கூலி அடிமைத் தனத்தை முடிவுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்

ஒரு நாளைக்கு 16 மணி நேரம் 18 மணி நேரம் என கசக்கிப் பிழியப்பட்ட தொழிலாளிவர்க்கம் 8 மணி நேர வேலை நாளுக்காக போராடி அதனை வென்றெடுத்த தினமே மேதினம். 8 மணி நேர வேலை என்பது ஏதோ போராடிய தொழிலாளரின் மனதில் அப்போது தன்னிச்சையாக உருவானதல்ல. மிருகங்களிலிருந்து வேறுபட்டு மனிதன் ஒரு மனிதனாக வாழ வேண்டுமென்றால் அவனுக்கு 8 மணிநேர வேலை, 8 மணிநேர ஓய்வு, மீதமுள்ள 8 மணி நேரம் சமூக ரீதியான வி­சயங்களில் ஈடுபாடு என்ற வரையறை வேண்டும் என்ற அடிப்படையிலேயே அக்கோரிக்கை வைக்கப்பட்டது. அக்கோரிக்கையை முன்வைத்த போராட்டம் முதன்முதலில் இன்று குபேரபுரி என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் பல தொழில் நகரங்களில் 19 வது நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றியது.

அக்கோரிக்கை முன்வைக்கப்பட்ட உடன் அதில் பொதிந்துள்ள நியாயத்தை உணர்ந்து முதலாளி வர்க்கம் 8 மணிநேர வேலை நாளை அறிமுகம் செய்து விடவில்லை. மாறாக 1886 மே முதல் நாளன்று 8 மணி நேர வேலை நாள் கோரிக்கையை வைத்துப் போராடிய தொழிலாளர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டிக்க மே 4ம் நாள் சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் திரண்டவர்கள் மீது பொய் வழக்குகள் புனைந்தது. அதற்குத் தலைமை தாங்கிய பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், பி­ர், லிங்க் மற்றும் எங்கல் என்ற 5 பேருக்கு மரண தண்டனை விதித்தது. அந்த ஐவரில் ஒருவரான லிங்க் முன்கூட்டியே தற்கொலை செய்து கொண்டதால் நான்கு பேருக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் அதில் ஈடுபட்ட வேளையில் கம்யூனிஸம் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் அதிகார மையங்களை எதிர்க்கும் அனார்க்கிஸ்டுகளாகவே இருந்தனர்.

சித்தாந்தத் தெளிவு பெற்றிராத அந்த நிலையிலும் கூட அரசு குறித்தும் அதன் நீதி அமைப்பு குறித்தும் எந்த வகை மாயையும் இல்லாதவர்களாக அவர்கள் விளங்கினர். அப்போராட்டத்திற்குக் களங்கம் கற்பித்து அதற்குத் தலைமை ஏற்றவர்களைக் கடுமையாகத் தண்டித்து வரும் காலங்களில் அதுபோன்ற நடவடிக்கைகளில்  எந்தத் தொழிலாளியும் ஈடுபடத் துணியக் கூடாது என்பதற்காக தன்னுடைய கையாட்களை ஏவி போராட்டக்காரர்கள் மத்தியிலிருந்து குண்டு வீசச் செய்து அப்பழியினை அத்தொழிலாளர் தலைவர்கள் மீது சுமத்தி மரண தண்டனைக் குற்றவாளிகளாக முதலாளிகள் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினர். அந்த உண்மையை எத்தனை உரத்த குரலில் எடுத்துக் கூறினாலும் அதனை ஜூரிகள் கேட்கப்போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டு தொழிலாளர் தலைவர்கள் நாங்கள் எதையும் இந்த நீதிமன்றத்தில் கூறப் போவதில்லை; எங்களது மெளனம் உண்மைகளை பக்கம் பக்கமாக எடுத்துரைக்கும் என்று கூறி மரணத்தைத் தீரத்துடன் ஏற்றனர். அந்த நிகழ்வை ஒட்டி அடுத்த ஆண்டு முதல் மே முதல் நாள் அதனை நினைவு கூரும் தினமாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. அத்தினங்களில் எங்கெல்ஸ் போன்ற பட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவர்கள் கலந்து கொண்டு தொழிலாளரின் போராட்டங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கத் தொடங்கினர்.

லாப நோக்கிற்காகத் தனியார் முதலீட்டில் தொழில்கள் நடைபெறும் ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பில் தொழிலாளர்கள் தங்களது வேலைச் சூழ்நிலை, உரிமைகள், ஊதியம் ஆகியவை குறித்து எத்தனை தீரமிக்கப் போராட்டங்களை நடத்தினாலும் அவை தொழிலாளரின் அடிப்படைப் பிரச்னைகளை முற்றாக ஒருபோதும் தீர்த்துவிடாது. போராடி அது பெறும் ஊதிய உயர்வு முதலாளித்துவ சமூக அமைப்பில் தவிர்க்க முடியாமல் உருவாகும் பணவீக்கம் தோற்றுவிக்கும் விலையுயர்வினால் சூறையாடப்பட்டுவிடும். தொழிலாளர் போராடிப் பெறும் உரிமைகள் மற்றும் வேலைச் சூழ்நிலை மேம்பாடு ஆகியவை வேலைச் சந்தைக்குக் கூடுதல் உழைப்பாளர் வரும்போது படிப்படியாகப் பறிக்கப்பட்டுவிடும். எனவே உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான பிரச்னை அது ஆட்பட்டுள்ள கூலியடிமைத்தனத்திலேயே உள்ளது என்பதை பட்டாளி வர்க்க ஆசான்களான மார்க்ஸ்ம் எங்கெல்ஸ்ம் உழைக்கும் வர்க்கத்திற்கு உணர்த்தினர்.

 முதலாளித்துவ சமூக அமைப்பில் தொழிலாளரின் நிலை அவர்கள் தங்களிடமுள்ள உழைப்புத் திறனை பயன்படுத்திக் கொண்டு தங்களது குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவைகளை ஈடுகட்டும் அளவிற்காவது கூலி கொடுக்கவல்ல முதலாளிகள் யாரேனும் உள்ளனரா என்று தேடக் கூடியதாகவே உள்ளது; இந்த நிலை மாற்றப்பட்டால் ஒழிய அதாவது சமூகத்தின் அனைத்து செல்வங்களையும் உருவாக்கும் உழைக்கும் வர்க்கம் உற்பத்தி சாதனங்கள் அனைத்தின் மீதும் மேலாதிக்கம் செலுத்தும் ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டால் ஒழிய தொழிலாளரின் அடிப்படை பிரச்னைகள் தீரப்போவதில்லை என்பதை பட்டாளி வர்க்க ஆசான்கள் உணர்த்தினர். எனவே உழைக்கும் வர்க்கம் தங்களது அன்றாடப் பிரச்னைகளுக்காகப் போராடினால் மட்டும் போதாது. அடிப்படை சமூக மாற்றத்திற்காக அது அரசியல் ரீதியாகவும் போராடியாக வேண்டும். அத்தகைய போராட்டங்களில் தொய்வின்றி ஈடுபட வேண்டுமென்றால் தொழிலாளி வர்க்கம் தன்னைத் தானே மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு அது தன்னைத் தானே மாற்றிக் கொள்ளாமல் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை ஒருபோதும் மாற்ற முடியாது என்ற உண்மையை அவர்கள் உழைக்கும் வர்க்கத்திற்குப் போதித்தனர். தொழிலாளரின் அன்றாடப் பிரச்னைகளுக்காகப் போராடுவதற்கென உருவாக்கப்படும் தொழிற்சங்கங்கள் கம்யூனிஸப் பாட சாலைகளாக ஆக்கப்பட வேண்டும் என்றும் மார்க்சிய ஆசான்கள் வலியுறுத்தினர்.

அந்தப் போதனைகளின் அடிப்படையில் உணர்வுபெற்ற ரஷ்யத் தொழிலாளி வர்க்கம் மாமேதை லெனினால் வழிநடத்தப்பட்டு முதலாளித்துவ உலகச் சங்கிலியின் பலவீனமான கண்ணியாக விளங்கிய ரஷ்ய நாட்டில் 1917 அக்டோபர் மாதம் ஒரு மகத்தான உழைக்கும் வர்க்கப் புரட்சியை நடத்தி அதன்மூலம் கூலியடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவந்து சோசலிசத்தை நிலைநாட்டியது. கல்வியறிவற்ற, அழுக்குப்படிந்த, அழகுணர்வு குன்றிய, அரசாட்சி நடத்தும் அருங்கலையினை அறிந்து கொள்ளவே முடியாத வர்க்கம் என முதலாளித்துவ சிந்தனையாளர்களால் கருதப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான சோசலிச ஆட்சி முதலாளித்துவ நாடுகளிலிலெல்லாம் முதன்மை நாடு என்று கருதப்படும் அமெரிக்கா 200 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியை வெறும் 30 ஆண்டுகளில் சாதித்துக் காட்டியது. வளர்ச்சியின் பலன்கள் உழைப்பாளருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன; ஏற்றதாழ்வுகள் போக்கப்பட்டன. பாசிஸ ஹிட்லரின் படையயடுப்பின் காரணமாகச் சீட்டுக்கட்டு கவிழ்வது போல் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த பிரான்ஸ் போன்ற முதலாளித்துவ நாடுகள் நாசிஸத்தின் முன் மண்டியிட்ட வேளையில் அதனை மாமேதை ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் வீறுடன் எதிர்கொண்டு பாஸிசத்தை  ராணுவ ரீதியாக வீழ்த்தி  அதன் கோரப் பிடியிலிருந்து சோவியத் யூனியனை மட்டுமல்ல இந்தப் பூவுலகையே மீட்டது.

 

சோசலிசத்தின் இத்தகைய மகத்தான சாதனைகள் தங்கள் நாட்டின் உழைக்கும் வர்க்கத்தின் மனதில் பதிந்து விடக்கூடாது என்பதற்காக ஏகாதிபத்திய நாடுகள் உலக அளவில் தாங்கள் அடித்த கொள்ளையின் ஒரு பகுதியை தங்கள் நாடுகளின் தொழிலாளி வர்க்கத்திற்கு வாழ்க்கை ஊதியமாக வழங்கி சுரண்டலின் உக்கிரத்தைக் குறைத்தன. அதில் மதிமயங்கி அந்நாடுகளின் உழைக்கும் வர்க்கம் கூலியடிமைத்தனத்திலிருந்தான விடுதலை என்ற தனது வரலாற்றுக் கடமையைக் கிடப்பில் போட்டது. மாமேதை ஸ்டாலினுக்குப் பின் தலைமைக்கு வந்த குருச்சேவ் போன்ற திருத்தல்வாதிகள் கடைப்பிடித்த வர்க்க சமரசப் போக்கின் காரணமாக சோவியத் நாட்டின் பாட்டாளி வர்க்கத்திடமும் அதன் சர்வதேசக் கடமை குறித்த உணர்வும் சோசலிசத்தை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கியது. இறுதியில் துரோகி கோர்பச்சேவ், எல்ட்சின் கும்பலால் அந்நாட்டின் சோசலிச அமைப்பே நிர்மூலமாக்கப்பட்டது. இந்த நிகழ்வின் மூலம் சோசலிசம் மனிதகுல வரலாற்றில் முடிந்து போய்விட்ட ஒரு அத்தியாயமாக முதலாளித்துவப் பிரச்சார சாதனங்களால் சித்தரிக்கப்பட்டாலும் உண்மையில் சோசலிசத்தின் இந்தத் தோல்வி மிகமிகத் தற்காலிகமானது என்பது தற்போது முதலாளித்துவ உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகளின் மூலம் தெளிவாக்கப் பட்டுள்ளது. அதாவது சோசலிச ரீதியான சமூக மாற்றம் வரலாற்றின் தவிர்க்க முடியாத விதி; அதனைத் தள்ளிப்போட முடியுமே தவிர, தவிர்க்க முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது.

 

தான் தலைமை தாங்கும் அமைப்பிற்கு சோசலிசம் ஒரு சவாலாக இருந்தவரை உழைக்கும் வர்க்கத்தைத் தாஜா செய்து வந்த உலக முதலாளி வர்க்கம், என்று சோசலிசம் தனது அமைப்பிற்குச் சவாலாக இல்லாமல் போய்விட்டது என்று அறிந்து கொண்டதோ அன்று முதல் காட்டுத்தனமான சுரண்டலை மீண்டும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. மேதினப் போராட்டங்களின் மூலம் சாதிக்கப்பட்ட 8 மணிநேர வேலை நாள் என்பது இன்று பல துறைகளில் இல்லாமல் போயுள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர் முறை, பீஸ் ரேட், சுமங்கலித் திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டு தொழிலாளர் ஒன்று சேர்ந்து போராடும் வாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது. சீரழிந்த லாபநோக்கக் கலாச்சாரம் ஒட்டுமொத்த சமூகக் கலாச்சாரமாக்கப்பட்டு உழைக்கும் வர்க்கத்தையும் அது கடுமையாகப் பீடிக்கும் சூழ்நிலை உருவாக்கப் பட்டுள்ளது.

 பாட்டாளி வர்க்கக் கட்சிகளாக ஒரு காலத்தில் உருவான பல கட்சிகளும் அவற்றின் தொழிற்சங்கங்களும் சீரழிந்து இன்று முதலாளித்துவ நிறுவனங்களின் தொங்குசதை அமைப்புகளாக ஆகியுள்ளன. கூச்சநாச்சமின்றி வர்க்க சமரசப் போக்கை அவை கடைப்பிடிக்கின்றன. அவை உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டி வேட்டையாடும் முதலாளிகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டி அதில் யார் தங்களது நேசசக்தி என்று காட்டுவதிலேயே அக்கறை கொண்டவையாக உள்ளன. ஏமாற்று, மோசடி, சூதாட்டப் போக்கு ஆகியவையே இன்று முதலாளித்துவ உற்பத்தி முறையின் தாரக மந்திரங்களாக ஆகியுள்ளன. உழைக்கும் வர்க்கம் முன்பிருந்தது போல இன்று அறியாமையில் மூழ்கியதாக இல்லை. இத்தனை ஆண்டுகால முதலாளித்துவச் சுரண்டல் அதற்குப் புகட்டியுள்ள அனுபவமும், இன்று மீளமுடியாத நிலையிலிருக்கும் முதலாளித்துவம் அதன் சுமை முழுவதையும் உழைக்கும் வர்க்கத்தின் மீது ஏற்றுவதால் அது எதிர்கொண்டுள்ள வேதனையும் அதனைத் தெளிவுறச் சிந்திக்கச் செய்துள்ளது. அதனால்தான் மேலை நாடுகளின் மேதின முழக்கங்கள் முதலாளித்துவமே நமது முழுமுதல் எதிரி என்பதைத் தயக்கமின்றி உரத்து உரைக்கின்றன. மேதினம் முன்புபோல் ஒரு கேளிக்கை தினமாக உலகின் எந்த மூலையிலும் இன்று அனுஷ்டிக்கப் படுவதில்லை. இந்தப் போக்கு முதலாளித்துவத்தின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை மிகத் தெளிவாகப் பறைசாற்றுகிறது.

புரிதல்களும் முழக்கங்களும் மட்டுமே முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவந்து விடாது. அதனை முடிவுக்குக் கொண்டுவர கம்யூனிஸப் பாடசாலைகளாக நடத்தப்படும் தொழிற்சங்கங்களும் அவற்றிற்கு அரசியல் ரீதியான வழிகாட்டுதலை வழங்கும் ஒரு சரியான புரட்சிகரக் கட்சியும் வேண்டும். அவற்றை உருவாக்கி உழைக்கும் வர்க்கத்தை அதன் வரலாற்றுக் கடமையான கூலியடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பாதையில் வழிநடத்துவதே இந்த மேநாளில் நாம் ஏற்க வேண்டிய உறுதி மொழியாகும். அதனை செவ்வனே செயல்படுத்துவதன் மூலமே மேதினத் தியாகிகளுக்கு உரிய அஞ்சலியைச் செலுத்தியவர்களாக நம்மால் ஆக முடியும். அக்கடமையைச் சரிவர ஆற்ற முன்வருமாறு உணர்வுபெற்ற உழைக்கும் வர்க்கத்தை இந்த மேநாளில் அறைகூவி அழைக்கிறோம்.

மேதின அரங்கக் கூட்டம்

22.05.2011(ஞாயிறு), மாலை 6 மணி

ஐயப்பன் மண்டபம், திருத்தங்கல் ரயில்நிலையம் அருகில்.

தலைமை: தோழர் வி.வரதராஜ்

சிறப்புரை: தோழர் பிரான்சிஸ், நாகர்கோவில்.

தோழர் அ.ஆனந்தன், தென்மாநில அமைப்பாளர், சி.டபிள்யு.பி.

மற்றும் முன்னணித் தோழர்கள்

கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (சி.டபிள்யு.பி.)

உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி

சென்ட்ரல் ஆர்கனிசே­ன் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (சி.ஓ.ஐ.டி.யு.)

தொடர்புக்கு: தோழர் வி.வரதராஜ். செல்: 97904 29198 

Pin It