நாசி செர்மனி தோற்கடிக்கப்பட்டதன் 70 ஆண்டுகள் நிறைவு

நாசி செர்மனி இரண்டாவது உலகப் போரில் தோற்கடிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதை மே-9, 2015 குறிக்கிறது. ஐரோப்பாவில் போர் முடிவுற்றதையும், ஐரோப்பா பாசிசத்திலிருந்து விடுதலை பெற்றதையும் அது குறிக்கிறது.

பாசிசம் தோற்கடிக்கப்பட்டது, உலகமெங்கும் விழிப்புணர்விற்கும், முன்னேற்றத்திற்கும் ஆன இயக்கத்திற்கு ஒரு சக்திவாய்ந்த உந்துதலைக் கொடுத்தது.

காலனியத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டம் உலகெங்கிலும் முன்னேற்றமடைந்தது. அன்னியத் தலையீடின்றி, தேசங்களும் மக்களும் இறையாண்மை கொண்டிருக்கவும், அவரவருக்குப் பிடித்த சொந்த பொருளாதார மற்றும் அரசியல் பாதையைப் பின்பற்றும் உரிமையும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு கோட்பாடாக மாறியது. மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கு அந்த அமைப்பின் தலைமைதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதை நியூரம்பர்க் கோட்பாடுகள் தெளிவாக நிறுவியது. பெரியதோ அல்லது சிரியதோ, எல்லா உறுப்பு நாடுகளும் சரிசமம், பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை, இனவாதம் பாசிசம் மற்றும் காலனியத்திற்கு எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பது போன்றவற்றின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கப்பட்டது.

இன்று, எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், இரண்டாம் உலகப் போரின் வரலாற்றை முழுவதுமாக மாற்றியெழுத ஆங்கிலேய அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் முயற்சி செய்து வருவதற்கு உலகமே சாட்சியாகும்.

இந்தப் போரில் பல்வேறு சக்திகள் வகித்தப் பங்கினை பற்றிய பொய்களை மீண்டும் மீண்டும் கூறுவதன் மூலம், வேண்டுமென்றே வரலாறு மாற்றியெழுதப்பட்டு வருகிறது. இட்லரும் நாசி பாசிசவாதிகளும் நல்லவிதமாக சித்தரிக்கப்படுகின்றனர். நாசி பாசிசத்தை வீழ்த்தியதில் சோவியத் யூனியன் ஆற்றிய மகத்தான பங்கு முழுவதுமாக அழிக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பாவை வெற்றி கொள்ளவும், சோவியத் யூனியனை அழிக்கவும் நாசி பாசிசவாதிகளைத் தூண்டிவிட்ட ஆங்கிலேய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பங்கும், அமெரிக்கப் பெரும் நிறுவனங்கள் நாசி பாசிசவாதிகளோடு கொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளும் முழுவதுமாக மறைக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரின் வரலாறு திருத்தி எழுதப்படுவது வெறும் ஒரு கருத்து என தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் கருதவில்லை. இந்தப் போரைப் பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்படுவது, தோல்விக்குப் பழிவாங்குவதையும், கற்காலத்தையும், பாசிசத்தையும் முன்னேற்றும் நோக்கம் கொண்ட திட்டமிட்ட செயலாகும். இந்த அடிப்படையில் தான் உக்ரேனிலும் மற்றும் பிற நாடுகளிலும் உள்ள பாசிச அரசாங்கங்கள், தங்கள் நாடுகளிலும் உலகெங்கிலும் முன்னேற்றத்திற்கும் விழிப்புணர்விற்கும் எதிரான தங்களுடைய தாக்குதல்களை நியாயப்படுத்தி வருகின்றனர். இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர், மனித இனம் அடைந்துள்ள எல்லா சாதனைகளும் சீரழிக்கப்படுவதை இது நியாயப்படுத்துகிறது. ஏகாதிபத்திய சக்திகளிடையே, உலகை மீண்டும் பங்கிட்டுக் கொள்வதற்காக ஒரு புதிய உலகப் போருக்கு இது ஒரு தயாரிப்பாகும்.

இத்தகைய சூழ்நிலையில் உண்மையை நிலைநாட்டுவதற்கான போராட்டமானது, நமது நாட்டிலும், உலக அளவிலும் விழிப்புணர்விற்கும் முன்னேற்றத்திற்குமான இயக்கத்தின் ஒரு அவசியமான அங்கமாகும்.

விழிப்புணர்விற்காக நிற்கும் எல்லா முற்போக்கு, சனநாயக சக்திகளும் ஏகாதிபத்தியம், பாசிசம் மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிராக ஒரே அணியில் ஒன்றுபட வேண்டுமென தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் அறைகூவல் விடுகிறது.

இட்லரின் செர்மனி தோற்கடிக்கப்பட்டதன் இந்த 70 ஆவது ஆண்டு விழாவில், "வரலாற்றின் படிப்பினைகளை மறந்துவிடக் கூடாது" என்ற கருத்தையொட்டி நடத்தப்படும் ஒரு பொதுக் கூட்டத்திற்கு தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் உங்கள் அனைவரையும் வரவேற்கிறது.

வரலாற்றின் படிப்பினைகளை மறந்துவிடக் கூடாது!

 நாள், நேரம் - சூன் 27, 2015, காலை 9 மணி

 இடம் - 4 / 795, அண்ணா நகர், கொட்டிவாக்கம், சென்னை-41 (தரமணி ரயில் நிலையம் அருகில்)

தொழிலாளர் ஒற்றுமை இயக்கம்

4 / 795, அண்ணா நகர், கொட்டிவாக்கம், சென்னை-600041, கைபேசி 8015305777

Pin It