சிலுவையெனச் சுமக்கிறார்கள்

புத்தகப் பைகளை

நம் புனிதர்கள் கல்வாரி மலைகளாய்க்

கனத்துக் காத்திருக்கின்றன

கல்விக் கூடங்கள்

யூரோது அதிகாரிகளின்

கட்டளைப்படி

ஆணிகளை அறைகிறார்கள்

ஆசிரியர்கள் ஆண்டுதோறும்

சிலுவையில் அறையும் விழா

சீரும்சிறப்புமாய் நடந்தேறுகிறது மரித்து மரித்து

அடுத்தடுத்த கல்லறைக்குள்

புதைக்கப்படுகிறான்

தேர்ச்சி பெற்றவன் சரியாக ஆணி அடிக்காமல்

அரைகுறையாய்ச் செத்தவனை

அறுத்துத் தள்ளுகிறது

டுடோரியல் மரித்தவனுள் எவனும்

மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்ததாக

ஒரு தகவலும் இல்லை! அப்படியே எழுந்தாலும்

அவனுக்கும் ஆணியடிக்க

கனங்கனமாய்ச்

செய்து வைத்திருக்கிறார்கள்

சட்டச் சிலுவைகளை இவர்கள் செய்தபிழை

இன்னதென்று அறியாமல்

புலம்பித் தீர்க்கிறார்கள்

பெற்ற பிதாக்கள் அப்பமும் முட்டையும் கொடுத்த

அரசாங்கச் செலவு

வாக்கு வங்கியாய்

வடிகாலாகிவிடுகிறது பாடத்திட்டப் பாம்புகள்கடித்து

ஆங்கிலநுரை தள்ளுகிறது

தமிழர் வாயில் சிறந்த கல்வி கொடுத்துவிட்டதாக

தங்கள் முதுகில்

தாங்களே தட்டிக்கொள்கின்றன

சட்டசபை பெஞ்சுகள் இவ்வளவு படித்தும்

அறிவும் நேர்மையும்

இல்லையேயென

லஞ்சச் சமூகத்தைப் பார்த்து

சுற்றிநின்று கதறுகிறது

சொந்தச் சமூகம். மரித்துக் கிடக்கும்

மானுடத்தின் பேரால்

ஆமென்!

Pin It