கடந்த 17.09.2012 தேதி அதிகாலை நான்கு முப்பது மணியளவில், சேலம் போஸ் மைதானத்தில் விஜயராஜ், மத்திய அரசின் ஒப்புதலோடு மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுசமா சுவராஜ் அழைப்பை ஏற்று இனவெறி சிங்கள ராஜபக்ஷே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூறு பக்க டைரி எழுதி வைத்து விட்டு முப்பத்தி ஆறு பக்க கடிதத்தை எழுதி தூக்கி வீசி விட்டு தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்கிரையானார். பின்னிட்டு உடனே எம்போன்ற தோழர்களுக்குத் தகவல் தெரிந்தவுடன் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நூறு சதவீதம் எரிந்து போய் இருந்தார்.

vijayaraj_rally_640

மிகுந்த மன வருத்தத்தோடு, 'ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தீர்கள்?' என்று கேட்டபோது, 'இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்கள், டாங்கிகள், கனரக விமானங்களை வழங்கி தமிழர்களுக்கு தொடர்ச்சியாக துரோகம் இழைத்துள்ளது. இந்த மத்திய அரசாங்கமும் சோனியா காந்தியும் இன்னும் திருந்தவில்லை. இனியாவது இவர்கள் திருந்த வேண்டும். என்னுடைய உயிர் ஆயுதத்தைப் பார்த்து தமிழர்கள் ராஜபக்ஷவை திருப்பியனுப்ப வேண்டும். அதற்காகத்தான் இதை நான் செய்தேன். ' என்றார். தனக்கு போராட்டத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை, பல வருடங்களாகப் போராடினாலும் ஈழ மக்கள் சிங்கள இனவெறி ராஜபக்ஷேவின் வெறியாட்டத்தால் பலியான எம் ஈழ மக்களைக் காப்பாற்ற முடியவில்லை. அப்படி கொன்றொளித்த இனவெறி நாய் ராஜபக்ஷே இந்தியா வருவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று எண்ணினாலும் எதையும் செயல்படுத்த முடியாமல், வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்தேன். எனது உயிரிழப்பு மூலமாக தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டு வக்கிர வெறி பிடித்த இனவெறி நாய் செருப்பால் அடித்து துரத்தியடிக்கப்பட வேண்டும்' என்று உறுதிபடக் கூறினார். மருத்துவர்களும் இனி பிழைக்க வாய்ப்பில்லை என்று கூறியபோதும் இறக்கும் தருவாயிலும் மிக எழுச்சியோடு எங்களோடு அவர் பேசினார்.

18.09.2012 மதியம் 12.30 மணியளவில் வீரச்சாவடைந்தார்.  அதன் பின்னிட்டு நாம் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று போது, உடனடியாக பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டி விஜயராஜின் பெற்றோரை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் நெருக்குவதை அறிந்த நாம் அவரது பெற்றோரிடம் பேசி, நான்கு கோரிக்கைகளை வைத்து அதை நிறைவேற்றினால்தான் நாங்கள் பிரேதப் பரிசோதனைக்குக் கையெழுத்திடுவோம் என்று வலியுறுத்தினோம். அந்த கோரிக்கைகள்.....!

1 . விஜய ராஜாவை தற்கொலைக்குத் தூண்டிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இனவெறி நாய் ராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைக்கக் காரணமாக இருந்த சுசமா சுவராஜ் மற்றும் மத்தியப் பிரதேசே மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் மீது உடனடியாக இந்திய தண்டனைச் சட்டம் 306 படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.

2 . விஜய ராஜ் இறக்கும் தருவாயில் எழுதியதாக சொல்லப்பட்ட 36 பக்க கடிதத்தை வெளியிட வேண்டும்.

3 விஜயராஜின் மரண வாக்குமூல நகலை வழங்க வேண்டும்.

4 . ராஜபக்ஷேவின் இந்திய வருகைக்குத் தடை விதித்து, அதை அரசாணையாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்தோம்.

இதில் விஜயராஜிக்காக போடப்பட்ட மு.தா.அறிக்கை, மரண வாக்குமூல நகல், 36 பக்க கடித நகல் அனைத்தையும் மறுநாள் காலை சுமார் 9 மணியளவில் எங்கள் மூலம் விஜயராஜின் பெற்றோர் கையில் வழங்கப்பட்ட பிறகே பிரேதப் பரிசோதனைக்கு கையெழுத்திட்டு அனுப்பினோம். அவர் தன் கைப்பட எழுதிய கடித நகலை இத்துடன் இணைத்துள்ளேன். கடிதத்தின் வாசகங்கள் அனைத்திலும் அவர் எந்தளவுக்கு சுயநல பிணந்தின்னி அரசியல்வாதிகளைப் பற்றியும், ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் மீதும் மதிப்பீடு வைத்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.

vijayaraj_letter_640

சரியாக ஒருமணி நேரம் கழித்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உடல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னிட்டு வீரச்சாவடைந்த விஜயராஜின் உடலை தூக்கிக்கொண்டு ஆயிரக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் நீண்ட பேரணியாக வர விஜயராஜ் தீக்குளித்த, விஜயராஜ் ஆட்டோ ஓட்டி வந்த அதே பழைய பேருந்து நிலைய போஸ் மைதானத்தில் அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னிட்டு அங்கே நடந்த வீர வணக்க நிகழ்வில் உணர்வு மிக்க பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த அனைவரும் உணர்வோடு ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். குறிப்பாக திராவிடர் விடுதலை கழகத் தலைவர் தோழர் தா.செ.மணி, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழர் வாழ்வுரிமைக்கட்சி தோழர் வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் திருமாவளவன், தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் மற்றும் பல்வேறு அமைப்புகள், இயக்கங்களைச் சேர்ந்த அனைவரும் ராஜபக்சே வருகைக்கு கண்டனம் தெரிவித்து கண்டன உரையாற்றினார்கள். 
 
அதன் பின்னிட்டு மாலை சுமார் ஐந்து மணியளவில் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வோடும் எழுச்சியோடும் பின்தொடர வீர வணக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டன‌. மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக, இனவெறி நாய் ராஜபக்சேவுக்கு எதிராக விண்ணை முட்டும் எழுச்சிமிகு முழக்கங்களோடு, வீரச்சாவடைந்த விஜய ராஜின் உடல் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நீண்ட நெடிய பேரணியாக எடுத்துச் செல்லப்பட்டு முன்னிரவு சுமார் எட்டு மணியளவில் எரியூட்டப்பட்டது.

நாம் விஜயராஜின் தியாகத்தை போற்றும் அதே வேளையில் இது போன்ற தற்கொலைகளையும், தன்னை வருத்திக்கொள்ளும் சம்பவங்களையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். நிச்சயமாக நமக்கு இதில் உடன்பாடில்லை. பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் இது போன்ற தவறான முடிவுகள் எடுப்பதன் மூலம் ஓர் எழுச்சியை ஏற்படுத்த முடியுமே தவிர நிரந்தரத் தீர்வு எந்த வகையில் சாத்தியம்...? முதன் முதலில் எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் போராட்டம் ஒன்றே தீர்வாக அமையும். போராட்டமின்றி எந்த உரிமைகளையும் மீட்டெடுக்க முடியாது. விஜயராஜ் அரசியல் பக்குவமற்ற நிலையில் உணர்வு வயப்பட்ட நிலையில் இம்முடிவை எடுத்துள்ளார். இன்றைக்கு உள்ள இளைய சமூகமும் உணர்வு வயப்பட்ட நிலையிலேயே தவறான முடிவுகளை எடுக்கிறது என்பதற்கு விஜயராஜ் ஒரு சிறந்த உதாரணமாய் அமைந்து விட்டார்.

vijayaraj

அதற்கு மாற்றாக, தங்களின் எதிர்ப்பை, அதன் கொள்கைகளை, அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அளவிற்கு, சமூகத் தொண்டாற்ற வேண்டும். தனக்கு உடன்பாடான அரசியல் தளத்தில் இணைந்து தனக்கான சமூக பங்களிப்பை செய்ய வேண்டும். தன் வாழ்நாளை ஒரு நொடிப்பொழுதில் இழப்பதற்குப் பதில், மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளை மறுத்து நம் வரிப்பணத்தில் தனது பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்து சுயநல ஊழல் அரசியல் நடத்தி, உண்டு கொழுத்து வரும் மக்கள் விரோத அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராடுவதன் மூலம் தான் நம்மால் ஒரு நல்ல வலுவான மக்கள் அரசாங்கத்தை கட்டியமைக்க முடியும் என்ற உறுதிக்கு இளைய சமூகம் திசை மாற வேண்டும்.
 
- சேலம் தமயந்தி, விடியல் பெண்கள் மையம் தமிழ்நாடு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It