தில்லி ராம்லீலா மைதானம் எத்தனையோ போராட்டங்களுக்கு களமாக அமைந்துள்ளது என்பது நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். குறிப்பாக சமீபகாலங்களில் கூட ஊழலுக்கு எதிரான போராட்டக்களமாகவும், காங்கிரஸ் கட்சியினரின் திட்டங்களுக்கு ஆதரவுக் கூட்டங்கள் நடத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் சாதியின் பெயரால் தீண்டாமைக்குட்படுத்தப்பட்டு வீதியில் நடக்க முடியவில்லை, தன்னுடைய சொந்த நிலத்தைப் பாதுகாக்க முடியவில்லை, கொத்தடிமையாகவும், பாலியல் வன்முறைக்குட்படுத்தப் படுவதிலிருந்து மீட்க முடியாமலும், அடக்கி ஒடுக்கப்பட்டு வருகின்ற ஒரு பெருங்கூட்டம் சாதியின் வன்கொடுமைகளுக்கெதிராக திரண்டு வீதிக்கு வந்தால் எப்படி காண முடியுமோ அப்படியொரு நிகழ்வினை ராம்லீலா மைதானம் கடந்த நவம்பர் 23,2012 அன்று ‘தேசிய பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர் கூட்டமைப்பு” நடத்திய‌ ‘பட்டியலினத்தோர்-பழங்குடியினர் தில்லி பிரகடனம் 2012” என்கிற மிகப்பெரிய வரலாற்றுப் பூர்வமான நிகழ்வினைக் கண்டது.

ramleela_dalit_meeting_640

இந்நிகழ்வில் இந்தியாவில் 13 மாநிலங்களில் இருந்து சுமார் 63,000 தலித் மற்றும் பழங்குடியினர் தங்களை இணைத்துக் கொண்டு கூடிய கூட்டமானது, மறு காலனிய இந்திய விடுதலை வரலாற்றை உடைத்து தனிமனித விடுதலைக்காக களம் அமைத்தது போன்று அமைந்தது. மேலும் பல்வேறு காலகட்டகங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே அமைப்பாகி வரும் சூழலில், இந்நிகழ்வில் இயற்கையை மட்டும் காதலித்து வந்த பழங்குடி மக்களும் தாங்கள் புனிதமாக நேசிக்கும் பெண்ணையும்-மண்ணையும் பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்து கரம் கோர்த்தது சிறப்பம்சமாகும். இந்த இணைப்பிற்குக் காரணம், தமிழ்நாட்டில் கடந்த 1992, ஜூன், 20ம் நாள் ‘வாச்சாத்தி' என்கிற கிராமத்தில் 18 பழங்குடியினப் பெண்களை கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டார்கள். இக்கொடூர சம்பவம், பழங்குடி மக்களாலும், தமிழ் உணர்வாளர்களாலும் இன்றும் மறக்கப்படாத வடுவாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களையும் குறிப்பாக இளைஞர்களையும் சாதியம் விட்டுவைக்கவில்லை. திருச்செங்கோடு காயத்திரி, மதுரை கரிகாலன் வரை தாழ்த்தப்பட்டவர்கள் மீதான சாதிய வன்கொடுமைகளின் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இந்தப் பட்டியலில் தர்மபுரி நத்தம் காலனி அண்ணாநகர், செங்கல்மேடு, கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் சாதிய வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்ட சுமார் 270 தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் மட்டும் என்ன விதிவிலக்கா?

ramleela_dalit_meeting_641

இதே போன்று கர்நாடகா மாநிலத்தில் ஹீனியர், மராட்டியத்தில் மகர்கள், பங்கிக்கள், சாமர்கள், மாங்குகள், ஆந்திரத்தில் பறையர், சங்கிலியர் என தேசம் எங்கும் சாதியப் பட்டியல் எண்ணிக்கை தொடர்கின்றது. இவ்வாறாக ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிமக்கள் சமத்துவ உரிமைக்காகவும், வாழ்வுரிமைக்காவும், அரசியல் உரிமைக்காகவும் நாடு கடந்து மொழி கடந்து ஒன்றிணைந்து ராம்லீலா மைதானத்தில் திரண்டிருந்தனர். இந்த ஒன்றிணைப்பு, கலந்துகொண்ட அனைவருடைய மனதிலும் புத்துணர்வை ஏற்படுத்தியது. இந்நிகழ்வின் தொடக்கமாக, தமிழ்நாடு திண்டுக்கல்லைச் சார்ந்த ‘சக்தி' பெண்கள் தப்பாட்டக் குழுவின் ‘பறை’ முழக்கம் மைதானம் அதிர்கின்ற வகையிலும் சாதி ஆதிக்கத்தை அடியோடு அழித்திட புறப்பட்ட நெருப்புப் பிழம்பாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் நாடிநரம்புகளை முறுக்கேற்றிக்கொண்டு சென்றது.

நேரம் ஆக ஆக மக்களின் கூட்டம் ராம்லீலா மைதானத்தை நிரம்பி வழியச் செய்து கொண்டு இருந்தது. நிகழ்வில் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட-பழங்குடிமக்கள் சாதி-பாலியல் ரீதியாக சுரண்டப்படும் அவலங்கள் நாடகங்களாகவும், கலை, இசை மூலமாகவும் அரங்கேறி வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. ராம்லீலா மைதானம் முழுவதும் மக்களின் தோற்றங்களாக முண்டாசுகளும், தாடிவாலாக்களும், தலையை சேலையால் மூடிய பெண்களுமாக காணப்பட்டார்கள். குறிப்பாக பஞ்சாபி மக்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாகக் காணப்பட்டது. நிகழ்வின் போது அவ்வப்போது கூட்டத்தினரை உற்சாகப்படுத்துகின்ற வகையிலும், புரட்சியாளர் அம்பேத்கரை நினைவு கூர்கின்ற வகையிலும் ‘ஜெய்பீம்’ என்கிற வீரவணக்கச் சொல்லை முழங்கச் செய்தது அனைவரடைய நரம்புகளை புடைத்தெழச் செய்தது. மக்களின் கைக‌ளில் ஏந்தியிருந்த‌ நீலவர்ணக் கொடியானது மைதானம் முழுவது பரவியிருந்தது என்பது இதுவரை சாதியின் பெயரால் நடந்த தீண்டாமைகளுக்கும், வன்கொடுமைகளுக்கும் சாவுமணி அடித்துபோல் அதிரச் செய்தது.

ramleela_dalit_meeting_643

நிகழ்வில் இருந்த ஒவ்வொரு நிமிடங்களும் சாதியக் கொடுமைகளை வேரறுத்த நிமிடங்களாக பாலியல் வன்முறைகளால் பலியானவர்களுக்கு வீரவணக்கம் செய்த நிமிடங்களாக, வர்க்கசுரண்டலை வேரறுத்த நிமிடங்களாகவே இருந்தது. இதனைத் தொடர்ந்து பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1989ல் திருத்தம் செய்திடவும், பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தவும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய 10 அம்சத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் கோரி மக்கள் முழங்கிய முழக்கம் விண்ணையே அதிரச் செய்வதாக இருந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசுத் துறைகளைச் சார்ந்த முன்னோடிகளும், தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு பேசியது மக்களுக்கு சற்று ஆறுதலாக இருந்ததுடன் நிகழ்வுக்கு வலு சேர்ப்பதாக இருந்தது.

இது போன்று ஒரு வரலாற்று நிகழ்வின் தன்னார்வலராக கலந்துகொண்டது எனக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வுகளையும் எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. நீளமான வெள்ளைத்தாடி வளர்த்த முதியவர்களும், முகத்தில் சுருக்கம் விழுந்த மூதாட்டிகளும் ஒருமுறை அந்த விடுதலை சுவாசத்தை நுகர்ந்துவிட்டு மாண்டு விடமாட்டோமா என்றும், இந்த சாதிமைப்பும், சுரண்டலும் எங்களோடு ஒழிந்துபோகட்டும் என்று காத்துக் கிடக்கின்றார்கள். இவர்களின் கனவை நனவாக்கிட நாட்டை ஆளுகின்ற ஆட்சியாளர்களும், நடைமுறைப்படுத்துகின்ற அரசு அதிகாரிகளும், தேசிய அளவில் பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளோடு நிகழ்வு நிறைவுற்றது. இவை அனைத்துமே அண்ணல் அம்பேத்கர் சொன்ன அதே மானுட விடுதலைக்கான தத்துவமே. இது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் கைகளில் மட்டும்தான் உள்ளது. 'அரசியலே அனைத்தையும் தீர்மானிக்கின்றது'.

ஜெய்பீம்!!!

- ம.வினோத் அம்பேத்கர், மனித உரிமை காப்பாளர், மதுரை

Pin It