தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, நீண்டகாலம் அதை நிறைவேற்றாமல் தள்ளிப் போடுவது கூடுதல் தண்டனை வழங்குவதாகும் என்று கூறி பல வழக்குகளில் உச்சநீதிமன்றம், தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்றியுள்ளது. இரண்டு ஆண்டுகாலம் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாவிட்டாலே அதை ரத்து செய்து விடலாம் என்று தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கருணை மனு போடப்பட்டு 11 ஆண்டு காலத்துக்குப் பிறகு பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாத நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள முக்கிய தீர்ப்புகளை தொகுத்துத் தந்துள்ளோம்:

ஜியான்சிங் எதிர் பஞ்சாப் அரசு

சீக்கியர்களின் ‘அகாலிதள’ கட்சித் தலைவர் ஹர்சந்த் சிங் லோங்கோவோல் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஜியான் சிங் மற்றும் 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் ஜியான் சிங் மீது மட்டும் உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. ஏனைய 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ‘தடா’ சட்டத்தின் கீழ் “குற்றவாளிகள்” விசாரிக்கப்பட்டனர். ஜியான் சிங் தூக்குத் தண்டனை விதித்த பிறகு, 13 ஆண்டு காலம் தண்டனை நிறைவேற்றப்படாமல் சிறையில் இருந்தார். தூக்குத் தண்டனை விதித்து நீண்டகாலம் ஒருவருக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் வைத்திருப்பதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் உச்சநீதிமன்றம் சென்றார். நீதிபதிகள் ஜி.பி. பட்நாய்க், கே.டி.தாமஸ், எஸ்.பி. குர்குதர் ஆகியோர் வழக்கை விசாரித்து தூக்குத் தண்டனையை ரத்து செய்தனர். தூக்குத் தண்டனையை ரத்து செய்தமைக்கு உச்சநீதிமன்றம் இரண்டு காரணங்களை முன் வைத்தது. ஒன்று 1985 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தற்காலிகமான தடா சட்டம் 1987 ஆம் ஆண்டில் காலாவதியாகி ஆகிவிட்டது. ‘தடா’ சட்டம் போன்ற தற்காலிகமான சட்டத்தின் கீழ் தரப்பட்ட தண்டனை அந்த சட்டம் காலாவதியாவதற்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

(Offences, committed against temporary Acts must be prosecuted and punished before the Act expires, and as soon as the Act expires any proceedings which are being taken against a person will ipso facto terminate)

உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய மற்றொரு காரணம், தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, அதை நிறைவேற்றுவதில் எடுத்துக் கொள்ளப்பட்ட நீண்டகாலதாமதம். எந்த ஒரு வழக்கிலும் தண்டனை பெறுகிற ஒருவர் எந்த சட்டத்தின் கீழ் தண்டனை தரப்பட்டாரோ அந்த சட்ட வரம்புக்கு அப்பால், கூடுதலாக தண்டனைகளை அனுபவிக்க முடியாது. இது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். (சட்டப் பிரிவு 20(1)) ஒரு கைதியின் தண்டனையை குறைப்பதற்கு சட்டம் கொண்டு வருவதில் நியாயம் இருக்க முடியுமே தவிர, தண்டனையை அதிகரிக்கச் செய்ய முடியாது. இந்த வழக்கில் மரணதண்டனை விதித்த பிறகு ஒருவர் நீண்ட காலம் தண்டனை வழங்கப்படாமலே தண்டனையை சந்திக்கப் போகிறோம் என்ற மனநிலையில் 13 ஆண்டுகாலம் சிறையில் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்திருக்கிறார். எனவே நாங்கள் தூக்குத் தண்டனையை ரத்து செய்து அதற்கு குறைவான தண்டனையான ஆயுள் தண்டனை விதிக்க வேண்டிய முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

(On the fact situation of this case and in view of the distance of time, particularly in view of the long. period of 13 years during which appellant was languishing in jail under the spell of death penalty. We are persuaded to award the lesser alternative i.e. imprisonment of life) (Judgment reported in 1999(9)SCC 312)

டி.வி. வேதீஸ்வரம் எதிர் தமிழ்நாடு வழக்கு

சுங்கத்துறை அதிகாரியென பொய்யாகக் கூறிக் கொண்டு, சென்னைக்கு வருவோரை, சோதனையிடுவதற்காக அழைத்துச் சென்று, அவர்களை மயக்கமருந்து தந்து கொலை செய்து உடைமைகளைப் பறித்த வழக்கில் வேதீஸ்வரன் என்பவருக்கு தூக்கு தண்டனை தரப்பட்டது. தூக்குத் தண்டனை விதித்து 8 ஆண்டுகள் வரை நிறைவேற்றப்படாத நிலையில் பாதிக்கப்பட்டவர் உச்சநீதிமன்றத்தில், தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓ. சின்னப்பரெட்டி மற்றும் ஆர்.பி. மிஸ்ரா ஆகியோர் மனுவை விசாரணைக்கு ஏற்று, தூக்கு தண்டனையை ரத்து செய்து 16.12.1983 அன்று உத்தரவிட்டனர். (Criminal Appeal No.75 of 1983 Arising Out of Special Leave Petition (Criminal) No.1276 of 1978) and Writ Petition (Crininal) No.17 of 1982)

நீதிபதி ஜெ. சின்னப்பரெட்டி இந்த மனுவில் பிறப்பித்த உத்தரவு மனித உரிமைக்கான ஆவணமாகும். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், அந்தத் தண்டனைக்கு உள்ளாகிறோம் என்ற மனநிலையில் நீண்டகாலம் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டிருப்பது, அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று நீதிபதி கூறுகிறார். இந்த அடிப்படையில் நீதிமன்றங்கள் தூக்குத் தண்டனைகளை ரத்து செய்துள்ள பல்வேறு வழக்குகளை பட்டியலிட்டுள்ளார். சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு வழங்கியுள்ள அடிப்படை உரிமை பொருந்தும் என்று நீதிபதி இத்தீர்ப்பில் நிறுவுகிறார். சட்டத்தினால் நிலைநாட்டப்பட்ட நடைமுறைகளைத் தவிர, வேறு முறைகளில், ஒருவருடைய வாழ்க்கையை அல்லது தனி நபர் சுதந்திரத்தைப் பறித்து விட முடியாது என்று 21 ஆவது பிரிவு கூறுகிறது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு அத்தண்டனையை நிறைவேற்றாமல், நீண்டகாலம் கொட்டடியில் அடைத்து வைப்பது அரசியல் சட்டத்தின் 21வது பிரிவுக்கு எதிரானதே என்று நீதிபதி சின்னப்பரெட்டி இத் தீர்ப்பில் வலியுறுத்துகிறார்.

• எடிகாஅளம்மா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அவருக்கு இரண்டரை ஆண்டுகள் வரை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாததால் அவரது தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

• பகவான் புக்ஸ்வழக்கில் இரண்டரை ஆண்டுகள் வரை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாததாலும், சாது சிங் என்பவர் வழக்கில் முன்றரை ஆண்டுகள் வரை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாததாலும் தூக்குத் தண்டனைகள் இந்த வழக்குகளில் ஆயுள் தண்டனைகளாக மாற்றப்பட்டன.

• 1978 ஆம் ஆண்டு உ.பி.யில் சாது சிங் என்பவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை மூன்று ஆண்டு 7 மாதங்கள் வரை நிறைவேற்றப்படாததால் காலதாமதத்தை கருத்தில் கொண்டு நீதிபதிகள் ஜெ.சின்னப்பாரெட்டி, ஜெ.ஜெ.சென், ஏ.பி. சர்க்காரியா ஆகியோர் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தனர்.

கிரிமினல் சட்ட நடைமுறைகளின்படி மாவட்ட நீதிமன்றம் வழங்கும் தூக்குத் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும். இப்படி தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு உயர்நீதிமன்றம் விசாரணையில் முன்னுரிமை தர வேண்டும். உச்சநீதிமன்றத்துக்கும் இது பொருந்தும். இத் தண்டனைகளை நிறுத்தவோ, ரத்து செய்யவோ, குறைக்கவோ, ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் அரசியல் சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டுக்கும், மறுபரிசீலனைக்கும் நியாயமான கால வரம்புகள் இருக்கவே செய்கின்றன.

இவைகளையெல்லாம் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு இரண்டாண்டு காலம் வரை அத்தண்டனை நிறைவேற்றப்படாத நிலையில் அதற்குப் பிறகு, அவர், அரசியல் சட்டம் வழங்கியுள்ள 21வது பிரிவு அடிப்படை உரிமைகளின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரும் உரிமையைக் கோர முடியும் என்றே கருதுகிறோம். எனவே மனுதாரரின் மனுவை ஏற்று, தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது.

(Making all reasonable allowance for the time necessary for appeal and consideration of reprieve, we think that delay exceeding two years in the execution of a sentence of death should be considered sufficient to entitle the person under sentence of death to invoke Article 21 and demand the quashing of the sentence of death. We thereore, accept the special leave petition, allow the appeal as also the writ petition and quash the sentence of death. In the place of the sentence of death. We substitute the sentence of imprisonment for life.)

“சட்டத்தின் நடைமுறை தண்டனை வழங்கிய தோடு முடிவுக்கு வந்துவிடவில்லை. தண்டனையை செயல்படுத்துவதும், அதில் அடங்கியிருக்கிறது. தூக்குத் தண்டனையை நிறைவேற்றாமல் நீண்டகாலம் காவலில் காக்க வைத்திருப்பது நீதிக்கு, நேர்மைக்கு, தக்க காரணங்களோடு உட்படாத நடைமுறை என்பதால் இந்தத் தவறை நேர் செய்வதற்கான வழி தூக்குத் தண்டனையை ரத்து செய்வதாகும்.”

(Procedure established by law does not end with the pronouncement of sentence; it includes the carrying out of sentence. Prolonged detention to await the execution of a sentence of death is an unjust, unfair, and unreasonable procedure and the only way to undo the wrong is to quash the sentence of death)

தயாசிங் எதிர் இந்திய அரசு

பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் கெய்ரோன் சுடப்பட்ட வழக்கில் மரணதண்டனை பெற்றவர் தயாசிங். கல்கத்தா அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு, குடியரசு தலைவர் மற்றும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 1991இல் உச்சநீதிமன்றத்துக்கு தயாசிங் கடிதம் எழுதினார். நீதிபதிகள் ஜெ.எஸ். வர்மா, எல்.எம். சர்மா முன் விசாரணைக்கு வந்தது. 1972 ஆம் ஆண்டிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டு, 1988 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கவனத்தில் கொண்டு தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

(Judgement reported in 1991(3) SCC61)

தொகுப்பு: விடுதலை இராசேந்திரன்

(பெரியார் முழக்கம் ஆகஸ்ட், 2011 இதழில் வெளியானது)

Pin It