ஈழப் பிரச்னையில் மேற்குலக நாடுகளின் அக்கறை எந்தளவுக்கு உணர்வுப்பூர்வமானது என்று தெரியவில்லை. ஆயினும் அண்மைக் காலங்களில் அந்நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவையே!. அதிலும் குறிப்பாகச் சென்ற மாத (ஏப்ரல் 2009) இறுதியில் பொதுநலவாய அமைப்பின் (common wealth) செயலாளரும், பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சருமான டேவிட் மில்லிபாண்ட் தமது சகாவான பிரெஞ்சு நாட்டவரான பெர்னாட் கோச்னருடன் இலங்கைத் தலைநகருக்கும், பின்னர் அங்கிருந்து வவுனியாவுக்கும் சென்று வந்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது!

ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு இவர்களோடு இணைந்து சென்றிருக்கவேண்டிய சுவீடிஷ் நாட்டவரான கார்ல் பில்ட்டுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்திருந்ததால் இந்த இருவரும் மட்டுமே அந் நாட்டிற்குச் சென்று திரும்பியிருந்தார்கள். இவர்களது பயணம், தமிழக முதல்வரும்- ‘தமிழினக் காவலருமான’ கலைஞரின் ‘ஆறு மணி நேர உண்ணாவிரத நாடகம் அரங்கேறிச் சரியாக மூன்று நாட்களின் பின்னர் நடைபெற்றிருக்கிறது. அந்த நேரத்திலும் அங்கு வன்னிப் பெரு நிலத்தின் ஓர் மூலையில் முடக்கப் பட்டிருக்கும் பல்லாயிரம் தமிழர்கள் மீது, இலங்கை இராணுவம் தனது மூர்க்கமான தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டிருந்தது!.

திருவாளர் சிதம்பரம் கூறியதுபோல், சிங்களத்தின் ராணுவம் தனது ‘கனரக ஆயுதப் பிரயோகத்தை நிறுத்திவிடவில்லை. இது வெறும் பேச்சளவில் நின்றுவிட, பதிலுக்கு இலங்கையின் ராணுவப் பேச்சாளரும், வெளியுறவுத்துறை அமைச்சர் தமது பங்குக்கு, “நாம் போர் நிறுத்தம் அறிவிக்கவேயில்லை” என்று உரத்துக் கூறிக்கொண்டிருந்தார். இச் சந்தர்ப்பத்தில்தான் மேலே குறிப்பிட்ட ராஜதந்திரிகளின் இலங்கைப் பயணம் நடைபெற்றிருந்தது. தங்கள் பயணத்தினை முடித்துக்கொண்டு திரும்பியதும், திரு மில்லி பாண்ட் 30/04/2009 ல் வெளியிட்டிருந்த அறிக்கையில் தமது பயணத்தின் குறிக்கோள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

ஈழப் பிரச்னையில் சர்வதேசத்தின் கடமைகள் என இரண்டு முக்கிய விடயங்கள் அவரால் இனங் காணப்பட்டிருந்தது. அவற்றுள் ஒன்று, விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிடுவது எனத் தீர்மானித்து கொடூரமான போர் ஒன்றினை நடாத்திக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் கனரக ஆயுதங்களால் இறக்கும் அல்லது அங்கவீனமுறும் தமிழர்களது நிலை பற்றி ஆராய்வது, மற்றையது ஏற்கனவே ராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தமிழர்களது நிலையைத் தெரிந்துகொள்வது ஆகியவை இடம் பெற்றிருந்தன.

இவ்விரண்டினையும் தவிர தங்களது பயணத்தின் கடமைகள் என மேலும் மூன்று விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

1) பொதுமக்களின் இழப்பினைக் குறைக்கும் வகையில் இரு பகுதியினருக்கும் இடையே போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்துதல்;
2) ஐரோப்பிய ஒன்றியம்; ஐ.நா இவற்றின் வேண்டுகோளுக்கு ஏற்ப மனிதாபிமான உதவிகளை முடுக்கி விடுதல்,
3) இலங்கையின் இரு பெரும் இனங்களினதும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அங்கு ஒரு நிரந்தர தீர்வினை எட்டுதல்.

இம் மூன்றினோடும், கடந்த ஆறு மாதங்களாக வன்னிப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் மனித அவலங்களையும், இடப் பெயர்வுகளையும், தமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தொகுத்து அளித்திருந்தார். அதில் “இலங்கை அரசு அந்நாட்டின் வட பகுதியில், சாட்சியங்கள் ஏதுமற்ற போரொன்றினை நடாத்தி வருகிறது எனவும், விடுதலைப் புலிகளது அச்சுறுத்தல்களிலிருந்து தப்பி வந்தாலும் அவ்வாறு வரும் தமிழர்களுக்கு (சிங்கள) அரச படைகளின் கைகளில் சிக்கிச் சீரழியும் நிலைதான் ஏற்படுமோ என்னும் பயமே மேலோங்கி இருக்கிறது” என்பதைச் சுட்டிக்காட்டியிருப்பதோடு சிங்கள அரசு சர்வதேசங்களிடம் வழங்கியிருக்கும் வாக்குறுதிகளையும் காப்பாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மேற்குறிப்பிட்ட அறிக்கையும், மில்லி பாண்ட்டின் உரையும் வெளியான பின்னர், சிறீ லங்கா அரசின் அதிபர் உட்பட , அந்நாட்டின் ஊடகங்கள் யாவும் மேற்குலகின் இந்தப் புதிய ‘தமிழர் ஆதரவு’ நிலையினைக் காட்டமாகக் கண்டித்து அறிக்கைகளையும், ஆசிரியத் தலையங்கங்களையும் வெளியிடத்தொடங்கின. இவை யாவும் சிங்கள மேலாதிக்கத்தையும், தமிழர் நலன்களில் அக்கறையற்ற நிலையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவனவாக அமைந்திருந்தன.

அன்புடமைத் தத்துவத்தை உலகினுக்குப் போதித்த ‘கௌதம புத்தர’து நாளான விசாக தினத்தன்று (3/5/2009) இலங்கையிலிருந்து வெளியான சிங்களப் பத்திரிக்கைகளில் இடம்பெற்ற செய்திகளும், கருத்துகளும்; சிறுபான்மை இனமான தமிழர்களுக்குப் பரிந்துபேச முற்பட்டிருக்கும் மேற்குலகை வன்மையாகக் கண்டித்திருந்தன. வெளிப் பார்வைக்கு பௌத்த முலாம் பூசப்பட்டு, உள்ளே நச்சு எண்ணங் கொண்ட சிங்கள ஏகாதிபத்திய சிந்தனையை, இன்றைய தமிழின அழிப்பின் இறுதிக் கட்டத்திலும் வெளிப்படுத்தியிருப்பது- இலங்கையின் கடந்தகால வரலாற்றில் தமிழர்களுக்கு எதிராக அவை மேற்கொண்டிருக்கும் இன ஒடுக்கல்களுக்குச் சிகரம் வைத்தாற்போன்று அமைந்திருந்தன.

இது போன்ற தமிழின விரோதக் கருத்துகளை முன்வைக்கும் பணியில், ராஜபக்ஷவின் அரசினால் பழிவாங்கப்பட்ட ‘ த சன்டே லீடரும்’ இணைந்து கொண்டிருக்கிறது. மனித உரிமை, பத்திரிகைச் சுதந்திரம், ஊழல் எதிர்ப்பு என்னும் நியாயமான கொள்கைகளின் அடிப்படையில் தனது கருத்தினை வெளிப்படுத்திவரும் ‘த சன்டே லீட’ரும் தமிழின உரிமைகள் விடயத்தில் மட்டும், அதுவும் ஓர் ‘சிங்கள’த் தலைமையில் செயல்படும் ஏடு என நிரூபித்திருக்கிறது!

இந்தப் பத்திரிகைகள் யாவும் ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடுவது, “மேற்கு நாடுகளின் இன்றைய தலையீடு, விடுதலைப் புலிகளின் தலைவர்களை காப்பாற்றுவதற்காகவே” என்பதாகும். அவர்கள் தமது வாதத்துக்கு ஆதரவாக, கையிலெடுத்திருப்பது இதே மேற்கு நாடுகள் விடுதலைப் புலிகளை ஓர் பயங்கரவாத இயக்கம் என தடைசெய்திருப்பதை! அதாவது, “அந் நாடுகளால் தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பின் தலைமையினைக் காப்பாற்றி மீண்டும் அதே தலைமையுடன், இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளை நடாத்த வேண்டும் என வற்புறுத்தப் போகின்றன. இது எந்த வகையில் நியாயம்” என்கின்றன சிங்கள இனவாதத்தில் ஊறிக்கிடக்கும் அந்த ஏடுகள்.

ஒரு பேச்சுக்காகவேனும்- உண்மையில் மேற்கு நாடுகள்,பிரபாகரனையும் ஏனைய முக்கிய தலைவர்களையும் காப்பாற்றவே இப்போது இலங்கை விடயத்தில் தங்கள் மூக்கினை நுழைக்கின்றன என்று வைத்துக் கொண்டாலும்- அதில் தப்பேதும் இல்லையே? மேற்குலகும், இந்தியாவும் தங்கள் பிரதேச நலன் மற்றும் அரசியல் காரணங்களுக்காக சில விடுதலை இயக்கங்களைப் பயங்கரவாத முத்திரை குத்தி ஒதுக்கிவைத்திருக்கின்றன.

தென்னாபிரிக்காவின் விடுதலைப் போராளியாக விளங்கிய சமையத்தில், பின்னாளில் அந்நாட்டின் முதல் அதிபராக தெரிவு செய்யப்பட்டவரான, நெல்சன் மண்டெலாவைக் கூடப், பயங்கரவாதி என அறிவித்து அவரை கால் நூற்றாண்டு காலம் சிறையில் அடைத்திருந்ததை உலகம் அத்தனை விரைவில் மறந்துவிடவில்லையே? எனவே ஒரு இயக்கத்தினையோ அதன் தலைமையையோ, குறிப்பிட்ட ஒரு நாடோ அன்றிப் பலவோ ‘பயங்கரவாத முத்திரை’ இடுவது அந்தந்த நாடுகளின் ‘பார்வையினை’ ஒட்டிய விடயமேயன்றி அதுவே நிரந்தரமானது அல்ல. அவ்வாறு ஒரு நாட்டினால் ‘முத்திரை’யிடப்பட்ட ஓர் இயக்கம் மற்றோர் நாட்டினால் ‘விடுதலை இயக்கம்’ என்று அழைக்கப்படுவதும் உண்டு.

காலனிய நாட்களில் பிரிட்டிஷ் அரசால் தீவிரவாதிகளாயும், பயங்கரவாதிகளாயும் இனங்காணப்பட்ட பலர், பின்னாளில் சுதந்திர நாடுகளின் தலைமைப் பதவிகளை அடைந்திருக்கின்றனர். இது வரலாறு!

ஈழப் புலிகள் பயங்கரவாதிகளா, தீவிரவாதிகளா, வன்முறையாளர்களா அல்லது விடுதலைப் போராளிகளா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அந்நாட்டின் தமிழர்களுக்கே உரியது. ராஜபக்ஷே அரசின் பார்வையில், டக்ளஸ தேவானந்தாவும், கருணாவும், ஆனந்த சங்கரியும் ஒருவேளை தமிழினக் காவலர்களாயும், விடுதலை வீரர்களாயும் தெரியலாம். அதற்காக அவர்களைப் போன்ற ‘அடிமை’களுடன் ஓர் இனத்தின் ‘ உரிமை’ பற்றிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என்னுமாப்போல்- இந்தச் சிங்கள சார்பு ஏடுகள் வாய்கிழி¢யக் (தாள் கிழிய எழுதுவது!) கூச்சலிடுவது வேடிக்கையானது.

இந்த வேடிக்கையின் உச்ச கட்டம் யாதெனில்...... “இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும், அடங்காத போர் வெறியினையும் கண்டிக்கும் மேற்குலக ராஜதந்திரிகள் தமது அறிக்கையில்...... விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதை ஒப்புக் கொள்கிறோம்.... ஆனால் நாம் இதில் தலையிடுவதற்கான காரணம், இனப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஒன்றினை எட்டுவதற்காகவே” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதன் மூலம், இலங்கையில் இனப் பிரச்னை என ஒன்று உள்ளது என்பதை இவர்கள் ஒப்புக்கொள்கிறார்களாம்!

அதுவும் கடந்த அரை நூற்றாண்டுகளாக, ஆரம்பத்தில் அரசியல் போராட்டமாகவும் பின்னர் கால் நூற்றாண்டு காலம் ஆயுதப்போராயும் பரிணமித்திருக்கும் ஈழத்தமிழர்களது அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் நிரந்தர தீர்வு காணப்படவேண்டுமாம்! அப்படியாயின் இந்த விடுதலைப் புலிகள் யார்? இவர்கள் இத்தனை காலமும் போராடியது எதற்காக அல்லது யாருக்காக ?

பிரபாகரனும் அவருடன் இணைந்து ஏனைய போராளிகளும் காடுகளில், அடர்ந்த மரங்களின் மத்தியில், பாம்புகளுக்கும் விஷப் பூச்சிகளுக்கும் நடுவே வாழ்ந்து கொண்டு எப்போதும் சாவை எதிர்கொண்டவாறு போராடுகிறார்களே அதற்கான விடையை இந்தச் சர்வதேசங்களும், இன வெறிச் சிங்கள அரசும் எப்போது, எவரிடம் வழங்கப்போகிறார்கள்?

1983 ல் நிகழ்ந்த மிகவும் மோசமான இனக்கலவரங்களைத் தொடர்ந்து, அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் உதவியோடு புதிய தோற்றம் கண்ட ஈழத்தமிழரது ஆயுதப் போராட்டத்தை இன்றுவரை முன்னெடுத்துச் செல்லும் ஒரே இயக்கமான விடுதலைப் புலிகள், பல தடவைகள் இலங்கை அரசுடன் – இதே வெளி நாடுகளின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த வரலாற்றை மேற்குலகும் ஏனைய சம்பந்தப்பட்ட நாடுகளும் மறந்துவிட்டனவா? அல்லது, இன்று புலிகளை அழித்துவிட்டோம் என்று தப்புக் கணக்குப் போட்டு எக்காளமிடும் சிங்கள ஆளும் வர்க்கமும் அதற்கு ஒத்தூதும் பத்திரிகைகளும் மறந்துவிட்டனவா?

துணிந்து நின்று உரிமைகளுக்காக களமாடியவர்களை ‘பயங்கரவாத’ முத்திரைகுத்திச் சிதறடித்து விட்டோம், இனிப் பேச்சுவார்த்தை என்னும் பெயரில் ‘எடுபிடிகளை’ வைத்தே ஈழத்தமிழர்களது விடுதலை வேட்கையினை, வெறும் மந்திரிப் பதவிகளுக்கும், சுகபோக வாழ்க்கைக்கும் பேரம் பேசிவிடலாம் என்னும் நப்பாசையா இந்த ஜனநாயகத்தின் பாதுகாவலர்களுக்கு? எதனைச் சாதிப்பதற்காக இவர்கள் இத்தனை தூரம் நாடகமாடுகிறார்கள் ?

ஒரு புறத்தில் மேற்குலகின் ராஜதந்திரிகள், மறு புறம் இலங்கைத் தலைமயும் அதற்கு ஒத்தூதும் பத்திரிகைகளும்....... இவர்களுக்கு ஆதரவாக இந்தியாவும், இந்திய அரசுக்கு முட்டுக்கொடுக்கும் தமிழகத் தலைமையும்............!

பாரதி வேதனையுற்றுச் சபித்துவிட்டுச் சென்றது போன்று... “விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய் எனக்குரையயோ ?” என்று நாமும் சேர்ந்து குமுறுவதைத் தவிர வேறு வழியே இல்லையா!

உரிமப் போருக்குப் ‘பயங்கரவாதம்’ என்று பேர் சூட்டிவிட்டு, பயங்கரவாத அரசுக்கு எல்லா உதவிகளையும் செய்துகொண்டு- இன்று ‘விழுப்புண்’ பட்டு வீழ்ந்து கிடக்கும் தமிழினத்தைச் சுற்றி நின்று ஒப்பாரிவைக்கும் மேற்குலகமும், வேடிக்கை பார்க்கும் இந்தியாவும், கும்மாளமிடும் சிங்களமும் அடுத்து என்ன செய்யத் திட்டமிடுகின்றன என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். 

- சர்வசித்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It