இந்த ஜூன் மாதம் நாம் ஒரு வால்மீனை விடிகாலை வேளையில் பார்க்க முடியும். வால்மீன், அதாங்க வால் நட்சத்திரம்னு சொல்றோமே அதுதான். ஆனால் அது விண்மீன்/நட்சத்திரம் இல்லை. அதுவும் நம் சூரிய குடும்பத்தின் உறுப்பினர்தான். கடைசி உறுப்பினர். ஆனா சொன்ன பேச்சு கேக்காத தறுதலைப் பிள்ளை. இதுபோல ஏராளமான தறுதலைப் பிள்ளைகள் சூரியனுக்கு உண்டு. நினைத்த நேரத்தில் வந்து, நினைத்த நேரத்தில் தன் சொந்த வீட்டை, தந்தையை, தான் நினைக்கும் காலம் வரை சுற்றி விட்டு ஓடிப் போய்விடும். சில சில சமயம் நினைத்தபோது மீண்டும் வரும் பிள்ளை. இப்போது வந்துள்ள இந்த பிள்ளையைப்போல் இன்னும் 54 தறுதலைப் பிள்ளைகள் இந்த வகையில் உண்டு. இந்த வகை வால்மீனுக்கு மெக் நாட் வால் மீன்கள் என்று பெயர். மெக் நாட் என்ற ஆஸ்திரேலியர் தான் இந்த வகையிலான வால் மீன்களைக் கண்டுபிடித்தார். அதனால் அவர் பெயரையே இவைகளுக்கு வைத்து விட்டோம்.

 mcnaughtஇப்போது, மெக் நாட் வால் மீன்களில் ஒருவர், ஜூன் மாதம் வருகிறார் நம் குடும்பத்தைச் சுற்றிப் பார்க்க. அவர் பெயர் வால்மீன், c/2009 R1, (மெக் நாட் - McNaught). இந்த மாதம்தான் இதனை நாம் நன்றாகப் பார்க்க முடியும். இது விடிகாலையில் வடகிழக்கே, பெர்சியஸ் (persius) என்னும் விண்மீன் படலத்தைக் கடந்து போகிறது. மேலும் இந்த மாதம்தான் இது மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்த வால்மீன் 5வது பிரகாச நிலையில் உள்ளது. ஒரு சின்ன இருகண் நோக்கி மூலம் பார்க்கலாம். வெறும் கண்ணாலும் பார்க்க முடியும். இப்போது வால்மீன் வரும் நேரம், நிலா காயும் நேரமாக இல்லாததால், நிலஉலக மக்கள் நிறைய பேர் இதன் பிரகாசத்தைப் பார்த்து மகிழ்ந்து உள்ளனர். இதன் மெலிதான நீளமான வாலையும் கூட பார்த்து பரவசப் பட்டனராம்.

 ஜூன் 9ம் தேதியிலிருந்து மெக் நாட், விடிகாலை 3 .30௦ மணியிலிருந்து நன்றாகத் தெரிகிறதாம். அடிவானிலிருந்து நன்றாகப் பார்க்கும்படியான உயரத்தில், பெர்சியஸ் விண்மீன் படலத்திலுள்ள மூன்று விண்மீன்கள், முக்கோணமாக அமைந்துள்ள இடத்தில், வெறும் கண்ணாலேயே பார்க்குபடி உள்ளது. பொதுவாக வால்மீனுக்கு தலையும் வாலும் இருக்கும். வால் பல வடிவத்தில் இருக்கலாம். இங்கே மெக் நாட் வால் மீனுக்கு, சிறிய தலையும் , மெலிதான வாலும் உள்ளது. நிலநடுக்கோட்டின் வட பகுதியில் உள்ளவர்கள் எல்லோரும், விடிகாலையில் வடகிழக்கில் இந்த மெக் நாட் வால்மீனைப் பார்க்கலாம்.

 மெக் நாட்டின் விஜயம் மே மாதமே துவங்கிவிட்டது. அப்போது இது நமது பால்வழிஅண்டத்தின் அடுத்த வீடான ஆண்ட்ரோமிடாவில் (Andromedae) காணப்பட்டது. ஜூன் 5 ம் நாளிலிருந்து இன்னும் கொஞ்சம் வடக்கு நோக்கி நகர்ந்து,

பெர்சியசின் எல்லைக்குள் வந்து விட்டது. இப்போதுதான் வால்மீனின் பிரகாசம் கூடிக்கொண்டே இருக்கிறது. இதுதான் நாம் பார்க்க மிகவும் சாதகமான காலம். இது ஜூன் 23 -24 தேதிகளில், ஔரிகா(Auriga ) விண்மீன் படலத்தின் அருகில் இருக்கும். அப்போது மெக் நாட் இப்போதைவிட இன்னும் பிரகாசமாக இருக்கும். ஆனால், நமக்கு ஒரே ஒரு கஷ்டம்தான். அதான் நிலா வலம் வந்து, மெக் நாட் அருகே நிற்பார். அப்புறம் எப்படி அவரது ஆட்சியில், இந்தத் துளியுண்டு ஒளி வெளியிடும் மெக் நாட்டைப் பார்க்க? 

 மெக் நாட் ஒவ்வொரு நாளும், 1 டிகிரி கிழே இறங்கிக் கொண்டே இருக்கிறது. ஜூன் மாத இறுதியில் மெக் நாட் நம் பார்வையைவிட்டே ஓடி விடும்; ஓடியே ஓடிப் போய்விடும். இது ஹைப்பர்போலிக் வளையத்தை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இதன் தாயகமான ஊர்ட் மேகத்தை விட்டு புறப்பட்டதிலிருந்து இப்போதுதான் முதன் முறையாக பயணத்தை துவங்கி இருக்கிறது. இதன் பயணம் அடுத்த ஆண்டும் தொடரும். ஆனால் நமது கண் பார்வைக்குத்தான் தெரியாது.

இதுவரை வந்த மெக் நாட் குழும உறுப்பினரில், 2007ம் ஆண்டு, ஜனவரியில் பொங்கலுக்குப் பின் வந்த வால் மீன்தான் மிகவும் பிரகாசமானது. அதனை வெறும் கண்ணால், சூரியன் மறைந்த உடனேயே, மேற்கு வானில் 40 ௦டிகிரி உயரத்தில் பார்த்து மகிழ்ந்தோம் 

-       பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It