உயிர்களின் அடிப்படை அலகு செல். அனைத்து உயிர்களும் செல்களால் ஆனவை. உயிர் தோன்றக் காரணமாக இருக்கும் செல்களே ஸ்டெம் செல்கள் எனப்படும். முதல் அல்லது ஆதிசெல்கள் என்றும் இவற்றை அழைக்கலாம். நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உள்ள வெள்ளை அணுக்களும், உடலுக்குத் தேவையான பிராணவாயுவை இரத்த ஓட்டத்தின் மூலமாக அனைத்து உடல் பாகங்களுக்கும் கொண்டு செல்லும் சிவப்பு அணுக்களும், இரத்தம் உறையவும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவும் காரணமான பிளாட்டிலெட்ஸ் என்பவையும் இந்த ஸ்டெம் செல்களில் தான் உள்ளன. ஸ்டெம் செல்கள் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் உடையவை. தேவையான தருணத்தில் உடலில் உள்ள 210 வித்தியாசமான அணுக்களாக தன்னை உருமாற்றிக் கொள்ளக்கூடியவை. ஸ்டெம் செல்களை நாம் குருத்தணுக்கள் என்று அழைக்கலாம். 

teethஸ்டெம் செல்கள் இரு வகைப்படும். முதல்வகை சிசு ஸ்டெம் செல்கள் எனப்படும் Embryonic Stem Cells (ESC). இரண்டாவது வகை  உடலின் சிலவகையான திசுக்களில் காணப்படும் Tissue Stem Cells/Adult Stem Cells. இவையன்றி Induced Pluripotent Stem Cells (IPS cells) எனும் தூண்டப்பட்ட ஸ்டெம் செல்கள் என்ற வகையும் உண்டு. நமது உடலில் உள்ள தோல், ரோமம் இவற்றின் அணுக்களை மரபணுவியல் தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்டெம் செல்லாக மாற்றும் நிகழ்வே தூண்டப்பட்ட ஸ்டெம் செல்கள் எனப்படும். ஸ்டெம் செல்களை மூன்று வழிகளில் பெறலாம். 

1.கருக்கள் மூலம் (Embryonic)

2.ஆட்டோலொகஸ் (Autologous)

3.தொப்புள் கொடி மூலம் (Umbilical cord)

நோயுற்ற உடல்செல்களை அகற்றிவிட்டு புதிய செல்களை மனித உடலில் உருவாக்கும் முயற்சியே ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் நோக்கம். ஸ்டெம் செல்கள் வழியாக அனைத்து நோய்களுக்கும் தீர்வு காணமுடியும் என்று கூறுவதற்கு இயலாது. அதே நேரத்தில் இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் பல குறிப்பிடத்தக்க நோய்களை ஸ்டெம் செல்கள் மூலம் தீர்க்க இயலும் என்று ஜப்பானிய ஆய்வாளர் நோர் என்பவர் குறிப்பிடுகிறார்.

பால் பற்கள், ஞானப்பற்கள் இவற்றை பிடுங்க நேரும்போது அவற்றிலிருந்து ஸ்டெம் செல்களை உருவாக்கும் முயற்சிகள் பல்லாண்டுகளாக நடைபெற்றுவந்தன. ஆனால் அண்மையில் ஜப்பானிய ஆய்வாளர்கள் இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர். ஞானப்பல்லின் (Wisdom Teeth) உட்புறம் இருக்கும் உயிருள்ள செல்களில் இருந்து ஸ்டெம் செல்களை உருவாக்க இயலும் என்று ஜப்பானிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் ஸ்டெம் செல் வங்கிகளை உருவாக்கும் சாத்தியம் அதிகரித்திருக்கிறது. 

பிடுங்கப்பட்ட பற்களின் பற்கூழில் இருந்து ஸ்டெம் செல் வங்கிகள் உருவாக்கப்பட்டன. அவை ஜப்பானியர்களுக்கு ஒத்துப்போகிறதா என்றும் ஆராயப்பட்டது. ஏறக்குறைய 20 சதவீத ஜப்பானியர்களின் மரபியலுக்கு இந்த ஸ்டெம் செல்கள் ஒத்துப்போவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சில நாட்களே வயதுடைய கருக்குழந்தையிடமிருந்து ஸ்டெம் செல்களைப் பெறுவது சரியா தவறா என்பதில் கருத்துவேறுபாடு நிலவுகிறது. ஆனால் பற்களின் உட்கூழில் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை என்பதால் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.

தகவல்:மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

இன்னும் படிக்க: http://news.discovery.com/human/teeth-stem-cells.html

Pin It