தொற்று நோய்களாலும் விலங்கினம் அழிந்து வருவதை உலகம் வருத்தத்துடன் உற்று நோக்குகிறது. காடுகளை அழித்து கழனியாக்குகிறேன் என்று விலங்குகளின் வீடுகளை அழித்து விலங்குகளின் வழித்தடங்களும் மறைக்கப்பட்டு மாற்றப்பட்டு காட்டை விட்டு நாட்டை நோக்கி திசை மாறி விலங்குகளும் உலா வர ஆரம்பித்தன. விரிந்திருந்த காடு அழிக்கப்பட்ட காரணங்களாலும் அவை வாழும்பகுதி சுருங்கி குறுகிய எல்லைக்குள் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட காரணத்தாலும் மேற்கூறிய காரணத்தாலும் விலங்கினங்களில் 80 வகை பாலூட்டிகள் 40 வகை பறவைகள் 20 வகை நில நிர் வாழ்வன மற்றும் ஊர்வன அழிவின் விளிம்பை நோக்கிப் போய் கொண்டிருப்பது, வேதனை யளிக்கும் விசயங்களாகும்.

பாலூட்டிகளில் நீலகிரி மந்தி, தங்கநிற மந்தி, சிங்க வால் குரங்கு, வெள்ளை புருவ குரங்கு, ஒல்லி தேவாங்கு, பெரிய தேவாங்கு ஆகிய உயிரினங்கள் அழிந்து கொண்டிருப்பதில் சிலவாகும். யானைக்கு இந்திய நாட்டின் பாரம்பரிய விலங்கு என்கிற அந்தஸ்து கிடைத்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இன்று இந்தியாவில் 25000 யானைகள் மட்டுமே உள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதிலும் 3500 யானைகள் கோவில் களிலும் சர்க்கஸ் கூடாரங்களிலும் அதற்குப் போது மான உணவு மற்றும் சுகாதாரமின்றி போட்டதைத் தின்று எலும்பும் தோலுமாய் இருப்பதை நினைக்கும் பொழுது வருத்தமாய் உள்ளது.

நமது நாட்டில் தந்தங்களுக்காக ஆண் யானை களை கொல்வது அதிகமாகி வருகிறது. முதலில் 50 பெண் யானைகளுக்கு ஒரு யானை என்றிருந்த விகிதாச்சாரம் இன்று ஆண் யானைகளின் சாகடிப் புக்கு பின்பு 200 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை என்கிற விகிதாச்சரம் இனப்பெருக்கத்திற்குப் போதுமானதாக இல்லை என்பதுடன் விரைவில் யானை இனமும் அழிந்து விடுமோ என்கிற பயம் நெஞ்சில் வறட்சியை உருவாக்குகிறது.

பளிங்கு பூனை, லிங்க்ஸ் பூனை, ஓனாய், இந்தியக் குள்ள நரி, செந்நாய், பழுப்புக்கரடி, புனுகுபூனை, மலபார் புனுகு பூனை, புள்ளி லிங்சாங், சிவப்புப் பாண்டா, எறும்பு தின்னி, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், ஆசிய காட்டுக்கழுதை, சடைமாடு, சதுப்பு நில மான், நாலு கொம்பு மான், நீலகிரி வரையாடு, கஸ்தூரி மான், ஹிஸ்பிட் காட்டு முயல் போன்ற பாலூட்டிகளும் அழிந்து வரும் விலங்கினங்களில் சிலவாகும்.

60 ஆண்டுகளுக்கு முன்பு 40000 புலிகள் வாழ்ந்த இடத்தில் சென்ற ஆண்டு கணக்கெடுப்பின்படி 1400 புலிகள் மட்டுமே இருக்கின்றது என்பது வேதனையிலும் வேதனை இன்னும் 10 ஆண்டுகளில் புலிகள் இனிமே அழிந்து விடுமோ என்கிற பய உணர்வு நம்மைப் போன்றவர்களையும் சமூக ஆர்வலர்களையும் வேதனைக் குள்ளாக்குகிறது.

பாலூட்டிகளில் தான் நிலைமை மோசம் என்றால் பறவையினத்தில் அதை விடக் கொடுமை. மாபெரும் இந்தியப் பஸ்டர்டு, பெரிய இருவாட்சி, லிக் புளோரிக்கான, சைபீரியா கொக்கு, இமயமலை மோனால் பெசன்ட் முதலிய பறவைகளும் அழிவை நோக்கியுள்ளன. அரிய பறவைகளான கௌதாரி, பூ நாரை, வல்லூறு, தீக்கோழி முதலானவைகளும் காலப்போக்கில் அழிந்து வருகிறது. டர்கி போன்ற அளவுடைய டோடோ என்கிற மொரிஷியப் பறவையின் கடைசி உயிர் 1680 ஆம் ஆண்டே பிரிந்து விட்டது. அதன் புகைப்படம் கூட இப்போது இல்லை என்பது வேதனைக்குரியது 1500 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பியர்கள் அங்கே குடியேறியபோது கொண்டு வந்த செல்லப் பிராணி கள் டோடோவின் முட்டைகளை குடித்தே அழிந்து விட்ட காரணத்தால் அந்த இனமே அழிந்து போனது. வட அமெரிக்காப் புறா, மடகாஸ்கரின் யானைப் பறவை ஃபுளோரிடாவின் வண்ணக்கழுகு, தென்னாப்பிரிக்காவின் குவாக்கா ஆகிய அழிந்தே பல நூற்றாண்டுகளாகிவிட்டது. வேட்டை சிறுத்தை, சிவப்புத்தலை வாத்து, மலைக்காடை முதலானவை சென்ற நூற்றாண்டோடு அழிந்து போனது.

ஊர்வனவற்றில் கடல் ஆமை, தோல் ஆமை, கங்கை முதலை, கழிமுக முதலை, சதுப்பு நில முதலை, இந்திய உடும்பு, நீர் உடும்பு, பாம்புகளில் ராஜ மலை பாம்பு, இந்திய முட்டை தின்னி பாம்பு, நீர் நிலத்தில் வாழ்வனவான இமயமலை நியூட், மலபார் மரத் தேரை, கோரோ மலை மரத் தேரை, முதுகெலும்பில்லா பிராணிகளான கிரேஷ்டேஷியன் எனப்படும் நண்டு, நத்தை முதலானவைகளுக்கும், 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய 50000க்கும் அதிகமான வகைகள் உள்ள பூச்சிகளில் அதன் உறைவிட அழிப்பு, சுற்றுச்சூழல் மாசு, அதிக அளவில் அடிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்து போன்றவைகளால் காலப்போக்கில் அழிந்து கொண்டுள்ளன. இமயமலையில் மட்டுமே விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் கஸ்தூரிமான் உள்ளது என்பதும் இதயத்தையே பிசையும் அவலம்.

சிட்டுக்குருவிகள் நூற்றுக்கணக்கில் கூட்டம் கூட்டமாய் பறப்பதையோ இரண்டு தொலைபேசிக் கம்பங்களுக்கு நடுவில் இருக்கும் கம்பிகளில் ஓர் இடம் கூட இடைவெளியின்றி வரிசையாக அமர்ந் திருப்பதையோ வயல்வெளிகளில் இப்போது பார்க் கவே முடியவில்லை. ராஜாளி என்கிற கழுத்தில் வெள்ளை நிறம் கொண்ட (பெருமாள்) பருந்து இப்போது இருக்கிறதா என்றே தெரியவில்லை. தினமும் 11 மணியளவில் எங்கிருந் தாலும் பிரசாதம் எடுக்க பறந்து வரும் பருந்து இப்பொழுது திருக்கழுக் குன்றம் வந்து பிரசாதம் எடுப்பதில்லை என்பதை எண்ணும்போது வருத்தமே மிகுந்து வேதனை வெளிப்படுகிறது. அலைபேசி இப்போது எல்லோர் கைக்கும் வந்து விட்டது. இப்போது 3 லட்சத்து 50 ஆயிரம் அலைபேசி கோபுரங்கள் நாட்டில் எல்லா இடத்திலும் வியாபித்துள்ளது. இன்னும் அலைபேசி கோபுரங் களின் எண்ணிக் கையை அதிகரிக்கத் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. அதில் இருந்து கிளம்பும் மின்காந்த அலைகள் பறவைகளின் உயிரைப் பறிக்கிறது. இனப்பெருக்கத்தை தடுக்கிறது. புற்றுநோயை உருவாக்குகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

புலிகள் பாதுகாப்புத் திட்டம், கிர் சிங்க சரணாலயத்திட்டம், இமயமலை கஸ்தூரி மான் பாதுகாப்புத் திட்டம், ஹங்கல் மான் பாதுகாப்புத் திட்டம், யானை பாதுகாப்புத் திட்டம், பறவைகள் சரணாலயம், முதுமலை சரணாலயம் போன்ற மத்திய மாநில அரசுகளின் முயற்சியின் பலனாக அரியவகை விலங்குகள் அழிந்து வருவதைத் தடுத் தாலும் காடுகள் அழிக்கப்பட்டு அவை வாழும் பகுதி குறைந்து வரையறுக்கப்படுவதும் உணவுக் காகவும் பிற பொருளுக்காகவும், சுடப்படுவதும், இனப் பெருக்கத்திற்கு உதவாத ஆண், பெண் விகிதா சாரமும் விலங்கினங்கள் அழிய காரணங்கள் இன்று விளை நிலங்கள் கட்டடங்களாக மாறி விடுகிறது. சுருங்கி வரும் விவசாய நிலத்திலும் இரசாயன உரங்களை உபயோகித்து அதனால் ஏற்படும் வேதி யியல் மாற்றங்களால் நிலங்கள் அனைத்தும் நஞ்சாகி அதில் விளையும் தானியங்களான நஞ்சையே நாமும் பறவைகளும் உண்டு உயிர் வாழ வேண்டிய கட்டாயம். தோல் சுத்திகரிக்கும் நிலையங்களிலும், சாயப் பட்டறைகளிலும் வெளியேற்றப்படும்கழிவுகள் ஆற்றிலே கலந்து நதியும் நஞ்சாகி வருகின்றது. காடுகளின் பரப்பளவும் குறைந்து சுற்றுச்சூழல் பாதிப்படைந்து பூமி வெப்பமயமாகி வருவதை விஞ்ஞானிகள் உணர்த்தி வருகின்றனர். சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

விலங்குகளின் வாழ்வுரிமையைத் துச்சமாக மதிக்கும் பாமரர்கள் ஒருபக்கம்; விலங்கினம் மற்றும் பறவைகளின் இறைச்சிக்காகவும், தந்தம் போன்ற விலையுயர்ந்த பொருளுக்காகவும் வேட்டையாடும் கூட்டம் ஒரு பக்கம்; தீ, புயல் இடி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஒரு பக்கம், காட்டை அழிக்கும் கும்பல் ஒரு பக்கம்; வேறு என்ன வேண்டும் விலங்கினம் அழிய? ஒரு தொலைநோக்கு பார்வையுடன் அரசு செயல்பட்டால் மட்டும் அடுத்த தலைமுறைக்கு சில விலங் கினங்களை புகைப்படத்தில் மட்டுமே பார்க்கும் அவலம் ஏற்படாது என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.

-கே.வி.கோவிந்தராஜ், விலங்குகள் நலத்துறை அலுவலர் 

(பூவுலகு மார்ச் 2011 இதழில் வெளியானது)

Pin It