கடந்த 17-02-2012 வெள்ளிக்கிழமை அன்று, "போர்க்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம்" சார்பில் சென்னையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் ‘ஐ.நா மனித உரிமை ஆணையமும் இலங்கையின் போர்க்குற்றங்களும்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வரங்கத்தினை ஏற்பாடு செய்திருந்தது. ஆய்வரங்கத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பேச்சாளர்களின் உரைத் தொகுப்பு:

பெங்களூரு பல்கலை கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பால் நியூமென், தனது உரையில், டப்ளின் தீர்ப்பாயம் மற்றும் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைகளுடன், இலங்கை அரசின் “கற்றபாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் (LLRC) அறிக்கையை மிக விரிவாகவும் தெளிவாகவும் ஒப்பீடு செய்தார்:

நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், டப்ளின் : (PPT,Dublin)

ஐ.நா. சபை என்பது உலகில் உள்ள பல்வேறு அரசுகளைப் பிரதிபலிக்கும் சபை. நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்பது உலக மக்கள், அரசு சாரா மனித உரிமை அமைப்புகளின் பிரதிபலிக்கும் அமைப்பு. இந்தத் தீர்ப்பாயம், பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று “இலங்கைப் போர்க்குற்றங்கள் இழைத்திருக்கிறதா” என்பது பற்றிய விசாரணயை ஏற்றுக் கொண்டது. இது இத்தீர்ப்பாயத்தின் 44வது வழக்கு. இந்த விசாரணை ஜன 14-16, 2010 டப்ளின் நகரில் நடைபெற்றது. தனது விசாரணையில் இலங்கை அரசு கீழே தொடுக்கப்பட்டுள்ள போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்திருப்பது நிரூபணம் ஆனது.

1. தமிழ் பொது மக்கள் மீதான திட்டமிட்ட, பரந்துப்பட்ட இராணுவத் தாக்குதல்
2. உணவு மற்றும் மருந்து பொருட்களைத் தடுத்து தமிழ் பொது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்குதல்
3. போர்க்கைதிகளையும் சரணடைந்தவர்களையும் கொல்லுதல், சிறைக்கைதிகளைத் துன்புறுத்தல்
4. பாலியல் வன்முறைகளைப் போரின் கருவியாகப் பயன்படுத்தல்
5. தமிழ் பொதுமக்களைக் கொல்வது, காணாமல் போகச் செய்வது
6. பாரிய அளவிலான தமிழ் மக்களை இடம் பெயர்ப்பது, தடுத்து வைப்பது
7. தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் மீது கனரக ஆயுதத் தாக்குதல், தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பிரயோகித்தல்.
8. இறந்தவர்களின் உடல்கள் மீது அவமரியாதைச் செயல்கள்.

சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் அரசுகளுக்கு மட்டும் பொருந்தும்; விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகளுக்கு பொருந்தாது என்பதால் இந்தத் தீர்ப்பாயம் விடுதலைப் புலிகளின் செயல்கள் பற்றி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.இந்த தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு பிறகுதான் இலங்கைப் போர், 'சாட்சிகளற்ற போர்' அல்ல என்று வெளி உலகிற்கு தெரிய வந்தது. பல காணொளி ஆதாரங்கள் தீர்ப்பாயத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் ஒரு சிலவற்றைத்தான் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது.

மார்ச்சு 2010 ICG தனது அறிக்கையில் இலங்கை போர்க்குற்றங்களுக்கு செயற்கைக் கோள் வழி எடுக்கப் பட்ட புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டது.இதன் பிறகு தான் ஐநா பொது செயலாளர் இலங்கைப் போர் குறித்து அறிவுரைக்குமாறு மூவர் நிபுணர் குழு ஒன்றை செப்டம்பர் 2010ல் நியமித்தார். ஐநா பொது செயலாளர் நியமித்த மூவர் நிபுணர் குழு ஏப்ரல் 2011ல் வெளியிட்ட தனது அறிக்கையில், டப்ளின் தீர்ப்பாயத் தீர்ப்பினை உறுதி செய்தது. மேலும், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், பாதுகாப்பு வளையத்தில் கூடிய பொதுமக்கள் மீதான இராணுவத் தாக்குதலையும் அம்பலப்படுத்தியது. இவ்வாறான கொடூரமான கடைசி கால யுத்தத்திற்கு இந்தியாவின் கப்பற்படை உதவி மற்றும் செயற்கைக்கோள் ராடார் உளவு உதவிகள், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என அனைத்துலகத்தின் தவறான புரிதல் ஆகியன சில முக்கிய காரணிகள் என ஐநா நிபுணர் குழு எடுத்துரைத்தது. போர்ப்பகுதியில் சிக்கிக்கொண்ட மக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே மிகக் குறைவாக மதிப்பிடுவதன் மூலம் உணவு மற்றும் மருந்து பொருட்கள் தட்டுப்பாட்டை உருவாக்கியது இலங்கை அரசு என நிபுணர்களின் அறிக்கையில் தெளிவாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஐநா நிபுணர் குழு, இலங்கைப் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான அனைத்துலக விசாரணையை பொது செயலாளர் உடனே நியமிக்கப் பரிந்துரைத்தது. மேலும் இலங்கைப் போர் காலக்கட்டத்தில் ஐநா சபையின் நடவடிக்கைகளையும் மீளாய்வு செய்யவேண்டும் எனப் பரிந்துரைத்தது.

இலங்கை அரசின் கற்றப் பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம் (LLRC):

ஐநா நிபுணர் குழு தனது அறிக்கையில், ”இலங்கை அரசு அமைத்துள்ள கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்திற்கு (LLRC) மனித உரிமை மீறல்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் குறித்து ஆராய்வதற்கு வரையறுக்கப்படவில்லை; மேலும் இந்த ஆணையம் சர்வதேச நெறிமுறைகளின் படி அமைக்கப்படவில்லை. நம்பிக்கத்தன்மையற்றது.”

கற்றப் பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தை உலகில் முக்கியமான மனித உரிமை அமைப்புகளான ஆம்னெஸ்டி, எச் ஆர் டபிள்யூ (HRW), ஐசிஜி (ICG) ஒரு சேர நிராகரித்தன.

இவ்வாணையத்தின் தலைமை பொறுப்பாளர் சி.ஆர்.டிசில்வா, இலங்கை அதிபர் மஹிந்த இராசபக்சேவிற்கு மிக நெருக்கமானவர்; இந்தப் போரில் பாதிப்புக்குள்ளானவர்களில் 80 விழுக்காடு பெண்கள். சுமார் 90000 பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கான பெண்கள் பல்வேறு பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகியுள்ளனர். அப்படியிருக்க ஒரே ஒரு பெண் தான் இலங்கை அரசு நியமித்த ஆணையத்தில் உள்ளார். இந்த ஆணையத்தின் ஒன்றரை ஆண்டு விசாரணையில் வெறும் 17 நாட்கள் தான் போர் உக்கிரமாக நடந்த தமிழர்கள் வாழ்விடங்களிலான வடக்கு மாகாணங்களில் விசாரணை அமர்வு நடைபெற்றது. மேலும் விசாரணை அமர்வுகளில் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்களை மறைக்க சர்வதேச ஊடக நிறுவனங்களை அனுமதிக்கவில்லை.

ஒரு அமர்வில் மன்னாரின் ஆயர் ராயப்ப ஜோசப் ஆஜராகி தனது வாக்குமூலத்தை நேரில் பதிவு செய்தார். அதில், செப் 2008 அரசாங்க பதிவுகளின் படி வடக்கு மாகாணங்களில் 4,28,000 தமிழ் மக்கள் இருந்தனர். மே 2009ல் போர் முடிந்தவுடன் முகாமிற்கு 2,82,000 மக்கள் தங்கினர் என இலங்கை அரசு அதிகாரப்பூரவமாக உலகிற்குத் தெரிவிக்கப்பட்டது. அப்படியிருக்க, காணாமல் போன 1,46,000 மக்கள் என்ன ஆயினர் என கேள்வி எழுப்பினார் மன்னார் ஆயர். இதைப் பற்றிய செய்தி, கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் (LLRC) அறிக்கையில் குறிப்பிடபடவில்லை.

கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் அறிக்கையில் சில முக்கியமானவைகள்:

• 2002ல் இலங்கை அரசு – விடுதலைப்புலிகளிடையான போர் நிறுத்த உடன்படுக்கைக்கான வழிவகைச் செய்த நோர்வே, விடுதலைப்புலிகளின் பக்கச் சார்புடன் செயல்பட்டனர்.
• இலங்கை இராணுவம் மிகவும் பொறுப்புணர்வுடனும் நன்னடத்தை மீறாமலும் பொது மக்கள் பாதுகாக்கும் கவனத்துடனும் போரிட்டனர். அவர்கள் அதிக மன அழுத்தத்துடன் போரிட்டனர். ஒருவேளை ஏதேனும் மனித உரிமை மீறல்கள் நடந்தேறிருந்தால் அது தனிப்பட்ட வீரரின் குற்றமே அன்றி,அது இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்கள் அல்ல.
• இருதரப்பு நடந்த துப்பாக்கிச் சண்டையின் நடுவே மாட்டிக்கொண்ட பொது மக்களில் சிலர் உயிரிழந்திருக்கலாம்.
• விடுதலைப் புலிகள்தான் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறியுள்ளது.
• சேனல் 4 வெளியிட்ட காணொளிகள் போலியானது எனக் குற்றச்சாட்டு.
• போரினால் காணாமல் போனவர்கள் பற்றி விரிவான விசாரணை நடத்த ஒரு தனி ஆணையம் நிறுவ வேண்டும்.
• போருக்கான காரணங்களாக விளங்கும் தமிழ் மக்களின் குறைகளைக் கேட்டறியத் தனி ஆணையம் நிறுவ வேண்டும்.

டக்ளஸ்,கருணா தலைமயிலான துணைப்படைகளை உடனே கலைத்திட வேண்டும் என்பது மட்டும் தான் LLRCயின் ஒரு உண்மையான பரிந்துரையாகும். மற்றவைகளெல்லாம் இராணுவத்தின் செயல்களை வாழ்த்துவதிலும் புதிது புதிதாய் விசாரணை அமைப்பது என காலம் கடத்தும் முயற்சியாகும்.

இவ்வாறு, இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பான மூன்று அறிக்கைகளையும் பேராசிரியர் பால் நியூமென் தெளிவாக எடுத்துரைத்தார்.

ஈழத்தில் போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்ட இன்றைய சுழலில் போர்க்குற்ற விசாரணையின் தேவை குறித்து சேவ் தமிழ்சு இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் இளங்கோவன் பேசுகையில்,

பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் பிரித்தானியரும், சுபானியர்களும் பல நாடுகளில் மக்களை கொல்வதை வழக்கமாக கொண்டிருந்தாலும், போர்க்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம், இனப்படுகொலை ஆகிய சொல்லாடல்கள் முதலாம் உலகப்போர் காலகட்டத்தை தொடர்ந்து அதிகரித்த குற்றங்களை போர்க்குற்றம் என்று வரையறுக்க தொடங்கப்படுகின்றன. போர்க்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம், இனப்படுகொலை ஆகிய சொல்லாடல்கள் முதலாம் உலகப்போர் காலகட்டத்தை தொடர்ந்து மக்களுக்கு எதிராக அதிகரித்த குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வரையறுத்து அதனை தடுத்திட சட்டங்களை ஐரோப்பியர்கள் இயற்றுகிறார்கள். முதன் முதலில் மேற்குலக நாடுகளில் மட்டுமே போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொண்டு தண்டனைகள் வழங்கப்படும் வழக்கம் இருந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆப்ரிக்க நாடுகளில் இது குறித்து பேசப்படுகிறது. பல ஆண்டுகளாக உகாண்டா, நைசிரியா போன்ற நாடுகளில் பல இனங்கள் அழிகப்பட்டது நடந்துள்ளது. ஆனால் சூடானில் மட்டுமே நடந்த இனப்படுகொலைக்கு முழுமையான நீதி வழங்கப்பட்டுள்ளது. இதுவும் அமெரிக்க சீனா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் நலன் சார்ந்தே அமைந்துள்ளது.

தெற்காசியவைப் பொருத்தவரை இவை குறித்த சொற்கள் அதிகமாக பயன்படுத்தப்படவில்லை. பொதுவாக மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று பார்க்கப்படுகிறதே தவிர மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்ற அடிப்படையில் பார்க்கப்படவில்லை. ஒருவேளை கருப்பு யூலை படுகொலைகளை செய்தவர்களை சரியான சட்ட நடவடிக்கைகள் மூலம் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றங்கள் முன் நிறுத்தியிருந்தால், இலங்கை அரசு தொடர்ந்து இவ்வளவு எளிதாக தமிழர்களைக் கொல்வதை, இனப்படுகொலை செய்யப்படுவதை தடுத்திருக்க முடியும். இலங்கையில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதன் மூலமே இனி தெற்காசியப் பிராந்தியத்தில் எந்த நாடும் பிற தேசிய இனங்கள் மீது இன அழிப்புப் போரை நடத்த முடியாது என்ற நிலையை உருவாக்க முடியும்.

போர்காலத்தில் மக்களைக் கொன்ற பல இராணுவப் பிரிவின் தளபதிகளை இலங்கை அரசு உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் தூதர்களாகவும், ஐநா அதிகாரிகளாகவும் நியமித்து வருகிறது. இதன் மூலம் இந்த போர்க்குற்றவாளிகளுக்கு 'அரசியல் பாதுகாப்பு' பெற்றுத்தர முயல்கிறது. போர்க்காலத்தில் மக்களை காக்கத் தவறியவர்கள் இன்று இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்குத் தேவையான ஆதரவை மக்களிடமும் உலக நாடுகளிடமும் திரட்டுவதன் மூலம், போர்க்குற்றம் புரிந்த இலங்கை அரசிற்கு தண்டனை பெற்றுத் தரவும், தமிழர்களுக்கு அரசியல் விடுதலை பெற்றுத் தரவும் இயலும் என்றார்

“இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக நாடுகளின் நிலைப்பாடு” என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள் பேசியதாவது:

“அரசியல் நோக்கில் அனைத்துலக நாடுகளின் நிலைப்பாட்டை பார்க்க வேண்டும். அரசியல் தீர்வுக்காக உலக நாடுகளின் ஆதரவு நமக்கு தேவை. ஐ நா வின் தீர்மானம் வெற்றியடைய மற்ற நாடுகளின் அரசியல் ஒத்துழைப்பு தேவை. இந்தியா இலங்கைக்கு போரில் ஆயுதம் கொடுத்து உதவியதை விட அரசியல் பூர்வமாக உதவியதே மிக அதிகம், சொல்லப்போனால் அதற்காக விலையே போய்விட்டது எனலாம். போர்க்குற்ற விசாரணை வாயில் வழியாகத்தான் அரசியல் தீர்வோடு உரிமை மிறல்களும் வெளியில் வரும்.

இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க காரணம், தமிழர்களுக்கு எதிரான போரில் தன்னுடைய உதவிகள், தந்திரங்கள் வெளியில் தெரிந்து விடும் என்பதால் தான். இது ஒரு அரசியல் பார்வையே. நம்மால் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு எதிரான போர், போர்க்குற்றங்கள் பற்றி பேசவே முடியவில்லை. தமிழக மக்களின் மனநிலையை தமிழக அரசியல்வாதிகள் வெளியில் எங்கும் பேசுவதில்லை. இங்கு அரசியல்வாதிகள் மக்களுக்கான அரசியல் செய்யவில்லை.

போர் நடந்த 2008 - 09 காலத்தில் தமிழகத்தில் மிகப் பெரிய எழுச்சியை காணமுடிந்தது. அது மிகப்பெரிய வெள்ளோட்டம். ஆனால் அதன் கணவாய்களின் வாயில்கள் இங்குள்ள அரசியல் கட்சிகளால் அடைக்கப்பட்டிரு:ந்தன. அந்த எழுச்சியின் தாக்கம் 2009 உடன் முடியவில்லை அது மேலும் 20 ஆண்டுகள் தமிழ் நாட்டில் தொடரும். இதை அரசியல் பூர்வமாகவே உறுதியாக கூற முடியும்.
 
சீனா வந்துவிடும் அதனால் நாங்கள் உதவினோம் என்று இந்தியா கூறுவதை இராசதந்திரமாக, அரசியல் பூர்வமாக பார்க்க முடியவில்லை. ஏனென்றால் சீனாவும் இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டது. ஒரு இனத்தையே அழிக்கும் இந்தியாவின் இந்த நடவடிக்கை அரசியல் தந்திரமாக இருக்க வாய்ப்பில்லை. கண்டிப்பாக பழிவாங்கும் செயலாகவே தெரிகிறது. ஈழத்தமிழர்கள் போரின் கடைசி நாட்கள் கூட இந்தியா உதவும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இந்தியா, இலங்கை உடனான இணைப்பு பாலமான ஈழத்தமிழர்களை எதிரியாகவே பார்க்கிறது. இந்தியா அரசியல் ரீதியாக தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தமிழக அரசியல் மாற்றம் ஈழத்தமிழர்களுக்கு ஒரு மாற்றத்தை கொடுக்கும். இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் சமுக அரசியல் மாற்றம் நடக்கும் என்பதற்கான ஆரம்ப சுழல் இப்பொழுது தெரிகிறது.

இலங்கை அரசு தமிழீழ மக்களின் சமுக அமைப்பை சீர்குலைத்து விட்டது. வடக்கு கிழக்கு பகுதியில் சமுக வாழ்வு மீண்டும் கிடைக்க 30 முதல் 50 ஆண்டுகள் ஆகும் என்ற நிலையை உருவாக்கி விட்டது. அதனால் தான் தற்பொழுது அரசு தொடர்ந்து புலம் பெயர் தமிழர்களின் செயல்பாடுகளை விமர்சனம் செய்து வருகிறது. 20 ஆண்டுகள் கழித்து வரும் ஈழத்தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கு ஈழம் குறித்த சிந்தனை நினைவில் மட்டுமே இருக்கும் என்று திட்டமிட்டே இலங்கை அரசு தன் செயல்பாடுகளை சொல்கிறது செயல்படுகிறது

ஈழம் நிழலா? நிசமா? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறையோடு போனால் அது நிழல். அதை கடந்து பல்லாண்டு காலமாக இருந்த, வாழ்ந்த ஈழம் உண்மையென்றால், தமிழக இளைஞர்கள் அரசியல் பூர்வமாக சரியான நிலைப்பாட்டை எடுத்து அரசியல் மாற்றம் ஏற்பட போராட வேண்டும்.

பல நாடுகளும் ஈழ விடுதலையை அரசியல் பூர்வமாக பார்க்கும் சுழலில், போர்க்குற்றம் உறுதியாகும் பொழுது ஐ நா வில் எல்லா நாடுகளும் போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக செயல்படும். அது ஈழத்தமிழர்களின் அரசியல் ரீதியான விடுதலைக்கு வழிவகுக்கும். அரசியல் செய்தல், அரசியல் மாற்றம், அரசியல் வெற்றி என்பன இந்தியாவிற்கு எதிரானது என்று இந்தியா கருதக்கூடாது. தமிழ்நாட்டில் மாற்றத்திற்கான போராட்டங்களை தொடர்ந்து நடத்துவதன் மூலம் போராட்டத்தில் வெற்றி காண்போம்" என்றார்

தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர். தியாகு அவர்கள் “ஐ நா ஆய்வறிக்கையும் 2009 முதல் 2012 வரை இந்தியாவின் செயல்பாடுகளும் நிலைப்பாடுகளும்” என்ற தலைப்பில் பேசியதாவது:
 
2009ல் ஈழப்போர் கொடுமையான முடிவுக்கு வந்ததை அடுத்து ஐ.நா மனித உரிமைகள் மன்றத் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்கள் இரண்டு தரப்பும் போரில் செய்த குற்றங்களை பற்றி விசாரிக்க ஒரு சர்வதேச விசாரணை தேவை என்று கூறினார்.

 அன்றைய தமிழக முதல்வரும் மத்திய அரசுக்கு “வழக்கம்போல்” கடிதம் எழுதினார். அதில், வரும் ஐ.நா மனிதஉரிமை மன்றத் தீர்மானத்திலாவது இந்தியா, இலங்கையை ஆதரிக்க கூடாது என்று எழுதினார். (இதில் இந்தியா இதுவரை செய்தது போதும் என்ற உள் அர்த்தமும்உள்ளது) முடிவாக இந்தியாவின் விருப்பபடியே அன்றைய ஐ.நா தீர்மானமும் இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்காமல், பாராட்டு தெரிவித்தது.

 பின்னர் வெளியான டப்ளின் தீர்ப்பாயம் இலங்கையை போர்குற்றவாளி என்றும் சர்வதேச விசாரணை தேவை என்றும் கூறியது. அதன் பிறகு ஐ.நா பொதுச்செயலளாரால் நியமிக்கப்பட்ட மூவர் குழுவும் அதையே கூறியது. Channel - 4 ஆவணப்படம் வெளிவந்து இலங்கை அரசின் உண்மை முகத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது. இதன் பின்னரும் இந்தியா இலங்கையை ஆதரிக்கும் தனது நிலையை மாற்றிக்கொள்ளவில்லை. அவ்வாறு விசாரணை நடந்தால் எங்கே தானும் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு விடுவோமோ என்று பயப்படுகிறது.

 இந்திரா காலம் தொடங்கி மன்மோகன் காலம் வரை ஈழத்தமிழர் பிரச்சனையை, இந்தியா தனக்கு சாதகமான ஒரு பொருளாகப் பயன்படுத்தி இலங்கையை கையாளப் பார்க்கிறது. இந்தியா ஒருபோதும்ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலையை ஆதரித்ததில்லை.

2011 - ல் வெளிவந்த நார்வே அறிக்கை ஈழப்போரில் இந்தியாவின் உண்மையான முகத்தை தோலுரித்து காட்டியது. இராணுவத் தீர்வை நாடிச்செல்லும் தெற்காசிய வல்லாதிக்க நாடுகளே இலங்கை மற்றும் புலிகளுக்கு இடையேயான சமாதானம் முறிந்துப் போகக் காரணம், 2004 - ல் ஈழத்தில் புலிகள் தலைமையில் ஒரு இடைக்கால அரசு அமைவதை இந்தியா விரும்பவில்லை. சமாதான ஒப்பந்தம் ஏற்படுவதை தடுத்த ஒரு இனப்படுகொலை ஏற்படுவதையே இந்தியா விரும்பியது. 2009 - ல் முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு இந்தியாவின் மௌனம் மிகப்பெரிய ஆயுதமாக சிங்கள அரசுக்கு உதவியது என்று அந்த அறிக்கைக் கூறுகின்றது.
 
அந்த மௌனமே உலக நாடுகளை இந்தப் பிரச்சனையில் தலையிடாமல் தடுக்கச் செய்தது. மேலும் முடிந்த அளவு ஆயுதங்களையும், உளவுத்தகவல்களையும் இந்தியா இலங்கைக்கு கொடுத்துதவியது. உலகில் பல நாடுகளும் ராஜபக்சே, இலங்கை அரச அதிகாரிகள் மீது வழக்கு தொடுத்து வரும் இந்நிலையில் இந்தியா மட்டும் இங்கு நடைபெறும் அனைத்து விழாக்களுக்கும் ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து. இலங்கை தனிமை படுத்தப்படாமல் பார்த்துக்கொள்கிறது.

வரப்போகும் மார்ச் 27 ஜெனிவா கூட்டத்தில் இலங்கை தொடர்பாக ஒரு கண்டனத் தீர்மானம் கொண்டுவர உலகெங்கும் உள்ள தமிழர்கள் தங்களால் இயன்ற அளவு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அதுபற்றிய எந்த அறிகுறிகளும் இல்லாமல் அமைதியாக உள்ளது.

உலகில் உள்ள எந்த நாடு வேண்டுமானாலும் இலங்கையின் மனித உரிமை பற்றி பேசலாம். ஆனால் ஈழத்தமிழர்களுக்கு அரசியல்தீர்வை பெற்றுதரவேண்டியது இந்தியாதான் என சர்வதேசம் நிர்பந்திக்கின்றது. பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்க வேண்டிய தமிழர்களின் பிரதிநிதி என்ற வகையில் இந்தியாதான் பேசு வருகின்றது. ஆனால் இந்தியா எப்பொழுதும் ஈழத்தமிழருக்கு எதிராகவே உள்ளது. அதனை தமிழர்களாகிய நாம் “போராடித்தான்” மாற்ற வேண்டும்.

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த காலகட்டத்தில் அடுத்த கட்டத்தை முடிவுசெய்து போராட வேண்டிய, இங்குள்ள ஈழத்தமிழ் ஆதரவு இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? வெறும் பழம்பெருமையையும், தியாகத்தையும் பேசுவதால் பயனில்லை. எதிர்காலம் குறித்து திட்டமிட்டு போராட வேண்டும். “மறைவாக இருக்கிறார். நிறைவாக இருக்கிறார்” என்று கூறிக்கண்டு இந்த முக்கியமான நேரத்தில் நாம் போராடாமல் இருப்பது சரியல்ல.

ஒரு சர்வதேச குழுவை ஏற்படுத்தி போர் குற்ற விசாரணை நடைபெற பாடுபடவேண்டும். தமிழர் பகுதிகளில் ஏற்படும் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும். தனி ஈழம் தொடர்பான கோரிக்கைகளை, முன் வைத்து நாம் போராட வேண்டும். சரியான கொள்கைகளும், தேவையான வேலை திட்டங்களும் இல்லாமல் போனால் ஈழம் எப்படி மலரும்? இந்த காலகட்டத்தில் நாம் சரியான வேலைத்திட்டம் கூட இல்லாமல் இருந்தால் உலகம் நம்மை பைத்தியக்காரர்கள் என்று தூற்றாதா? சிங்கள அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வண்ணம் சிங்களப் பொருட்களை புறக்கணித்தும், பண்பாட்டு, அரசியல் ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தும்படி ஒரு மக்கள் இயக்கத்தை கட்டமைக்க வேண்டும்.

அதைவிடுத்து வெறும் சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவான தனிநபர்களை தாக்குவதும், 1 லட்சம் பேரை கூட்டி முழக்கமிடுவதுமல்ல. ஆக்கப்பூர்வமான கோரிக்கைளை முன் வையுங்கள். போராடித்தான் நாம் இந்தியாவின் மௌனத்தை உடைக்க முடியும். இந்தியாவின் மௌனத்தை உடைத்தால் மட்டுமே ஈழத்தமிழர்களாகிய நம் சகோதரர்களுக்கு விடிவு கிடைக்கும் அதற்காக போராடுவது நமது கடமையாகும் என்றார்.

காணொளி சுட்டிகள்:

பேரா. பால் நியூமென்

 


தோழர். இளங்கோவன்


பேரா. மணிவண்ணன்


தோழர். தியாகு

Pin It