அக்குப்பங்சர் சிகிச்சையுடன்... ஹோமியோ, சித்தா, மூலிகை மருந்துகளைக் கூட இணைத்து உண்ணக்கூடாது, எந்த சந்தர்ப்பத்திலும் எந்த மருந்தும் எடுக்கக்கூடாது என்று சிலர் கூறுவது பற்றி...?

அக்குப்பங்சர் என்பது மருந்தில்லா மருத்துவம் என்பது உண்மையே. ஆனால் சீனப் பாரம்பரிய மருத்துவ முறைகளில் அதுவும் ஒன்று. தேவைக்கேற்ப எண்ணற்ற சீன மூலிகை மருந்துகளை அக்குப்பங்சருடன் இணைத்துச் சிகிச்சை அளிப்பது சீனாவின் பல்லாயிரமாண்டு மருத்துவ அனுபவம். இதனை அக்குப்பங்சரின் தனித்தன்மையை அழிக்கும் செயலாக கருதுவது அறிவுக்கு பொருத்தமற்றது. இத்தகைய கண்மூடித்தனமான கொள்கைகளால், விரும்பத்தகாத நடைமுறைகளால் பாதிக்கப்படுவது மக்களே.

அக்குப்பங்சரின் தாயகமான சீனாவில் தாயக மூலிகை மருந்துகளும் அக்குப்பங்சரும் இணைந்து வெற்றிகளைக் குவிப்பது போல, ஒருங்கிணைந்த (இயற்கை மருத்துவ) சிகிச்சைதான் இன்றைய மற்றும் நாளைய மனிதர்களின் நவீன உடலியல் உளவியல் சிக்கல்களுக்கு தீர்வு காணமுடியும். எனவே அறிவியலுக்குப் புறம்பான, ஆபத்தான, அபத்தமான கருத்துக்கள் எந்த திசையிலிருந்து வந்தாலும் மக்கள் விழிப்போடு புறக்கணிக்கவேண்டும்.

ரத்தப்பரிசோதனை, சிறுநீர், மலப் பரிசோதனைகள், எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற சோதனைகள் உண்மையான அக்குப்பங்சர் சிகிச்சைக்குத் தேவையில்லைஎன்று ஒருசில அக்குபங்சர் மருத்துவர்கள் கூறுகிறார்கள். நோயாளிகள் ஏற்கனவே பார்த்துள்ள ஆய்வு அறிக்கைகளைக் கண்ணால் பார்க்கக்கூட வெறுப்பதும் மறுப்பதும் சரியா?

மரபு முறை அக்குப்பங்சர் மீதான அளவு கடந்த ஈடுபாடு காரணமாகவோ அல்லது பரிசோதனை முறைகள் எல்லாம் ஆங்கில மருத்துவத்தோடு மட்டுமே தொடர்புடையது என்ற அப்பாவித்தனம் காரணமாகவோ அல்லது தங்களை மற்ற (அக்குப்பங்சர்) மருத்துவர்களைவிட உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வதற்காகவோ அப்படி சிலர் கூறக்கூடும்.

அக்குப்பங்சர் சிகிச்சைக்கு இந்த ஆய்வுகள் மிகவும் அடிப்படையான தேவைகள் என்று கூறமுடியாது என்றாலும் நோய்களின் தன்மைகளுக்கேற்ப, மருத்துவருக்கு ஏற்படும் சில குழப்பங்களை, சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக, சிகிச்சையின் முன், பின் உடல் நிலைமை அறிவதற்காக, சிகிச்சையினால் கிடைத்துவரும் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக பரிசோதனைகள் உதவும்; இவற்றை முற்றிலுமாய் நிராகரிப்பது அறிவுடைமையல்ல. அது நவீன சூழலுக்கேற்ப அக்குப்பங்சரை முன்னெடுத்துச் செல்ல உதவாது.

ஒரு புள்ளி, ஒரு ஊசி, ஒரு நிமிடம்என்ற சிகிச்சை முறைதான் சரியானது என்றும் Single Needle Therapyஎனப்படும் ஒற்றை ஊசிச் சிசிச்சைமுறை தவிர வேறு எந்த முறையில் சிகிச்சையளித்தாலும் அது அக்குப்பங்சர் அல்ல என்றும் சிலர் கூறுகிறார்களே?

அக்குப்பங்சர் நாடிப் பரிசோதனை பற்றி மருத்துவ உலகில் மாறுபட்ட கருத்துக்களும், விவாதங்களும், நடைமுறைகளும் உள்ளன. நாடிப் பரிசோதனை முறை சிகிச்சை மூலம் சிலபல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. எனினும் இதனைக் கற்றுத் தேர்வதும், தெளிவு பெறுவதும், வெற்றி காண்பதும் எல்லோருக்கும் எளிதல்ல.

சீன நாட்டிலேயே நூற்றுக்கணக்கான வழிமுறைகளில் அக்குப்பங்சர் சிகிச்சையளிக்கப்படுவது உலகம் அறிந்த உண்மை. இம்முறைகளின் மூலம் விகிதாச்சார மாறுபாடுகளுடன் பயன்கள் டைப்பதால்தான் பல்வேறு முறைகளும் பின்பற்றப்படுகின்றன. அவை உலகெங்கும் பரவி வருகின்றன. ஒற்றை ஊசி முறை தவிர, Multi Needle Therapy, Tens வைத்தியம், மின் தூண்டல் அக்குப்பங்சர் சிகிச்சை போன்ற முறைகளிலும் சிறப்பான உடல் நலப்பயன்கள் கிடைக்கின்றன என்பதை மக்கள் அனுபவம் வாயிலாக அறிந்துள்ளனர்.

மக்களின் சந்தேகம் என்னவென்றால் ஒரு புள்ளிச் சிகிச்சையைத் தொடர்ந்து நேரிலோ தொலைபேசியிலோ இஸ்லாமிய முறை பிரார்த்தனையும் இணைக்கப்படுவது ஏன் என்பதுதான். இவர்கள் எதைச் சிகிச்சை என நம்புகிறார்கள்? சீனாவின் எந்தப்பகுதியில் இத்தகைய அபத்தமான இறையியல் அகுபங்சர் நடைமுறையில் உள்ளது?

(“அக்குப்பங்சர் கேள்விகள் - பதில்களும், விளக்கங்களும்” நூலிலிருந்து)
Pin It