சீதா எஸ்.கோபாலகிருஷ்ணன், சென்னை கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் ஆண் உடனாளராக, (Male Attendant) 33 ஆண்டுகள் பணி ஆற்றி, அண்மையில் ஓய்வு பெற்றவர். தமது அனுபவங்களைத் தொகுத்து, ‘பணியாளரும், பிணியாளரும்; மனநலக் காப்பகம் பேசுகிறேன்’ என்ற நூலை எழுதி உள்ளார். அவருடன் உரையாடியபோது, மனநலக் காப்பகம் குறித்து எழுந்த பல ஐயங்களுக்குத் தெளிவான விளக்கங்களை அளித்தார்.

அருணகிரி: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்...

கோபாலகிருஷ்ணன்: எனது தந்தையார், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள சிறுதலை என்ற குக்கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். சென்னை பெரம்பூரில் உள்ள பக்கிங்காம் கர்னாடிக் (பி அண்ட் சி) நூற்பு ஆலையில், சாதாரணத் தொழிலாளியாகத் தமது வாழ்வை நேரிய வழியிலும், சீரிய முறையிலும் மேற்கொண்டார். அவரது சக்திக்கு ஏற்ப, பத்தாம் வகுப்பு வரை, கல்வி என்னும் அழியாத அறிவுச் செல்வத்தை எனக்கு அளித்தார். கூடுதலாக, ஒழுக்கம், நேர்மை, கண்ணியம், எளியோர்க்கு இரங்குதல், நல்லோரை மதித்தல், நட்பு உறவைப் போற்றுதல் என்னும் அரிய குணங்களையும் புகட்டினார். என்னை முழு மனிதனாக ஆக்கினார். வான் உலகில் ஆன்ம இளைப்பாறல் பெற்ற அவரது நல்லாசிகளுடன், 1979 ஆம் ஆண்டு, சென்னை மனநலக் காப்பகத்தின் தற்காலிகப் பணியாளர் ஆகும் பேறு பெற்றேன். 82 ஆம் ஆண்டில் பணி உறுதி செய்யப்பட்டேன்.

அங்கே எனக்கு வாய்த்த தோழமையின் பயனாக, தொழிற்சங்கப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. 1989 ஆம் ஆண்டு துணைத்தலைவர், 1991 துணைச்செயலாளர், பின்னர் செய்தித் தொடர்பாளர், சங்கத்தின் தேர்தல் ஆணையர் எனப் பல பொறுப்புகளை வகித்தேன். நிறைவாக, சங்கத்தின் தலைவராகவும் என்னை அமரவைத்து அழகுபார்த்த என் அன்புத் தோழர்களின் அரவணைப்புக்கு, நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவனாக உள்ளேன்.  இவர்களுடன் பழகிய கற்கண்டு நாள்களையும், மருத்துவமனைப் பிணியாளர்களுடன் தங்கள் வாழ்நாளைப் பிணைத்துக்கொண்டு சேவை செய்யும் உடனாளர்களின்  பணி அனுபவங்களையும், புத்தக வடிவில் ஆவணப்படுத்தும் அளப்பரிய ஆவல் என்னை உந்தியது. தொழிற்சங்கம் நமது இதயம் என்னும் சிறு நூலை வடித்தேன். அந்த நூலை எழுதுகையில், எனது 33 ஆண்டுகள் பணி அனுபவங்களை அசைபோட்டுப் பார்த்தேன். அதைச் சற்றே விரிவுபடுத்தி எழுதி, மனநலக் காப்பகம் பேசுகிறேன் என்ற தலைப்பில், 64 பக்க அளவில் பிறிதொரு நூலாக வெளிக்கொணர்ந்து உள்ளேன்.

அருணகிரி: மனநோய் என்றால் என்ன?

கோபாலகிருஷ்ணன்: காயங்களாலோ, தீய பழக்கவழக்கங்களாலோ, கை, கால் போன்ற உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படின், அவற்றைக் களிம்பு இட்டுக் குணப்படுத்தி விட முடியும். செரிமான உறுப்புகள், இதயம், சிறுநீரகம் போன்ற உள் உறுப்புகளில் ஏற்பட்டு உள்ள மாறுதல்களைக் கூட, எக்ஸ்-ரே, ஸ்கேன் போன்ற இன்றைய புதிய மருத்துவப் பொறிகளின் துணையுடன், துல்லியமாகக் கண்டு அறிந்து மருத்துவம் செய்ய முடியும். ஆனால், மனம் என்பது ஒரு உறுப்பு அல்ல. நம் உடலில் அது எங்கே இருக்கின்றது என்பதைத் தேடிக் கண்டுபிடிக்கவும் முடியாது. கடந்த காலத்தின் கசப்பான நினைவுகளைத் தேக்கி வைத்துக் கொண்டு, எதிர்காலம் பற்றிய அபரிமிதமான கற்பனைகளுடன், குழப்ப நிலை அடைந்தவர்களையே மன நோயாளி என  முத்திரை குத்தி விடுகிறார்கள்.

ஒரு மனிதன், சட்டையைக் கிழித்துக் கொண்டு தெருவில் நின்று உரக்கச் சிரித்துப் பேசினாலோ, பாடினாலோ, உடனே அதை மனநோய் எனத் தீர்மானிப்பது தவறு. நல்ல நிலைமையில் இருந்த ஒருவரின் செயல்பாடுகள், வழக்கத்துக்கு மாறாகப் பதற்றத்துடன், வித்தியாசமாக மற்றவர்களை மிரளச் செய்கின்ற வகையில் இருக்கும். ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்; சிலர் ஏதும் பேசாமல், வெறித்துப் பார்த்தபடி உறைந்து போய் உட்கார்ந்து இருப்பார்கள்; அன்றாட அவசியக் கடமைகளைப் புறக்கணித்து விடுவார்கள். மற்றவர்களிடம் குற்றம், குறை காணும் கண்ணோட்டத்தில் செயல்படுதல், உணவு, உடை, உறக்கம் போன்றவற்றில் வழக்கத்துக்கு மாறான செயல்பாடுகள், காரணமே இல்லாமல் பிறரைச் சந்தேகித்தல், தற்கொலைக்கு முயற்சி செய்வது, எதிராளியைக் கொல்ல வேண்டும் என ஆவேசப்படுவது, இவை எல்லாம் மனநோய்க்கான அறிகுறிகள்.

நம்பி இருந்தவர்களால் வஞ்சிக்கப்படுதல்,  எதிர்பாராத அதிர்ச்சித் தகவல்களால் பாதிக்கப்படுதல், கோபத்தையும், தாபத்தையும் தணித்துக் கொள்ளும் வழி அறியாது இருத்தல், காரணம் அற்ற அச்சம், இந்த உலகையே தன் உள்ளங்கைக்குள் அடக்கி விடும் அபார ஆற்றல் தனக்கே உண்டு என்ற உயர்வு மனப்பான்மை உள்ளிட்ட பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்பின் பிம்பங்களாக, நாள்தோறும், நூற்றுக்கணக்கானோர் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையை நாடி வந்து, மனநலம் தேறிச் செல்கின்றனர்.
 
நம்முள் ஏற்படும் அதிகப்படியான மனச்சோர்வு, வேதனை, மன அழுத்தம், இழப்பு, இயலாமை போன்ற உணர்வுகள், நமது மூளையின் பழக்கவழக்கங்களை மறப்பதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றன.

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மனநோயால் பீடிக்கப்பட்டவர்களைச் சங்கிலியால் கட்டி வைத்துத் துன்புறுத்தி வந்தனர். வீட்டை விட்டு விரட்டி விடுவார்கள் அல்லது வேறு எங்கேணும் கொண்டு போய் விட்டு விடுவார்கள். காரணம், மனநோய் என்பது தீர்க்கவே முடியாத நோய் என்ற கருத்து நிலவிய காலம் அது. ஆனால், மனநோய் என்பது தீர்க்க முடியாத நோய் அல்ல. எளிதாகக் குணப்படுத்தலாம்.

மூளையில் ஏற்படும் இரசாயனக் கசிவைக் கட்டுப்படுத்தி, அதன் இயக்கத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வர, மனோதத்துவ அறிஞர்களுடனான கலந்து ஆய்வுகளும், மருந்து மாத்திரைகளும் துணைபுரிகின்றன. அந்த வகையில், இப்போது மருத்துவ வசதிகள் வெகுவாக முன்னேறி விட்டன. எனவே, மனநோய் குறித்து அச்சம் கொள்ளத் தேவை இல்லை.

மின் அதிர்ச்சி வைத்தியம் இப்போது இல்லை

மருத்துவ அறிவியல் ஆராய்ச்சிகளின் பயனாகவும், அற்புதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாகவும், சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் மனநோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் அதிர்ச்சி வைத்தியம் (நுஊகூ) இப்போது தடை செய்யப்பட்டு விட்டது.

அருணகிரி: ஒருவரை மனநோயாளியாகச் சேர்ப்பதற்கான நடைமுறைகள் என்ன?

கோபாலகிருஷ்ணன்: அந்த நபரின் மனமாற்றம், அதற்கான தாக்கம் நிகழ்ந்த காலம், தொடர் நிகழ்வுகள், தற்போதை அவர்களது நடைமுறை ஆகியவற்றை, முறையே பயிற்சி மருத்துவர்கள், உளவியலில் தேர்ச்சி பெற்ற சமூகநலப் பணியாளர்கள் கலந்து ஆய்வு செய்வர். பின்னர், குருதிப் பரிசோதனைக்குப் பரிந்து உரைப்பர். இவ்வாறாக, நோயாளியைப் பற்றிய குறிப்புகளைத் தயார் செய்தபிறகுதான், தலைமை மருத்துவரிடம் நோயாளியை அழைத்துச் செல்வர்.

உள்நோயாளியாகச் சேர்ப்பதா? புறநோயாளியாகவே வந்து சென்றால் போதுமா? என்பதை, தலைமை மருத்துவர் தீர்மானிப்பார்.  புறநோயாளி என்றால், சில நாள்களுக்கான மருந்து, மாத்திரைகளைப் பரிந்து உரைத்து, ஆறுதல் கூறி அனுப்பி வைப்பார். நோயின் தாக்கம் சற்றே அதிகமாக உள்ளது என்று கண்டு அறிந்தால், தனது தலைமையின் கீழ் இயங்கும் உள்நோயாளிகள் பிரிவுக்கு, உடனாளர் ஒருவருடன் அனுப்பி வைப்பார். தங்குவதற்கான அனுமதிச் சீட்டு தருவார்.

அவ்வகையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்படும் ஒருவரின் உறவினர் அல்லது பாதுகாவலரிடம், ஒப்புதல் கையொப்பமும், சென்னையில் இருந்து நோயாளியின் சொந்த ஊருக்குச் செல்வதற்கான போக்குவரத்துக் கட்டணத்தின் மூன்று மடங்குத் தொகையும் பெறப்படும்.

அருணகிரி: அரசு மருத்துவமனைதானே? பின்னர் ஏன் பணம் வாங்குகிறார்கள்?

கோபாலகிருஷ்ணன்: உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்ட ஒருவர் அப்படியே இருந்துவிட மாட்டார். உறுதியாக நலம் பெறுவார். அந்த வேளையில், அவரை அழைத்துச் செல்ல உறவினர்கள் உனடியாக வர மாட்டார்கள். மனநலம் பெற்றவர், இனி மருத்துவமனைக்கு உள்ளே இருக்கத் தேவை இல்லை என்று தலைமை மருத்துவர் தீர்மானித்தபிறகு, நோயாளியை விடுவித்து அழைத்துச் செல்லலாம் என, கோப்புகளில் உள்ள முகவரிக்கு முதலில் கடிதம் அனுப்பப்படும்.

அக்கடிதம் கிடைக்கப் பெற்ற பின்னரும், உறவினர்கள் எவரேனும் முன்வந்து அழைத்துச் செல்லவில்லை என்றால், உடனாளர் ஒருவர் பாதுகாப்பாக அழைத்துச் சென்று, அந்த முகவரியில் விட்டுவிட்டுத் திரும்புவார். ஆக, ஒரு நோயாளி மற்றும் உடனாளருக்கான பயணக் கட்டணம், பின்னர் உடனாளர் மட்டும் சென்னை திரும்புவதற்கான கட்டணம்தான் இப்படி முன்கூட்டியே பெறப்படுகின்றது.

நாள் ஒன்றுக்கு, இம்மருத்துவமனைக்கு வருவோருள் 80 விழுக்காட்டினர் புறநோயாளிகளாகவும், 20 விழுக்காட்டினர் உள்நோயாளிகளாகவும் கையாளப்படுகின்றனர். பெரும்பாலும், கிரானிக் எனப்படும் முற்றிய நிலையில் உள்ளவர்கள் மட்டுமே, உள்நோயாளிகள் பிரிவில் சேர்க்கப்படுகின்றனர். புறநோயாளிகள் பிரிவிலேயே ஒரு சில நாள்கள் மட்டுமே தங்கி, நலம் அடைந்து திரும்புபவர்களும் உண்டு.

பித்தர் இல்லம்

அருணகிரி: கீழ்பாக்கம் மனநலக் காப்பகத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...

கோபாலகிருஷ்ணன்: சென்னை கீழ்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் இருந்து தொடங்குகின்ற உயர்ந்த மதில் சுவர், மேடவாக்கம் குளக்கரைச் சாலை வரை, சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து உள்ளது.

மனநோயாளிகளுக்கு மருத்துவம் அளிப்பதற்காக, ‘பித்தர் இல்லம்’ என்ற பெயரில், இன்றைக்கு 220 ஆண்டுகளுக்கு முன்பு, 1794 ஆம் ஆண்டு, தோற்றுவிக்கப்பட்டதே, இன்றைய கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை. அந்நாள்களில், வெள்ளை அதிகாரிகளும், போர் வீரர்களும் மட்டுமே இந்தப் பித்தர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

தொடக்கத்தில், டாக்டர் வாலைண்ட் கனோலி, பொறுப்பாளராக இருந்தார். 1867ஆம் ஆண்டு, அப்போதைய பிரிட்டிஷ் அரசு, நீதித்துறையின் அரசு ஆணையின் வாயிலாக, இம்மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்தது. மனநோய் மருத்துவமனைகளை ஒன்றிணைத்து நிருவகிக்கும் பொருட்டு, 1912 ஆம் ஆண்டு, பித்தர் சட்டத்தை நிறைவேற்றியது. அதன் தொடர்ச்சியாக, 1922 ஆம் ஆண்டு, கீழ்பாக்கம் மனநோய் மருத்துவமனையின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் அரசே ஏற்றுக் கொண்டது.  அரசு மருத்துவராக, உளவியல் நிபுணர் டாக்டர் ஹென்ஸ்மேன் நியமிக்கப்பட்டார். அவருக்குத் துணையாக, இந்திய மருத்துவர்களும் நியமிக்கப்பட்டனர்.

தொடக்கத்தில், உள் நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. 1947 ஆம் ஆண்டில்தான் ‘புறப்பிணியாளர் பகுதி’ துவக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டு, புறப்பிணியாளர் பகுதிக்காக ஒரு தனிக்கட்டடம் கட்டப்பட்டது. தற்போது, தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்ற இம்மருத்துவமனை, 1987 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மனநலச் சட்டத்தின்கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

அன்றாடம் 500 க்கும் மேற்பட்ட புறப்பிணியாளர்கள் வந்து செல்கிறார்கள். 1800 படுக்கைகளுடன் உள்நோயாளிகள் பிரிவு செம்மையாக இயங்கி வருகின்றது. இந்தியாவின் தொன்மையான மனநல மருத்துவமனைகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது.

தொழில் வழி மருத்துவதும், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுகளின் வாயிலாக மனமகிழ் நிகழ்வுகள், முடநீக்கு மருத்துவம், என மனநோயாளிகளுக்கான மறுவாழ்வு சேவையும் இம்மருத்துவமனையில் வழங்கப்படுகின்றன.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனைக்கு நிகராக, இந்தியாவில் புகழ்பெற்ற மருத்துவமனையாக கீழ்பாக்கம் மனநலக் காப்பகம் திகழ்கின்றது.  

கேள்வி: மனநலக் காப்பகத்தில், உங்களைப் போன்ற உடனாளர்களின் பணி என்ன?

கோபாலகிருஷ்ணன்:  நாங்கள் மருத்துவ உதவியாளர்கள்தாம். பிணியாளராக அழைத்து வரப்படுகின்றவர்களைத் தொடக்கத்தில் போலியாக அச்சுறுத்தியும், அதட்டியும், பின்னர் உள்ளன்போடு அவர்களை அரவணைத்து, நீராட்டி, சோறு ஊட்டி, பண்படுத்தி, பராமரித்துப் பாதுகாத்து வருவது உடனாளர்கள் ஆகிய எங்கள் பணி. பிணியாளர்களின் முரட்டுத்தனத்தையும், குறும்புத்தனத்தையும் எதிர்கொள்வதே எங்களது அன்றாட அலுவல்.

ஒரு பிணியாளர் மருத்துவமனைக்கு உள்ளே வரும்போது,  அவர்களைச் செவிலியர்களிடம் அழைத்துச் சென்று பெயர், முகவரி, அங்க அடையாளங்கள் ஆகிய விவரங்களைப் பதிவு செய்து, பதிவு எண்ணுடன் கூடிய ஒரு கோப்பினைத் தயாரிக்க உதவுகிறோம். உள்நோயாளிகளாகச் சேர்க்கப்படுவோரது உடைமைகள் அனைத்தும், துணையாக வருபவர்களிடம் ஒப்படைக்கப்படும். நோயாளிக்கு, மருத்துவமனையின் சீருடை அணிவிக்கப்படும். பின்னர் உறவினர்கள் விடைபெற்றுச் சென்று விடுவர்.

செவிலியர் ஒருவரின் துணையுடன், மருத்துவர் பரிந்து உரைத்த மாத்திரைகளை, உடனாளர், நோயாளியின் வாயில் போட்டு, நீர்புகட்டி ஓய்வு எடுக்கும்படிப் பணிப்பார்.

ஒவ்வொரு நாளும் காலையில், உடனாளர்களாகிய நாங்கள், நோயாளிகளை எழுப்பி,  காலைக்கடன்களைக் கழிக்கச் செய்து, குளிப்பதைக் கண்காணித்து, காலை மாத்திரைக்கும், உணவுக்கும் வரிசைப்படுத்துகின்றோம். அவர்கள் அங்கும் இங்கும் ஓடி விடாதபடி கண்காணிக்கின்றோம். அவர்களாகவே உணவை எடுத்துச் சாப்பிடச் செய்கிறோம். அப்படி எடுத்துச் சாப்பிட முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு, உடனாளர்களே உணவை ஊட்டி விடுவோம்.

மருத்துவர் வந்து பார்வை இடும்போது, நோயாளிகளை வரிசையில் நிற்கச் செய்வோம். பிறகு, அவர்களை ஓய்வு எடுக்கச் செய்வோம். சற்றே சுய நினைவுடன் உள்ள நேயாளிகள், தொழில்வழி மருத்துவப் பிரிவுக்கு அனுப்பப்படுவர்.

அங்கே, புத்தக பைண்டிங், பாய் மற்றும் துணி நெசவு, தச்சு வேலை, வர்ணம் தீட்டுதல், கூடை பின்னுதல், சிற்றுண்டிச் சாலை, தோட்ட வேலை, கொல்லர் பட்டறை போன்ற  தொழில் பிரிவுகளில், நோயாளிகள் தங்கள் அனுபவம் மற்றும் ஈடுபாட்டு அடிப்படையில் உதவியாளர்களாகப் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். இவர்கள் பகல் உணவுக்காக, தங்கள் வார்டுகளுக்கு வருவர். மாத்திரைகளைச் சாப்பிட்டு விட்டு, ஓய்வு எடுப்பர். பின்னர், முன்னிரவு உணவு வழங்கியபின்பு, உறங்கும்படி அறிவுறுத்தப்படுவர். நோயாளிகள் அனைவரும் உறங்கி விட்டனரா என்பதை, உடனாளர் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சோதித்துப் பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பகல் பணியில் இருந்து விடுபட்டுச் செல்லும் உடனாளர்,தனது கட்டுப்பாட்டில் உள்ள நோயாளிகளை எண்ணிக் கணக்கிட்டு, இரவு நேரப் பணியினை ஏற்கும் உடனாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்விதமே, மறுநாள் காலையிலும் நடைபெறும்.

தனது பொறுப்பில் உள்ள நோயாளிகளுக்கு உறக்கத்துக்கு இடையில் மூச்சுத் திணறல், மாரடைப்பு  ஏற்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். காயங்கள் ஏற்படாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். எனவே, இரவுப் பணியில் இருப்பவர், அதிகாலை ஐந்து மணிக்கு ஒவ்வொரு நோயாளியையும் எழுப்பி, அவர் நலமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வார்.

காது, மூக்கு, தொண்டை, இதயம், கண் நோய், எலும்பு முறிவு, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ள நோயாளிகளை, வெளியில் உள்ள இதர அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று, மீண்டும் கொண்டு வந்து சேர்ப்பதும், உடனாளரின் கடமை ஆகும். இது சற்றே கடினமான பணி. மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் அரசு மருத்துவமனைகளில், நெருக்கடியைச் சாதகமாக்கிக் கொண்டு, மனநோயாளிகளுள் சிலர் தப்பி ஓட முயற்சிப்பர். அதுபோன்ற இடங்களில், உடனாளர் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.  நீண்ட நாள்களுக்குப் பிறகு வெளி உலகத்தைப் பார்க்கும் பரவசத்தில், உடனாளரின் பிடியில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு ஓடிச்சென்று, வண்டிகளில் அடிபட்டுக் காயம் அடைந்தாலோ, உயிர் இழப்புகள் நேர்ந்தாலோ, அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

வெளியில் செல்லும்போது மட்டும்தான் இவ்வாறு நிகழும் என்பது இல்லை. மனநலக் காப்பகத்துக்கு உள்ளேயே, ஆங்காங்கு செடி மற்றும் புதர்களுக்கு இடையில் மறைந்து கொள்ளுவர். இரவு வேளைகளில் சுவர் ஏறிக் குதிக்க முயற்சிப்பார்கள். எனவே, ஒவ்வொரு நொடியும் விழிப்பாக இருந்து கண்காணிக்க வேண்டும்.

நோயாளிகளை உறவினர்கள் சந்திக்க வரும்போது, அவர்களது உறவுமுறையை உறுதிப்படுத்தி, அவர்கள் நோயாளியிடம் இருந்து ஏதேனும் சொத்து ஆவணங்கள், பத்திரங்கள், காசு ஓலைகளில் கையெழுத்தோ, இடது கை பெருவிரல் ரேகைப் பதிவோ பெற்றுச் செல்லாதபடி, உடனாளர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். ஒரு குழந்தையைப் பராமரிப்பது போல, நோயாளிகளைக் கையாள வேண்டும்.

மனநலக் காப்பகம் என்பது, மனித நேயம் உள்ளவர்களின் கூட்டு முயற்சியே. இங்கே பணி ஆற்றுவோர் பொறுமையாக இருக்க வேண்டும். இங்கே உள்ள ஊழியர்கள் அனைவரும் மனித நேயத்தோடு பணி ஆற்றுவதால்தான், தங்கள் சொந்த பந்தங்களில் கிடைக்காத பரிவு, பாசம், அன்பு கனிவை, இங்கே  நோயாளிகள் பெறுகிறார்கள். அதனால் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்.  

அருணகிரி: உணவு வசதிகள் எப்படி உள்ளன?

கோபாலகிருஷ்ணன்: நோயாளிகளுக்குக் காலை உணவாக, இட்லி, பொங்கல், கிச்சடி, சாம்பார் போன்ற சிற்றுண்டிகள், வாரத்தின் ஏழு நாள்களிலும் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. இரண்டு வேளை காபியும் உண்டு. நண்பகலில், சாம்பார் சாதம், புளியோதரை, எலுமிச்சைச் சாதம், தயிர் சாதம், காய்கறி பிரியாணி, ரசம், சர்க்கரைப் பொங்கல், இரண்டு முட்டைகள், காய்கறிப் பொரியல், வாழைப்பழம் ஆகியவை, நிரந்தர உணவு அட்டவணையில் இடம் பெறுகின்றன. இரவில், சம்பார் சாதம், ரசம் சாதம், காய்கறிப் பொரியலுடன் வழங்கப்படுகின்றது. இவை நீங்கலாக, மருத்துவமனை நிர்வாகத்தின் ஒப்புதலுடன், சில தனி நபர்களும், தொண்டு நிறுவனங்களும் உணவு வகைக மற்றும் நொறுக்குத்தீனிகளை நோயாளிகளுக்கு வழங்குவது உண்டு.

அருணகிரி: தங்கள் உறவினர்களை மனநோயாளியாகக் கொண்டு வந்து சேர்ப்பவர்கள், உள்ளே எப்படி இருக்குமோ என்ற வேதனையோடுதான் வீடு திரும்புவார்கள். அவர்களுக்கு ஆறுதலாக, மனநல மருத்துவமனைக்கு உள்ளே என்ன நடக்கிறது? என்னென்ன கண்காணிப்பு வசதிகள் உள்ளன என்பதைச் சொல்லுங்கள்.

கோபாலகிருஷ்ணன்: அப்படி அச்சம் கொள்ளத் தேவையே இல்லை. நோயாளிகளைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்வதற்கு, நிறைய கண்காணிப்பு ஏற்பாடுகள் உள்ளன. ஆண், பெண் நோயாளிகள் தனித்தனியாக வைக்கப்பட்டு உள்ளனர். பெண் நோயாளிகளைக் கவனிப்பதற்கு பெண் உடனாளர்கள் மட்டுமே உள்ளனர். இதுவரையிலும், கீழ்பாக்கம் மருத்துவமனை குறித்து, பெரிய அளவில் எந்தப் புகாரும் வந்தது இல்லை.

இம்மருத்துவமனையின் புறநோயாளிகள் பகுதியின் தரைத்தளத்தில், மருத்துவர்கள் மற்றும் சமூக நலப் பணியாளர்கள், நோயாளிகளை நேர்காணல் செய்யும் அறைகளும், நோயாளிகளைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய கோப்புகளைப் பாதுகாக்கும் அறைகளும், தீவிரமான நிலையில் வரும் நோயாளிகளைக் கையாளும் உடனடி மருத்துவப் பிரிவும், போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட முடியாதவர்களுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்படும் தனிப்பிரிவும் இயங்குகின்றன.

முதல் மாடியில், பரிசோதனைக் கூடம், மனநோய் தொடர்பான பல்வேறு அரிய நூல்கள் பாதுகாக்கப்படும் நூலகம், கருத்து அரங்கக் கூடம், சிறப்பு மருத்துவப் பிரிவுகள், சிறப்பு வகுப்புகள் நடத்தும் அறைகள் அமைந்து உள்ளன.

மருத்துவமனை வளாகத்துக்கு உள்ளே, மனமகிழ் மன்றம் உள்ளது. அங்கே தமிழ் மற்றும் ஆங்கில நாள் இதழ்கள், செய்திகளை அறிந்து கொள்ளவும், கேளிக்கைகளின் பக்கம் நோயாளிகளின் கவனத்தைத் திசை திருப்ப வானொலி, தொலைக்காட்சியும் வைக்கப்பட்டு உள்ளன. கேரம், டேபின் டென்னிஸ் போன்ற உள் அரங்க விளையாட்டுகளிலும் நோயாளிகள் மருத்துவமனையின் ஊழியர்களுடனோ, சகநோயாளிகளுடனோ பங்கு ஏற்று, இளைப்பாற்றிக் கொள்ளலாம்.

மருத்துவமனை தொடர்பான விழாக்கள், விடுதலைத் திருநாள் கொண்டாட்டங்கள், ஆண்டு விளையாட்டிப் போட்டிகள், மனமகிழ் மன்றத்துக்கு எதிரே உள்ள திறந்தவெளித் திடலில் நடைபெறுகின்றன. இந்நிகழ்வுகளில், நல்ல நிலையில் உள்ள நோயாளிகள் பார்வையாளர்களாகப் பங்கு ஏற்பர். இத்திடலைச் சுற்றி, பூச்செடிகள், கொடிகள் வளர்த்துப் பராமரிக்கப்படுகின்றன.

போதைப்பழக்க நோயாளிகளை வேறுபடுத்திக் காட்ட, அவர்களுக்கு வெந்நிறச் சீருடை அணிவிக்கப்படுகிறது. அவர்களை, எல்லா நாள்களிலும் உறவினர்கள் சந்திக்கலாம். இவர்களுக்கு மருந்துகளை விட, கவுன்சிலிங் எனப்படும் மனவளக்கலை மருத்துவமே சிறப்பு இடம் வகிக்கின்றது.

இங்கே உள்ள அடுமனையில் தயாரிக்கப்பட்ட ரொட்டிகள், இம்மருத்துவமனையின் தேவையையும் நிறைவு செய்து, சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது நிறுத்தப்பட்டு விட்டது.

நவீன வசதிகளுடன் கூடிய சமையல் கூடத்தில், கைதேர்ந்த சமையல் கலைஞர்கள் உணவு சமைக்கின்றார்கள். வெளி உணவகங்களில் விற்கப்படும் உணவுக்குச் சற்றும் குறையாத சுவையுடனும், தரத்துடனும் உணவு சமைக்கப்படுகின்றது; சுடச்சுட நோயாளிகளுக்குப் பரிமாறப்படுகின்றது. இந்த உணவை, நிலைய மருத்துவ அதிகாரி சுவைத்துச் சோதித்தபின்னரே, உள்நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றது.

குற்றப்பிரிவு நோயாளிகள்

குற்றங்கள் இழைத்து சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள், சிறையின் தனிமையாலும், தான் புரிந்த தவறுகளுக்காக ஒருவரது மனசாட்சி வாட்டும் நிலையிலும், மனநிலை பாதிப்புக்கு ஆளாகி, அமைதி அற்றவர்களாகக் காணப்படுவர்.

sgopalakrishnan_450அத்தகையோரை, சிறைத்துறைக் கண்காணிப்பாளர் நீதிபதியின் முன் நிறுத்தி, மனநலக் காப்பகத்தில் சேர்க்க ஆணை பெறுவார். அவ்வாறு இங்கே வருவோர், தனிப்பிரிவில் வைக்கப்படுவர். சில மாதங்களுக்குப் பிறகு, மனநலம் தேறி, மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பி வைக்கப்படுவர். சில நோயாளிகள், தண்டனைக் காலம் முடியும் வரையிலும்கூட, இங்கேயே உள்நோயாளிகளாக இருந்து நலம் பெற்றுச் சென்றதும் உண்டு. இவர்களை, சமூக நல ஊழியர்கள் மற்றும் தலைமை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அடிக்கடி சந்திப்பர். இந்தப் பிரிவில் உள்ள நோயாளிகள், இதர நோயாளிகளைப் போல, மருத்துவமனைக்கு உள்ளே சுதந்திரமாகச் சுற்றிவர முடியாது. அவர்கள் வைக்கப்பட்டு இருக்கின்ற பிரிவுக்கு உள்ளேயே சுற்றி வரலாம். அவர்களை வெளி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும்போது, காவலர்கள் உடன் வருவர்.

இந்த மனநலக் காப்பகம், ஒரு நந்தவனம் ஆகும். இங்கே ஓங்கி வளர்ந்து உள்ள மரங்களில் பச்சைக் கிளிகள் கீச் கீச் எனவும், புறாக்களின் அணிவகுப்பு, அணில்களின் அட்டகாசம், சிற்சில வேளைகளில் மயில்களின் ஆடல் எல்லாம் தென்றல் காற்றோடு பெருமகிழ்வை உண்டாக்கும்.

அருணகிரி: உங்கள் பணிக்காலத்தின் போது, நீங்கள் எதிர்கொண்ட, எதிர்பாராத நிகழ்வுகளைப் பற்றிச் சொல்லுங்கள்...

கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாத அப்பாவி நோயாளிகளும் உண்டு; ஆவேசமாக ருத்திர தாண்டவம் ஆடுபவர்களும் உண்டு. இவர்களைக் கையாள்வது சற்றுக் கடினம்.

சென்னை பாடியைச் சேர்ந்த ஒரு நோயாளியை, நான்கைந்து பேர் சேர்ந்து தூக்கி வந்தனர். ஆறடியைத் தாண்டிய உயரம். ஓங்குதாங்கான உடல்வாகு. இரண்டு உடனாளர்களால் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. போதாத குறைக்கு, இதர நோயாளிகளை அச்சுறுத்தும் வகையில், பல்லைக் கடித்துக் கொண்டு அவர்கள் மீது பாய்வதுமாக அவர் செய்த ரகளை சொல்லி முடியாது. மதிய உணவுக்கு வரிசையில் நிற்க வைத்தால், பக்கத்தில் நிற்பவரைக் கீழே தள்ளிவிட்டு, வாயிற்கதவை நோக்கி ஓடுவார். அவரை விரட்டிச்சென்ற உடனாளர் மீது பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டார். பல உடனாளர்கள் ஒன்று சேர்ந்துதான் அவரைக் கட்டுப்படுத்தினோம்.

மற்றொருவர், ‘நான் காவல் அதிகாரி, எனக்குப் பதவி உயர்வு கொடுக்காமல் பழிவாங்கி விட்டனர்’ என்று புலம்பிக்கொண்டே இருந்தார். அவர் உளறுகிறார் என்றே நாங்கள் நினைத்தோம். ஆனால், அவரைப் பார்ப்பதற்காகக் காவல் துறையில் இருந்து பல அதிகாரிகள் வந்தபோதுதான், அவர் உண்மையிலேயே காவல்துறை அதிகாரி என்பதையும், காவல்துறையில் நிலவும் கட்டுப்பாடுகளும், இத்தகைய மன நோய்க்கான காரணம் என்பதையும் தெரிந்து கொண்டோம்.

ஒருமுறை நள்ளிரவில் ஒரு நோயாளி, தூங்காமல் விழித்து இருந்தார். திடீரென பாய், தலையணையை எடுத்து, பக்கத்தில் படுத்துக் கிடந்த மற்ற நோயாளிகளைத் தாக்கத் தொடங்கி விட்டார். உடனாளர்கள் கவனமாக இருந்து, கதவைத் திறந்து ஓடிப் போய்த் தடுத்தனர். உடனே மருத்துவரை அழைத்து மயக்க ஊசி போடச் செய்தனர். இப்படி, இரவு பகல் எந்த நேரமும், விழிப்பாக இருக்க வேண்டியது உடனாளர்களின் பணி.

கடலூரைச் சேர்ந்த ஒருவர் உள்நோயாளியாக இருந்தார். சில மாதங்களிலேயே நன்கு தேறி விட்டார். பிணியாளர்களை வரிசையில் நிற்க வைப்பது, அவர்களைக் குளிப்பாட்டுவது போன்ற பணிகளில், உடனாளர்களுக்கு ஒத்தாசையாக இருந்தார். ‘அண்ணே, என்னை எப்போது வெளியே அனுப்புவீர்கள்? என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அதை மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும். உடனாளர்களோடு சேர்ந்து உலவிக் கொண்டு இருந்தவர், திடீரெனக் கிடைத்த ஒரு இடைவெளியில், பார்வையாளர்களோடு சேர்ந்து வெளியே போய்விட்டார். காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒரு வாரம் கழித்து, எனக்கு ஒரு கடிதம் வந்தது.

‘அன்புள்ள அண்ணா, நீங்கள் என் மீது மிகுந்த அக்கறையோடும், நம்பிக்கையோடும் நடந்து கொண்டதை, என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. என் குடும்பத்தாரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில், உங்களிடம் சொல்லாமல், கொள்ளாமல் திருட்டுத்தனமாகத் தப்பித்து, நல்லபடியாக என் ஊருக்கு வந்து சேர்ந்து விட்டேன். நான் செய்த தவறுக்கு என்னை மன்னிக்கும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்’

என்று எழுதி இருந்தார்.

மற்றொரு முறை, எழும்பூரில் பேருந்து ஒன்றில் ஏறினேன். இருக்கையில் அமர்ந்து இருந்த ஒருவர் என்னைப் பார்த்ததும் எழுந்து நின்று, கட்டாயப்படுத்தி என்னை இருக்கையில் அமர வைத்தார். அண்ணா நான் மனநலம் குன்றி இருந்தபோது, என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டீர்கள்.  நான் நன்கு குணமாகி விட்டேன். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை’ என்றார்.

அதிகாரத்தால் உடலைத்தான் கட்டுப்படுத்த முடியும்; அன்பினால் மட்டுமே உள்ளத்தை.... ஏன் உலகத்தையே வெல்ல முடியும்!

மற்றொரு முறை, என் மனைவியோடு அண்ணா சாலை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தேன். வேகமாகச் சென்று கொண்டு இருந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் திடீரென வண்டியை நிறுத்தி இறங்கி வந்து, கட்டாயப்படுத்தி எங்களை ஏற்றி அழைத்துச் சென்றார். நான் பணம் கொடுக்க முயன்றபோது, அதை வாங்க மறுத்தார்.  நமது உறவு நீடிக்க வேண்டும் எனில் பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்திக் கொடுக்க நேர்ந்தது.

பெரம்பூரில் என்னைப் பார்த்த ஒரு தொழிலாளி, அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று எல்லோரிடமும் அறிமுகப்படுத்தி, காபி, பலகாரம் வாங்கித் தந்து உபசரித்தார்.

இதைப்போன்று, நன்றிக்கடன்களைச் சமாளிக்க முடியாமல், உடனாளர்கள் திக்குமுக்காடிப் போன நிகழ்வுகள்  ஏராளம் உண்டு.

அதிகாரத்தால் உடலைத்தான் கட்டுப்படுத்த முடியும்; அன்பினால் மட்டுமே உள்ளத்தை.... ஏன் உலகத்தையே வெல்ல முடியும்.

ஒரு முறை, ஒரு பிணியாளர் உடனாளர் ஒருவரின் மூக்கைக் கடித்துத் துண்டாக்கி விட்டார். அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துத்தான் மூக்கைத் தைக்க முடிந்தது. இது உடனாளர்களின் பணியில் ஏற்படும் எதிர்பாராத துயரத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

உற்றார் உறவினர்களால் கைவிடப்பட்ட ஒரு வட இந்தியப் பெண் நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரைக் குளிப்பாட்ட வைக்க பெண் உடனாளர்கள் முயன்றபோது, அந்தப் பெண் ஏழு உள்ளாடைகளை அணிந்து இருந்தது தெரிய வந்தது. அவரது முன் எச்சரிக்கை, அவரது தற்காப்பு உணர்வைக் காட்டுகிறது.

பெண் உடனாளர்கள் அவரிடம் காட்டிய அன்பால், அடுத்த சில நாள்களிலேயே நன்றாகப் பேசத் தொடங்கி விட்டார். தன்னைப் பற்றியயும், குடும்பச் சூழ்நிலைகளையும் எடுத்துச் சொன்னார். சில மாதங்களுக்குப் பிறகு நன்கு தேறி விட்டார். தகுந்த பாதுகாப்போடு வட இந்தியாவில் உள்ள அவரது ஊருக்குக் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டார்.

மற்றொரு நோயாளியைக் காவல்துறையினர் கொண்டு வந்தனர். அவரது அங்க அடையாளங்களைப் பதிவு செய்ய முயன்றபோது, கடுமையாக எதிர்த்தார். ஒருவழியாக அவரைச் சமாதானப்படுத்திய பிறகுதான் தெரிந்தது, அவர் தன்னுடைய கால் சட்டைப் பையில், 35,000 ரூபாய் வைத்து இருந்தார்.

பிணியாளர்களுக்கு முகச் சவரம் செய்யும் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கத்தியைப் பிடுங்கி பக்கத்தில் இருந்தவர்களைக் குத்தி இருக்கின்றார்கள்; சிலர் கழுத்தை அறுத்தைத் தற்கொலைக்கு முயன்று இருக்கின்றார்கள். 

மன அழுத்தத்தில் உள்ளோரைத் தனித்து விடுவது மிகக் கொடுமையானது. அத்தகையவர்களுக்கு ஆறுதல் அளித்து அன்பைக் காட்டுவதே எங்கள் பணி.

நலம் பெற்றவர்களை அழைத்துக் கொண்டு போய் கிராமங்களில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கும்போது, ஊரே கூடி நன்றி தெரிவித்த நிகழ்வுகள் எங்களை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும். குறிப்பாக, அந்த நோயாளியின் தாய் காட்டுகின்ற அன்புக்கு நிகராக எதையுமே சொல்ல முடியாது.

அதற்கு நேர்மாறாக, சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கச் செல்கையில், மருத்துவர் அளித்த சான்றிதழைக் காட்டி, நாங்கள் எவ்வளவு எடுத்துக் கூறினாலும் அவரைத் திரும்ப ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். அந்த வேளையில், அருகில் உள்ள காவல்நிலையத்தின் உதவியோடு, உறவினர்களை எச்சரித்துத்தான், எங்கள் கடமையைச் செய்ய நேரிடும்.

ஒருமுறை என்னுடைய குடும்ப அட்டையை வைத்து இருந்த பையைக் காணவில்லை. உடன் இருந்த உடனாளர்களை எல்லாம் விசாரித்தேன். அப்போது அங்கே சந்தேகத்துக்கு இடமாக ஒருவர் நடமாடிக் கொண்டு இருந்தார். பழைய நோயாளி என்றார்கள். அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவரது பையில், என்னுடைய குடும்ப அட்டை மற்றும் பல பொருள்கள் இருந்தன.

சொந்தங்கள், பந்தங்கள் விலக்கி வைக்கும்/விலகி நிற்கும் கொடூரம் மன நோயாளிகளுக்கு நேர்கிறது. அவர்களை சகோதரனாய், சக மனிதனாய்ப் பாவித்து, மனிதநேயத்தோடு சேவை செய்யும் உடனாளர்களாகிய எங்களுக்கு, பிணியாளர்களால் துன்பங்களும், இன்பங்களும் மாறி மாறி ஏற்படுகின்றன என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் மேற்கண்ட சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். எங்களின் வேதனைகளையும், அர்ப்பணிப்பு, பொறுமையையும், மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையிலேயே இந்த நூலை எழுதினேன்.

ஒரு உடனாளரின் வாழ்வில் மட்டுமே இத்தகைய அனுபவங்கள் எனில், இம்மருத்துவமனை உருவானபின் இங்கு அனுமதிக்கப்பட்டு மனநிலை தேறிய, இலட்சக்கணக்கான பிணியாளர்களைக் கட்டிக்காத்த ஆயிரக்கணக்கான உடனாளர்களுக்கு நேர்ந்த, சிலிர்ப்பூட்டுமம் அனுபவங்களைப் பதிவு செய்ய முற்பட்டால், ஒரு முனைவர் பட்ட ஆய்வு ஏடு போதாது.

இப்படிப் பல சங்கடமான நிகழ்வுகளை எதிர்கொள்ள நேரிட்டபோதிலும், எனக்கு இன்னொரு பிறவி உண்டு என்றால், அப்போதும் மனநலக் காப்பகத்தின் உடனாளராகவே பணி வாய்ப்புக் கிடைத்திட வேண்டும் என்பதே என் அவா!

நிறைவாக, அரசுப் பணி, சம்பளக் குறிக்கோள் என்று இல்லாமல், அர்ப்பணிப்பு உணர்வு, மனிதநேயம், சக தோழர், தோழியர் என்ற உணர்வோடு மனநோயாளிகளுக்குப் பணி ஆற்றுவதே எங்களுக்கு மனநிறைவு, மன மகிழ்ச்சி!

***

தன்னுடைய மனநல மருத்துவமனை அனுபவத்தில், 90 முதல் 95 விழுக்காடு பிணியாளர்கள் முழு நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றார்கள்; மீண்டும் பணியில் சேர்ந்து சாதித்து இருக்கின்றார்கள் என்பதை எடுத்துக் கூறுகின்றார். மருத்துவர்களால் பரிந்து உரைக்கப்படுகின்ற மருந்துகளைச் சரிவர உட்கொள்ளாதவர்கள் எஞ்சி உள்ள ஐந்து விழுக்காட்டினார். சரியான கவனிப்பு இருந்தால், மனநல நோய் நூற்றுக்கு நூறு முழுமையாகத் தீர்க்கக் கூடியதே என்ற செய்தியை, இந்த நூலில் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறார் கோபாலகிருஷ்ணன்.

கோபாலகிருஷ்ணனின் பணிகளை, மனநலக் காப்பகத்தின் உயர் அதிகாரிகள், உடனாளர்கள் வெகுவாகப் பாராட்டி உள்ளனர். அவர்களுடைய பாராட்டு உரைகளும், இந்த நூலில் இடம் பெற்று உள்ளன.

கோபாலகிருஷ்ணனுக்கு நமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வோம். அவரது அலைபேசி எண். 99622-31954.

பணியாளரும், பிணியாளரும்: மனநலக் காப்பகம் பேசுகிறேன் நூலுக்கான நன்கொடை ரூ. 50.

பெற விழைவோர் தொடர்பு கொள்க:

சீதாராம் பதிப்பகம்,
புதிய எண் 12,
முதல் தெரு,
பக்தவத்சலம் நகர்,
வியாசர் பாடி,
சென்னை - 600 039

Pin It