சிவப்பு நிறம் கொண்டவன் அழகானவன் ’இது நம் சமூகத்தின் பொதுவெளியில் உறைந்திருக்கும் சங்கதி. அழகு என்ற சொல்லுக்கு என்ன வரையறை? கண்களாலோ, காதுகளாலோ, மனத்தாலோ அனுபவிக்கும் இனிமையான உணர்வை அழகென்கிறோம். ஆனால், நம் உணர்விலிருந்து பெறுகிற புரிதலைக் காட்டிலும் ஏற்கனவே உருவாக்கப் பட்டிருக்கிற கருத்தைக் கேள்விகளின்றி ஏற்பதே நம் சமூகத்தின் சிக்கலாக இருக்கிறது.

வெள்ளைநிறம் அழகானது என்று யார் சொல்கிறார்கள்? ஏன் சொல்கிறார்கள்? கருப்புநிறம் அழகற்றது என்றால் உலகம் முழுவதும் ஆயத்த ஆடைகளை விற்பனைசெய்யும் பிரபல நிறுவனங்கள் தங்கள் ‘மாடலாக’ கருப்பின இளைஞர் களைக் காட்சிப்படுத்துகிறார்களே ஏன்?

‘அழகான தோற்றம் ஆயிரம் சிபாரிசுக் கடிதங்களுக்குச் சமம்’, ‘மிடுக்கான தோற்றமும் வசீகரமான முகமுமே உங்கள் வெற்றிக்கான இரகசியம்’ என்று விளம்பரப்படுத்துகிற வணிக யுத்திகளும், கோடிகள் புரளுகிற சந்தையும் அதன்பின் உள்ள அரசியலும்தான் அழகின் வரையறையைத் தீர்மானிக்கின்றன.

சனவரி 12 ம் தேதிய தமிழ்இந்து நாளிதழின் செய்தியும் அவ்வப்போது என்.டி.டி.வி யின் செய்திகளின் இடையே ஒளிபரப்பப்படுகின்ற ஒரு அறிவிப்பும் இக்கட்டுரையின் ஆக்கத்திற்கு உந்துதலாக இருந்தன.

என்.டி.டி.வி தொலைக்காட்சி தங்களுடைய தொலைக்காட்சியில் சிவப்பழகுக் களிம்புகளுக்கு (Fairness cream) விளம்பரம் தறுவதில்லை என்று அறிவித்திருப்பதுடன் சிவப்பழகுக் களிம்புகள் நிற, இன அடிப்படையிலான மேலாதிக்கச்சிந்தனையைத் தூண்டக்கூடியது என உறுதிபடச் சொல்லித் தங்களது நிகழ்ச்சிகளின் உடனே தொடர்ந்து இவ்வறிவிப்பைக் காட்சிப்படுத்துகிறது.

7 நாளில் நிறம்மாறும் என்கிற அறிவியல் அறிவிற்குப் புறம்பான கருத்தைப் பரப்ப இடம்தர மறுத்திருப்பதும், சிவப்புநிறம், மட்டுமே அழகான ஆளுமை கொண்டநிறம், கருப்புநிறம் அழகற்ற வரியவர்களின் நிறம் என்பதான கருத்தியல் நிராகரிக்கப் பட்டிருப்பதும் வரவேற்பிற்குரியது.

அமெரிக்காவைச் சேர்ந்த டைலன்ரூப் என்ற 21 வயதுஇளைஞன், 9 கருப்பின மக்களைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதற்காக மரணதண்டனை பெற்றசெய்தி இந்து நாளிதழில் வெளியாகி உள்ளது அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனையில் இருந்த கருப்பின வெறுப்புணர்வு காரணமாகவே அவர்களைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளான். தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்க மேல்முறையீடு செய்யப்போவதில்லை எனவும், தான் செய்தது சரி என்பதிலும் அவன் உறுதியாக உள்ளான்.

21 வயதே நிரம்பிய ஒரு இளைஞன் வெறிகொண்டவனாக மக்களைச் சுட்டுக்கொல்லும் இச்செயலை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? நிறவெறி, இனவெறுப்புணர்வு என்பதன் பின்புலம் என்ன? நிறம்மட்டும்தான்பிரச்சினையா? நிறம் தான் சிக்கல் என்றால் மனிதனுக்கு நிறம் எப்படி வருகிறது என்பதை அறிவியல் அடிப்படையில் எளிதாகக் கூறமுடியும்

மனிதர்களிடையே காணப்படுகிற நிறவேறுபாடுகளுக்குப் பல்வேறு மரபியல் காரணங்களை ஆய்வாளர்கள் முன்வைக்கும் அதேநேரத்தில், மனிதனின் பரிணாம வளர்ச்சியில் சுற்றுச்சுழலின் தாக்கம் முதன்மையான காரணியாக அறிப்படுகிறது.

அதிகவெப்பம் நிலவுகிற நிலநடுக்கோட்டின் (Equator) அருகில் உள்ள ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா மற்றும் சில ஆசிய நாடுகளைச் சேர்ந்த மனிதர்கள் பழுப்பு மற்றும் கருப்புநிறம் கொண்டவர்களாக இருக்கின்றனர். நிலநடுக்கோட்டிலிருந்து விலகியும் துருவப்பகுதிகளின் அருகிலும் உள்ள மனிதர்கள் வெள்ளை நிறத்தவர்களாக உள்ளனர்.

சூரியனின் கதிர்களில் புறஊதா (Ultra violet) எனப்படும் கதிர்கள் மனிதனின் தோலில் ஊடுறுவி மனிதனுக்கு ஊறுவிளைவிக்கும்தன்மை கொண்டவை. மனிதனின் தோலில் மெலனின் (Pigment) என்னும் ஒரு நிறமி (ஞபைஅநவே) செயல்படுகிறது. இந்த நிறமியே தோலுக்கு கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களைத் தருகிறது. இந்தநிறமி தோலின் மீது ஒரு திரையைப்போலச் செயல்பட்டுத் தோலை, புறஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.

தோல், கண்கள் மற்றும் ரோமத்திற்கு இந்த நிறமிதான் வண்ணத்தைத் தருகிறது. சுற்றுச்சூழலின் தாக்கம் மற்றும் சூரியக்கதிர்களின் வீரியம் இவற்றைப் பொருத்துத் தோலின் நிறம் வெளிரியதாகவோ அல்லது அடர்நிறமாகவோ அமைகிறது.

நிலநடுக்கோட்டிலிருந்து விலகியிருக்கும் பனிபொழியும் நாடுகளில் வெப்பத்தின் தாக்கமும், புறஊதாக் கதிர்வீச்சும் குறைவு. எனவே அங்குவாழும் மனிதர்களின் தோலில் மெலனின் குறைவாக இருப்பதால் இவர்கள் வெளிரிய நிறத்தவர்களாக இருக்கிறார்கள். எனவே மனிதனின் நிறம் சூழலால் தீர்மானிக்கப்பட்டு மரபு அடிப்படையில் தலைமுறை தலைமுறையாய்க் கடத்தப்படுகிற உயிரியல்பண்பு. இது இயற்கையின் தெரிவு இதுவே அறிவியல் அடிப்படை.

ஆப்ரிக்கக் கண்டத்தில் பரிணமித்த ஆதிமனிதர்கள் 50,000 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பிய நிலப்பரப்புகளுக்கு வந்தபோது கருப்புநிறம் கொண்டவர்களாக இருந்தனர். தோராயமாக 8000 வருடங்களக்கு முன்புவரை அவர்கள் கருப்புநிறம் கொண்வர்களாகவே வாழ்ந்த்தாகவும், பின்பு மெல்லமெல்ல அவர்களின் நிறம் வெளுக்கத் தொடங்கியதாகவும் ஆய்வாளார்கள் தெரிவிக்கின்றனர்.

கருப்பு நிறமுடையவர்கள் வெள்ளைநிறம் அடைந்தார்கள் என்பது மட்டுமல்ல வெள்ளைநிறம் கொண்ட மக்கள் வெப்பமண்டலப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தபோது அவர்களின் சந்ததியினர் மெல்ல மெல்லக் கருப்பு நிறமடைந்தார்கள் என்றும் அறிவியல் கூறுகிறது.

இன்றைய வெள்ளை மனிதனுக்கும் கருப்புமனிதனுக்கும் மூதாதையர் ஒருவரே. மனிதக்குழுக்கள் இடம்பெயர்ந்து, பல்வேறு தட்பவெப்பச்சூழல் நிலைகளில் வாழ்ந்துவந்ததும், அவர்களுக்குள்ளேயே பலதலைமுறைகளாக இனப்பெருக்கம் நடைபெற்றதுமே நிறம் நிலைபெற்றதற்கான காரணமாகும்.

தொல்லியல் மற்றும் மரபியல் தொழில் நுட்ப வல்லுனர்கள் மேற்கண்ட கருத்தை உறுதிசெய்கிறார்கள். எனவே நிறம் என்பது இயற்கையின் தகவமைப்பு (Adaptation) என்ற நிலையில் கருப்புநிறம் கொண்டவன் எப்படித் தாழ்ந்தவனாகவும் வெள்ளைநிறம் கொண்டவன் உயர்ந்தவ னாகவும் மாறினான்?.

வெள்ளைமனிதர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகள் வளர்ந்த நாடுகளாக இருப்பதற்கும் ஆப்ரிக்க நாடுகள் பின்தங்கியிருப்பதற்கும் மனிதர்களின் நிறம் எவ்விதத்திலும் காரணம் இல்லை. பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் வளர்ச்சி சாத்தியமாகிறது. இதனை நிறத்துடன் பொருத்தி வெள்ளைநிறம் கொண்டவர்கள் அறிவும் ஆற்றலும் பெற்றவர்கள் என்ற கருத்தியல் திட்டமிட்டு நிலை நிறுத்தப்பட்டது.

அய்நூறு வருடங்களுக்கு முன்புவரை அமெரிக்கா செவ்விந்தியர்கள் என்ற பழங்குடி மக்களின் பூமியாக இருந்தது. வேட்டையாடிப் பிழைத்துவந்த பழங்குடிமக்கள் பூமியை விவசாயத்திற்கே பயன்படுத்தவில்லை. பல்வேறு ஐரோப்பியநாடுகளைச் சேர்த்த கடலாடிகளும் போக்கிரித்தனம் கொண்ட செல்வந்தர்களும் அமெரிக்காவில் குடியேறி அங்குவாழ்ந்த செவ்விந்தியர்களைக் கொன்றுகுவித்துத் தங்களின் அதிகாரத்தை நிலைப்படுத்தினர்.

அந்தப்பூமி அதுவரை தான்சேமித்து வைத்திருந்த செரிவான வளங்களையெல்லாம் ஐரோப்பியக் குடியேறிகளுக்கு (செல்வமாக) வழங்கியது. ஏற்கனவே வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த ஐரோப்பியக் குடியேறிகள் புதிய நிலப்பரப்பின் வளங்களைப் பயன்படுத்தி மூலதனத்தைத் திரட்டி தொழிற்துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்தினர்.

போக்கிரித்தனமும் செல்வச்செழிப்பும்மிக்க ஐரோப்பியக்குழுக்கள், கடலாடிகள் மற்றும் மாலுமிகளின் துணையோடு அமெரிக்கா வந்தபோது அவர்களிடம் துப்பாக்கி இருந்தது. பழங்குடி மக்களின் வில் அம்புகளை வீழ்த்தியது துப்பாக்கியே தவிர வெள்ளை நிறமுடையவர்களின் வீரமோ விவேகமோ அல்ல! வீழ்ந்தவர்களின் விளைநிலம் இவர்களுக்குச் செல்வத்தைத் தந்தது. இது ஒரு வரலாற்று நிகழ்வு.

வெள்ளைநிறம் கொண்டவனுக்கு இது யதேட்சையாக வாய்க்கப்பெற்றது. எனவே இது ஒரு நிகழ்தகவு (Probability) மட்டுமே. இயற்கையை எதிர்கொள்ளும் ஒரு தகவமைப்பின் (Adaptation) வெளிப்பாடான நிறம் அறிவின், ஆற்றலின், அதிகாரத்தின் அடையாளமாக மாறியதுதான் வரலாற்றின் பிழை.

ஆப்ரிக்காவில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள், உள்ளே நுழைந்து அம்மக்களை அடிமைப் படுத்தினர். பல லட்சக்கணக்கான ஆப்ரிக்க மக்கள் , அடிமைகளாக ஐரோப்பியர்களின் குடியேற்ற நாடுகளுக்கு, துன்புறுத்தி, கடத்தப்பட்டனர். இத்தகைய வரலாற்று நிகழ்வுகளால் கருப்புநிறம் கொண்டவன் அதிகாரத்திலும் அறிவிலும் பின்தங்கியிருந்தான். அடிமையாக இருந்தவன் அடங்க மறுத்து, எதிர்த்து நிற்கும்போது ஆயிரமாண்டுகளாக அதிகாரம் செலுத்திவந்தவன் வெறி கொண்டவ னாய், மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதுஇயல்பே!

பின்தங்கியிருந்த கருப்பின மக்கள் வாழும் ஆப்பிரிக்க நாடுகளிலேயே மொராக்கோ என்கிற நாடு இன்று உலகிலேயே அதிகஅளவு பாஸ்பரஸ் உற்பத்தி செய்யும் நாடாக இருக்கிறது. இதைப்போலவே அல்ஜீரியா என்றநாடு அதிகஅளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக வளர்ந்திருக்கிறது. ஆனால் வெள்ளை நிறமக்கள் வாழும், வளர்ச்சியடைந்த அய்ரோப்பிய நாடுகளான மால்டோவா, ரொமானியா கொசாவா போன்ற நாடுகள் பெரியஅளவில் வறுமையையும் பொருளாதாரச் சிக்கல்களையும் எதிர் கொண்டுள்ளன.

இரஷ்ய ஒன்றியத்தில் மிகவும் செல்வம்படைத்த நாடாகஇருந்தது மால்டோவா. இரஷ்யா உடைந்தபோது மால்டோவாவிலிருந்த டிரான்ஸ்நிஸ்ட்ரிய என்ற பகுதி தன்னைத் தனிநாடாக அறிவித்துக் கொண்டது. பெரும்பான்மையான தொழிற்கூடங்களைக் கொண்ட டிரான்ஸ்ட்ரிய தனியானதால் மால்டோவா இன்று வறுமையில் இருக்கிறது. வரலாற்றின்போக்கு எந்த மனித இனத்தின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிடும்.

வரலாற்றின் அடிப்படையில் கருப்பின மக்கள் (முன்னேற) பலதடைகள் இருந்துள்ளன. அவர்களின் நிறத்தைக் காரணமாக்கி அவர்களது உழைப்பைச் சுரண்டிய வெள்ளைஇனம் தன்னை அறிவாளி என்று கூறிக்கொண்டது ஒரு முரண்நகை.

மாற்றுநிறத்தவரை, மாற்றுஇனத்தவரை வெறுப்புடன் பார்ப்பது பழைய கோட்பாடுகளின் சொற்ப அளவிலான நீட்சியாகவே இருக்கிறது. இன்றைய நவீன உலகில் அணுசக்தித் தொழில்நுட்பம், இராணுவபலம், பொருளாதாரமேம்பாடு இவற்றால் உருவாகிற மேலாதிக்கச் சிந்தனையே முதன்மையாக இருக்கிறது. உலகமயமாக்கல் என்ற தளத்தில் சந்தைவிரிவாக்கமும் வர்த்தக நலனுமே முக்கியக் கோட்பாடுகளாகும். எனவே நட்பும் எதிர்ப்பும் இது சார்ந்தே உருவாகிறது.

Pin It