medical womens 350பாலின சமத்துவத்தின் முதல் நிலை - அடிப்படை நிலை என்னவென்றால், பெண்ணின் உணர்வு களையும்,  உடலையும் புரிந்து கொள்ள முயற்சித்தல் ஆகும். மருத்துவர் என்ற முறையில் பெண்கள் சந்திக்கும் சில முக்கிய உடல் சிக்கல்களைப் பற்றி எழுதுகிறேன். இவை பெண்கள் படிப்பதற்காக அல்ல.

தந்தையாக, சகோதரனாக, காதலனாக, தோழனாக, கணவனாக, மகனாக பெண்களுடன் வாழும் ஆண்கள் அவசியம் படித்துப் புரிந்து கொள்வதற்காக எழுதப்படுவதாகும். இவை போன்ற உடல் சிக்கல்கள் குறித்து உங்களுடன் வாழும் பெண்களுடன் விவாதியுங்கள். அவர்கள் எந்த வகை உறவாக இருந்தாலும் அந்தப் பெண்களுடன் விவாதியுங்கள். உடல் நிலைகளைப் பற்றி மட்டுமல்ல உணர்வு நிலைகளையும் விவாதியுங்கள். பாலின சமத்துவத்தின் வழியேதான் சமூக ஜனநாயகம் உருவாகும்.

1.மாதவிடாய் முன்பு உள்ள அறிகுறிகள் Premenstrual syndrome (PMS)

வாய்வுப்பிரச்சனை, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைப்பிடிப்பு, மார்பக வீக்கம் மற்றும் வலி, மலச்சிக்கல், கைகால் வலி மற்றும் தசைப்பிடிப்பு, முகப்பரு இதில் எதாவது ஒன்றிரண்டு பிரச்சனைகள் மாதவிடாய்க் காலத்திற்கு இரண்டு அல்லது ஒரு வாரத்திற்கு முன்பு தோன்றும். சில பெண்களுக்கு இது அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். அதை Pre-menstrualDysphonic disorder என்று அழைப்பர்.

2. இடமகல் கருப்பை அகப்படலம் Endometriosis

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நிற்கும்போது ஏற்படும் பிரச்சனை. ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் போதும் கரு உருவாக இரத்தப் படலம் மெத்தை போன்று உருவாகும். இது மாதவிடாய்ச் சுழற்சியின்போது வெளியேறுகிறது. சில நேரங்களில் சரியாக வெளியேறாமல் மாதவிடாய்ச் சுழற்சியில் ஒழுங்கின்மையை ஏற்படுத்தி, அதிகமான வயிற்று வலியுடன் உதிரப்போக்கு ஏற்படுகிறது. இந்த வலி கால் வரை பரவிவிடும். குழந்தையின்மைக்குக் காரணமாகிவிடும்.

3. சினைநீர்ப்பைக் கட்டி Polycystic ovary syndrome (pcos (or) pcod)

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, உடற்பருமன், முகப்பரு, முகத்தில் முடி (தாடி மற்றும் மீசை) வருதல், மன அழுத்தம், ஆண் ஹார்மோனான (Testosterone) அதிகம் சுரப்பதால் ஆண் தன்மை தோன்றுதல், சினைப்பை ஆரோக்கியமற்ற கருமுட்டையை உருவாக்குதல் ஆகியவற்றின் விளைவாக குழந்தையின்மை ஏற்படும். இயற்கை மருத்துவத்தில் தீர்வு காணமுடியும்.

4. நார்த்திசுக்கட்டி Fibroids

3 அல்லது 4 பெண்களில் ஒருவருக்கு கருப்பைக்கட்டி வருகிறது. பொதுவாக இந்தப் பிரச்சனை மாதவிடாயின்போது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கு மற்றும் தாங்கமுடியாத வயிற்று வலியின்போது அல்லது கருத்தரித்தலில் தாமதமாகுவதால் மட்டுமே டாக்டரின் உதவியுடன் கண்டுபிடிக்கப்படுகிறது.

இந்தக் கட்டி என்பது நார் போன்ற பகுதியே தவிர (இழை நார் பகுதி) வேறொன்றுமில்லை. கர்ப்பப்பையில் பெண்களின் ஹார்மோன் ஆன ஈஸ்ட்ரோஜென்னால் மெதுவாக வளரத் தொடங்குகிறது. இயற்கையாக வளரக்கூடியது. சிலசமயம் (Menopause) மாதவிடாய் முடியும்போது ஹார்மோன் குறைவால் குறையத் தொடங்கும். எப்போதாவது அதிக எடையுடன் கிலோ கணக்கில் வளரும். அப்போது உடலுறவின்போது வலி, அடிக்கடி சிறுநீர்கழித்தல், சிறுநீர் கட்டுப்படுத்த முடியாத தன்மை ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம். சிலசமயம் மலட்டுத்தன்மையைக்கூட உருவாக்கும்.

5. புணர் புழையழற்சி Vaginitis  

பிறப்புறுப்பில் எரிச்சல் மற்றும் பிறப்புறுப்பைச் சுற்றி, சிவந்து அரிப்பு ஏற்படுதல், வெள்ளைப்படுதல் மற்றும் துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதல், சிறுநீர் கழிக்கும் போது வலியுடன் கூடிய எரிச்சல் உணர்வு அல்லது உடலுறவின்போது வலிபோன்றவை புணர் புழையழற்சியால் உண்டாகும். சில பெண்களுக்கு எவ்வித அறிகுறிகளுமின்றிகூட வரும். அதிப்படியான உடல்சோர்வு, இறுக்கமான ஆடை அணிதல், உடலுறவு, மலம் கழித்த பின் சரியாக சுத்தம் செய்யாமை போன்றவை இதற்குக் காரணிகளாகும். பாக்டீரியா தொற்று காரணமாகத்தான் இந்த அழற்சி ஏற்படுகிறது.

6. சிறுநீர் தட தொற்று cystitis

பெண்களின் சிறுநீர்ப் பாதை மிகவும் குறுகியது. இதனால் தொற்று வருவது சுலபமாகிறது. ஆண்களைவிட பெண்களுக்கே அதிகமாகத் தொற்று வருகிறது. அதிகமாக மாதவிடாய் நிற்கும்போது (Menopause) சிறுநீர்ப்பையில் தொற்று அடிப்பகுதியிலும், சிறுநீரகத்தில் தொற்று மேல் பகுதியிலும் வருகிறது. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகள். இது பெரும்பாலும் நு.ஊடிவை என்ற பாக்ட்ரியாவால் ஏற்படுகிறது.

7. இரத்தசோகை Anemia

உடற்சோர்வு, தோல் வெளுத்துக் காணப்படுதல், நகங்கள் உடைந்துபோதல், பகலில் உறக்கம் வருதல், நாக்கு வலியுடன் கூடிய வீக்கத்துடன் இருத்தல், வாய் பகுதி வெடித்து காணப்படுதல் போன்ற அறிகுறிகள் இரத்த சோகையினால் ஏற்படும். பொதுவாக கர்ப்ப காலத்தின்போது, B2,B6,B12 வைட்டமின்கள் குறைபாடினால் மற்றும்ஊட்டச்சத்துக் குறைவான உணவு உண்பதினால் ஏற்படுகிறது.

8. மார்பக மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் Breast and cervical cancer

தற்போது பெரும்பான்மையான பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் பெண்கள் மிகவும் முற்றிய நிலையில் மார்பக நோயுடன் மருத்துவமனை வருகின்றனர். நகர்ப்புற பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். தன் உடலைக் கவனித்துக்கொள்ள நேரமின்மை, உணவுப் பழக்கவழக்கம், வாழ்க்கைமுறை மாற்றம், மனஅழுத்தம், தாமதமான திருமணம் போன்ற காரணிகளால் நகர்புறப் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மார்பகத்தில் கட்டி இருப்பது போன்ற உணர்வு, மார்பகத்தில் நீர் வடிதல் (Nipple)  முளைக்காம்பைச் சுற்றி வேனக்கட்டி உருவாதல், மார்பகத்தில் வலியுடன் கூடிய (Rash) கட்டி அல்லது வலி இல்லாத கட்டி தோன்றுதல் போன்றவை இதற்கான அறிகுறிகள்.

9. கர்ப்பபை வாய் புற்றுநோய்

மார்பகப்புற்று நோயை விட அதிகமான பெண்கள் மரணமடைவது கர்ப்பபை வாய்ப் புற்றுநோயால் தான். வருடத்திற்கு இந்தியாவில் 33,000 பெண்கள் கர்ப்பபை வாய்ப்புற்று நோயால் இறக்கிறார்கள். இது ஹியூமன் பாப்பிலோமா(Human Papilloma)  என்னும் வைரஸால் வரக்கூடியது. இது உடலுறவின்போது பரவக்கூடியது. சுத்தமின்மை, அதிக மகப்பேறு, போதுமான இடைவெளியின்றி குழந்தை பெறுதல், ஊட்டச்சத்துக் குறைபாடு, அடிக்கடி கருச்சிதைவு, சிறுவயதில் திருமணம், பாதுகாப்பற்ற உடலுறவு போன்றவை இதன் காரணிகள் ஆகும்.

10. இதய நோய்

நாம் பொதுவாக இதயநோய் ஆண்களுக்கே அதிகமாக வருவதாக நினைக்கிறோம். ஆனால் பெண்களே அதிகமாகப் பாதிக்கபடுகிறார்கள். அதிகமாக வேலைக்குச் செல்லும் பெண்கள் பாதிக்கபடுகிறார்கள். மார்பகம் மற்றும் கர்ப்பபை வாய்ப் புற்றுநோயை விட இதய நோயால் இறக்கும் பெண்களே அதிகம். வேலைப் பளுவுடன் அதிக வீட்டுவேலை செய்யும் பெண்கள் இருமடங்கு மனஅழுத்தம் பெற்று இதயநோயால் பாதிக்கபடுகிறார்கள்.

சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது, கர்ப்பத்தடை மாத்திரை, உடற்பயிற்சியின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற காரணிகளால் இளம் வயதுப் பெண்கள் ஆண்களைவிட அதிகம் பாதிக்கப்படுகின்றனர். (சில சமயங்களில் மரணம் கூட ஏற்படுகிறது). பொதுவாகப் பெண்களுக்கு ஆண்களைப் போல் நெஞ்சுவலி வருவதில்லை. ஆண்களுக்கு பெருதமனியில் அடைப்பு ஏற்படுகிறது அதனால் நெஞ்சுவலி வருகிறது. பெண்களுக்கு சிறுதமனியில் அடைப்பு ஏற்படுவதால் இது ஆன்சியோ கிராஃபி (Angiography) தெரிவதில்லை. இதனால் மூச்சுவிடுவதில் சிரமம், தோள்பட்டை மற்றும் கை வலி, முதுகுவலி, கழுத்து மற்றும் தாடை வலி அல்லது வயிற்றுவலி, வாந்தி மற்றும் வேர்வையுடன் கூடிய தலைவலி போன்றவை ஏற்படும்.

11. எலும்புப்புரை Osteoporosis

பெண்களுக்கு அவசியமான சத்துகளான இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், கால்சியம், வைட்டமின் டி போன்றவை ஒவ்வொரு வாழ்க்கைக் கட்டத்திலும் தேவை. எப்போது எலும்புப்புரை தோன்றுகிறதோ அப்போது பெண்களுக்கு கால்சியம், வைட்டமின் டி குறைபாடு தோன்றுகிறது. இதனால் எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு முறிவு ஏற்படுகிறது. இந்நோய் உள்ளதை X Ray மூலம் கண்டறியலாம். சத்துமிக்க உணவுகள் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் இந்த நோய் வராமல் தடுக்கலாம்.

12. கீல்வாதம்   Arthritis  

கீல்வாத நோயால் ஆண்களைவிடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது ஒருவகை எலும்புத் தேய்மானம். இது 40 வயதில் வருகிறது. பொதுவாக இது பரம்பரை நோய் ஆகும். முக்கியமாக எலும்புகளிலும் மூட்டுகளிலும் வலியுடன் கூடிய வீக்கம் உண்டாகும். பொதுவாக உள் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும்.கைகால்களில் வாதம் ஏற்படும். காலை எழுந்தவுடன் மூட்டுகளில் முடக்கம், உடல் சூடு போன்ற அறிகுறிகள் உண்டாகும்.

13. உடற்பருமன்

உடற்பருமன் சர்க்கரைநோய் மற்றும் இதயநோயை உண்டாக்குகிறது. இளம் பெண்களின் உடற்பருமன், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, கருச்சிதைவு மற்றும் மலட்டுத்தன்மையை உண்டாக்கு கிறது. கர்ப்ப காலத்தின்போது இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதியை உண்டாக்குகிறது. மூன்று சதவீதப் பெண்கள் உடற்பருமனால் பாதிக்கப்படுகிறார்கள். உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு நிரந்தரத் தீர்வு தரும்.

14.மன அழுத்தம்

மனஅழுத்தம் பெண்களை அதிகமாக பாதிக்கிறது. நெருங்கிய உறவினர்களின் இழப்பு, உடற்பருமன், வேலைப்பளு, ஹார்மோன் மாற்றம், பொதுவாக மகப்பேற்றுக்குப் பின்பும், மாதவிடாய் சுழற்சி நிற்கும்போதும் (Menopause) பெண்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். 80 சத பெண்கள் மகப்பேற்றுக்குப் பின்பு தான் பாதிக்கப்படுகிறார்கள்.

அறிகுறிகள்: தற்கொலை முயற்சி, காரணம் இல்லாத அழுகை, தூக்கமின்மை, உடல் எடை குறைவு, குற்ற உணர்வு, எதிலும் ஆர்வமின்மை

15. மாதவிடாயின் கடைசி சுழற்சி  Menopause

மெனோபாஸ் காலத்தில், பெண்கள் உடலிலும் மனதிலும் பெரும் மாற்றத்தை எதிர் கொள்கிறார்கள். மெனோபாஸ் தோன்றும் வயது 48 முதல் 55 வயது ஆகும்.

முதல்நிலை Pre Menopause:  நான்கு முதல்  5 வருடங்கள் வரை தோன்றுவது. இக்காலக்கட்டத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படும்.

உடலியல் அறிகுறிகள்:  உடற்சோர்வு ,அதிகப்படியான உணவு எடுத்தல், தூக்கமின்மை, கைகால் வலி தோன்றுதல், காலையில் எழுவதில் சிரமம்.

எமோசனல் அறிகுறிகள்: தற்கொலைக்குத் தூண்டுவது, ஓய்வின்மை, எரிச்சல் அடைவது.

நடைமுறையில் அறிகுறிகள்: கவனக்குறைபாடு, ஆர்வமின்மை, முடிவு எடுப்பதில் தடுமாற்றம், ஞாபக மறதிபோன்றவை

சிகிச்சை முறைகள்: மருத்துவரின் ஆலோசனையைப் பெறுதல், சரியான சிகிச்சை முறையில் உடற்பயிற்சியுடன் கூடிய ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல், பாதிக்கப்பட்டவரின் குடுமபத்தினர் மனநிலை ஆலோசகரை அணுகுதல், கணவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்ளுதல்.

வைட்டமின் பி, ஒமேகா 3 நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்து நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதின் மூலம் நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் அஜீரணக் கோளாறு, உடற்சூடு ஆகியவை குறையும். வைட்டமின் B12 மற்றும் B6 மனஅழுத்தம் குறைவதற்கு மிகவும் உதவுகிறது. இயற்கையாகக் கீரைகள், பாதாம், ஈரல்களில் இந்தச்சத்து அதிகமாக உள்ளது. பால் மற்றும் பால் பொருட்களில் B6 ஃபோலிக் அமிலம் அதிகமாக உள்ளது. ஒமேகா 3 மீன்களில் அதிகமாக உள்ளது. இந்தச் சத்து மனஅழுத்தத்திற்கு எதிராக போராடக்கூடியது.

தவிர்க்கவேண்டியவை: அரிசி, கோதுமை மற்றும் சிறுதானியங்கள், வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை அனைத்தையும் தவிர்க்க வேண்டும். இவை அனைத்தும் கார்போஹைட்ரேட் நிறைந்தவை. கார்போஹைட்ரேட் நிறைந்த அனைத்து உணவுகளையும் தவிர்க்க வேண்டும். பதப்படுத்திய உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், கேக் வகைகள், புரோட்டா போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

இரும்புச்சத்து, கால்சியம், செலினியம், மெக்னிஷியம், சிங்க் போன்றவை மன அழுத்தத்தைத் தவிர்க்கும் சத்துப் பொருட்கள் ஆகும். Menopause ன் காரணிகளும், ஹார்மோன் மாற்றங்களினால் நரம்பு மற்றும் மூளையை பாதிக்கிறது. இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படுகிறது.

Pin It