கூடங்குளம் அணு உலையின் உண்மை நிலை!

‘புலி வருது புலி வருது’ என்று பூச்சாண்டி காட்டுவது போல் கூடங்குளம் அணு உலையிலிருந்து மின் உற்பத்தி தொடங்கிவிட்டது என்ற செய்தி வந்த வண்ணம் இருக்கிறது. மின் உற்பத்தி அணு மின்சாரமா அல்லது கோடிக்கணக்கான முதலீட்டில் வாங்கும் டீசல் மின் உற்பத்தியா என்ற கேள்விக்கு இது வரை விடையில்லை.

முதல் இரண்டு அணு உலைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தாத நிலையில் மேலும் திட்டமிட்டுள்ள அணு உலைகளை நிறுவக்கூடாது என்ற பரப்புரையை ‘அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்’ மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக முக்கிய அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை நாடியது. ஆனால் அவர்கள் தொடர்ந்து மௌனம் காக்கின்றனர்.

இந்தப் பின்னணியில் 1200 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் அம்மக்கள் அவர்களுடைய போராட்டக் களத்தை விரிவாக்க முன் வந்துள்ளனர். இதுவரை இடிந்தகரையை நோக்கி சூழலியல் அமைப்புகளும் ஜனநாயக இயக்கங்களும் பயணித்தன. இனி, கூடங்குளம் போராட்டக் குழுவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தங்களுடையப் போராட்டத்தை விரிவாக்க முன் வந்துள்ளனர். தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் உள்ள சூழலியல், வாழ்வுரிமை மற்றும் வாழ்வாதார போராட்டங்களோடு கரம் கோர்க்க வருகின்றனர்.

‘வளர்ச்சி திட்டம்’ என்ற பெயரில் அழிவுத் திட்டங்களை வல்லாதிக்க அரசு, மக்கள் மீது திணிக்கும் போக்கினை கேள்வி கேட்கும் மாபெரும் அரசியல் இயக்கம் இது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அன்னிய வல்லாதிக்க சக்திகளுக்கும் நாட்டை அடகு வைக்கும் அரசியலுக்கும் எதிராக தொடுக்கப்பட்டுள்ள அமைதியான போர் இது.

உலகமயமாக்கம், தனியார் மயமாக்கம் மற்றும் தாராள மயமாக்கம் என்னும் அரசியல் பொருளாதார கொள்கை பரந்துபட்ட மக்களை ஓட்டாண்டிகளாக்கியுள்ளது. உணவு, கல்வி, ஆரோக்கியம், இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை உத்தரவாதப்படுத்த வேண்டிய அரசு, அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்த்துவருகிறது. மென்பொருள் தொழில் நிறுவனங்களில் வேலை உத்தரவாதம் என்பது கானல் நீராய் மாறிவருகின்றது.

கோவை மண்டலம் அழிவை நோக்கி....

‘வளர்ச்சித் திட்டங்கள்’ என்ற பெயரில் விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. கெய்ல் நிறுவனத்தால் விவசாய நிலங்களில் பதிக்கப்படும் எரிவாயுக் குழாய்கள் கொங்கு மண்டல உழவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக ஆறுகள் கடத்தப்படுவதும் மணல் மாஃபியாக்களின் வெறியாட்டமும் கோலோச்சுகிறது.

சுத்திகரிக்கப்படாத கழிவுகள் நீர் நிலைகளை, நிலத்தை, நிலத்தடி நீரை மாசுபடுத்தி வருகின்றன. கோவை மண்டலத்தின் நீராதாரமான நொய்யல், கழிவுகளால் பாழ்படுத்தப்பட்டுவிட்டது. நிலத்தடி நீருக்கு ஆதாரமான அனைத்து நீர் நிலைகளையும் இழந்து வருகிறோம். நீர் நிலைகளின் மீது மக்களுக்கு பாரம்பரியமாக இருந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தில் புரட்சி என்று பீற்றிக் கொண்டு வந்த ‘பசுமைப் புரட்சி’ திட்டம், நீடித்த வேளாண்மைக்கான அடிப்படை ஆதாரங்களை அழித்து, எளிய விவசாயிகளை ஓட்டாண்டியாக்கியுள்ளது. உழவர்களுக்கு விதை மீது இருந்த உரிமை விதை கும்பினிகளிடம் தாரைவார்க்கப்பட்டுவிட்டது. உழவர்கள், அடிபடையில் தற்சார்பையும் மாண்பையும் இழந்து நிற்கின்றனர்.

தென்னிந்தியாவின் ‘சூழலியல் இதயம்’ என்று கருதப்படும் ‘நீலகிரி உயிர்மண்டலம்’ தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகிறது. சூழலியல் சமநிலைக்கும், நீருக்கும் ஆதாரமான மேற்கு தொடர்ச்சி மலையை காப்பாற்ற இயக்கம் காண வேண்டியிருக்கிறது. ‘புலிகள் காப்பகம்’ என்னும் பெயரில் வனத்தில் வாழும் பழங்குடிகளும் பிற மக்களும் வனத்தை விட்டு விரட்டப்படுகின்றனர். மாவோயிஸ்ட் பூச்சாண்டி காட்டி வன உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்படுகின்றனர்.

கடலோரப் பகுதிகளில் நடந்தேறும் தாது மணல் கொள்ளை, தேனி மாவட்டம் தேவாரத்தில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டம், நாகபட்டிணத்தில் தொடங்கப்பட்டுள்ள அனல் மின் நிலையம், தூத்துக்குடி “ஸ்டெர்லைட் ஆலை போன்ற திட்டங்கள் அனைத்தும் மக்கள் மீதும், சுற்றுச்சூழல் மீதும், வாழ்வாதாரங்களின் மீதும் அரசு தொடுத்துள்ள மறைமுகப் போராகும்.

நகர்ப்புற ஏழை மக்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள், மிருகக்காட்சி சாலையில் மிருகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை விட மிகக்குறுகிய, ஆபத்தான இருப்பிடங்களாக ஒதுக்கப்படுகின்றன.

கோவை நகரம் மருத்துவ கழிவுகளின் குப்பைக் கிடங்காக மாற்றப்பட்டு வருகிறது. அண்டை மாநில கழிவுகளையும் இங்கே தாராளமாக கொட்டுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

கோவை மண்டலத்தின் முதுகெலும்பாக உள்ள தொழில் முனைவோரின் நிலை அந்தோ பரிதாபம்! கச்சாப் பொருட்களின் விலை ஏற்றம், தொடரும் மின்வெட்டுடன் சேர்ந்து மின் கட்டண உயர்வு போன்றவை பல்லாயிரக்கணக்கான நிறுவனங்களை மூடிடும் நிலைக்குத் தள்ளியுள்ளன.

ஊழலிலேயே பிறப்பெடுத்த ‘ஜவகர்லால் நேரு நகர மேம்பாட்டுத் திட்டம்’ கோவை மாநகர மக்களை சொல்லொணா துயரங்களில் ஆழ்த்தியுள்ளது. சாலைகள் விரிவாக்கம், பாதாளச் சாக்கடை, சொகுசுப் பேருந்துகள், குடி நீர்த்திட்டம் என்னும் பெயரில் மக்களின் வரிப்பணம் சூறையாடப்படுவது மட்டுமல்ல நகரமே திறந்தவெளி சுடுகாடாக மாற்றப்பட்டுள்ளது! கோவை நகரின் சமூக வரலாறு மற்றும் பூகோள காரணிகளை கணக்கில் கொள்ளாத ஒரு தவறான திட்டம் கோவை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு மக்களைப் பற்றியோ, சுற்றுச் சூழல் பற்றியோ எவ்வித அக்கறையுமற்றப் போக்கின் உச்சக்கட்டமே. குவிக்கப்படுபவை எதுவாக இருந்தாலும் அது மக்களுக்கும் மண்ணிற்கும் எதிரானதுதான். அந்தந்தப் பகுதிகளில் பராமரிக்கப்பட வேண்டிய குப்பைகளை ஒரு பூதகரமான பிரச்சனையாக மாற்றியிருக்கிறது இந்த மய்யப்படுத்தப் பட்ட ‘குப்பை மேலாண்மை’!

அமராவதி ஆற்றின் குறக்கே கட்டப்படும் அணை, சிறுவாணி நீர் விநியோகத்தில் உள்ள குளறுபடிகள் கோவை மண்டல நீர் வாழ்வாதாரங்களைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

யானையின் வழித்தடங்களை அடைத்து கட்டப்பட்டுள்ள காருண்யா போன்ற கல்வி நிறுவனங்கள், ஈஷா யோகா போன்ற ஆன்மீக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் என பலவும் வனவிலங்குகளின் தாக்குதல்களுக்கும் அழிவிற்கும் காரணமாயிருக்கின்றன. இவற்றிற்கான நிரந்தர தீர்வை நோக்கி நகர வேண்டும்.

கோவை மதுக்கரையில் உள்ள ஹஊஊ சிமெண்ட் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை சூழலியல் விதிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை மீறுவதாக உள்ளது.
ஒரு பொது மருத்துவமனை கூட இல்லாத மாவட்டமாக நீலகிரி மாவட்டம் இருக்கிறது! இதனால் ஏழை எளிய மக்களுக்கு உத்தரவாதப்படுத்த வேண்டிய ஆரோக்கியம் எட்டாக் கனியாக இருக்கிறது.

“ஸ்மார்ட் சிட்டி”! என்னும் பெயரில் ஏழை எளிய மக்கள் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை கவ்வி வரும் அழிவுத் திட்டங்கள்!

தஞ்சை டெல்டா பகுதியில் நடைமுறைப்படுத்தவிருக்கும் ‘மீத்தேன் எரிவாயு திட்டம்’ தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்னும் பெயரை அழித்து தமிழக மக்களின் உணவுப் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. டெல்டா பகுதியே பாலைவனமாக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. அதேபோல் முல்லைப் பெரியாறு, காவிரி நதி நீர் பங்கீடு ஆகிய பிரச்சனைகளில் மத்திய அரசின் மாற்றாந்தாய் அணுகுமுறை தமிழகத்தின் வாழவாதாரத்தை பாதித்துள்ளது.

மக்களின் நல்வாழ்வு திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய அரசே மது விற்பனையில் மூழ்கியிருப்பது கேவலத்திலும் கேவலம். மதுப்பழக்கம் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை நாசமாக்குகிறது. குடும்பங்களை சீரழிக்கிறது. மானுட மாண்புகளை அழிக்கிறது. பூரண மதுவிலக்கு மட்டுமே இதற்கு ஒரே தீர்வு.

உணவு உத்தரவாதத்திற்கு அடிப்படையாக இருக்கும் நியாயவிலைக் கடைகளில் விற்கப்படும் அரிசியின் அளவைக் குறைக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிப்பதாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க வரிச் சுமைகள், பூகோள ரீதியாக பிளவுபடுத்தப்பட்ட கிராமங்கள், தொடர்கின்ற சாலை விபத்துகள் என நமது ‘வளர்ச்சி திட்டங்கள்’ நம்மைப் பிணியாக பீடித்துக் கொண்டுள்ளன.

பண்பாட்டுப் படையெடுப்புகள்!

பெருகி வரும் பாலியல் வன்கொடுமைகள், கௌரவக் கொலைகள், தீண்டாமைச் சுவர்கள், இரட்டைக் குவளை முறைகள் என நம்முடைய “சமூக முன்னேற்றம்(?)” தொடர்கின்றது.

காவிப்படையின் ஆட்சியின் விளைவாக கலாச்சார ஃபாசிசம் தொடுக்கப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதம், இந்தி மொழித் திணிப்பு, கோட்சே புகழ் பாடுதல், பகவத் கீதையை தேசிய நூலாக்கும் முயற்சிகள், மதமாற்றத் தடைச் சட்டம் என பண்பாட்டுப் படையெடுப்புகள் தொடர்கின்றன.

பண்பாட்டுச் சிக்கல்களை முன்னிறுத்தி சர்ச்சைகளை உருவாக்கி விவாதிக்கும் பின்னணியில் பாரதூரமான அரசியல் மற்றும் பொருளாதார ‘சீர்திருத்தங்கள்’ அவசர கதியில் அமல் படுத்தப்படுகின்றன. ஜனவரி திங்கள் 26ம் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகையை ஒட்டி அமெரிக்க அன்னிய முதலீட்டிற்காக திறந்த களமாக இந்திய மண் மாற்றப்படவிருக்கிறது. அமெரிக்க வல்லாதிக்கத்தின் நுகத்தடியின் கீழ் உழல்வதற்கான பண்டங்களாகவும், பிண்டங்களாகவும் நாம் மாற்றப்படுவோம்!.
வல்லாதிக்க அழிவுத் திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்!

ஆம், மற்றொரு சுதந்திரப் போராட்டத்திற்கான களம் காண வேண்டிய நிலையில் உள்ளோம். இது வெறும் அரசியல் சுதந்திரம் மட்டுமன்று. வாழ்வாதார உரிமைகளை வென்றெடுக்கவல்ல அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டுச் சுதந்திரம், மாந்த மாண்பை மய்யமாக கொண்ட இயற்கையைச் சார்ந்த, நீடித்த வளர்ச்சியை உத்தரவாதப்படுத்தும் சமதர்ம சமூகத்தை நோக்கிய பயணமாக அமைய வேண்டும். இந்த அடிப்படையில் தான் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளிகள் கோவை மக்களோடு கைகோர்க்க வருகின்றனர்.

கோவை மண்டலத்தின் வாழ்வாதார சிக்கல்களில் அக்கறைகொண்ட சூழலியலாளர்கள், உழவர்கள், பழங்குடிகள், மக்கள் திரள் அமைப்புகள், ஜனநாயக ஆற்றல்கள், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளின் கூட்டு முயற்சியில் “தமிழக வாழ்வாதார உரிமைகள் பாதுகாப்பு மாநாடு” என்னும் பதாகையின் கீழ் நடத்தப்படும் நிகழ்விற்கு பொருளுதவி செய்து ஆதரவு நல்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு வாழ்வாதார உரிமைகளுக்கான இயக்கங்களை ஒன்றிணைப்போம்; போராடுவோம்; வெற்றிபெறுவோம்!

தமிழக வாழ்வாதார உரிமைகள் பாதுகாப்பு மாநாடு - கோவை

நாள் - 31/01/2015 சனிக்கிழமை, நேரம் மாலை 3 மணி முதல் 9 மணி வரை

கலை நிகழ்ச்சி : பறை இசை - நிமிர்வு குழு, கோவை.

வரவேற்புரை : திரு. பொன்.சந்திரன், ஒருங்கிணைப்பாளர், அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு, கோவை.

தலைமை : திரு. கு. இராம கிருட்டிணன், பொதுச் செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

கருத்துரை

வேளாண்மைச் சிக்கல்களும் தீர்வுகளும் - திரு. நல்லுச்சாமி, செயலாளர், தமிழ்நாடு விவசாயிகளின் கூட்டமைப்பு

குறுந்தொழில் வளர்ச்சியும் எதிர்கொள்ளும் சவால்களும் - பொறியாளர் சா.காந்தி

கொள்ளை போகும் இயற்கை வளங்களும் வாழ்வாதார உரிமைகளும் - தோழர். முகிலன், ஒருங்கிணைப்பாளர், கனிம வள முறைகேடு சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம்

அணு உலை எதிர்ப்புப் போராட்டமும் எனது அனுபவங்களும் - தோழர். பெ. சுந்தரி, இடிந்தகரை பெண்கள் போராட்டக் குழு

மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பும் பழங்குடிகளும் - தோழர். சிவா, சூழலியல் ஆய்வாளர்

கோவை மண்டல மேம்பாடும் சூழலியல் சிக்கல்களும் - மருத்துவர். இரா. ரமேசு

சிறப்புரை: சுப.உதயகுமார், ஒருங்கிணைப்பாளர், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

நன்றியுரை : வழக்குரைஞர் சி. முருகேசன் அணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பு, கோவை.

மண் மீதும் மக்கள் மீதும் அக்கறை கொண்டோரே வாருங்கள்! அணி திரள்வோம்!

Pin It