கூடங்குளம் அணு உலையை மூடுதல் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி 350க்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் இடிந்தகரையில் கடந்த 10 நாட்களாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ள நேரத்தில், இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாகவும் தமிழக அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் சென்னையில் நூறு மணி நேர தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை இளைஞர்கள் தொடங்கி உள்ளனர்.

kudankulam_chennai_fast_620

‘கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின்’ சார்பாக இரண்டு பெண்கள் உட்பட தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த நான்கு தோழர்கள் நேற்று மாலை 5 மணியளவில் சென்னையில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகமான ‘தாயகத்தில்’ இவ் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினர்.

தோழர்கள் ஜார்ஜ், பரிமளா, சமந்தா, ஜான்சன் ஆகியோரின் போராட்டத்தை இந்திய சமுக சனநாயக கட்சியின் (SDPI) தோழர் ஹரிம் அவர்கள் தொடங்கி வைத்தார்

உண்ணாநிலைப் போராட்டம் குறித்து தோழர் பரிமளா கூறுகையில், "கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கடந்த மே 01, 2012 முதல் 350க்கும் மேற்பட்ட மக்கள் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தொடங்கிய பத்து நாட்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையிலும் அரசு இதுவரை மக்களிடையே எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இறங்கி வரவில்லை. மாறாக சனநாயக வழியில் போராடிவரும் மக்களை ‘வன்முறையாளர்கள்’ என சித்தரித்து, அவர்களைத் தனிமைப்படுத்தி வருகிறது.

மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் இன்னொரு உத்தியாக, மக்களின் பாதுகாப்பை காரணம் காட்டி கூடங்குளத்தை சுற்றி ஏழு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அனைத்து ஊர்களிலும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார் நெல்லை மாவட்ட ஆட்சியாளர். இது மக்களை அச்சுறுத்தி அவர்களை திறந்த வெளி சிறையில் அடைத்து வைக்கும் திட்டமே. ஒரு சனநாயக நாட்டில், பொது இடங்களில் கூடுவதற்கும், இடிந்தகரை மக்களைப் போல அமைதிவழிப் போராட்டத்தை நடத்தவும் மக்களுக்கு உரிமை உண்டு. அத்தகைய அடிப்படை உரிமையை இந்திய அரசு மதிக்க வேண்டும்” என்றார்

போராட்டம் குறித்து தோழர் ஜார்ஜ் கூறுகையில், "இடிந்தகரையில் நடக்கும் போராட்டம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் போராட்டம். போராடும் மக்கள் தனித்து இல்லை என்பதை இந்த அடக்குமுறை அரசுக்கு உணர்த்தும் விதமாகவே இப்போராட்டத்தை தொடங்குகின்றோம்" என்றார்.

இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:

* இடிந்தகரைக்குள் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்கிடுக! குவித்துவரும் காவல் படைகளைத் திரும்பப் பெறுக!
* 10 வது நாளாக தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டம் இருந்து வரும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துக!
* போராடும் மக்கள் மீது தொடுத்துள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெறுதல், கைது செய்தவர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட போராடும் மக்கள் முன் வைத்துள்ள 6 அம்சக் கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்துக!

Pin It