இப்போது, எந்த விசேஷமாக இருந்தாலும் அங்கே குளிர்பானங்கள் முக்கிய இடம் பிடித்துவிடுகின்றன, கலர் கலராக ஒளிரும் அந்த குளிர்பானங்களை கிளாசில் சப்பிக் குடிப்பதில் தனிப்பெருமை இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். இன்னும் சிலர் இதைவிட பல படி மேலே போய் சாப்பிடும்போது குடிநீருக்கு பதிலாக இந்த குளிர்பானங்களையே பயன்படுத்துகின்றனர். இப்படி, தொடர்ந்து கலர் கலராக குளிர்பானங்கள் வயிற்றுக்குள் தள்ளி வந்தால் உங்கள் உடல் எலும்புகள் பலவீனமடைந்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கிரீஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது உண்மை என்று நிருபிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி குடித்து வரும் இந்த குளிர் பானங்களின் அளவு மிகவும் அதிகரித்தால் உடல் உறுப்புகள்கூட செயலிழக்கலாம், நீரிழிவு நோயும் ஏற்படலாம் என்பதும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 

குளிர்பானங்கள் உடலில் எந்தவித மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி அந்த ஆய்வாளர்கள் கூறும்போது, குளுக்கோஸ், பிரக்டோஸ், காபின் போன்ற மூலக்கூறுகள் குளிர்பானங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றைக் கொண்ட குளிர்பானங்களை அதிகம் குடித்தால் உடலின் உள்ள பொட்டாசியத்தின் அளவு குறைந்துபோய் விடுகிறது. அதன்காரணமாக உடலின் தசைகள் சக்தி இழந்துவிடுகின்றன. மேலும், சிறுநீரகத்திற்கு அதிக வேலை கொடுத்து அங்கேயும் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகின்றன. அத்துடன், உடல் பருமனையும் ஏற்படுத்தி இல்லாத நோய்களையும் வரவழைத்துவிடுகின்றன என்று தெரிவித்தனர்.

நீங்களும் குளிர்பான பிரியர் என்றால் இப்போதே நீங்கள் சாப்பிடும் குளிர்பானத்தின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். அல்லது குளிர்பானம் குடிப்பதையே தவிர்த்துவிடுங்கள்.

(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)

Pin It