பின் நவீனத்துவம் எவ்வாறு சமுதாயம் சார்ந்த பண்பாடு, மரபு என்பனவற்றினை தமக்கு சாதகமான வகையில் மறுவாசிப்பு செய்கின்றதோ அவ்வாறே நாமும் அவற்றினை சமுதாயம் சார்ந்த கண்ணோட்டத்தில் மறுவாசிப்பு செய்ய வேண்டியுள்ளது. இதற்கான பரிசோதனை முயற்சிகள் ஏற்கனவே நடந்தேறியுள்ளன.

       இலங்கையில் சாதிய எதிர்ப்புப் போராட்ட காலகட்டத்தில் வெளிவந்த குடிநிலம், கந்தன் கருணை, சங்காரம் முதலிய நாடகங்கள் காத்தவராயன் பாணியிலும் வடமோடி தென் மோடி கூத்து பாணியிலும் வடிவமைக்கப்பட்டு மக்கள் மத்தியில் அரங்கேற்றப்பட்டன. எடுத்துக்காட்டாக கந்தன் கருணை நாடகம் மாவட்டப்புர கந்தன் கோயிலில் இடம் பெற்ற ஆலயப் பிரவேசப் போராட்டத்தை வெளிக்கொணர்கின்றது. மரபு சார்ந்த கந்தன் இந்நாடகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாளராக மறுவாசிப்பு செய்யப்பட்டுள்ளார்.  அத்துடன் இந்நாடகம் காத்தவராயன் கூத்து வடிவில் படைப்பாக்கப்பட்டிருந்தமையினால் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறக்கூடியதாக அமைந்திருந்தது. மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த கந்தன் என்ற படிமம் மக்கள் சார்பாக மறுவாசிப்பு செய்யப்பட்டு மக்களது சமூகமாற்ற போராட்டத்திற்கு அது காத்திரமான பங்களிப்புகளை வழங்க கூடியவகையில் படைப்பாக்கம் செய்யப்பட்டுள்ளமை இதன் பலமான அம்சங்களில் ஒன்றாகும். 

       இவ்வகையில் விதந்துரைக்கத்தக்க மற்றொரு நாடகம், தமிழகத்தில் பிரளயனின் படைப்பாக்கமாக உருவாக்கப்பட்டு மேடையேற்றப்பட்டு வருகின்ற “உபகதை”. சாத்திரங்களும் வேதங்களும் போர் நுட்பங்களும் சூத்திரர்களான உழைக்கும் மக்களுக்கு  தீண்டத்தகாதது. முரட்டு வர்க்கம் உழைத்துக் கொண்டிருந்தால் போதும், சிந்தனை ஊற்றைத் திறந்துவிடக் கூடாது, குல தர்மங்களை தூக்கி யெறிந்து ஒன்றுபடக் கூடாது என ஆட்சியாளர் சதியால் வெட்டப்பட்ட ஏகலைவனின் கட்டை விரலாகவும், ரேணுகா தேவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் ஒட்டப்பட்ட சூத்திர உடலாகவும் படிமப் படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது உபகதை. 

       ஏகலைவன் வில்வித்தை கற்பதற்காக துரோணரை அணுகிய போது பிறப்பின் அடிப்படையில் ஏகலைவன் சத்திரியர் அல்லாமையினால் வில்வித்தை கற்பக்க மறுத்து விடுகின்றார் தூரோணர்; துரோணரை மானசீக குருவாக எண்ணி அவரது உருவத்தை சிலையாக வடிவப்படுத்தி அதனூடு வில்வித்தையை கற்றுத் தேர்ந்தவன் ஏகலைவன். ஒருநாள் அருச்சுனனின் நாய்   துரோணரின் சிலையை அசுத்தப்படுத்தியமையினால் நாயின் வாயை கட்டி விடுகின்றான் ஏகலைவன.   இந்த சம்பவத்தின்   மூலமாக ஏகலைவனின் வலிமைமிக்க திறனை அருச்சுணன் அறிய, பின்னர்  துரோணர் இந்த குலத் தருமத்தை பாதுகாப்பதற்காகவும் அர்ச்சுனனை திருப்திப்படுத்தும் வகையிலும் ஏகலைவனின் கட்டை விரலை குருதட்சணையாக பெறுவது மரபு சார்ந்த வாசிப்பாகும். 

       பிரளயன் அதனை ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக மறுவாசிப்பு செய்துள்ளார்.  உபகதையில்  துரோணரிடம்  ஏகலைவன் வில் வித்தை கற்பதற்கெனச் செல்லவில்லை. அவரை மானசீக குருவாக எண்ணி  சிலை நிறுவவும் இல்லை.  நாயின் வாயை கட்டும் வித்தையை எந்த குருவிடம் கற்றாய் என துரோணர் கேள்விகேட்டபோது மீன்குஞ்சுக்கு நீச்சல் கற்றுத்தர வேண்டியது அவசியமில்லாதது போல வேட்டுவ இளைஞனான எங்களுக்கு வில்வித்தையை யாரும் கற்றுத்தர தேவையில்லை என பதிலளிக்கின்றான். வன்முறையின் ஊடாக ஏகலைவனின் கட்டை விரல் தறிக்கப்படுவதுடன் அவன் சார்ந்த இனக் குழுமமும் அடிமையாக்கப்படுகின்றது.  இது அடித்தள உழைக்கும் மக்கள் தாழ்த்தப்பட்ட சாதியினராக்கப்பட்ட சரித்திரத்தின் ஒரு முக்கிய நிகழ்வாகும். பின்நவீனத்துவ மறுவாசிப்பு, பிரதியைக் கட்டமைக்கும் வாசக மனத்தின் அகநிலைத் தவறுகளுக்கு ஆட்படக் கூடியது. தொழிலாளி வர்க்க உலகநோக்கில் ஆரம்பகால வரலாற்றை மறுவாசிப்புக்குள்ளாக்கும் போது மார்க்சியர்கள்அகநிலைவாத விருப்பு வெறுப்புக்கு உள்ளாவதில்லை. 

       இவ்வாறே ரேணுகா கதையும் அமைந்துள்ளது. யமதக்னி என்ற முனிவரின் கற்புள்ள பத்தினி ரேணுகா. அவளது கற்பின் வலிமையினால் வெறும் கைகளினால் ஆற்றுமணலை வனைந்து பானையாக்க முடியும். எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அவ்வாறு பானை செய்ய முயல்கையில் விண்ணில் பறந்து சென்ற கந்தர்வன் மீது மனம் ஈர்க்கப்பட, அவள் கற்பிழந்தவளாகின்றாள். பானை உருப்பெற மறுக்கின்றது. இதனை ரேணுகா வாயிலாகக் கேட்டறிந்து ஆத்திரமுற்ற யமதக்னி முனிவர் மகன் பரசுராமனிடம் அவனது தாயின்  தலையை வெட்டிவரக் கூறுகின்றான். அவனும் அப்படியே செய்கின்றான். தாயை துரத்திச் சென்று வெட்டப்பட்ட தலையுடன் மீண்ட பரசுராமனிடம் தன் கட்டளையை நிறைவுசெய்த மகிழ்ச்சியினால் என்ன வரம் வேண்டும் எனக் கேட்கிறார் யமதக்னி முனிவர். தாயின் உயிர்ப்பை மகன் வேண்ட கொய்யப்பட்ட தலையுடன் உரிய உடல் கிடைக்காத நிலையில் வேறொரு சூத்திரப் பெண்ணின் உடல் பொருத்தப்படுகின்றது. இன்றும் சாதிய உணர்வின் காரணமாக இவளது தலைமட்டுமே வணங்கப்பட்டு வருகின்றது. சூத்திரப் பெண்ணின் உடலுடன் எழுந்த ரேணுகா இது இரண்டாவது கொலை என கோபமடைகின்றாள்.  

இதிகாசத்தின் இக்கதையை காட்சிப்படுத்திக் காட்டிய பின்னர், உபகதை மாற்று வடிவத்தைக் காட்டும். மீண்டும் எழுவாள், தனது சூத்திர உடலை அறிந்து தன் மகனை நோக்கி,  அதனால் என்ன, உன் அப்பனுக்கு சுகமளிக்கவும் உனக்கு சமைத்துப் போடவும் தானே இந்த உடல், அது எப்படியிருந்தால் என்ன என ஆர்ப்பரிக்கின்றாள். 

       சாதிய ஒடுக்குமுறையும் பெண் ஒடுக்குமுறையும் வெட்டப்பட்ட கட்டைவிரல், ஒட்டப்பட்ட சூத்திர உடல் எனப் படிமப்படுத்தப்பட்டிருப்பது விதந்துரைக்கத்தக்க கலைத்துவ நுட்பம், வர்க்க பேதத்தகர்வு, சாதியொழிப்பு, பெண் விடுதலை ஆகியவற்றுடன் கொண்டுள்ள தொடர்பு இங்கே வெளிப்படுகிறது. சமத்துவ சமூக உருவாக்கத்தில் பரந்துபட்ட மக்கள் சக்தியை அணிதிரட்டுவதில் தலித் இயக்கங்களும் பெண் விடுதலை அமைப்புகளும் ஒன்றுபட்டுச் செயலாற்றத் தூண்டும் புதிய பண்பாட்டு செயல் முறையில் உபகதையின் பாணி கணிசமான பங்களிப்பை ஆற்றமுடியும். பெண் விடுதலையை மட்டும் பேசுதலோ, தலித்தியம் என ஒடுக்கப்பட்ட மக்களை பிரித்து வைப்பதோ அவையவை வலியுறுத்தும் விடுதலையை எட்ட உதவமாட்டா. ஒட்டுமொத்தமான சமூக விடுதலை மட்டுமே சாதியம் தகர்க்கும்;  பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்கும்.  அது வர்க்கபேத சமூகத் தகர்வும் சமத்துவ சமூக எழுச்சியும் அமையும் போது மட்டுமே சாத்தியமாகும். அல்லாத, தனிப்படுத்தும் செயற்பாடுகள், சுரண்டல் கும்பலிடம்  கையூட்டுப் பெற்று வெறும் தன்னார்வ எழுச்சிகளைத் திசைமாற்றி, மக்கள் விடுதலைக்கு எதிரான கபடநாடகம் ஆடும் எத்திப்பிழைப்பாகும்.  இன்று இத்தகைய எத்திப்பிழைக்கும் கூட்டம் உலகமயமாதல் சூழ்ச்சியில் ஊட்டம் பெற்றுத் தறிகெட்டுச் செயலாற்றுவது மெய். எழுச்சிகொள்ளும் பெண்களும் தலித் மக்களும் சகல சதிகளையும் முறியடித்து சமத்துவ சமூகம்  படைக்க ஓரணியில் திரள்வர் என்பது எதிர்கால உண்மை! (இரவீந்திரன் ந. (2003) இந்துத்துவம் இந்துசமயம் சமூக மாற்றங்கள், சவுத் விஷன், சென்னை.ப.291.) 

       உலகமயம் இன்று குடும்பங்களை உற்பத்தியிலிருந்து பிரித்து நுகர்வாளராகவும், சார்ந்திருப்பவராகவும் மாற்றி நுகர்வுக் கலாசாரத்தை முனைப்புபடுத்தி வருகின்றது.  இந்த பின்னணியில் வெளிப்பட்டுள்ள சாதிக் கருத்துக்கள் பெண்ணொடுக்கு முறைக் கருத்துக்கள் என்பனவற்றுக்கு எதிரான மறுவாசிப்பு செய்ய வேண்டியுள்ளது. இத்தகைய முயற்சிகளில் மக்கள் இலக்கிய கர்த்தாக்கள் முனைய வேண்டியுள்ளது.      

- லெனின் மதிவானம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It