1945ஆம் ஆண்டு ஆகத்து 6 அன்று ஜப்பான் நகரின் ஹிரோசிமாவிலும், ஆகத்து 9 நாகசாகி நகரின் மீதும் அமெரிக்க வல்லரசு அணுகுண்டு வீசி பல இலட்சக்கணக்கான மக்களை ஒரே நொடியில் கொன்றொழித்தது. பல்லாண்டுகள் ஆன பிறகும், இன்றுவரை அப்பகுதி மக்கள் அந்த அணுகுண்டு வீச்சின் கதிர்வீச்சுத் தாக்கத்தை வலியுடன் அனுபவித்து வருகின்றனர்.வெடிக்கும் போது மட்டுமின்றி, துகள்களாகவும், கதிர்வீச்சாகவும் பல்லாண்டுகள் அழியாது தங்கி மனிதர்களைக் மெதுவாகக் கொன்றொழிக்கும் வல்லமை படைத்தவையே அணுசக்தியாகும். எனவே, ஹிரோசிமா நாளான ஆகஸ்ட்டு 6ஆம் நாளை, அணுசக்தியின் கொடூரக் கரங்களால் மறைந்த மக்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையிலும், அணுசக்தி இல்லாத உலகம் அமைய உறுதியேற்கும் வகையிலும் நாம் கடைபிடிக்க வேண்டும் என்ற வகையில், தமிழகமெங்கும் பல்வேறு நிகழ்வுகள் பல்வேறு அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டன.

இடிந்தகரை

koodankulam_children_640

ஹிரோசிமா நினைவு நாளையொட்டி, கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடும் மக்களின் அமைப்பான அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில் மாபெரும் பேரணியும், நினைவஞ்சலிப் பொதுக் கூட்டமும் நடைபெற்றது. மாலை 4 மணியளவில் தொடங்கியப் பேரணி, பொதுக்கூட்ட நிகழ்வு நடக்கும் மாதா கோவில் திடலை வந்தடைந்தது. அங்கு, சிறுவர், சிறுமியர், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என திரளான மக்கள் கூடியிருக்க, எழுச்சியுடன் ஹிரோசிமா மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் சு.ப.உதயக்குமார், புஷ்பராயன் ஆகியோர் தலைமை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் தோழர்களும் இதில் திரளாக கலந்து கொண்டனர்.

சென்னை – வள்ளுவர் கோட்டம்

may17_valluvar_kottam_640

ஹிரோசிமா நினைவு நாளையொட்டி, நேற்று மாலை 4.30 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்ட நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி நிகழ்வை ஒருங்கிணைத்தார். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழக தென் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் தபசி குமரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

சென்னை – தியாகராயர் நகர்

maniarasan_may17_640

சென்னை தியாகராயர் நகர் தென் மேற்கு போக் சாலை – மதுரை வீரன் கோயில் தெரு சந்திப்பு அருகில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஹிரோசிமா நினைவு நாளையொட்டி,  வீரவணக்கத் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி தலைமையேற்றார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். கல்பாக்கம் மருத்துவர் வீ.புகழேந்தி, பெரியார் திராவிடர் கழகச் செயற்குழு உறுப்பினர் தோழர் அன்பு தனசேகரன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் அருண்சோரி, தமிழ்த் தேச மாணவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் இளையராசா, தமிழக இளைஞர் முன்னணி குன்றத்தூர் கிளை அமைப்பாளர் தோழர் சரவணன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்புரை வழங்கினார். தாம்பரம் த.தே.பொ.க. செயலாளர் தோழர் தமிழ்க்கனல் நன்றி நவில்கிறார்.

ஓசூர்

ஓசூர் இராம் நகரில், அணுசக்திக்கு எதிரானக் கூட்டியக்கம் சார்பில் ஹிரோசிமா நினைவு நாளையொட்டி, அணுகுண்டுகளை உற்பத்தி செய்யப் பயன்படும் அணுஉலைகளை இழத்து மூடுக என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் நடவரசன் தலைமையேற்றார். பெரியார் தி.க. மாவட்டத் தலைவர் தோழர் குமார், தமிழர் தேசிய இயக்கம் மாவட்டத் தலைவர் திரு. முருகேசன், தமிழக மக்கள் விடுதலை முன்னணி அமைப்பாளர் தோழர் ஒப்புரவாளன், மனித உரிமைப் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திரு. க.மா.இளவரசன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து சிறப்புரை வழங்கினார்.

கோவையில் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை தடை

கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில், ஹிரோசிமா நாளையொட்டி, தமிழகத்தின் கூடங்குளம் - கல்பாக்கம் அணுஉலைகளை மூடுக என வலியுறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. முதலில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளித்த காவல்துறையினர், பின்னர் தடை விதித்தனர். இதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு அமைப்புகள் சார்பில் ஹிரோசிமா மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தியும், பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

(செய்தி : த.தே.பொ.க.செய்தி பிரிவு, படங்கள் : கவிபாஸ்கர்)

Pin It