அனுப்புநர்:                                                          

எழுவர் விடுதலைக்கான மாணவர்/இளைஞர் கூட்டமைப்பு, 

சென்னை.

பெறுநர் :

மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  அவர்கள், 

தலைமைச்செயலகம், சென்னை.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்,

ராஜீவ் கொலை வழக்கில் சிக்கவைக்கப்பட்டு 24 ஆண்டுகளாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்டோரை விடுவிக்க  2014 பிப்ரவரி19ஆம் நாள் மேற்கூறிய எழுவரையும் விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அரசு இந்திய அரசுக்கு எழுதிய மடலை எதிர்த்து இந்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம்  குற்ற நடைமுறைச் சட்ட விதிகளின் படி மத்திய, மாநில அரசுகளுக்குள்ள அதிகாரம் தொடர்பாக ஒரு கேள்விப் பட்டியல் தயாரித்து, அந்தக் கேள்விகளுக்கு விடை காண ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசமைப்புச் சட்ட முழு ஆயம் அமைத்தது.

இந்த ஆயம் திசம்பர் 2ஆம் நாள் வழங்கியுள்ள தீர்ப்புதான் மேற்கூறியவாறு எழுவர் விடுதலைக்குத் தடை என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

உச்ச நீதிமன்ற முழு ஆயம் இப்போது வழங்கியுள்ள தீர்ப்பை அப்படியே ஏற்றுக் கொண்டோமானால் மாநில சுயாட்சி – இந்தியக் கூட்டாட்சி தத்துவம் கேள்விக்குறி ஆகி விடும் ஆபத்தும் உள்ளது. ஆனாலும், தண்டனைக் கழிவு தொடர்பாகக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மாநில அரசுகளுக்குள்ள உரிமைகளை இந்தத் தீர்ப்பு பெரிதும் கட்டுப்படுத்தியுள்ள போதிலும்; அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 மாநில ஆளுநருக்கு வழங்கும் அறுதி அதிகாரத்தில் எந்த நீதிமன்றமும்  தலையிட முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மாநில அரசின் பரிந்துரைப்படியே மாநில ஆளுநர் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த இயலும் என்பதை ஏற்கெனவே நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

7 thamilargal 600 jpgஎனவே, தமிழர் எழுவர் தொடர்பாக மட்டுமின்றி, நீண்ட பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும்  வாழ்நாள் சிறைப்பட்டோர் தொடர்பாகவும் கூட, தமிழக அரசு ஒரு முடிவெடுத்து அவர்கள் வாழ்வில் விளக்கேற்ற அரசமைப்புச் சட்ட 161ஆம் உறுப்பைப் பயன்படுத்த இதுவே தக்க தருணம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இதற்கும் மேலே, இராசீவ் கொலை வழக்கில் புலனாய்வு அதிகாரியாக இருந்து பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்த திரு தியாகராஜன் தாம் செய்த பிழையை வெளிப்படையாக  ஒப்புக் கொண்டிருப்பதையும் கருத்திற்கொண்டால் இந்த எழுவரின் விடுதலையை இனியும் தள்ளிப் போடுவது நீதியாகாது எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இவர்களின் நன்னடத்தை, விடுப்பே இல்லாத 24-ஆண்டுச் சிறைவாசம், புலனாய்வு அதிகாரியே இவர்கள் நிரபராதிகள் என்று முன்வைக்கும் சட்ட வாக்குமூலம், இதனால் இவர்களின் குற்றத் தன்மையின் மேல் எழுந்துள்ள சந்தேகம், இவர்களின் தூக்கை உறுதி செய்த நீதியரசர் கே.டி தாமஸ் அவர்களே “விலங்குகளைப் போல் அடைப்பட்டு கிடக்கும் இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று இப்பொழுது கொடுக்கும் அழுத்தம் என இவர்கள் பக்கத்து நியாயங்கள் மானுடம் போற்றும் எவரையும் பதற வைக்கும்.

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேற்சொன்ன காரணிகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்ட எழுவரையும், மிகநீண்ட காலமாகச் சிறையில் வாடும்வாழ்நாள் சிறைப்பட்டோரையும் விரைவில் விடுதலை செய்யக் கருணையோடு ஆய்வு செய்ய வேண்டுகிறோம். 

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரை தாங்கள் விடுதலை செய்ய 2014 முடிவெடுத்தபோது கோடான கோடி தமிழர்களின் நெஞ்சங்களில் தெய்வமாக உயர்வு பெற்றீர்கள். கடந்த காலத்தில் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை அன்போடு செவிமடுத்து பல வரலாற்று தீர்மானங்களை  இயற்றிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள்  தொடங்குவதை முன்னிட்டு, இந்த நேர்மையான வேண்டுகளை ஏற்று  எம்.ஜி.ஆர்.  நூற்றாண்டு பிறந்த நாளில் தமிழக மக்கள்  மனங்களில் மகிழ்ச்சி பெருக்கெடுக்க வழி செய்வீர்கள் என்று  மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நாங்கள் நம்புகின்றோம்.

நன்றி,
எழுவர் விடுதலைக்கான மாணவர்/இளைஞர் கூட்டமைப்பு,
சென்னை.
13.01.2016

Pin It