இன்று (9 November 2011) காலை 9 மணி அளவில் சேவ் தமிழ்ஸ் இயக்கத்தை (Save Tamils Movement) சேர்ந்த 20 தகவல்தொழில்நுட்ப துறை பணியாளர்கள், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள பேபால் (PayPal) அலுவலகத்தின் முன் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அந்த நிறுவனத்துடைய ஆண்டு விழாவான 'டும் டும் டும்' நிகழ்ச்சியில் பங்குபெறும் வெவ்வேறு அணிகளுக்கு உயர்சாதியை குறிக்கும் பெயர்களை வைத்ததற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

PayPal_620

"சாதிப் பெருமையை கொண்டாடாதீர்கள்", "நிறவெறியை ஆதரிப்பீர்களா?", ''மௌனத்தை உடைத்தெறியுங்கள்'', "நாகரீகமாக மாறுங்கள்" போன்ற கோஷங்களை எழுப்பினர்.

'கார்ப்பரேட் (Corporate) கலாசாரம் என்பது சமூக பொறுப்பில்லாமல் சுரணையற்று இருப்பதா? உடைகள் அணியும் விதமும், நவீன தொழில்நுட்பமும் மட்டுமே தான் நாகரீகத்தை குறிக்கிறதா? சமூக நீதி பற்றியது இல்லையா அது?' என்று பணியாளர்களை கேள்வி கேட்கும் வகையில் பதாகைகளை பிடிக்கவும், துண்டறிக்கைகளை விநியோகிக்கவும் செய்தனர்.

சிறிது நேரத்திற்கு, அவர்களிடம் பேசுவதற்காக மூத்த பாதுகாப்பு அதிகாரி வெளியே வந்தார். கொடுக்கப்பட்டுள்ள அணியின் பெயர்களை மாற்ற வேண்டும், சாதிப் பெருமையை கொண்டாடியதற்காக பகிரங்கமாக (பேபால் ஊழியர்களிடமும், ஊடகங்களிடமும்) மன்னிப்பு கோர வேண்டும் என்று அவர்கள் பேபால் நிறுவனத்தின் தலைமையிடம் இரண்டு கோரிக்கைகளை வைத்தனர். அந்த அதிகாரியிடம் இது பே பால் நிறுவனத்திற்கும் சேவ் தமிழ்ஸ் இயக்க்கத்திர்க்குமிடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனை அல்ல என்றும், இந்த மன்னிப்பை சமூகத்திடம் அவர்கள் கேட்க வேண்டும் எனவும் தெளிவுபடுத்தினர். முப்பது நிமிடங்கள் கழித்து அவர்களுடைய கார்பரேட் செய்தித்தொடர்பு மேலாளர், தங்களுடைய பொது மேலாளர் கையெழுத்திட்ட ஒரு அறிக்கையுடன் வெளியே வந்தார். அதற்குள் உள்ளூர் போலீஸ் அந்த இடத்திற்கு வந்திருந்தனர்.

 அந்த அறிக்கை:

"இந்தியாவின் பன்முகத் தன்மையை குறிப்பதற்காகவே பே பால் இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்களுக்கான ஆண்டு விழாவில் ‘மாபெரும் இந்திய திருமணம்' என்னும் தலைப்பை தேர்ந்தெடுத்திருந்தோம். தனித் தனி அணிகளுக்கு நாங்கள் கொடுத்த பெயர்கள், எங்கள் ஊழியர்களின் பன்முகத்தன்மையை குறிக்கும் என்றும், திருமணம் போன்ற ஒரு முக்கிய நிகழ்வு நம் அனைவரையும் எவ்வாறு ஒன்று சேர்க்கிறது என்பதை குறிக்கும் என்றும் நாங்கள் எண்ணினோம். ஆனால், இந்த முக்கியமான உட்புற ஆண்டு விழாவில் நாங்கள் வெளிப்படுத்த நினைத்த எங்கள் ஊழியர்களின் பன்முகத்தன்மையை அந்த அணிகளுக்கு நாங்கள் இட்ட பெயர்கள் வெளிப்படுத்தவில்லை. அவை இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த உயர்சாதியினரை குறிக்கும் வகையில் அமைந்து விட்டது. இது எந்த உள்நோக்கத்துடனும் செய்யப்பட்டதல்ல. உயர்சாதியினரை குறிக்கும் வகையில் அமைந்துள்ளவற்றை உடனடியாக நீக்குகிறோம். இதனால் யாரேனும் துன்பப்பட்டிருந்தாலோ, அல்லது யாரையேனும் நாங்கள் புண்படுத்தி இருந்தாலோ மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்"

PayPal_630

கடிதத்தை கண்ட சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் பிரதிநிதிகள் இது 'புண்படுவது' என்பதை பற்றிய விஷயம் அல்ல, மாறாக பே பால் நிறுவனம், சாதி கொண்டாடப்பட வேண்டிய ஒரு விஷயம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். பே பால் நிறுவனம் தங்கள் ஊழியர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும், அணிகளின் பெயர்களை மாற்ற வேண்டும் எனவும் மீண்டும் வற்புறுத்தினர். பேபால் நிறுவனத்தின் செயல்பாட்டை பொறுத்து இந்த எதிர்ப்பு போராட்டத்தை தொடர்வது பற்றி சேவ் தமிழ்ஸ் இயக்கம் முடிவு செய்யும். கார்பரேட் செய்தித்தொடர்பு மேலாளர் அதற்கு ஒப்புக் கொண்டார்.

பின் அந்த மென்பொருள் பணியாளர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு விரைந்தனர்.

Pin It