இந்திய சுதந்திர நாளில் (2012 ஆகஸ்டு 15 புதன்) குடந்தை காந்தி பூங்கா அருகில்.. 

காவிரித் தாய் கன்னடச் சிறையில் 15 ஆண்டுகளாய் அடைபட்டுக் கிடக்க, இந்தியாவுக்கு இன்னுமொரு சுதந்திர நாள் வந்துள்ளது.

குறுவைப் பயிரிடவே தண்ணீர் திறக்க வில்லை. சம்பாவும் பெரிய கேள்விக்குறிதான். ஆடிப்பெருக்கு விழாவிற்குக் கூட அடிக்குழாய்தான் மாலை வாங்கியது. அதிலும் கூட அடிக்க அடிக்கக் காற்றுத்தான் வருகிறது. நிலத்தடி நீர் அந்த அளவுக்கு வற்றிப்போய் விட்டது.

ஆற்று நீரும் இல்லை, ஊற்று நீரும் இல்லை. நீர் வற்ற.. நிலம் காய.. வறட்சியும் பஞ்சமும் வந்து கொண்டிருக்கின்றன. இல்லை, வந்தே விட்டன. பயிர் வைக்க வழியற்றுப் போனது மட்டுமல்ல. தவித்த வாய்க்கும் தண்ணீர் இல்லை என்ற நிலை தமிழகத்தில் வந்து கொண்டிருக்கிறது.

சோறுடைத்த சோணாடு பஞ்ச பூமி ஆகிக் கொண்டிருக்கிறது. நஞ்சை செழித்த தஞ்சை மண் புஞ்சைக்கும் வழியின்றி பாலை நிலம் ஆகிக் கொண்டிருக்கிறது.

ஏன்? ஏன்? ஏன்?

இயற்கை பொய்த்ததாலா? இறைவன் சபித்ததாலா? இல்லை, இல்லை. கர்நாடகத்தின் அடாவடியால்! இந்தியாவின் வஞ்சகத்தால்! இந்த அடாவடியையும் வஞ்சகத்தையும் எதிர்த்து முறியடிக்கத் திராணியில்லாத தமிழ்நாட்டு அரசியல் தலைமைகளால்!

சமரசப் பேச்சுவார்த்தை, நடுவர் மன்றம் எனப்படும் தீர்ப்பாயம், அதன் இடைக்காலத் தீர்ப்பும் இறுதித் தீர்ப்பும், காவிரி ஆணையம், கண்காணிப்புக் குழு, நீதிமன்றத் தீர்ப்புகள்... இத்தனை வழிமுறைகளையும் பார்த்தாயிற்று. ஏதாவது நடக்காதா என்று நாற்பது ஆண்டு காலம் காத்திருந்தாயிற்று. ஒரு பயனுமில்லை. நிலைமை மேலும் மேலும் மோசமானதுதான் கண்ட பலன்.

பொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்து உறுதியாக ஒன்றுபட்டுப் போராடுவது தவிர வேறு வழியில்லை. இது உழவர்களுக்கு வந்துள்ள இடர் மட்டுமன்று, தமிழினத்திற்கே வந்துள்ள இன்னல் என்ற உணர்வுடன் போராட வேண்டும். கர்நாடகத்திற்கும் இந்தியாவிற்கும் உறுத்தும் படியாகப் போராட வேண்டும். அந்த அரசுகளைப் பணிய வைத்துத் தமிழகத்தின் உரிமையை ஏற்கச் செய்யும் வகையில் போராட வேண்டும். இந்த வகையில் தனித்தும் தமிழ்த் தேசிய முன்னணி சார்பிலும் எமது தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளது.

இப்போது எழுந்துள்ள நெருக்கடியான சூழலில் கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய தேவையைக் காவிரித் தீரத் தமிழர்களுக்கு நினைவூட்டி எடுத்துரைக்கும் வகையில் மீண்டும் ஒரு போராட்டத்திற்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உங்களை அறைகூவி அழைக்கிறது!

நம் கோரிக்கை முழக்கங்கள்:

1. தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மறுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் தர மறுப்போம்! அனைத்து வகையிலும் பொருளியல் தடை விதிப்போம்.

2. தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்டுக் கொடுக்காத இந்திய அரசைப் புறக்கணிப்போம்!

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 2012 ஆகஸ்டு 15 புதன் காலை 8 மணி முதல் மாலை 6 வரை ஒரு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டம்!

தலைமை: தோழர் தியாகு,

 பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

வாருங்கள் தோழர்களே! தாருங்கள் ஆதரவு!

*********************************************************************************************************************

காவிரி மையம் * தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Pin It