பேரன்புடையீர்,

வணக்கம்! இந்தியத்துணைக் கண்டத்திலேயே கேரளத்திற்கு அடுத்தபடியாக எழுத்தறிவு பெற்றவர்கள் தமிழகத்தில்தான் அதிகம் உள்ளனர். ஆனால், எழுத்தறிவு பரவலான அளவு, கல்வித்தரத்தில் நாம் இன்னும் முன்னேறவில்லை. தரமான கல்வி அளிப்பதில் பல மாநிலங்களை விட, நாம் பின்தங்கியே உள்ளோம். மேலும், இந்தியத் துணைக்கண்டத்திலேயே கல்வித்துறையில் தனியார் கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில்தான் மிகமிக அதிகமாக உள்ளன. எனவே கல்வித்துறையில் வெகுமக்கள் நலன் சார்ந்து ஏதேனும் முனைப்புகள் எடுக்கப்பட்டால், தனியார் கல்வி முதலாளிகள் அதைத் தமது பண வலிமையாலும், சட்ட வலிமையாலும் நிரந்தமாக முடக்கி விடுகின்றனர். தனியார் கல்விமூலதனம் என்பது இன்றைக்குத் தமிழகத்தில் கல்வியைச் சீரழிப்பதில் முதன்மையான பங்கு வகிக்கிறது.

கல்வி வணிகமயமாவது ஒரு பக்கம் வேகமாகப் பரவுகிறது என்றால், மறுபக்கம் நமக்கு வழங்கப்படும் கல்வியோ அதன் மெய்யான உள்ளீட்டை இழந்து உருச்சிதைந்து கிடக்கிறது. இன்றைய கல்வி என்பது பணம் சம்பாதிக்க உதவும் ஓர் உரிமமே அன்றி வேறல்ல! அந்த உரிமம் கூடப் பல சமயங்களில் செல்லுபடி ஆவதில்லை என்பதுதான் மெய்நடப்பாக உள்ளது. சமூக மேம்பாட்டிற்கும், சாதி ஒழிப்புக்கும், ஏழை-பணக்காரன் வேறுபாட்டை அகற்றுவதற்கும் இக்கல்வி பயன்படவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

உயர் நெறிகளைக் கற்பிக்கும் நோக்கமின்றி, வேலைக்கு மட்டுமே ஆட்களை உற்பத்தி செய்யும் இயந்திரக்கூடங்களாகக் கல்விநிலையங்கள் மாறி விட்டன. இதனால் இந்தத் தலைமுறையே மூளை கொழுத்து, இதயம் சுருங்கிய அவலநிலைக்குத் தாழ்ந்து விட்டது.

உலகமயம்- தனியார்மயம்- தாராளமயம் மேலாதிக்கம் செலுத்தும் சூழலில், நமது பண்பாட்டு அடையாளங்களை நாம் வேகமாக இழந்து வருகிறோம். இதுபற்றிய கவலை ஏதும் நமது கல்வித்திட்டத்தில் சிறிதளவும் இல்லாத சூழல் மேலோங்கி வருகிறது. இதற்கு மாற்றாக, வெற்று ஆடம்பரமும் போலி மதிப்பீடுகளுமே இங்கு வலிந்து திணிக்கப்படுகின்றன. உண்மையான கல்வி எங்கே என்று பாலைவனத்தில் நீரைத் தேடுபவதுபோல் தேட வேண்டியுள்ளது.

கல்விசார்ந்து முகங்கொள்ள வேண்டிய இது போன்ற நீண்டகாலப் பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களும் ஏராளமாக உள்ளன. தாய்மொழிக்கல்வி, தாய்த்தமிழ்ப்பள்ளிகள் மேம்பாடு, ஏழைக்கும் பணக்காரனுக்கும் தனித்தனிக்கல்விமுறைகள், ஆங்கில மோகம், பொதுப் பள்ளிமுறை, தனிப்பயிற்சி கலாச்சாரம், பாடத்திட்ட மாற்றம், உயர்கல்வி மேம்பாடு போன்ற குறிப்பான சிக்கல்களும் தீர்வு காணப்படாமல் நீண்ட நெடுங்காலமாக நிலுவையில் உள்ளன. இச்சிக்கல்களை நேர்செய்ய வேண்டிய முகாமையான பொறுப்பு ஆசிரியர்களுக்குத்தான் உண்டு. ஆனால், இன்றைக்கு ஆசிரியர்களிடையே சமூக அக்கறை என்பது கழிவிரக்கம் கொள்ளத்தக்க முறையில் கடுகுபோல் சிறுத்துக் காணப்படுகிறது. தமிழீழ இனப்படுகொலை, கூடங்குளம் அணுமின்திட்டம், காவிரி-முல்லைப் பெரியாறு - பாலாறு சிக்கல்கள் போன்றவற்றில் ஆசிரியர் சமூகத்தின் பங்களிப்பு ஏறக்குறைய இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஆசிரியர்கள் நிலை இவ்வாறு இருக்க, சமூகத்தின் ஏனைய பிரிவு வெகுமக்களோ, பள்ளி-கல்லூரி திறக்கக்கூடிய சூன்-சூலை மாதங்களில் மட்டும் கல்வி பற்றிக் காரசாரமாகப் பேசுகின்றனர். அதன்பிறகு மிக வசதியாக இது குறித்து மறந்தே விடுகின்றனர். அதிருப்தியை வெளிப்படுத்துவதோடு நின்று விடாமல், மாற்றுச் செயல்பாடு -தொடர்செயல்பாடு என்ற நிலைக்கு வெகுமக்களை ஊக்குவிக்க வேண்டிய கடப்பாடு அறிவர்களுக்கு உள்ளது.

கல்வி என்பது ஒரு கொண்டாட்டம் என்ற நிலை மாறி, கல்வி என்பது ஓர் ஆடுகளம் என்பதாகவும், இங்கு வெற்றி (மதிப்பெண்) மட்டுமே இலக்கு என்பதாகவும் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சக மாணவனைத் தோழனாகக் கருதாமல், ஒரு கடும் போட்டியாளனாகப் பார்க்கும் திரிபு நிலை வந்து விட்டது. விழுமியம் சார்ந்த கல்வி போய், விழுக்காடு சார்ந்த கல்வியை நோக்கி ஓட்டப்பந்தயம் நடக்கிறது.

சமூக மாற்றத்திற்கு உதவக் கூடிய வலிமை கல்விக்கு உண்டு என்பதை இன்று நம்புவதற்குக் கூட ஆளில்லாத அவல நிலை மேலோங்கியுள்ளது. இவற்றை எதிர்கொண்டு மாற்றுக்கல்வியை ஊக்குவிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஆசிரியர் சங்கங்களுக்கு உண்டு. ஆனால் வேலை வாய்ப்பு, ஊதிய உயர்வு, பணிமாறுதல், நிதிநிலுவை, தகுதிக்கேற்ற வேலையின்மை, ஊதியமின்மை மற்றும் நிர்வாகக் கோளாறுகள் போன்ற ஏராளமான சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டிய பணிச்சுமையும் ஆசிரியர் சங்கங்களுக்கு இருக்கிறது. எவ்வளவு திறம்படச் செயல்பட்டாலும், ஓடி ஓடி உழைத்தாலும் ஆசிரியர் சங்கங்களுக்கு முன்னாலுள்ள இத்தகைய சவால்கள் குறைவதாகக் காணோம். பிரச்சனைகள் கடலலை போல் தொடர்ந்து வந்து மிரட்டிக் கொண்டே இருக்கின்றன. இத்தகையதோர் நெருக்கடியான சூழலில், சமூக மாற்றங்குறித்தான நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாத இக்கட்டான சூழலில் ஆசிரியர் சங்கங்கள் சிக்கித் தவிக்கின்றன. எனவே சமூக மாற்றங்கருதி, தனியே கல்விஇயக்கம் ஒன்று உருவாகவேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியின்பால் கரிசனம் மிக்க சனநாயக சக்திகள் ஒன்றிணைந்து இப்படிப்பட்ட இயக்கத்தை முன்னெடுப்பது இன்று அடிப்படைத் தேவையாகிறது. கல்வி சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்ளும் பொழுது மிகமிக அடிப்படையானதோர் உண்மையையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும். இந்தியா என்பது ஒரு நாடல்ல: அது ஒரு துணைக்கண்டம். இங்கு மொழி, பண்பாடு, வரலாறு, வாழ்க்கைமுறை போன்றவற்றில் நிறைய வேறுபாடுகளைக் கொண்ட பல்வேறு தேசிய இனங்கள் உள்ளன. எனவே ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தனித்துவமான கல்வித்திட்டம் தேவைப்படுகிறது. அந்தப் பின்னணியில் தமிழ் மக்களுக்கு என ஒரு மாற்றுக்கல்வியை நாம் உருவாக்கவேண்டும். இத்தகையதோர் மாற்றுக்கல்வி இயக்கம் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் தோழமை அமைப்பாகச் செயல்படுவதோடு, அவர்களது ஆக்கபூர்வமான பணியில் குறுக்கிடாமல், அவர்களுக்கு உறுதுணையான சகபயணியாகவும் செயல்பட வேண்டிய கடப்பாடு உள்ளது.

ஆசிரியர்கள்-மாணவர்கள்-வெகு மக்கள் என்ற இம்முக்கூட்டு, நமக்கு புதிய வாசல்களைத் திறக்கும்.

இத்தகையதோர் புதிய பாதையைச் சமைப்பதற்கு ஒரு கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நடைபெறவுள்ளது. அதில் தாங்கள் பங்கேற்றுச் சிறப்பிப்பதோடு, தங்களது மேலான பரிந்துரைகளை நல்குமாறும் கனிவுடன் வேண்டுகிறோம். நன்றி!

கலந்தாய்வுக்கூட்டம்

09.12.2012
ஞாயிறு காலை 10.30 மணி
ரவி மினிஹால்
சத்திரம் பேருந்து நிலையம்
கலைஞர் அறிவாலயம் அருகில்
திருச்சி.

***

கண.குறிஞ்சி (சமூக உரிமைகளுக்கான ஆசிரியர் இயக்கம்)

சுடரொளி

ஜெயப்பிரகாசு நாராயணன் (தமிழ்ச் சமூக மாற்றத்திற்கான ஆசிரியர் இயக்கம்)

தொடர்புக்கு - 9443307681, 9025631815

Pin It